நவம்பர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • அஞ்சலி: கி.அ. சச்சிதானந்தம்
      இலக்கிய வழிப்போக்கர்
    • கட்டுரை
      தகுதியா தந்திரமா?
      இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
      நாணலின் கானம்
      உன்னால்தான் எல்லாம்
      புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!
      அளப்பரிய கலையின் அபூர்வ மலர்
    • கதை
      கருவாடு
      வீடு திரும்புதல்
    • அனுபவம்
      மதிப்புமிக்கது இவ்வாழ்வு
    • பதிவு
      மதுவந்தி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      மாயம் (நாவல்), அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைகள்), தேனோடு மீன் (கட்டுரைகள்), நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்), பஷீர் கதைகள் (முழுத்தொகுப்பு)
    • மதிப்புரை
      விதிபோட்ட தாயம்
      ஒரு புதிய சிலப்பதிகாரம்
    • கவிதைகள்
      பூரணம், துளி
    • தலையங்கம்
      புதியன புகுமா?
    • ஒடியமொழிக் கதை
      பாம்புப் பிடாரனின் கதை
    • கவிதை
      ஆனந்தன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2020 புத்தகப் பகுதி மாயம் (நாவல்), அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைகள்), தேனோடு மீன் (கட்டுரைகள்), நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்), பஷீர் கதைகள் (முழுத்தொகுப்பு)

மாயம் (நாவல்), அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைகள்), தேனோடு மீன் (கட்டுரைகள்), நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்), பஷீர் கதைகள் (முழுத்தொகுப்பு)

புத்தகப் பகுதி

காலச்சுவடு புதிய வெளியீடுகள்

 

மாயம்
(சிறுகதைகள்)
பெருமாள்முருகன்

எறும்பு வரிசை

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘புறவழிச் சாலை’ என்னும் ஒரே ஒரு சிறுகதை மட்டுமே எழுதினேன். தொடர் இடைவெளியின் காரணமாகச் சிறுகதை வடிவமே என் கைவிட்டுப் போனதோ எனத் தோன்றிற்று. ஆனால் எனக்குள் சிறுகதைகள் சேர்ந்துகொண்டேயிருந்தன. அவற்றைப் பிடித்துவைக்கும் தோதுதான் வசப்படவில்லை எனப் புரிந்தது. என் புலம்பலைப் பொறாத நண்பர் இராமன் 2019 டிசம்பர் 31 அன்று ‘புத்தாண்டில் உங்கள் கதை ஒன்றை நான் படிக்க வேண்டும்; எழுதுங்கள்’ என்றார்.

அன்றைக்கு ஒரு கதை எழுதினேன். அதைத் தொடர்ந்து மூன்று கதைகள். அந்த ஆவேசத்தைக் காப்பாற்றிக்கொண்டு எறும்புவரிசைபோல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்துகொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க்கொண்டே இருக்கிறது. ஆம். இவற்றை எறும்புவரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

இக்கதைகளுக்கு விரிவான முன்னுரை அனாவசியம் என்று தோன்றியது. வேறு ஏதேனும் சந்தர்ப்பத்தில், எல்லாம் கூடிவரும் பொழுதில் இக்கதைகளைப் பற்றிப் பேச எனக்குச் சில விஷயங்கள் உருவாகும் எனக் கருதுகிறேன். கொரானோ காலத்தில் என் மனம் குலையாமல் துணையிருந்து இக்கதைகள் என்னைக் காப்பாற்றின என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

(பெருமாள்முருகன் முன்னுரையிலிருந்து)

 

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
(நாவல்)
சுரேஷ்குமார இந்திரஜித்

போராட்ட உணர்வு

ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் புனைவு கலந்து நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆலயப்பிரவேசம் ஒரு சிறிய, ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்று உணர்ந்தேன். அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள கோயில்களில் நாடார்களும் ஹரிஜனங்களும் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. 8 ஜூலை 1939 ஆலயப்பிரவேசத்திற்குப் பின்தான் நாடார்களும் ஹரிஜனங்களும் கோயிலுக்குள் நுழையும் உரிமையை Madras Temple Entry Authorisation and Indemnity Act 1939இன் படிச் சட்டரீதியாகப் பெற்றார்கள். எனவே ஆலயப்பிரவேச காலம், அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றைக் களமாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்கினேன். அக்காலத்திய சமூக நிலையை சங்கரலிங்க நாடார் மூலமும் அம்பிகா என்ற பிராமணப் பெண் மூலமும் சித்திரித்துள்ளேன். அம்பிகாவின் காதலையும் அவரின் சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் சித்திரித்துள்ளேன். இந்தச் சட்டகத்துக்குள் நாவலுக்கான கூறுகளையும் நுட்பங்களையும் கொண்டுவரவேண்டிய நிலையில் இருந்தேன். சமூகநிலை பற்றிய சித்திரிப்பில் கருத்துகளுக்கும் சிந்தனாரீதியான உரையாடல்களுக்கும் இடம் உள்ளது. இந்நாவலில் இத்தகைய இடங்கள் உள்ளன.

