அக்டோபர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      கற்றலும் மதிப்பீட்டு முறைகளும்
      தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
      நார் இல் மாலை
      புக்கர் 2020 சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்
      ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’
      பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்
      நம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்?
      ஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்
      சாப்பாடு
    • கதை
      ரைனா
      கச்சேரி
      பரோஸ்மியா
    • சிறப்புப் பகுதி
      பொருநை பக்கங்கள்
    • சுரா கடிதங்கள்
      சுரா பக்கங்கள்
    • காலச்சுவடு 250
      பதிற்றாண்டுத் தடங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சிறப்புக் கட்டுரை
      முடக்கம் நீங்க
    • எதிர்வினை
      என் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு
      திரிபல்ல, விளக்கம்
    • பதிற்றாண்டுத் தடங்கள் - கவிதை
      ஈராயிரத்திற்குப் பின் கவிதைகள்
    • கவிதைகள்
      அந்தி, அநாமி
      தீக்குச்சிகளின் குடும்பம், ஊற்று
    • தலையங்கம்
      ஆலயம் பதினாயிரம் நாட்டல்
    • அறிமுகம்
      மனம் உணரும் தொனி
    • கவிதை
      இம்மை, இச்சுவை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2020 எதிர்வினை என் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு

என் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு

எதிர்வினை
பெருமாள்முருகன்

எதிர்வினை

என் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு

பெருமாள்முருகன்

காலச்சுவடு இதழ் ஜூலை 2020இல் வெளியான ‘என் சரித்திரச் செம்பதிப்பு : சிறு இடையீடு’ என்னும் என் கட்டுரைக்குப் ப. சரவணன் எழுதிய எதிர்வினைக் கட்டுரை செப்டம்பர் 2020 காலச்சுவடு  இதழில்  வெளியாகியுள்ளது.  இந்த எதிர்வினை எனக்கு ஒருசேர மகிழ்ச்சியும் வருத்தமும் கொடுத்தது. செம்மொழியாகிய தமிழில் பதிப்பு தொடர்பான ஆர்வம் கொண்டவர்கள் மிகக் குறைவு; அத்துறையில் ஈடுபட்டு உழைப்பவர்களோ அரிது. இந்நிலையில் பதிப்பு தொடர்பான விவாதம் மேலெடுக்கப்படுவது  எனக்கு மகிழ்ச்சி தருவதுதான். அதுவும் என் கருத்துக்களைப் பொருட்படுத்தி அவற்றில் சிலவற்றை ஏற்றுக்கொண்டும் கள ஆய்வு புரிந்தும் இந்த விவாதத்தை மொழித் துடிப்புடன் ப. சரவணன் நிகழ்த்தியிருக்கிறார்.  இவை எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி தருகின்றன.

அதேசமயம் எதிராளியைப் போருக்கு அழைக்கும் கட்டுரையின் தொனி எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இந்தத் தொனி ‘அருட்பா – மருட்பா’ காலத்துக்குச் சரியாகலாம்; நவீன காலத்தில் இது தேவையில்லை. பிறர் கருத்துகளை அங்கீகரித்து  உடன்பாடுகளையும் வேறுபாடுகளையும் மனம் கொள்ளும்வகையில் எடுத்துரைப்பதே கருத்துரிமை பேசும் இக்காலத்திற்கு ஏற்றது. எள்ளல் கொண்ட இந்தத் தொனி எதிராளியையும் ஆயுதம் ஏந்தத் தூண்டுவது; விவாதப் பொருளைத் திசை திருப்பக்கூடியது. ‘அட்டைக் கத்திச் சண்டை’ என்று குதூகலித்துச் சீழ்க்கை அடிப்போருக்கு உதவும் தொனி இது. கருத்துக் களத்தில் நிராயுதபாணியாக நிற்பதையே விரும்புவதால் இந்தத் தொனியின் அழைப்புக்குக் கூடியவரை செவி சாய்க்காமல் எனக்கு இருக்கும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

பதிப்பு போன்ற பெருவரலாறும் நுட்பமும் கூடிய ஒரு துறை பற்றிய கருத்துக்களைப் பொதுத்தளத்தில் வைத்துக் காண வேண்டும். அப்படி அல்லாமல் குறுகலான புரிதலால் ஒன்றை மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்ல வேண்டியிருப்பது ஆயாசம் தருகிறது.

‘என் சரித்திரம்’ நூலின் உ.வே.சா. நூலகப் பதிப்பையும் ப. சரவணனின் பதிப்பையும் சேர்த்துச் சில மாதங்கள் பயன் கொண்டேன். சில கட்டுரைகள்  எழுதுவதற்காகவும் சில நிகழ்ச்சிகளில் பேசுவதற்காகவும் பயன் கொள்ளும் போது கண்ணில் பட்டவற்றையும்  எனக்குத் தேவையானவற்றையும்   குறித்துவைத்திருந்தேன். அவை பதிப்பியல் தொடர்பான கருத்துக்களோடு இயைந்து வந்தமையால் பொதுவில் வைத்தேன். ஆகவே, பயன்படுத்துவோர்  நோக்கிலானதாக    என் கருத்துக்களைக்  காண வேண்டும் என்பதே  அவா. பிற பதிப்பாசிரியர்களிடமிருந்து  உ.வே.சா.வைத் தனிப்படுத்திக் காட்டுவது, பயன்படுத்துவோர் தேவையை அறிந்துணர்ந்து தம் பதிப்புகளை அடுத்தடுத்து மேம்படுத்தியதுதான். பதிப்பின் அடிப்படை நோக்கம் பயன்படுத்துவோருக்கு உதவுதல் என்பதே. அக்கோணத்திலிருந்தும் நானறிந்த சில பதிப்பியல் கூறுகளை இணைத்தும் என் கட்டுரையை எழுதியிருந்தேன். இப்போதும் அதையே
தொடர்கிறேன்.

