நவம்பர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • அஞ்சலி: கி.அ. சச்சிதானந்தம்
      இலக்கிய வழிப்போக்கர்
    • கட்டுரை
      தகுதியா தந்திரமா?
      இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
      நாணலின் கானம்
      உன்னால்தான் எல்லாம்
      புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!
      அளப்பரிய கலையின் அபூர்வ மலர்
    • கதை
      கருவாடு
      வீடு திரும்புதல்
    • அனுபவம்
      மதிப்புமிக்கது இவ்வாழ்வு
    • பதிவு
      மதுவந்தி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      மாயம் (நாவல்), அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைகள்), தேனோடு மீன் (கட்டுரைகள்), நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்), பஷீர் கதைகள் (முழுத்தொகுப்பு)
    • மதிப்புரை
      விதிபோட்ட தாயம்
      ஒரு புதிய சிலப்பதிகாரம்
    • கவிதைகள்
      பூரணம், துளி
    • தலையங்கம்
      புதியன புகுமா?
    • ஒடியமொழிக் கதை
      பாம்புப் பிடாரனின் கதை
    • கவிதை
      ஆனந்தன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2020 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

காலச்சுவடு 2020 ஜூலை இதழில் பெருமாள் முருகன் (பெ.மு.) அவர்கள் எழுதிய “என் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு” என்னும் கட்டுரைக்குச் செம்டம்பர் - காலச்சுவட்டில் நான் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அதனை மறுத்துத் திரு. பெ.மு. “மீண்டுமோர் இடையீடு” என்னும் தலைப்பில் ஓர் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். தர்க்கப்பூர்வமாகத் தமது கட்டுரையை அவர் நிறுவியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மீண்டும் ஓர் எதிர்வினையாற்ற அவரே எனக்குக் களன் சமைத்துத் தந்திருக்கிறார். என்றாலும், “இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தும்” எங்களுக்குள் ‘பொது எதிரி’யை அனுமதிக்க முடியாது அல்லவா? ஆகவே என் தரப்பு நியாயங்களை அவரோடு நேர்ப் பேச்சில் சரிசெய்துகொள்ளவே விரும்புகிறேன்.

ப. சரவணன்
சென்னை

‘ஜீவனும் கலையழகும் மிக்க தி.ஜாவின் மொழிநடை வாசகரைச் சுழல் போல் உள்ளே இழுத்துவிடுகிறது’ என்ற வரி முக்காலும் உண்மை. வண்ணநிலவனின் ‘மனம் உணரும் தொனி’ தி.ஜானகிராமனின் தீவிர வாசகர்களின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்ததாகவே உணர்கிறேன். ‘வெகு இயல்பாக, பெரும் பிரயத்தனமின்றி விதவிதமான உருவங்களிலும் உத்திகளிலும்’ தி.ஜா எழுதியிருப்பதையும் வண்ணநிலவன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.

வண்ணநிலவனின் படைப்புகள், எப்போதுமே மிருதுவாகக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லக் கூடியன. அதில் ஆங்காங்கே வாசனைகளை உணரலாம்; அதைவிட அவலங்களையும் ஏக்கங்களையும் அதிகமாக உணரலாம். வண்ணநிலவனின் பெண்படைப்புகளில், அவருக்குள்ள அபரிதமான வாஞ்சையும் உள்ளன்பும் எவரையுமே ஒருகணம் அசைத்துவிடும்.

தி.ஜா, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருக்குப் பிறகு, நம்மிடையே உலவும் அற்புதக் கலைஞன் வண்ணநிலவன். அடிக்கடி காலச்சுவடு அவரது படைப்புகளுக்கு இடமளிப்பது பாராட்டுக்குரியது. காலம்தாழ்த்தியாவது அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கிறது.

கேசவ ரவி
சென்னை
-600 094

இதழ் 250இல் ‘கற்றலும் மதிப்பீட்டு முறைகளும்’ - அருணா ரத்தினம் கட்டுரை படித்தேன். கற்றலும் மதிப்பீட்டு முறைகளும் அனுபவங்கள், செயல்பாடுகளின் மூலம் மழலையர்கல்விமுதல் மேல்நிலைப்பள்ளிவரை நடைபெற வேண்டும் என்று தேசிய கல்வித்திட்டம் 2005இல் சொல்லப்பட்டுள்ளது. மிகச்சிறந்த கற்றல் மதிப்பீடுமுறைகளுக்கு வகுப்பறை வசதியும் போதிய ஆசிரியர்களும் இல்லாமல் அனைத்து மாணவர்களின் கவனத்தையும் கவர்ந்து அன்றாடம் தொடர்ச்சியாகக் கற்றல் மதிப்பீட்டு முறைகளை மேற்கொள்வது மிகச் சவாலானது.