இந்நாவல் தொடர்பான தரவுகளைப் பார்த்தபோது அக்காலத்திய சனாதனம் எவ்வாறு இருந்தது என்பதை அறிய முடிந்தது. மனம் எவ்வாறு பழக்கப்படுத்தப்படுகிறது என்ற யோசனை இந்த நாவல் எழுதும்போது அடிக்கடி ஏற்பட்டது. காலங்காலமாகச் சில சிந்தனைகள், நம்பிக்கைகள் பழக்கப்படுத்தப்படுகின்றன. பழக்கப்பட்டுப்போன மனத்தை மாற்றுவது மிகவும் சிரமமான விஷயம். மக்களின் மனப்பழக்கத்தை மாற்றுவதற்குத்தான், சிந்தனையாளர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்து சாஸ்திரம் ஜாதிய ரீதியாகச் சிலரை மேலானவர்களாகவும் சிலரைப் படிநிலைப்படிக் கீழானவர்களாகவும் அங்கீகரித்திருக்கிறது. எனவே, மேலானவர்களுக்கு அகந்தை உருவாகிறது. படிநிலைப்படிக் கீழே உள்ளவர்களுக்கு ஆக்ரோஷமும் போராட்ட உணர்வும் உருவாகின்றன. இந்திய சமூகத்தில் இந்த ஜாதிய மனமோதல் பெரும்பிரச்சினை. இது ஒருபுறம் இருக்க, பிராமண நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களை உயர்வாகக் கருதிக்கொள்ளும் பிரிவினரும் பிற ஜாதிகளுக்குள் இருக்கிறார்கள்.

பிறப்புசார்ந்து பிராமணர்கள் முக்கியத்துவம் பெற்ற காலம் மங்கியபோது, அரசியல், பொருளாதார வளம் கொண்ட மனிதர்கள் ஜாதியரீதியாகத் திரண்டு சமூக அதிகாரம் செலுத்தும் காலம் எதிர்பாராத விதமாகவோ, எதிர்பார்த்த விதமாகவோ உருவாகியது. சனாதனம் புது ரூபமும் கொண்டது. ஆட்கள் மாறிய விளையாட்டு. முற்றாக அல்ல. வேறு மதிப்பீடுகளுடன் புதிய ஆட்கள் களமிறங்கிய விளையாட்டு.

(சுரேஷ்குமார இந்திரஜித் முன்னுரையிலிருந்து)

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
(சிறுகதைகள்)
அம்பை

கதை பற்றிக் கதைப்பு

இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பான பழங்கதைகள். அந்தக் கால எழுத்து, பதிப்பக உறவுகள் பற்றியும் கடந்து வந்த பாதை பற்றியுமான  பதிவுகள். இந்தப் புத்தகம் முதல்பதிப்பாக  வெளிவந்த காலத்துக்குப் பிறகு சமூக நிலைகள் வெகுவாக மாறியுள்ளன. குடும்பத்திலும் சமூகத்திலும் இலக்கியம் மற்றும் பல தளங்களிலும் பெண்களும் ஆண்களும் இயங்கும் விதம் மாறியுள்ளது. பெண்கள் தங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமும் இப்போது வலு கூடி இருக்கிறது. கவிதை, உரைநடை, புனைகதை, விமர்சனம், மொழியாக்கம் என்று இலக்கியத்திலும் கல்வி, விஞ்ஞானம், ஊடகம், சினிமா, என்று வேறு பல துறைகளிலும் பெண்களின் பங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. பெண்களின் பிரச்சினைகளின் தன்மையும் பெண்-ஆண் என்ற இருமையைக் கடந்து வேறு பலவிதங்களில் விஸ்தரித்துள்ளது. பெண்கள் பலர் பதிப்பாளர்களாகவும் புத்தகம் பதிப்பது குறித்தத் தெளிவான சிந்தனைகள் உள்ளவர்களாகவும் தமிழிலும் மற்ற மொழிகளிலும் இருக்கிறார்கள். வாசகர்கள் கதைகளை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் விதமும் கதைசொல்லியின் பால் அடையாளத்தை மட்டுமே ஒட்டி இல்லை. ஒரு செயல்பாட்டையோ படைப்பையோ எடை போடவோ விமர்சிக்கவோ ஏற்கவோ பல காரணங்கள் தற்போது சமூகத்திலும் இலக்கிய உலகிலும் செயல்படுகின்றன. இந்த மாறுபட்ட சமூக மற்றும் இலக்கிய வெளியில் இந்த மூன்றாம் பதிப்புக் கதைகளின் இடம் என்ன? கதைகளை அணுகும் முறைகள் மாறிவிட்ட நிலையில் இக்கதைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதுதான் இந்த மூன்றாம் பதிப்பின் முன் உள்ள சவால் என்று நினைக்கிறேன்.