ப.சரவணன் பதிப்பில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றின் விவரத்தைக் கூறும், மூலத்தைப் பிரித்துக்காட்டும் பட்டியல் ஒன்று இருக்குமானால் அது பெரிதும் உதவும்; ‘அது பதிப்பாசிரியரின் உழைப்பை எடுத்துக் காட்டுவதாகவும் இருக்கும்’ என்னும் என் கருத்துக்கு இயைவாக ஒரே ஒரு படத்தையும் அதன் குறிப்பையும் சான்றாகக் காட்டியிருந்தேன். பதிப்பாசிரியரின் உழைப்பு வெளிச்சப்பட வேண்டும் என்னும் கருத்தை விட்டுவிட்டு, சான்றுக்கு எடுத்துக்காட்டிய ஒரே ஒரு படத்தைக் குறை சொல்லலாகக் கருதிப் ப. சரவணன் பெரும் விளக்கம் தந்துள்ளார். அது ஒரு சான்று; அவ்வளவுதான். அதுபோல ஒவ்வொரு படத்தையும் எடுத்துக்காட்டி ‘இது ஆனந்தவிகடனில் வந்ததா, கலியாணசுந்தர ஐயர் பதிப்பில் இடம்பெற்றதா, சரவணன் கண்டுபிடித்துச் சேர்த்ததா’ என்னும் கேள்வியைக் கேட்கலாம். அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வாயிலாகவே படப் பட்டியலைக் கருதுகிறேன்.

ஒரு படத்தின் கீழே ‘இன்றைய தோற்றம்’ என்றிருப்பது குழப்பத்தைத் தராதா? உ.வே.சா. ‘பீப்பிள்ஸ் பார்க்’கில் நடந்த சம்பவத்தை எழுதுகிறார். நடந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. அவர் எழுதி  ஆனந்த விகடனில் வெளியானது 1940களில். அப்போது ஆனந்த விகடன் ‘இன்றைய தோற்றம்’ என்று குறிப்பிட்டுப் படத்தை வெளியிட்டிருக்கலாம் அல்லவா? அது ‘மை லேடிஸ் பூங்கா’ என்று இன்று அழைக்கப்படுவது எனக்குத் தெரியாது; என்னைப் போலவே பலருக்கும் தெரியாதுதான். ஆகவே அது எங்கிருக்கிறது என்னும் கூடுதல் தகவலையும் கொடுத்திருந்தால் நல்லதுதான். 

‘விகடனில் வெளிவந்த புகைப்படங்களோடு நூற்றுக்கணக்கான புதிய படங்கள் கண்டறியப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன’ (ப.31) என்று தம் முன்னுரையில் ப. சரவணன் குறிப்பிட்டுள்ளார். ‘என் சரித்திரம்’ முதல் பதிப்பில் (1950) படப்பட்டியல் உள்ளது; அதில் 64 படங்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் பதிப்பில் இருந்த படங்களுக்கு ஆனந்த விகடனிலிருந்தே பிளாக்குகள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளியான அனைத்துப் படங்களும் நூலில் சேர்க்கப்பட்டனவா, தேர்ந்தெடுத்துச் சேர்க்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ‘என் சரித்திர’த்தில் 122 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு படம் என்றாலும் 122 படங்களை ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கக் கூடும்; சில ஓவியங்களாகவும் இடம் பெற்றிருக்கலாம் என்பதற்குப் ப. சரவணன் பதிப்பில் உள்ள ஓவியங்களே சான்று.

ஆனந்த விகடன் தொடரில் வெளியான படங்களை எடுக்கவும் பெறவும் உ.வே.சா. பக்கமிருந்து பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘சில அன்பர்கள் விரும்பியபடி சரித்திர சம்பந்தமான படங்கள் அங்கங்கே அமைக்கப் பெற்றன’ என்றும் ‘சரித்திரத்தில் படங்கள் வெளிவருவதன் பொருட்டு வெளியூர் அன்பர்கள் புகைப்படங்கள் எடுத்து எங்கள் விருப்பத்தின்படி அனுப்பி உதவினார்கள். இப்பொழுது துறைசை ஆதீனகர்த்தர்களாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்கள் திருவாவடுதுறை, மாயூரம், திருவிடைமருதூர், திருப்பெருந்துறை இவைகள் சம்பந்தமான படங்களை அனுப்பச் செய்து உதவினார்கள்’ என்றும் எஸ். கலியாணசுந்தர ஐயர் முன்னுரை (ப.vi) கூறுகின்றது. நூலாகும் போதும் படங்களைச் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ‘…படங்கள் சம்பந்தமான ப்ளாக்குகள் முதலியவற்றை முன்னரே அனுப்பச் செய்தும் உதவிய ‘ஆனந்த விகடன்’ உரிமையாளராகிய ஸ்ரீமான் S.S.வாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியறிவைச் செலுத்துகின்றேன்’ (ப.vii) என்று முன்னுரை கூறுகின்றது.

64 படங்களில் உ.வே.சா.வின் மனைவி மதுராம்பிகை படம் இருக்கிறது; மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை படம் இருக்கிறது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் படம் ஏதும் எடுத்துவைக்கவில்லை என்பதை உ.வே.சா.வே குறிப்பிட்டுள்ளார். ‘இவர் காலத்தில் படமெடுக்கும் கருவிகள் இருந்தும் இவருடன் பழகியவர்களுள் ஒருவரேனும் இவருடைய படத்தை எடுத்துவைக்க முயலாதது வருத்தத்தை விளைவிக்கிறது’ என மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திர முன்னுரையில் (ப.xix) எழுதியுள்ளார். புகைப்படங்கள் பற்றிக் கட்டுரை எழுதியுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி ‘…இன்று மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் படம் ஒன்று கிடைக்கின்றது. இதன் மூலம் என்ன என்பதை ஆராய வேண்டும்’ (‘எழுத்தோவியரும் ஒளியெழுத்தும்: தமிழ் ஆளுமைகளின் புகைப்படங்கள்’, காலச்சுவடு, மார்ச் 2017) என்கிறார். ‘என் சரித்திர’த் தொடர் ஆனந்த விகடனில் வெளியானபோது உ.வே.சா.வின் அறிதலுக்கு உட்பட்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் படம் வரையப்பட்டிருக்கலாம். ‘என்னுடைய மனத்தில் இவருடைய வடிவம் இருந்து அவ்வப்பொழுது ஊக்கம் அளித்து வருகிறது; ஆயினும் பிறர்க்கு அதைக் காட்டும் ஆற்றல் இல்லாமைக்கு என் செய்வேன்!’ (மேற்படி, ப.xix) என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார். தம் மனத்தில் இருந்த வடிவத்தை எடுத்துரைத்து ஓவியர் ஒருவரைக் கொண்டு படம் வரையப்பட்டிருக்கலாம் என்று கருதக் காரணம் இருக்கிறது.

