மதுவந்தி
பதிவு
மதுவந்தி
ஓவியர் பாலசுப்பிரமணியன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தீட்டிய ஓவியங்களின் கண்காட்சி அக்டோபர் 10 முதல் 20 ஆம் தேதிவரை ‘Soul Spice’ கலைக் காட்சியகத்தில் நடைபெற்றது. ஓவியர்கள் ரவி தனபாலும் நரேந்திரபாபுவும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சோழா கலை இயக்கம் என்ற கலைக் குழுவை எண்பதுகளில் தஞ்சை வாசக நண்பர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர்களில் ஓவியர் பாலசுப்பிரமணியனும் ஒருவர். குழுவின் மூலம் கலை, இலக்கிய உரையாடல்களுக்கும் கலை சார்ந்த களச் செயல்பாடுகளுக்கும் வினையூக்கியாக இருந்தவர். அரசு மருத்துவக் கல்லூரியின் துறைசார் ஓவியங்கள் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தாலும் நவீன ஓவியப் புலத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தவர். அதன் காரணமாகக் கடந்த நாற்பதாண்டுகளாகத் தனிநபராகவும், சக ஓவியர்களுடன் இணைந்தும் கலை, இலக்கியப் புலங்களில் தொடர்ந்து இயங்கிவருகிறார்.
“தான் என்னும் அகங்காரத்தை உதிர்த்தால்தான் ஆனந்தப் பரவசம் கைகூடும். ஆனந்தப் பரவச கணத்தில்தான் நேர்மறை எண்ணங்கள் தெறிக்கும். போலவே, கலைப் படைப்பின் நோக்கமும் பரவசத் தெறிப்புதான். அந்த ஆனந்தம்தான் மனித வாழ்வின் ஒரே பற்றுக்கோல்,” என்று சொல்லும் ஓவியர் பாலசுப்பிரமணியன் மரபான கூறுகளின் குறியீட்டுத் தன்மைகளை நவீன பாணியில், தனக்கான சித்திர வெளியில் மீட்டெடுக்கிறார்.
‘மதுவந்தி’ என்ற தலைப்பில் இவரது ஓவியங்கள் இம்முறை காட்சிப்படுத்தப்பட்டன. “இயற்கையுடனும் சக உயிர்களுடனும் மேற்கொள்ளும் இணக்கமான வாழ்வு தேனினும் இனிமையானது. நாம் கண்ணியை எங்கோ நழுவவிடுகிறோம். செயற்கை நுண்ணறிவு போன்ற தற்கால ஆராய்ச்சிகளும் அவதானிப்புகளும் உச்சத்தில் இருந்தாலும், அதன் தாக்கம் பாதாளம்வரை பாய்ந்தாலும் நமக்கான ஆனந்தப் பரவசம் இணக்கத்தில்தான் உள்ளது. நவீனப் போக்கில் இவ்வாழ்வு டிஜிட்டல் சட்டகங்களில் நகர்ந்தாலும் மரபின் கூறுகளை மீட்டெடுப்பதில் உள்ளது.” என்ற தனது கருத்தை முன்வைக்கும் பாலசுப்பிரமணியம் தாந்த்ரீக ஓவிய வெளிப்பாட்டில் தனது மனத்தின் தெறிப்புகளைப் பஞ்சபூத உருவகக் குறியீட்டில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
- கிருஷ்ண பிரபு
(நன்றி: இந்த இதழில் வெளியாகியிருக்கும் கவிதைகளுக்காக கே. பாலசுப்பிரமணியனின் ஓவியங்கள் பயன்பட்டிருக்கின்றன)