என் கதைகளைப் பதிப்பிக்கும் வேலையையும் அதனால் வரும் பாதிப்புகளையும் பின்விளைவுகளையும் ஏற்கும் பொறுப்பை 2000த்தில் வெளிவந்த ‘காட்டில் ஒரு மான்’ தொகுப்பிலிருந்து காலச்சுவடு பதிப்பகம் ஏற்றிருக்கிறது.

நான் வாழும் காலத்திலேயே மூன்றாம்முறையாக இது பதிப்பிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சிதான். விமர்சனங்களும் வசவுகளும் இருக்கும்போதே செவியை எட்டுவது நல்லதுதான்.  இதற்கான முயற்சிகளை ‘அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்’ என்ற பாணியில்  செய்த காலச்சுவடு பதிப்பகத்துக்கும் இது வெளிவர அயராமல் உழைத்த காலச்சுவடு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி.

(அம்பையின் முன்னுரையிலிருந்து)

தேனொடு மீன்
(கட்டுரைகள்)
இசை

பரவசக் கல்

இது என் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு. உண்மையில் கவிதைகளைத் தவிர வேறெதையும் எழுதமாட்டேன் என்றே எண்ணியிருந்தேன். இவ்வளவு காலத்தில் உரைநடையோடு ஒரு ‘சிநேக பாவம்’ உருவாகியுள்ளது. இது அப்படி ஒன்றும் ஆபத்தான வஸ்து அல்ல என்பதுபோல. கவிதைதான் கூட இருந்தே குழி பறிக்கும் குறளி. ஆயினும் என் உரைநடை கவித்துவத்தை நம்பியே வாழ்கிறது.

கவிதையின் சிலவரிகளைத் தொட்டவுடன் சட்டென உள்ளத்துள் பொங்கும் அந்த மாய ஒளி உரைநடையின் சில வரிகளிலும் நிகழவே செய்கிறது. ஆயினும் கவிதை வேறுதான். அதன் ஒளி எங்கெங்கு விழுகிறதென்று அதற்கே தெரிவதில்லை என்பதே அதன் மகிமை. வழக்கம் போல் இத்தொகுப்பிலும் அதிகமான கட்டுரைகள் கவிதைகள் குறித்ததே.

‘குகன் சரிதம்’ இத்தொகுப்பின் தனித்த அடையாளம் என்று கருதுகிறேன். அதிக உழைப்பைக் கோரிய கட்டுரை இது. பரவசத்தில் தலைக்கு மேல் தூக்கிவிடும் பாறாங்கல்லில் அதன் எடையை எதுவோ உறிஞ்சி எடுத்துவிடுகிறது.அது எதுவோ, அதற்கு என் வந்தனம். ‘நிலையாமையின் ஜொலிஜொலிப்பும்’ எனக்கு இன்னொரு பரவசக்கல்.