அது புகைப்படம் அல்ல, ஓவியம் என்பது ‘என் சரித்திர’ முதல் பதிப்பிலும் இப்போது சரவணன் பதிப்பிலும் இடம்பெற்றிருக்கும் விதத்தை வைத்துத் தெளிவுபெற முடிகிறது. அதுதான் பின்னர் நூலின் முதற்பதிப்பிலும் இடம்பெற்றிருக்கிறது போலும். ப. சரவணன் பதிப்பிலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் படம் இருக்கிறது. படப்பட்டியல் இருந்தால் அது ஆனந்த விகடனில் இருந்து எடுக்கப்பட்டதா என்னும் விவரம் தெரிந்திருக்கும். உ.வே.சா. கடிதக் கருவூலம் 1900 வரைக்கும் வெளிவந்திருக்கிறது. அடுத்த தொகுதிகளை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளியிடுவாரானால் என் சரித்திரத் தொடருக்கு யார் யாரெல்லாம் படங்கள் எடுத்தனுப்பினார்கள் என்னும் விவரங்கள் கூடுதலாகவும் தெளிவாகவும் தெரிய வாய்ப்பிருக்கிறது. மீனாட்சிசுந்தம் பிள்ளையின் ஓவியம் வரையப்பட்டது பற்றிய விவரம்கூடக் கிடைக்கலாம்.

படங்கள் தொடர்பான இவ்வரலாற்றுத் தகவல்கள் (முதற்பதிப்பில் 64 படங்கள் என்பதைத் தவிர) எவற்றையும் குறிப்பிடாமல் மொத்தமே ஏறத்தாழ 165 படங்களையே கொண்ட தம் பதிப்பில் ‘விகடனில் வெளிவந்த புகைப்படங்களோடு நூற்றுக்கணக்கான புதிய படங்கள் கண்டறியப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன’ என்று சொல்வதைவிட துல்லியமான எண்ணிக்கையைக் கூறிப் படப்பட்டியல் அமைப்பது பதிப்பாசிரியருக்கும் நல்லது; பயன் கொள்வோருக்கும் நல்லது என்னும் பொருளில் சான்று காட்டி எழுதப்பட்ட என் கட்டுரைப் பகுதியை ஏதோ ஒரு படத்தைப் பற்றியதாக மட்டும் பொருள் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

‘கொடிவழி’ பற்றிப் பேசும்போது அதை உருவாக்கத் தாம் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியை விளக்கியிருக்கிறார் சரவணன். தம் பதிப்பு அனுபவங்களைக் கொண்டு சில கட்டுரைகள் எழுதும்படி அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். இதுபோன்ற விவாதங்களை ஒட்டியாவது அவர் அனுபவச் சிதறல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது நல்ல விஷயம். சரி, அதை விளக்கியதுடன் தமக்குத் தாமே ‘பிற்போக்குச் சாயம்’ பூசிக்கொண்டிருக்கிறார். வாரிசுகளில் பெண் வழியைப் பற்றிப் பேசாததை நான் குறையாகவும் சொல்லவில்லை; பிற்போக்கு என்றும் குறிப்பிடவில்லை. ‘ஆண் வாரிசுகளைப் பட்டியலிடுவது மரபு; அந்த மரபையே ப. சரவணனும் பின்பற்றியிருக்கிறார். நவீன காலத்துக் கருத்தோட்டங்களுக்கு ஏற்பச் செயல்படும் பதிப்பாசிரியர் முன்னோடியாகக் கருதப்படுவார்’ என்னும் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஆண்வாரிசுகளை அறிய எடுத்துக்கொண்ட பெருமுயற்சியில் சிறிதளவைப் பெண்வழியைக் கண்டறியவும் எடுத்துக்கொண்டிருக்கலாமே என்றுகூடக் கேட்கவில்லை. பெண் வழியையும் கொடுத்திருந்தால் சரவணனுக்குப் பெருமை சேர்ந்திருக்கும் என்னும் எண்ணத்திலேயே அதைக் குறிப்பிட்டேன். ‘உ.வே.சாமிநாதையர் ‘என் சரித்திர’த்தில் தம் மனைவியின் பெயரை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடுகிறார்’ என்று அம்பை கவனப்படுத்திய செய்தி முக்கியமானது. பெண்ணிய நோக்கில் எழுந்த அந்தக் குரலை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதைய பதிப்பு அட்டை உ.வே.சாமிநாதையரை நடுநாயகமாக வைத்துச் சுற்றிலும் பிறர் படங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. அதில் உ.வே.சா.வின் மனைவி மதுராம்பிகையின் படம் அவரது காலடியில் வைக்கப்பட்டிருக்கிறது; திட்டமிட்டுச் செய்யாத போதும் அது ஒரு உறுத்தலாகவே தோன்றியது. 

உ.வே.சா.வின் பெற்றோர் படம் ஒன்று உள்ளது. தந்தை படுக்கை மேலே அமர்ந்திருக்க அவரது காலடியில் தாய் இருக்கும் படம். ஒருகாலத்து மரபு அது. கணவன் அமர, மனைவி நிற்பது; குழுப் புகைப்படங்களில் ஆண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கப் பெண்கள் கீழே அமர்ந்திருத்தல் என அவை அக்கால அடையாளங்கள். இன்றைக்கு அத்தகைய கருத்தோட்ட மரபுகளில் இருந்து மாறியாக வேண்டும். அதுதான் நவீன உணர்வு. அதையும் ப. சரவணனிடம் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.   உ.வே.சா. காலம் அல்ல இது. பெண்ணியம் ஏற்கப்பட்ட காலம். பெண்களுக்குச் சொத்துரிமை உட்படப் பலவும் கிடைத்துவிட்டன. இத்தகைய நவீன காலத்தின் பதிப்பாசிரியராக விளங்கும் ப. சரவணன் மரபைக் கடந்து இந்தக் கோணத்திலும் சிந்திக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். பதிப்புக்கு மரபிலிருந்து பல்வேறு விஷயங்களை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நவீன உணர்வோடும் இயங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பிலிருந்து உதித்த எண்ணம் அது.

