புதியன புகுமா?
தலையங்கம்
புதியன புகுமா?
கொரோனா முடக்கக் காலகட்டம் தொடங்கி ஏழுமாதங்கள் முடிந்துவிட்டன. அன்றாட வாழ்க்கை ஏதோ ஒருவகையில் இயல்பாகிவிட்டது. ஆனால் லட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட கல்வித்துறையில் மட்டும் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறப்பதுபற்றி இன்னும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. பெருவாரியான திரள் கூடும் இடமாகிய கல்விக்கூடங்களைத் திறப்பதில் நிதானமாகவே முடிவெடுக்க வேண்டும். அதுவரைக்குமான கல்விசார்ந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டு அரசு அறிவிப்பது ஒன்றும் கடினமல்ல.
ஆனால் கல்வியையும் அரசியலுக்குப் பயன்படுத்தும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் உள்ளன. 2019 – 2020ஆம் கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடைபெறாத நிலையில் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்னும் அறிவிப்பு வந்தது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் வாக்குவங்கியைக் குறிவைத்தது இந்த அறிவிப்பு. அதற்கான வழக்கு இப்போது உயர்நீதிமன்றத்தில் இருப்பதால் எத்தகைய முடிவு வருமென்று தெரியவில்லை. இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்னும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பால் ‘வீட்டிலிருந்தே தேர்வெழுதும்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வுகளெல்லாம் ஒருவாரத்திற்குள் முடிக்கப்பட்டன; ஒரே வாரத்தில் விடைத்தாள் மதிப்பீடும் நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் உரிய விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லையென்று பலரது தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்திருக்கிறது. புதிய நடைமுறையில் பல குழப்பங்கள் நிலவின. ஆனால் பாதிப்பு மாணவர்கள் மீதே சுமத்தப்படுகிறது. மேலும் இது பெயரளவுக்கான தேர்வுதான். இதற்குப் பதிலாக அனைவரும் தேர்ச்சி என்றே அறிவித்திருக்கலாம். ‘கொரோனா முடக்கக் காலத்தில் பட்டம் பெற்றவர்கள்’ என்னும் இழிபார்வை இம்மாணவர்கள்மீது இப்போது படியத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் அவர்களின் வேலைவாய்ப்பையும் இது பாதிக்கக்கூடும்.
பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் இன்னும் சேர்க்கை நடைபெறாத நிலையில் கலைக்கல்லூரிகளில் முதன்முறையாக இணையவழி விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது; இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொறியியல் படிப்பில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்னும் ஐயத்தில் மாணவர்கள் எப்படிப்பிலும் சேராமல் உள்ளனர்; சேர்ந்தோர் அதில் இடம்கிடைத்தால் மாறிக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கின்றனர். ஆகவே அவர்களால் நிலைகொள்ள இயலவில்லை. நீட் தேர்வு முடிவுகள் இப்போதுதான் வந்திருக்கின்றன. கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறுமென்றே தெரியவில்லை.
இந்நிலையில் இப்போது சேர்ந்த முதலாண்டு மாணவர்களுக்கும் ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் வலைவகுப்புகள் நடைபெறுகின்றன. கல்வியாண்டின் முதல்பருவம் முடிந்து தேர்வுகள் நடைபெற வேண்டிய காலம் இது. ஆனால் இன்னும் மாணவர் சேர்க்கையே முடிவு பெறவில்லை. வலைவகுப்புகளில் பங்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களிடம் வலைவகுப்புகளில் பங்கேற்கத் தேவையான கைப்பேசிகள் இல்லை; இணைய வசதி இல்லை. மேலும் ஒற்றை அறைகொண்ட வீடுகளில் அமர்ந்து வகுப்பைக் கவனிக்கும் சூழல் இல்லை. கிராமப்புற மாணவர்கள் வேளாண் வேலைகளுக்குச் சென்று பொருளீட்ட வேண்டிய நிலையும் இருக்கிறது.
இச்சூழலிலும் சுயநிதிக் கல்லூரிகள் தம் பண வேட்டையை நிறுத்தவில்லை. எவ்விதமாவது மாணவர்களிடம் பணத்தைக் கறந்துவிட பெருமுயற்சி செய்கின்றன. வலைவகுப்புகள் என்பதால் ஆசிரியர்களுக்கு ஊதியத்தைப் பாதியாகக் குறைத்தும், ஊதியமே வழங்காமலும் சுரண்டும் அவை மாணவர்களிடம் மட்டும் ஒற்றை ரூபாயையும் குறைக்காமல் கட்டணத்தைக் கறாராக வசூலிக்கின்றன. கல்வித் தொழிலில் பல்லாண்டுகளாகச் சம்பாதித்தும்கூட ஓராண்டு வருமானத்தை இழக்கக் ‘கல்வித் தந்தைகள்’ விரும்பவில்லை. சற்றே பொறுத்துப் பெற்றுக்கொள்ளும் இரக்கச் சிந்தையும் இல்லை. ஏற்கெனவே பெற்ற தம் லாபப் பணத்திலிருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் பரோபகார எண்ணமும் கிடையாது.