‘96’ படம் பற்றி எழுதிய சிறிய கட்டுரை என்னளவில் முக்கியமானது. கிழிந்து தொங்கிய ஒன்றை இக்கட்டுரை கொண்டுதான் சேர்த்துத் தைத்தேன். துன்னிருளுள் அமர்ந்தும் என்னால் பணி செய்ய முடியும் என்று காட்டித்தந்த அந்த வயலின் குச்சிக்கு வணக்கங்கள்.  பாபு வழிதவறி இத்தொகுப்பிற்குள் வந்துவிட்டவன். அவன் ஒரு தனி உயிரியல்ல. பாபு என்பது ஒரு மனநிலை. பாபு என்பது ஒரு வெளி. வாழ்வுக்குப் பயந்தவர்கள் ஓடிச்சென்று ஒளிந்துகொண்ட இடம் அவன். ஆயினும் அவனை அவனால் இரட்சித்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் கொடுங்கசப்பு. பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ள இரண்டு நேர்காணல்களும் அவை வெளியான தருணத்தில் உற்சாகம்கொள்ளத்தக்க எதிர்வினைகளைப் பரிசளித்தவை. 

(இசையின் என்னுரையிலிருந்து)

நான் காணாமல் போகும் கதை
(குறுநாவல்)
ஆனந்த்

அறியப்படாத ஓர் வாழ்க்கையின் கதை

இந்தக் கதையில் வரும் சொல்லிக்குப் பிரதேச ரீதியான, மொழி ரீதியான, பண்பாட்டு ரீதியான, பால் ரீதியான சில அடையாளங்களைச் சொல்ல முடியும். என்றாலும், இதுவரை நான் படித்த புனைவுகளில் பார்த்த பாத்திரங்கள் கொள்ளும் ரூபத்தை ஆளுமையை ஒப்பிடும்போது, இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு நபர்த்தன்மைகள் மிகவும் குறைவு. புலப்படும் அந்தச் சொல்லியின் உடல், ஆளுமை அம்சங்களைக் கொஞ்சமாகக் குறைத்தால் போதும்; அந்த நபர் நானாகவும் நீங்களாகவும் பிரதிபலித்துவிடுவார்.

 நித்தியப் புதுமையும் நித்தியப் பழைமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறுவேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் வசிப்பதன் தடையங்களை அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி.  நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஓருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’.

நமது அன்றாட வாழ்க்கையில் அதிகம் பரிச்சயமாகாத அந்த உயிரை, பரிச்சயமாகாத ஓர் உயிர் வாழ்க்கையை அடையாளம் காண்பதற்கான ஒருவழியாக இயற்கை இருக்கிறது. அந்த உயிருடன் முயங்கி இன்னொரு குடித்தனத்தை ஆரம்பிப்பதற்குக் கண்ணுக்குத் தெரியும் வழிவகைகளில் ஒன்றுதான் இயற்கை. அதற்குத்தான் ஒரு நபர் வெளியேயும் உள்ளேயும் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. இயற்கைதானே எனலாம். ஆனால் மிகத் தொலைவுக்கு நாம் வந்துவிட்டால் நெடுங்காலம் மறந்து இருந்துவிட்டால் நம் வீட்டையும் இயற்கையைப் போலத் தேடி அலையத்தானே வேண்டும்.

‘நான் காணாமல் போகும் கதை’யிலும் கதைசொல்லி உள்ளேயும் வெளியேயும் அலைகிறான். பக்கவாட்டிலும் கிடைமட்டத்திலும் திரிகிறான். உடல், மலை என்னும் புலப்படும் நிலத்தில் புலப்படும் எதார்த்தத்தின் வழியாகவே நடந்துதான் அதிகம் புலப்படாத அந்தத் தீவை அடைகிறான்.

கிறிஸ்து ஒளியும் சத்தியமும் என்கிறார். ரூமி அதை நேசம் நேசம் என்கிறார். லாவோட்சு அதைக் காலியிடம் என்கிறார். நம்மையும் சேர்த்துக்கொண்ட இயற்கை என்று ஆனந்த் சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அறம், பாவம் என்ற அருங்கயிற்றால் கட்டப்படாத, ஆசிர்வாதம்-சாபம், அற்புதம்-விபரீதம் என்ற இருவேறாக இல்லாத இயற்கைதான் ஆனந்த் காட்டும் மலைகள் ஆகி நம்முன்னர் தெரிகின்றன.

ஆனந்த் அறிந்து அமர்ந்து இடமாகவும் இருப்பாகவும் ஆனதின் தடயங்கள் என்றே இந்த நாவலைச் சொல்வேன்.

இந்த நாவலைப் பற்றி எழுதும் சந்தர்ப்பம் எனது அலைச்சல்களைப் பற்றி நான் தொகுத்துக் கொள்வதற்கான உதவியும் கூட. எனது பிறந்த நாளன்று ஆனந்த் எனக்கு அளித்திருக்கும் பரிசு இது.