ஒரு பதிப்பில் கட்டாயம் இருக்க வேண்டிய பகுதி ‘அருஞ்சொல் அகராதி’ என்பது என் அறிதல். ஒரு படைப்பை வாசிப்பவரிடம் ‘தமிழ் லெக்சிகன்’ ஏழு தொகுதிகளும் இருக்கும் என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அவற்றை மேஜைமீது வைத்துக்கொண்டு ஒரு நூலை வாசிக்க முடியாது. நூலுக்குள் வரும் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டு
மானால் உடனே பார்ப்பதற்கு வாகாக ‘அருஞ்சொல் அகராதி’ உதவும். அதை உணர்ந்துதான் உ.வே.சா., வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் தம் பதிப்புகளில் அகராதியைச் சேர்த்தார்கள். அதைப்போல அருஞ்சொற்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே ஓர் அகராதி வேண்டும் என்று சொன்னேன். நான் பல அகராதி கேட்பதாகச் சரவணன் விரிக்கிறார். அப்படிக் குழப்பம்தரும்வகையில் எழுதுகிறேனோ? நவீன இலக்கியப் பதிப்புகளில்கூட ‘அருஞ்சொல் அகராதி’ வேண்டும் என்பதுதான் என் எண்ணம். புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கு.ப.ரா., தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட அனைவரின் படைப்பு களுக்கும்  ‘அருஞ்சொல் அகராதி’ அவசியம். நூலை வாசிக்கும் எந்த ஒரு வாசகருக்கும் அவ்வகராதி உதவும்.

‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’ பொதுவாசகருக்குத் தேவையில்லை என்கிறார் சரவணன். இந்த நூல் எந்த வாசகருக்கு உரியது? பொதுவாசகருக்கு உரியது, சரி. பொதுவாசகர் என்றால் யார்? ஒரு நூலை ஆய்வுக்கு உட்படுத்தாமல் வாசிப்பவர் பொதுவாசகர் என்று சரவணன் சொல்வதிலிருந்து புரிந்துகொள்கிறேன். வாசகருக்குப் பிரதான இடம் தரும் கோட்பாடுகளின் காலத்தில் இப்படி வாசகரையும் வாசகத் தேவையையும் குறுக்கக் கூடாது. மேலும் ஒரு செம்பதிப்பானது அனைத்துத் தரப்பின் தேவையையும் நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக வாசிப்பவர்கள், ஆர்வத்தால் வாசிப்பவர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்குமான கூறுகளை உள்ளடக்கி அமைவது செம்பதிப்பு.  இது செம்பதிப்பு, ஆனால் இது பொதுவாசகருக்கானது என்று சொல்லிவிட்டால் அதன்பின் எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை.

‘பொய்யே கட்டிய சிந்தாமணி’ என்னும் தொடருக்கு இப்போது அவர் கொடுத்திருக்கும் இடம் சுட்டல், முழுச்செய்யுள் ஆகியவை அற்புதமாக இருக்கின்றன. குறைந்தபட்சம் இடம் சுட்டலைச் செய்வது பதிப்புக்கு வலு சேர்க்கும். பதிப்பாசிரியருக்கு அற்பம்; வாசகருக்கு அற்புதம். இப்படிப் பல அற்பங்களை அவர் வழங்க வேண்டும்; அவை அற்புதங்களாகும். ‘ரசித்துப் படிப்பவருக்கு’ இடைஞ்சல் செய்வனவல்ல அகராதிகள்; உதவுவன. வாசிப்பிற்கு எந்த இடையூறும் செய்யாமல் வாசிப்பினூடே எழும் தேவைகளை நிறைவு செய்வனவே அகராதிகள். வாசிக்கும் போது பார்க்க விரும்பினால் பார்க்கலாம்; தேவையில்லை என்று கருதினால் விட்டுவிடலாம். அகராதிகள் ஒரு இடைஞ்சலும் செய்யாமல் கடைக்கோடியில் தேமே என்று கிடப்பவை. அணுகுபவரை உள்ளிழுத்து உதவுபவை. பேரிலக்கியப் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழியில் அகராதிகளை இடைஞ்சல் என ஒரு பதிப்பாசிரியர் கருதக் கூடாது.

பொருளடைவில் விடுபாடுகள் பற்றிக் கூறும்போது அவ்வடைவு தயாரிக்கப்பட்ட பாட்டையும் எடுத்த முயற்சிகளையும் விளக்கிவிட்டு ‘அடைவின் அமைப்புச் சிறப்பைச் சுட்டாமல் விடுபடல்களை மட்டும் காட்டுவது நியாயமா’ என்று சரவணன் கேட்கிறார். ஒன்றின் சிறப்பைச் சுட்டிவிட்டுத்தான் விடுபடல்களைச் சொல்ல வேண்டும் என்பது நிலைத்த விதி அல்ல. மேலும் சரவணனைப் பாராட்டியும் புகழ்ந்தும் என் கட்டுரையிலும் பிற இடங்களிலும் பலபட எழுதியிருக்கிறேன். உட்தலைப்புகளைக் கொண்ட பொருளடைவை முதன்முதலாக உருவாக்கியவர் தம் பதிப்புரையில் அதன் பயன்பாட்டைச் சொல்லி அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் விளக்கியிருக்கலாம். புதிதாக ஒன்றைச் செய்யும்போது பதிப்பாசிரியர் விளக்கம் அவசியமானது.