முழு அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் கற்பித்தல் நடைபெற்றால் அது விழலுக்கு இறைத்த நீராக மாறிவிடும். பணியாற்றுகின்ற ஆசிரியர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் மேற்பார்வை இல்லையென்றால் அதுவும் பலனளிக்காமல் போகும்.

மதிப்பீட்டு முறைகளில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன. வகுப்பிலுள்ள ஆசிரியர், மாணவர்களின் தரத்தை மேம்படுத்துவது நடைமுறையில் இருந்துவருகிறது. அகம் புறம் என்ற மதிப்பீடுகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் அக மதிப்பீட்டில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாவிட்டால் அதனை முழுமையாக மதிப்பீடுசெய்ய இயலாது.

மூன்றாம் வகுப்பின் தேர்வு முடிவுகளை வைத்து அந்த வகுப்பின் தரத்தை முடிவுசெய்துகொள்வது எப்படி சரியாக இருக்க முடியும்? செயற்கைத்தனமான அளவுகோல்களைக் கொண்டு மதிப்பீடுசெய்வது போகாத ஊருக்குத் தடம் காட்டுவதுபோல் ஆகிவிடும்.

மா. கல்பனா பழனி
சின்னப்பள்ளத்தூர்

மு. இராமனாதனின் ‘தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்’ கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல பல்வேறு ஆவணங்களில் ஃபர்ஸ்ட் நேம், செகண்ட் நேம் என்றெல்லாம் விண்ணப்பங்கள் இருக்கும்போது அதைப் படித்தவுடன் மூன்று பட்டங்கள் வாங்கியவர் கூட தடுமாறிவிடுகிறார்கள்.

பெரும்பாலும் தமிழகத்தில் தலை பெரிதாக இருப்பது பெற்றோரின் பெயராக இனிஷியல் என்ற வழக்கம் உள்ளது. பழைய காலங்களில் ஜாதியின் பெயரைத் தம்முடைய பெயரோடு இணைத்துவைத்துக்கொண்டிருந்தனர். தந்தை பெரியார் தன்னுடைய பெயருக்குப் பிறகு இருக்கும் ஜாதியின் பெயரை நீக்கியது முதல், பெயர்களுக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த ஜாதிகள் அறுந்துவிடத் தொடங்கின.

இரு பெயரிட்டு எழுதும் வழக்கம் இல்லாத நிலையில் தேசியப் புள்ளிவிவர ஆவணங்கள் சேகரிப்பில் பல்வேறு குளறுபடிகளைச் சந்தித்து வருகிறோம். குறிப்பாக பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்றவற்றில் குடும்பப் பெயர் என்று தந்தையின் பெயரை முதல்பெயராகப் பதிவுசெய்து ஆவணங்களைப் பெறுகிறோம். குடும்பப் பெயர் இல்லாதபோது தந்தையின் பெயரையோ கணவரின் பெயரையோ குடும்பப் பெயர் என்று சொல்லிக்கொள்வதில் என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது? தலைப்பெழுத்து தந்தையின் பெயரேயென்று உலகுக்குத் தமிழகம் உரத்துச் சொல்ல வழிவகுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.

கூத்தப்பாடி பழனி
தருமபுரி

‘தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்’ கட்டுரையை ரசித்தேன். தாங்கள் சொல்வதுபோல தமிழரில் பெரும்பாலானோர் அனுபவித்து வரும் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான பிரச்சினைதான். இதைப் படிக்கும்பொழுது தொடர்பில்லாத வேறொரு விடயம் நினைவுக்கு வருகிறது.

