ஒரு புதிய சிலப்பதிகாரம்
மதிப்புரை
ஒரு புதிய சிலப்பதிகாரம்
கி. நாச்சிமுத்து
இறந்த காலம்
(நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்
நம்பர் 77, 53வது தெரு, இந்திரா காலனி, அசோக் நகர்,
சென்னை -83,
பக். 288; ரூ. 280
அண்மைக் காலத்தில் நான் படித்த நாவல்களில் மனத்தை நோகச் செய்த ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘இறந்த காலம்’ என்ற இந்த நாவல். சிலப்பதிகாரக் கண்ணகிக்கு நேர்ந்ததுபோன்ற நிலைக்கு ஆளான நர்மதாவுக்கும் அவர்களோடு சேர்ந்து அதே கொடுமைக்கு ஆளான மீரா, ஜெஸ்ஸிகா என்ற மேற்கத்தியப் பெண்களுக்கும் ஓர் இலக்கியத் தீர்வைத் தந்து கதையை முடித்திருக்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.கதையின் முக்கிய திருப்பமே இந்த முடிவுதான். இது வாசகனுக்கு நிறைவும் நிம்மதியும் தரும் முடிவாகவும் அமைகிறது.
வரலாற்றில் புதையுண்ட வாழ்க்கைதான் [தொடரை இரவல் தந்த நினைவில் வாழும் சுகந்தி சுப்பிரமணியன் (சுப்ரபாரதி மணியன் துணைவி)க்கு நன்றி] கதையின் பாடுபொருள். புதுவை நாட்குறிப்புப் புகழ் ஆனந்தரங்கம் பிள்ளையின் எழுத்துலகப் புதுவாரிசு போல நாகரத்தினம் கிருஷ்ணா எழுத்து. ஒரு பன்னாட்டுப் பின்புலத்தை வழக்கம்போன்று தமிழில் அசலாகக் கொண்டு வந்திருக்கிறார்.
புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சார்பில் அதன் தலைவியாக இருந்த அன்னையின் எண்ணத்தில் உருவான பன்னாட்டு வாழ்விடமான ஆரோவில் என்ற விடியல் நகரில் தன்னை இணைத்துக்கொள்ள பிரான்சிலிருந்து புறப்பட்டுவரும் 27 வயது மீரா என்ற கலப்பினப் பெண்ணின் பார்வையில் அமையும் கதை. அங்கே அவளைப்போலவே வந்துசேர்ந்த அமெரிக்கப் பெண் ஜெஸ்ஸிகா கதையும் இது.
ஆரோவில்லில் வசிப்பதற்காகக் கனவுகளுடன் வந்த ஜெஸ்ஸிகா, மீரா என்ற இருவரையும் ஆல்பர்ட்டும் துய்மோனும் தங்கள் பாலியல் இன்பத்திற்கு மதுப் போதையூட்டி வல்லுறவு கொள்ளும்போது சிதைந்து சிதறுகிறார்கள். இதுபோன்றே ஆரோவில்லில் நடக்கும் நில அபகரிப்பு முதலிய அநீதிக்குக் குரல் கொடுக்கும் புரட்சிப் பெண்ணான நர்மதாவும் இந்தப் ஆன்மிகப் பொறுக்கிகளால் சீரழிக்கப்பட்டுச் சின்னாபின்னமாகிறாள். இந்த வல்லுறவு அரக்கர்களை மீராவும் ஜெஸ்ஸிகாவும் அசாமின் பிள்ளை பிடிக்காரர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக்கிக் கும்பலால் அடித்துக் கொல்லப்படுமாறு நீதி தேடிக்கொள்வதுதான் கதையின் சாரம். இங்கே ஆரோவில் என்ற உயர்ந்த இலட்சியத்தைச் சிதைக்க புல்லுருவிகள் ஊடுருவியிருப்பதை நுட்பமாக ஆசிரியர் கதைப்படுத்தியிருக்கிறார். ஆன்மீகம் வணிக மயமாவதோடு இப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டுக்கும் இடமளிப்பதை நம் கண்முன் நிறுத்துகிறார். அதற்கிடையே இத்தகைய ஆன்மிகச் சோதனை முயற்சிகளுக்குப் பின் புதுக் காலனிய நோக்கங்கள் ஏதாவது ஒளிந்து கொண்டிருக்கிறனவா என்ற கேள்வியையும் மாதவன் போன்ற கதை மாந்தர்கள் வழியாக எழுப்புகிறார் ஆசிரியர்.