(ஷங்கர் ராமசுப்பிரமணியனின் முன்னுரையிலிருந்து)

பஷீர் கதைகள்
(முழுத்தொகுப்பு)
வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: குளச்சல் யூசுஃப்

பஷீரியம்

நவீன மலையாள எழுத்துலகில் அதிகம் வாசிக்கப்பட்டது பஷீரிய இலக்கியம். பூமிப் பந்தில் அல்லாஹ்வால் பதித்து அருளப்பட்ட இரண்டேக்கர் நிலத்தின் வாரிசுதாரர்களான ஆடு, நாய், நரி, பூனை, எலி, நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, கருந்தேள், கோழி, குழியானைகள், தேங்காய், மாங்காய், மங்குஸ்தான் மரம்… கூடவே, மருந்துபோல் ஒரேயொரு மனைவி என, பஷீரின் கதைக்களம் மட்டுமல்ல, கதாபாத்திரங்களும், அவர் அதைச் சொல்கிற முறையும் தனித்துவமானவை.

வாழ்க்கைக்குள், மனித மனங்களுக்குள் ஊடுருவிச் செல்லும் பஷீரிய இலக்கியத்தின் முழுமை ஓசைகளாலும் வாசனைகளாலும் மழலை மொழிகளாலும்  நிரம்பியது. திக்ரு ஓசை, பிரபஞ்ச முழக்கம், ஓங்கார நாதம், அரசியல் கோஷம், லாக்கப் நெடி, ஓரினச் சேர்க்கையாளர்களின் வாசம் என மலையாள மண்ணில் உருக்கொண்ட, தோற்றத்தில் எளியதும் உட்பொருளில் தீர்க்கமானதுமான அதன் தொனிகள், பொது அனுபவங்களை நோக்கி வியாபித்துச் செல்பவை.

மர நிழலில், ஃபிளாஸ்கில் கட்டன் சாயாவும், விரலிடுக்கில் பீடியுமாகச் சாய்வு நாற்காலியில் பஷீர் உட்கார்ந்து மலையாள மொழியில் சொல்லும் கதையை, எதிரில் போடப்பட்ட பெஞ்சில் மலையாளிகள் அமர்ந்து கேட்க வேண்டும். அதாவது, வைக்கம் முகம்மது பஷீரை வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் மலையாளியாகப் பிறக்க வேண்டுமென்கிற அளவுக்குத் தனித்துவமும் பண்பாடுகளின் சிறப்புக் கூறுகளும்கொண்டது பஷீரிய இலக்கியம்.

இரு மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் பஷீரை மொழிபெயர்த்துவிட இயலாது என்பதைப் புரிந்துகொண்ட கவிஞர் சுகுமாரன் இப்பெரும் பணிக்கு என்னைப் பரிந்துரைத்தார். மலையாள ஆசிரியராகப் பணியாற்றிய தனது தமையனின் அறிவுரைகளைக் கண்டுகொள்ளாமல் இலக்கியத்தின், மொழியின் வரம்புகளைக் கடந்து பஷீர் சொன்ன சிறுகதைகள்உலகப்புகழ்பெற்ற மூக்கு என்னும் தலைப்பிலும் அனல் ஹக் என்னும் தலைப்பிலும் என்னுடைய மொழிபெயர்ப்பில் தனித்தனி நூல்களாக வெளிவந்தன. இவ்விரு தொகுப்பும் தற்போது பஷீர் கதைகள் (முழுத் தொகுப்பு) என்னும் தலைப்பில் வெளிவருகிறது.

வைக்கம் முகம்மது பஷீரை மொழியாக்கம் செய்யும் என்னுடைய தனித்துவ முயற்சியில் மொழியாக்க விதிகளை ஓரளவுதான் பின்பற்ற முடிந்தது. ஆயினும் இதில் நான்  வெற்றிபெற்றேன் என்பதை வாசகர்களின் பாராட்டு மூலம் புரிந்துகொள்கிறேன். தொடர்ந்து, காலச்சுவடு தந்த ஊக்கம் பஷீரின் பெரும்பாலான படைப்புகளையும் மொழியாக்கம் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது. இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி

(குளச்சல் யூசுப்பின் முன்னுரையிலிருந்து)

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.