உட்தலைப்பு என்று அவர் சொல்வது ‘வெவ்வேறு சந்தர்ப்பங்களைக் குறிக்கும் தலைப்புகள்’ என்று புரிந்து கொள்கிறேன். ‘குமரகுருபரர்’ என்றால் அவர் பெயர் வரும் இடங்கள், அவரது நூல்கள் வரும் இடங்கள் ஆகியவற்றை இந்த உட்தலைப்புகள் குறிக்கின்றன.  ‘நீதிநெறி விளக்கம்’ நூலைப் பற்றிய இடத்தை அறிய வேண்டுமானால் பொருளடைவில் ‘குமரகுருபரர்’ தலைப்பைப் பார்த்து அதற்குள் இருக்கும் ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் உட்தலைப்பைக் கொண்டு எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். குமரகுருபரர் குறித்த பிற செய்திகள் உள்ள பக்கங்களையும் தேவையானால் பார்த்துக்கொள்ளலாம். இது ஒரு நல்ல வழிதான். ஆனால் இதில் நீதிநெறி விளக்கம் தனிப்பதிவாக இடம்பெறுவதில்லை. பழந்தமிழ் நூல்களைத் தேடுவோர் ஆசிரியர் பெயரைக் கொண்டு தேடுவதில்லை. நூற்பெயர்களைக் கொண்டே பெரிதும் தேடுவர். மேலும் அதுதான் இதுநாள்வரையிலான பொருளடைவுகளின் இயல்பு. இந்தப் பொருளடைவு புதுமுறையைக் கைக் கொண்டிருப்பதால் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துச் செய்திருக்க வேண்டும். புறநானூறு மட்டுமல்ல,  எட்டுத்தொகை நூல்கள் எவையுமே பொருளடைவில் இடம்பெறவில்லை. அவற்றைச்  ‘சங்க நூல்கள்’ என்னும் தலைப்பில் இடம்பெறச் செய்வது திட்டம் போலும். ‘சங்க நூல்கள்’ என்னும் தலைப்பு இருக்கிறது; அதில் எட்டுத்தொகை நூல்கள் பற்றிய போதுமான தகவல்கள் இல்லை. அவர் எதிர்பார்க்கும் முறையில் இப்படிச் சொல்கிறேன்: ‘புதிய முறையில் பொருளடைவு உருவாக்கியிருக்கும் பதிப்பாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்; ஆனால் உரிய விளக்கங்களோடு  இன்னும் கவனம் எடுத்துச் செய்திருக்கலாம்.’

ஒரு செம்பதிப்பு ‘எல்லாவற்றையும்’ உள்ளடக்கித்தான் அமைய வேண்டும். ‘எல்லாம்’ என்பதற்கு முடிவில்லை. ஒரு பதிப்பில் ‘எல்லாம்’ தரும் பொருள் ஒன்றாக இருக்கும். அது வாசகர் கைக்குப் போய்ப் பயன்படும் போது ‘எல்லாம்’ என்பதற்குப் பொருள் விரிந்துவிடும். ஆகவே அடுத்த பதிப்பில் ‘எல்லாம்’ என்பதில் கொஞ்சம் சேரும். இப்படித்தான் ஒவ்வொரு பதிப்பிலும் ‘எல்லாம்’ விரிந்துகொண்டே செல்லும். உ.வே.சா.வின் பதிப்புகளில் இந்த அம்சத்தைத் துலக்கக் காணலாம். உவமைகள் வரும் இடங்களின் விவரம் தருவார்; நாட்டுப்புறக் கதைகள் வரும் இடங்களைச் சுட்டுவார்; வரலாற்றுச் செய்திகளைப் பட்டியலிடுவார். இப்படி ஒரு பதிப்புக்கும் அடுத்த பதிப்புக்கும் நூறு பக்கங்கள், இருநூறு பக்கங்கள் கூடிக்கொண்டே செல்லும். பதிப்பு என்பது முடிவற்ற செயல்பாடு.  ‘என் சரித்திரப்’ பதிப்பில் இன்றைக்கு எனக்குத் தேவைப்படுவனவற்றைச் சரவணனிடம் கேட்கிறேன். இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்துச் சரவணன் போல ஒரு பதிப்பாசிரியர் வந்து  ‘என் சரித்திர’த்திற்கு மின்பதிப்பு ஒன்றை உருவாக்கலாம். அப்போது சரவணனுக்கு இருக்கும்  ‘சிக்குப் பலகையில் வைத்துத்தான் படிக்க வேண்டும்’, ‘நூலை எப்போது வெளியிடுவது’ போன்ற சிக்கல்கள் எல்லாம் இருக்காது. எந்த இடையூறும் இல்லாமல் ரசித்தும் படிக்கலாம்; சுட்டியைத் தட்டினால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏராளமான விவரங்களும் இணைப்புகளும் வந்து விழலாம்.  இங்கும் ‘கலாம்’ தான் பயன்படுத்துகிறேன். ‘கலாம்’கள்தான் கற்பனையை விரித்துச் சாத்தியங்களை நோக்கி நகர்த்துகின்றன. இப்படி ‘எல்லாம்’ என்பதில் எல்லையற்ற ‘எல்லாம்’ அடங்கியிருக்கின்றன.

மூலபாடம் விஷயத்தில் கள ஆய்வில் இறங்கி உ.வே.சா.வுக்குப் பெருமை சேர்த்த சரவணன் உழைப்பை மெச்சுகிறேன். அகராதிகள் பொருள் வரையறை கொண்டவை. அவை பெரும்பாலும் பொதுத்தன்மைகளுக்கே முதன்மை தரும். மீறல்களையும் விதிவிலக்குகளையும் கணக்கில்கொண்டால் அகராதி உருவாக்கம் சாத்தியப்படாது. தமிழ் லெக்சிகனில் பணியாற்றியவர்கள் சைவ, வைணவச் சம்பிரதாயங்களை நன்கறிந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆகவே அதன் விளக்கத்தை நான் பெரிதும் நம்புகிறேன். என் கட்டுரையில் ஸப்தஸ்தான உற்சவம், பிரம்மோற்சவம் ஆகியவை பற்றி எழுதியதால் அவை தொடர்பான ஆய்வில் ப. சரவணன் ஈடுபட்டுப் பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார். தனிக்கட்டுரை எழுதும் அளவிற்கு அச்செய்திகள் விரிகின்றன; மகிழ்ச்சி.