நமது நீதிமன்றங்களில் நுழைவோர் (சாட்சி சொல்பவர் ஈறாக) தம் அடையாளம் குறித்து ஒருபடிவம் எழுதி ஒப்புவைக்க வேண்டும். அதில் சாதி, மதம் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். எனக்குச் சாதியோ மதமோ இல்லையென்று சொல்ல நமக்கு இன்னும் உரிமை வரவில்லை. இதுகுறித்து நீதிபதியிடமும் வழக்கறிஞர்களிடமும் வாதம் செய்த அனுபவம் எனக்கே உண்டு. நம் வாதங்கள் அங்கே எடுபடுவதில்லை என்பது நிதர்சனம். இதுபோலவே கல்வி நிறுவனங்களிலும் சில அரசு அலுவலகங்களிலும் கூட..... இது குறித்தும் கொஞ்சம் சிந்திக்கலாமே.

அரவரசன் (நாகராஜன்)
மதுரை
625006

‘ஆலயம் பதினாயிரம் நாட்டல்’ தலையங்கம் புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. பரம்பரையாகக் குடுமிவைத்திருப்பதை மரபாகக் கொண்டவர்களில் 99.9 சதவீதத்தினர் எந்த அரசு உத்தரவின் பேரில் குடுமியைத் தியாகம் செய்தனர்? அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பஞ்சகச்சம் கட்டிவந்தவர்களை இன்று காண முடியாமற்போன காரணம் என்ன? பெண்களின் உடைமுறைகளிலும் நவீனம் எந்த அரசாணையின் பேரில் நுழைந்தது?

‘சமுத்திரம் தாண்டிச் செல்வது சாஸ்திர விரோதம்’ என்ற காரணங் கூறியே பர்மியப் போர்களில் தங்களை ஈடுபடுத்திய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தனர் என்கிறது வரலாறு. மரபைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே தங்கள் பேரன், பேத்திகள் உலகின் அனைத்துநாடுகளிலும் கைநிறையச் சம்பாதிப்பதைப் பெருமையாகப் பேசும் பழைமைவாதிகள் கடல்தாண்டிச் சென்றுள்ள தங்கள் வாரிசுகளின் செயலுக்கு என்ன சமாதானம் கூறுவர்?

மரபின் மைந்தர்கள் ஒருகாலத்தில் கோயில்களில் மின்விளக்குப் பொருத்தினால் கடவுளுக்குக் கண் கூசும் என்று கூறியது பலரும் அறியாத உண்மை! இன்று கோயில்களில் நிகழும் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளிக் காட்சிகளாக!

வைணவத் திருக்கோயில்களில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பாடப்படுவது மரபைக் கட்டியழுபவர்களுக்குத் தெரியாதா? திருப்பதியிலும் ஆழ்வார்களின் பாடல்களுக்கு அத்துணை மரியாதை!

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் ரஞ்சன் கோகாய் வழங்கிய தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் யாதவ் அளித்த தீர்ப்பும் நமக்கு நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை முற்றாகச் சிதைத்துவிட்டன.

அர்ச்சகர்கள் விவகாரத்தில் நீதிமன்றங்கள் மரபின்வழி நிற்கும் ஆர்எஸ்எஸ் பயிற்சிபெற்றோர் காவல்துறை, நிர்வாகத்துறை, ராணுவம், நீதித்துறைகளில் உயர்பதவிகளில் அமரும் சூழலில் நியாயம் கிடைக்காது. அரசியல் மாற்றமே இன்றைய தேவை. அதுவரையிலும் அர்ச்சகர்கள் பிரச்சினையின் சூடு ஆறாமல் பார்த்துக்கொள்வதே ஆன்றோர் கடமை.

தெ. சுந்தரமகாலிங்கம்
விருதுநகர்

தமிழகத்தின் தொன்றுதொட்ட ஆலயவழிபாடும், பக்திமார்க்கமும் தமிழர்களது ஒட்டுமொத்த வாழ்வியல் கலாச்சாரத்தை என்றும் நிலை நாட்டவல்லவை. ஆனால் இறைவன்முன் எல்லாரும் சமம் என்பதுதான் கேள்விக்குறியாக ஆகி வருகிறது.