இந்தக் கதை உண்மையில் பாலியல் வன்முறையை மையமாக வைத்து எழுந்த கதை அல்ல. ஓர் ஆன்மிகச் சோதனைக்கு வந்த சோதனையைப் பற்றிய உரத்த சிந்தனையின் கதை வடிவம். இங்கே யார் மீதும் சேற்றை வாரிப் பூசும் எண்ணம் தெரியவில்லை. ஆனால் சில உண்மைகள் கசக்கத் தானே செய்யும். காந்தியை அரவிந்தர் சந்திக்கவில்லை என்பதும் அதற்கு யார் காரணம் என்பதும் மண்டையைக் குடைகின்றன. அதுபோல இந்திய விடுதலை நாளை அரவிந்த ஆசிரமம் புதுவை பிரெஞ்சு அரசுக்கு அஞ்சிக் கொண்டாடவில்லையாமே. மாநில மைய அரசுகள், ஐ.நா. போன்ற அமைப்புகளோடு சேர்ந்து ஆரோவில் என்ற உலக ஆன்மீக மையத்தை உருவாக்கச் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பிடுங்கிக்கொண்டார்களாமே. அதற்காக அவர்கள் போராடி மடிந்துகொண்டிருந்தார்களாமே. இதெல்லாம் ஆன்மிகப் புளிச்சேப்பக்காரர்களுக்குத் தெரியாதா என்ன? இதை யாரும் இதுவரை சொல்லிக் கேட்டதில்லையே. இந்த நாவலில் நால்வகை ஆசிரமத்திற்கு அப்பால் கிருஹஸ்த சந்நியாசம் என்ற கலப்புவகை ஒன்றைப் பேசுகிறார். வேடிக்கையாக இருந்தது.
இங்கே வரலாற்றுக் காலத்தில் எண்ணிறந்த பிரமதேயங்களை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி வேளாண் குடிகளின் நிலத்தைப் பறித்துச் செப்பேடு செய்த நம் மூவேந்த மன்னர்களின் ‘வரலாற்றுப் பெருமைகளை‘ நினைத்துப் பார்க்கலாம். அதில் இப்படிப்பட்ட எண்ணிறந்த பிரமதேயங்களை உருவாக்கிச் செப்பேட்டில் எழுதிக்கொடுத்து அந்த நாட்டில் செம்புக்கே பஞ்சம் வந்துவிட்டதாம். இன்னும் தமிழர் யாரும் படிக்காத அந்தச் செப்பேடுகளின் (தளவாய்புரம் செப்பேடு)வடமொழிப்பகுதியில் சூத்திரர்கள் இந்த நிலங்களை ‘ஆக்கிரமித்துக்கொண்டதாகவும்’ தமிழ்ப்பகுதியில் ‘மறக்கேடு செய்ததாகவும்’ எழுதிவைத்திருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் இப்போராட்டங்களில் கொலையும் விழுந்திருக்கிறது [வெ.வேதாசலம், ‘பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’ (ஊர்பிரம்மதேயம் வணிக நகரம், படைப்பற்று), தனலட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர், 2019பக்.108-109]. இங்கே முதலில் நிலத்தைப் பறித்தவன் அதாவது இன்றைய ஆட்சிமொழியில் கையகப்படுத்தியவன் அரசன்தான். வேளாண்குடிகள் அதை மீட்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் வரலாறு தலைகீழாகச் சொல்கிறது. இதுதான் பண்டைத்தமிழர் மன்னர் பாராண்ட பெருமை. இதுதான் இன்றும் நடக்கிறது.
இந்தக் கதையின் இன்னொரு தளம் புதுவையின் அறியப்படாத வரலாறு. இங்குள்ள மக்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று அவர்களுக்காக இந்தோ சீனா போன்ற இடங்களில் குருதி சிந்திய வரலாறு. இந்த வரலாறுகளையும் புதுவையின் விடுதலைக்கு முந்திய இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் இருளடைந்த ஏடுகளையும் மாதவன் தாத்தா சதாசிவம் சைகோனிலிருந்தும் அத்தைப்பாட்டி வேதவல்லி புதுவையிலிருந்தும் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் வாயிலாக நம் கண்முன்னே நிறுத்துகிறார்.இங்கேயும் சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் மாதவி கடிதப் பரிமாற்றம்போல அமைந்து சிலப்பதிகாரத்தை நினைவூட்டுகிறது.