கள ஆய்வில் தங்கராஜ் மேஸ்திரி சொல்லியிருக்கும் தகவல்கள் என் கருத்தை மாற்றும் அளவுக்கானதாக இல்லை. பெருமாள் கோயிலில் நடப்பது பிரம்மோற்சவம் என்பதை அவர் மறுக்கவில்லை. பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று நடக்கும்; ஏழாம் நாள் நடப்பதற்குப் பெயர் ‘சப்தாவர்ணம்’ என்று அவர் கூறுகிறார். பெருமாள் கோயிலில் நடக்கும் பிரதான உற்சவம் ‘பிரம்மோற்சவம்.’ அதன் கீழ் நடைபெறும் ஒருநாள் நிகழ்வு ‘சப்தாவர்ணம்’ என்று நான் புரிந்துகொள்கிறேன். சிவன் கோயிலில் நடைபெறும் பிரதான உற்சவமே ‘ஸப்தஸ்தான உற்சவம்’ ஆகும்.  ‘என் சரித்திரம்’ நூலிலேயே அதற்கு அகச்சான்று இருக்கிறது. ‘அவர்கள் வருஷந்தோறும் திருவையாற்றில் நடைபெறும் ஸப்தஸ்தான உத்ஸவ தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் குன்னத்திற்கு வந்து கணக்குப்பிள்ளையின் உதவியைப் பெற்றுச் செல்வது வழக்கம்’ (ப. சரவணன் பதிப்பு, ப.135) என்று உ.வே.சா. எழுதியுள்ளார். இதில் தெளிவாக சிவன் கோயிலில் நடைபெறுவது ஸப்தஸ்தான உற்சவம் என்பது வெளிப்பட்டுள்ளது.  ஆகவே சிவன் கோயிலின் பிரதான உற்சவமாகிய  ஸப்தஸ்தான உற்சவம் பெருமாள் கோயிலில் நடக்கிறது என்றால் குழப்பம் ஏற்படும் என்பதால் பெருமாள் கோயிலில் பிரதானமானதாகிய ‘பிரம்மோற்சவம்’ என்று கையெழுத்துப் படியில் உ.வே.சா. மாற்றியிருக்கக் கூடும். இதில் அவ்வளவுதான் விஷயம். இதற்காகத் தமிழ் லெக்சிகன் குறையுடையது என்றும் என்னைத் தல புராணங்களின் அருமை தெரியாதவன் என்றும் எண்ண வேண்டியதில்லை. குறையற்ற முழுப் பிரகிருதிகள் எவருமில்லை.

கு.ப.ரா.வின் சிறுகதைத் தொகுப்புப் பதிப்புரையில் ‘இதழ்களில் வெளியானதற்கும் தொகுப்பில் வெளியானதற்குமான வேறுபாடுகளைப் பாட வேறுபாடு எனக் கொள்வது சரியா என்னும் கேள்வி எனக்குள் உள்ளது’ என நான் எழுதியுள்ளதை எனது கருத்து முரண்பாடாகச் சரவணன் மேற்கோள் காட்டுகிறார்.  சூழலைத் தவிர்த்துப் பிய்த்தெடுத்து மேற்கோளைப் பயன்படுத்துவது சரியல்ல. கு.ப.ரா.வின் கதைகள் பெரும்பாலானவை அவர் உயிருடன் இருந்தபோதே நூலாக்கம் பெற்றுவிட்டன. ஆகவே நூல்களில் இருப்பவற்றையே மூலபாடமாக எடுத்துக்கொள்ள முடிந்தது. இதழ்களில் வெளியான பல கதைகளை மறு எழுத்தாக்கம் செய்திருக்கிறார் கு.ப.ரா.. ஆகவே பாட வேறுபாடு காட்ட வேண்டுமானால் கதைகளின் இருபிரதிகளையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை வரும்போது நான் தெரிவித்த கருத்து அது.

கு.ப.ரா. கதைகளுக்கு இன்னொரு வகைப் பதிப்பு கொண்டு வர வேண்டும் என எனக்கு எண்ணம் உள்ளது. இதழில் வந்த கதை வடிவம், நூலில் வந்த கதை வடிவம் ஆகியவற்றை அடுத்தடுத்துக் கொடுக்கும் கனவுப் பதிப்பு அது. அவரது ‘பண்ணைச் செங்கான்’ என்னும் கதைக்கு இன்று மூன்று வடிவம் கிடைக்கிறது. முதலில் மணிக்கொடியில் வந்த வடிவம், பின்னர் ஹிந்துஸ்தான் இதழில் வந்த வடிவம், மூன்றாவதாகக் ‘கனகாம்பரம்’ நூலில் வெளியான வடிவம்.  கு.ப.ரா. வாழ்ந்த காலத்தில் இறுதியாக வெளியான வடிவம் ‘கனகாம்பரம்’ நூலில் உள்ளதுதான் என்பதால்  அதையே என் பதிப்புக்கு மூலமாக எடுத்துக்கொண்டேன்.  ஆனால் இம்மூன்றையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டுமானால் அவருக்கு உதவும் வகையில் மூன்று படிகளையும் கொண்ட பதிப்பு தேவை. எழுத்தாளர்களின் கையெழுத்துப் படிகள், பிரசுர வடிவங்கள் ஆகியவை படைப்பாக்க முறைகளை ஆய்வு செய்வதற்கு உதவுவன என்னும் கருத்தைக் கா. சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். அத்தகைய கோணத்திலான ஒரு பதிப்பைக் கு.ப.ரா.வுக்குக் கொண்டு வரும் தேவையிருப்பதாகக் கருதுகிறேன். அப்பதிப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் வரலாம். எனினும் காலச்சுவடு அதை வெளியிடும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. எனக்கு அவசரம் ஏதுமில்லை; காலம் அதைச் சாத்தியப்படுத்த வேண்டும்.