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற கோட்பாடுடைய தமிழ்ச் சமூகத்தின் இறைவழிபாட்டில், ஜாதியப் பாகுபாடு மனிதகுலத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்ற அடிப்படையில்தான் ‘கோவில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தலையங்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில வாசகங்கள் மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளன. முறையான பயிற்சிபெற்ற அர்ச்சகர்கள் அதைத் தமது வாழ்வாதாரமாகக் கொள்வதில் ‘அரசின் முன்னெடுப்பு ஏட்டுச்சுரக்காய் ஆனது’ என்பதும், அந்தச்சட்ட நடைமுறையை ‘அரசும் காகிதத்துடன் நிறுத்திக்கொண்டது’ என்பதும், அர்ச்சகர்களை வாரிசு அடிப்படையில் நியமிப்பது என்பதும் ‘அரசே ஒத்தாசை செய்து நடத்தும் முறைகேடு’ என்பதும், சமத்துவம் உருவாக்கும் எண்ணத்தில் ‘அரசு உருவாக்கும் சட்டங்கள் உண்மையானவையா அல்லது கண்துடைப்புச் சடங்குகளா?’ என்பதும் ஆழ்ந்து சிந்தித்தால், நமக்குள் சில உள்விசாரணைக் குழப்பங்களை உருவாக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதுபோன்ற ஒருசில தொன்றுதொட்ட சமூகச் சிக்கல்களை அவ்வப்போதைய அரசுகளும் அவசரகதியிலோ அரசியல் காழ்ப்புணர்வாலோ ‘எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிவிடுகின்றனவோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

காலங்காலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகச்சாமிகளிடமே கையேந்தி, வாய்பொத்தி அனைவருக்கும் பொதுவான கோவில் சன்னதிகளில் பிரசாதங்கள் பெறும் புரையோடிப்போன பழைமைகள் இந்த இருபதாம் நூற்றாண்டில்கூட மாறவில்லை.

சட்ட நெறிமுறைகள் குறுக்கிடாத சில வெளிநாடுகளில் கூட இந்தச் சமூக நீதியை நிலைநாட்ட முடியாத நிலைதான் உள்ளது என்று தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. பன்னெடுங்காலமாகக் கோவில்களில் கோலோச்சிவரும் மேல்தட்டு வர்க்கத்தின் பாரம்பரிய புத்திக்கூர்மையும் தந்திரநுட்பங்களும் வெளிநாடுகளிலும் ஊடுருவிச் சாதிக்கும் வல்லமை பெற்றவைதாம்!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவப்பெருந்தகை மட்டுமா கூறிச்சென்றார்? நமது சைவமும் வைணவமும் சமூகநீதிப்பாகுபாட்டை வலியுறுத்துகின்றனவா? ஆழ்வார்கள், நாயன்மார்களது பாசுரங்கள் இன்னின்னார்தான் இறைவனை நெருங்க முடியும் என்று வரையறை செய்துள்ளனவா? இராமானுஜர் யார்? எப்படி கோவில் மதிலேறி, ‘இறைவழிபாட்டில் யாதொரு ரகசியம் எல்லாரும் அறிவீர் என்று அடித்தட்டு மக்களைக் கூவி அழைத்தார்?

உ.வே.சா அவர்களது ‘என் சரித்திரம்’ செம்பதிப்பு பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குக் காலச்சுவடு உரிய இடம் கொடுத்துவருவது மிகவும் பாராட்டிற்குரியது. தமது கடும் உழைப்பினால் தற்காலத் தமிழ்ப் படைப்புலகிற்கு ப. சரவணன் கொண்டுவந்துள்ள ‘என் சரித்திரம்’ செம்பதிப்பு மிகவும் வலுவான தமிழ்ப்பணி.

இதுபற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் எடுத்துரைக்கும் வாதங்கள், அதற்குப் பதிப்பாசிரியர் தரும் விளக்கங்கள் ஆகியவை வாசகர்களுக்கு மிக ஆழமான, விரிவான புரிதலைத் தருகிறது. இவ்வாறான ஆரோக்கியமான தர்க்க வியாக்யானங்கள் தமிழ் இலக்கிய உலகில் ஒருகாலத்தில் ஏற்படாமல் போனது துரதிர்ஷ்டமானதே. ஆங்கில இலக்கியத்தின் மிகப்பெரிய ஜாம்பவானான ஜான்மில்டன் படைத்த ‘சொர்க்கத்தின் இழப்பு’ பெருங்காவியத்திற்கு டாக்டர் ஜான்சன் என்ற மாபெரும் இலக்கியவாதியின் தர்க்க விமர்சனங்கள் எவ்வளவு பிரசித்தி பெற்றவை? போர்களிலேயே ‘இலக்கியப்போர்’ அறிவார்ந்த சமூகத்தின் விரிந்த பார்வைக்கு வித்திடும்.

சி. பாலையா
புதுக்கோட்டை
.

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.