சிலப்பதிகாரத்திற்கும் இந்தப் புதினத்திற்கும் வேறு சில ஒப்புமைகளும் தென்பட்டன. சிலப்பதிகாரத்தில் முற்பிறப்புக் கதை வருவதுபோல முன்தலைமுறைக் கதை வருகிறது. அதில் மீராவைப் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆல்பர்ட்டும் ஜெஸ்ஸிகாவை அதே செயலுக்கு ஆளாக்கிய துய்மோனும் அதே துன்புறுத்தலை ஒரு தலைமுறைக்குமுன் மீராவின் தாய்க்குச் செய்து அதன் விளைவாகப் பிறந்தவள்தான் மீரா. எனவே மீரா தன் தந்தையர்களைத்தான் பழி தீர்க்கிறாள். நாட்டுப்புறக் கண்ணகி கதை முற்பிறப்பில் கண்ணகியைப் பாண்டியனின் மகள் என்று கூறும். ஏன் கண்ணகியே சிலம்பின் வாழ்த்துக் காதையில் ‘தென்னவன்தீதிலன்; தேவர்கோன்தன் கோயில் நல்விருந்துஆயினான்; நான்அவன்தன்மகள்’ (வாழ்த்துக்காதை) என அவனைத் தந்தையாகவும் கொள்வதைப் பார்க்கிறோம். இங்கே இது ஒத்துப் போகிறது. மனிதனின் ஆழ்மனம் மீண்டும் எழுந்து வருகிறதோ? சிலப்பதிகாரத்தில் கிளைக்கதை போலவும் கடிதம் போலவும் வரும் சதாசிவம், வேதவல்லி கிளைக் கதைகள் இன்னொரு புறம். இறுதியாகச் சிலப்பதிகாரப் பதிகத்தில் வரும் சாத்தனார் போலச் சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் க. பஞ்சாங்கத்தின் அருமையான முன்னுரை. எல்லாம் கச்சிதமாகப் பொருந்துவது வேடிக்கையாக இருந்தது.
இங்கே வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், பின்புலம் எல்லாம் உண்மைதான். ஆனால் அவை கோத்துக் கொண்டு நாடகக் கோவையாக வருவது செயற்கைதான். மேலும் வாழும் அல்லது வாழ்ந்த மனிதர்களுக்கு அரிதாரம் முதலிய ஒப்பனைகள் செய்து அவர்களை நாடகக் கதைமாந்தர்களாக உலவவிடுவது படைப்பாளரின் திறமை. இந்த நாடகமயமாக்கலும் பாத்திரத் தேர்வும் பொருத்தமாகவே வந்திருக்கின்றன. மீரா என்ற கதைசொல்லிக்குள் இருந்த உண்மை மீராவும் மனச்சாட்சியாய் வெளிப்படும் இன்னொரு மீராவும் கதையின் முதல் பகுதியில் வெளிப்பட்டது போலப் பிற்பகுதியில் அதிகம் வெளிப்படவில்லை. வருணனை, உரையாடல் முதலியவை இவர் நல்ல கதைசொல்லி என்று சொல்லும்படியிருக்கின்றன. சில இடங்களில்நடையில்கொஞ்சம் இறுக்கம் தெரிகிறது. ஒருவேளை ஆசிரியரின் பன்மொழிப் புலமையும் அறிவுசார் நடையில் எழுதும் பயிற்சியும் பாத்திரங்களின் பின்னணியும் இதற்குக் காரணமாகலாம். பிரெஞ்சுப் பேச்சு மொழி இடையீடுகளைப் பின்னிணைப்பில் தந்ததற்கு மாறாக வருமிடங்களிலேயே தமிழ் விளக்கத்தை அமைத்திருந்தால் வாசகருக்கு எளிதாக இருக்கும். கதை படிக்கிறவருக்குப் பின்னிணைப்பைப் பார்ப்பதற்கு எங்கே பொறுமை? அங்கே அதற்குரிய பக்க எண்ணையும் கொடுத்திருக்கலாம்.
இந்நாவலை அழகுற வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தையும் பாராட்டவேண்டும்.
மின்னஞ்சல்: nachimuthutamizhkina@gmail.com