‘என் சரித்திர’ மூல பாடத்தின் பிரச்சினை வேறு. தொடர் ஆனந்த விகடனில் வெளியாகிக்கொண்டிருந்தபோதே 1942இல் உ.வே.சா. இறந்துவிட்டார். எழுதிய வரைக்கும் நூலாக்கம் செய்வது உடனடியாக நடைபெறவில்லை. காரணம் இரண்டாம் உலகப்போர் காரணமாக ஏற்பட்ட காகிதத் தட்டுப்பாடு. ஆகவே தொடர் நின்று எட்டாண்டுகளுக்குப் பிறகு 1950இல் நூல் வெளியாயிற்று. அந்த நூலுக்கு மூலபாடமாக எதைப் பயன்படுத்தினார்கள் என்பதை இப்போது அறிய முடியவில்லை.  இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, உ.வே.சா. வைத்திருந்த திருத்தப்படி; இரண்டாவது, ஆனந்த விகடனில் வெளியான படி.  ஆனந்த விகடனில் வெளியானதில் கலியாணசுந்தர ஐயர் திருத்தம் செய்து நூலாக்கியிருக்கிறார் எனப் ப. சரவணன் நம்புகிறார். அந்தத் திருத்தங்களைப் பற்றிக் கடுமையான சொற்களைப் ப. சரவணன் பயன்படுத்துகிறார். பிழைகள், ஐயர் எழுதாத சொல்லாத வார்த்தைகள், இட்டும் முன்பின்னாகவும் மாற்றியவை, இடைச்செருகல் என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறார்.

‘என் சரித்திர’ நூலுக்கு மூலமாக அமைந்திருப்பது உ.வே.சா. வைத்திருந்த திருத்தப்படியாக இருக்கலாம் என்பது என் அபிப்ராயம். அதற்குப் ‘பிரம்மோற்சவம்’ என்பதை மட்டும் நான் சான்றாகக் காட்டவில்லை. 98ஆம் அத்தியாயத்தில் ‘பெற்றோர் அடைந்த ஆறுதல்’ என்னும் உட்தலைப்புடனான ஒரு பத்தி இடம்பெறுவதைக் காட்டியிருந்தேன். அதை எழுதியவர் உ.வே.சா. என்பதில் ஐயமே இல்லை. அப்படி ஒரு பத்தியை எழுதிச் சேர்க்க எவருக்கும் காரணமும் இல்லை.  ‘இலந்தைநகர் தண்டபாணி விருத்தம்’ நூல் வெளியான ஆண்டு 1881 என ஆனந்த விகடன் தொடரில் பிழையாகப் பதிவாகியிருப்பதை சரவணன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி ஆனந்த விகடன் தொடரில் இடம்பெற்றிருந்த பிழைகள் பலவும் கலியாணசுந்தர ஐயர் பதிப்பில் திருத்தம் பெற்றிருக்கின்றன.  உண்மையில் ஆனந்த விகடன் தொடரில் இருந்த படிவுகளைத் துலக்கியிருப்பது கலியாணசுந்தர ஐயர் பதிப்புத்தான்.

‘கவிராயர்’ என்பதைச் சில இடங்களில்  ‘கவிராசர்’ என ஆனந்த விகடன் அச்சிட்டுள்ளது. ‘ஸ்தானம்’ என்பது ‘ஸ்நானம்’ எனப் பிழைபட்டுள்ளது. அப்புத்தகம், அப்பக்கம் என எழுதும் இயல்புடையவர் உ.வே.சா.. ‘அந்த’ என்பதை அரிதாகவே அவர் பயன்படுத்துவார். ஆனால் ஆனந்த விகடன் தொடரில் ‘அந்த’ என்பதுதான் மிகுதி. அதே போலப் ‘புத்தகம்’ என எழுதுபவர் உ.வே.சா.. விகடனிலோ ‘புஸ்தகம்’தான். ‘கொண்டு’ என்னும் துணைவினையை (அது ‘விகுதி’ அல்ல) அளவாகப் பயன்படுத்துவதுதான் உ.வே.சா.வின் வழக்கம். ஆனந்த விகடன் மூலத்திலோ ஏராளமான ‘கொண்டு’கள். இப்படிப் பல பிழைகள் ஆனந்த விகடன் மூலத்தில்தான் உள்ளன. பிழைபட்ட அம்மூலத்தை அப்படியே ப. சரவணன் கொண்டிருக்கிறார். உ.வே.சாமிநாதையரின் மொழிநடை குறித்து விரிவாக ஆராய்ந்தால் கலியாணசுந்தர ஐயர் பதிப்பில் திருத்தமாகவும் ஆனந்த விகடன் மூலத்தில் பிழையாகவும் உள்ளதைக் காண முடியும்.

உ.வே.சா.வின் மொழி இளகியும் நெகிழ்ந்தும் மாறிக்கொண்டே இருந்தது. அவரது இறுதிக் காலத்தில் ஓர் இதழில் தம் சுயசரிதத்தைத் தொடராக எழுதிய போது அவரால் சொல்லத்தான் முடிந்தது. சொல்லச் சொல்லவும் சொல்லியதைச் சுயமாகவும் கி.வா. ஜகநாதன் எழுதினார் எனத் தெரிகிறது. அப்படியிருக்கும்போது அக்காலத்து நிலைக்கேற்பத் தமிழ்ச் சொற்களை அவர் சம்மதத்தோடோ சம்மதம் இல்லாமலோ பெய்திருக்க வாய்ப்பிருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘வேங்கடாஜலபதி’ என்று உ.வே.சா. ஒருபோதும் எழுத மாட்டார். ஆனால் இரு பதிப்புகளிலும் அச்சொல் காணப்படுகிறது. இந்நிலையில் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆனந்த விகடனில் பிழைகளும் கலியாண சுந்தர ஐயர் பதிப்பில் திருத்தங்களும் உள்ளன. ஆகவே வெகுஜன இதழாகிய ஆனந்த விகடனை விடக் கலியாணசுந்தர ஐயரை நம்புவதே நல்லது. உ.வே.சா.வின் கடிதக் கருவூலம் வெளியானால் 1941, 1942ஆம் ஆண்டுக் கடிதங்களில் ‘என் சரித்திரத்’ தொடர் பற்றிய பல கடிதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதில் பிழைகள், திருத்தங்கள் பற்றித் தெளிவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு எழுத்துப்பூர்வ ஆதாரமாகக் கிடைக்கக் கூடியது அது ஒன்றுதான். அது வெளியானால் கலியாணசுந்தர ஐயர் பதிப்புக்கு இன்னும் வலு சேரும் என்பது என் எண்ணம்.