கல்வியாண்டின் பாதிக்காலம் முடிவுற்ற நிலையில் என்னவாகும் எனத் தெரியாமல் மாணவர்களும் பெற்றோர்களும் அலைக்கழிகின்றனர். கொரோனா அச்சம் ஒருபக்கம்; கல்வியைப் பற்றிய அச்சம் இன்னொரு பக்கம். மக்களின் அச்சத்தைப் போக்கும்வகையில், குழப்பத்தைத் தீர்க்க அரசு முடிவெடுத்து வழிகாட்டுதல்களை வழங்குவது கடினமல்ல. 2020 – 2021ஆம் கல்வியாண்டைப் ‘பூஜ்யக் கல்வியாண்டு’ என அறிவித்துவிடலாம். அதனால் பாதகம் எதுவும் நேரப் போவதில்லை. இக்கல்வியாண்டில் நேர்ந்துள்ள பிரச்சினைகளைச் சரிசெய்து அடுத்த கல்வியாண்டைப் புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம். மக்களும் நிம்மதியாகத் தம் பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார்கள்.
அவ்விதம் ஓராண்டை இழக்க வேண்டாமென்று விரும்பினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைப்போல ‘ஆண்டுத் தேர்வு’ என அறிவிக்கலாம். இந்தக் கல்வியாண்டில் மட்டும் இரண்டு பருவத் தேர்வுகள் நடைபெறாது; ஆண்டு முடிவில் ஒரே தேர்வுதான் என முடிவெடுக்கலாம். அதற்கேற்பப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கலாம். தேர்வுகள் எவ்விதம் நடைபெறுமென்று தெளிவுபடுத்தலாம். கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே பல்வேறு போட்டித் தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் இணைய வழியில் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது பல்கலைக்கழகத் தேர்வுகளையும் அம்முறையில் நடத்தலாம். முடக்கக் காலகட்டத்தை அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.
பாடத்திட்டத்தைப் பற்றியும் தேர்வு முறைகளைப் பற்றியும் விரிவான கலந்தாய்வு நிகழ்த்த இது ஏற்ற காலகட்டம். இனி இணையவழி வகுப்புகளை முழுமையாகத் தவிர்க்க இயலாது என்பது நிதர்சனம். ஆகவே அதற்கேற்ற பாடத்திட்டம் தேவை. தேர்வுகளிலும் இணைய முறைகளைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். பள்ளிப் பாடநூல்கள் புதிதாகத் தயாரிக்கப்பட்டபோது QR code முறை கொடுக்கப்பட்டது. அதன்மூலம் இணையத்தில் சென்று பாடத்தைக் கற்றுக்கொள்ள வழியேற்பட்டது. அத்தகைய நிலை நம் கல்வியின் எல்லா நிலைகளிலும் இனி தேவைப்படும். பழைய வகுப்பறைக் கல்வி முறை இனியும் அப்படியே நீடிக்க வாய்ப்பில்லை. மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றின் பயன்பாடு மிகும். இணைய இணைப்பு அவசியம் ஆகும். ஆசிரியர்கள் தம் கற்பித்தல் முறையைக் கருவிகளோடு இணைத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும். அதற்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சிகளை வழங்க இக்காலகட்டத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் இத்தகைய எதிர்காலத் தேவைகள் பற்றி எதுவும் சிந்திக்காமல் பழைய நடைமுறைகளைப் பேணுவது குறித்தும் அதே வழிமுறையில் செல்வது பற்றியுமே எல்லாத் தரப்பும் சிந்தித்து முட்டிமோதுகின்றன.
கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று உயர்கல்வியில் இக்கல்வியாண்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தெளிந்த முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். மக்களைக் குழப்பத்தில் வைத்திருப்பதன் மூலமே அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பது அரசமைப்பின் விதி; அதற்கு மாறாக மக்கள்நல அரசு குழப்பத்தைத் தீர்த்து வழிநடத்துவதாக இருக்க வேண்டும்.