உ.வே.சா.வின் பார்வை பட்டும் படாமலும் நிகழ்ந்த திருத்தப்படியைத்தான் கலியாணசுந்தர ஐயர் மூலமாகக் கொண்டிருந்திருப்பார் என்பதற்கு இப்படி எத்தனையோ சான்றுகள்.  ‘என் சரித்திரச் சுருக்கம்’ வெளியிட்டவரும்  ‘என் சரித்திர’த்தின் தொடர்ச்சியாக ‘என் ஆசிரியப் பிரான்’ எழுதியவருமான கி.வா.ஜ. தம் வாழ்நாளில் எங்கேனும் என் சரித்திரத்தில் திருத்தம் நடந்திருக்கிறது என்று சொன்னாரா? நானறிந்தவரையில் இல்லை. என் சரித்திரம் உருவான வரலாற்றைத் தெரிவிக்கும் நல்ல முன்னுரை, தெளிவான படப்பட்டியல், பயன்படும் வகையிலான சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி, 64 படங்கள், பிழைகளற்ற மூலம் எனப் பதிப்பிக்கப்பட்டது கலியாணசுந்தர ஐயர் பதிப்பு. அதை அத்தனை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. ப. சரவணன்  சொல்லளவில் அப்பதிப்பைக் குறைகூறினாலும் அதை முழுதாகப் புறக்கணிக்கவில்லை. அதிலிருந்து பலவற்றைத் தம் பதிப்பில் பயன்படுத்தியிருக்கிறார்.  ‘கொஞ்சமாக முதல் பதிப்பையும் பின்பற்றி அமைக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டும் இருக்கிறார். அப்படித்தான். கலியாணசுந்தர ஐயர் பதிப்பை வெறுத்தாலும் அதன் பயன்பாட்டைத் தவிர்க்க இயலாது என்பதற்கு இதுவே சான்று. கலியாணசுந்தர ஐயர் பதிப்புக்கும் ஆனந்த விகடன் தொடருக்கும் இடையே தொகுத்துக் காட்ட முடியாத அளவுக்குப் பாட வேறுபாடுகள் இல்லை. சில அத்தியாயங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் வேறுபாடுகள் காணப்படுவதை அறிய முடிந்தது. ஆகவே அடிக்குறிப்பாகவோ பின்னிணைப்பாகவோ பாட வேறுபாடுகளைக் காட்டுவதில் சிரமம் ஏதுமில்லை. பிழைபட்ட பாடம் என்று தெரிந்தாலும் சுவடியில் இருக்கும் காரணத்தால் அதையும் பாட வேறுபாடாகக் காட்டுவதுதான் உ.வே.சா.வின் பதிப்பு நெறிமுறை.

கலியாணசுந்தர ஐயர் பதிப்பின் மறுபதிப்பைத் தொடர்ந்து உ.வே.சா. நூலகம் (எப்போது படங்கள் நீக்கப்பட்டன என்று தெரியவில்லை) வெளியிட்டு வந்திருக்கிறது. அதேபோல ஆனந்த விகடன் தொடரை மூலமாகக் கொண்ட ப. சரவணன் பதிப்பு இப்போது வந்திருக்கிறது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் அவ்வவற்றிற்குரிய முக்கியத்துவம் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைத்த வகையில் உருவாக்கப்படும் ஒரு பதிப்பை நான் எதிர்பார்க்கிறேன். அதுவே ‘என் சரித்திரம்’ நூலுக்கான மேம்பட்ட செம்பதிப்பாக விளங்கும் எனக் கருதுகிறேன். அந்தப் பதிப்பு இரண்டுவகையில் அமையலாம். முதலாவது, கலியாணசுந்தர ஐயர் பதிப்பை முதன்மைப் பிரதியாகக் கொண்டு  ஆனந்தவிகடன் தொடரைப் பாட வேறுபாட்டுப் பிரதியாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்படலாம். இரண்டாவது, ஆனந்த விகடன் தொடரை முதன்மைப் பிரதியாகக் கொண்டு கலியாண சுந்தர ஐயர் பதிப்பைப் பாட வேறுபாட்டுப் பிரதியாகப் பயன்படுத்தி உருவாக்கலாம்.

இதில் முதலாவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். அச்செம்பதிப்பு படப்பட்டியல், அருஞ்சொல் அகராதி, செய்யுள் முதற்குறிப்பகராதி, இடம் விளங்கா மேற்கோள் அகராதி, தெளிவான பொருளடைவு, முந்தைய பதிப்புகளின் ஆண்டு வரிசை முன்னுரைகள், அடிக்குறிப்பு விளக்கங்கள், காய்தல் உவத்தல் அற்ற பாட வேறுபாட்டுத் தொகுப்பு ஆகியவற்றுடன் பிழையற்ற மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு என் எதிர்பார்ப்பு இவ்வளவுதான். அத்தகைய செம்பதிப்பைப் ப. சரவணனும் உருவாக்கக்கூடும். சாத்தியங்களைச் சிந்திப்பவர், சாத்தியப்படுத்துபவர்தான் பதிப்பாசிரியர் என்பது என் எண்ணம்.

பயன்பட்ட நூல்கள்:

1. உ.வே.சாமிநாதையர், ‘என் சரித்திரம்’, கலியாணசுந்தர ஐயர் பதிப்பு, 1950, சென்னை, கபீர் அச்சுக்கூடம்.

2. உ.வே.சாமிநாதையர், ‘என் சரித்திரம்’, 1990, சென்னை, உ.வே.சா. நூல் நிலையம், மூன்றாம் பதிப்பு.

3. உ.வே.சாமிநாதையர், ‘என் சரித்திரம்’, ப. சரவணன் பதிப்பு, 2017, நாகர்கோவில், காலச்சுவடு.

4. உ.வே.சாமிநாதையர், ‘திருவாவடுதுறை யாதீனத்து வித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ (முதற்பாகம்), 1933, சென்னை, கேஸரி அச்சுக்கூடம்.

5. காலச்சுவடு இதழ், மார்ச் 2017

மின்னஞ்சல்: murugutcd@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.