இந்தியாவின் தெளிவற்ற மதச்சார்பின்மை
இந்திய மதச்சார்பின்மையானது சர்வ தர்ம சமபாவம் (எல்லா மதங்களையும் சமமாக மதித்தல்) என உயர்வாகக் கூறப்பட்டுவருகிறது. மேற்கத்திய மதச்சார்பின்மையிலிருந்து இது சற்றே மாறுபடுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் தத்துவவாதியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், “இந்தியச் சிந்தனையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே நல்லிணக்கம் காணப்படுகிறது. மேற்குலகம் இருவருக்குமிடையேயான முரணைப் பற்றிப் பேசுகிறது” என இந்திய மதச்சார்பின்மையின் ஆதாரமான கோட்பாட்டைப் பற்றிக் கூறினார். அனைத்து மதங்களுக்கும் சமமான இடம் கொடுப்பது இந்தியாவின் பிரதான மதங்களுக்குச் சமமான அளவில் ஆதரவளிக்கும் திட்டமாக நடைமுறையில் கருதப்படுகிறது. மதச்சார்பின்மை என்றால் தேவாலயத்தையும் (அதாவது மதத்தையும்) அரசையும் பிரித்துவைப்பது என்னும் மேற்கத்தியப் புரிதலிலிருந்து இது மாறுபட்டது.
இந்த வேறுபாடு ராதாகிருஷ்ணன் முதற்கொண்டு இந்திய மதச்சார்பின்மையைத் தூக்கிப்பிடிப்பவர்கள் அனைவராலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியச் சூழ்நிலைக்குப் பொருந்தும் வகையில் உள்ளது என இந்த வேறுபாட்டை அவர்கள் கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக, அரசியல் விஞ்ஞானி ராஜீவ் பார்கவா, “இந்திய மதச்சார்பின்மை கடுமையான பிரிவினைச் சுவரை எழுப்பவில்லை; மாறாக மதத்திற்கும் அரசுக்கும் இடையே ‘கொள்கை சார்ந்த இடைவெளியை’ அது முன்மொழிந்தது” என்று குறிப்பிடுகிறார். மேலும் தனிநபர்கள், மதச் சமூகங்கள் ஆகியோரின் உரிமைகோரல்களிடையே சமநிலை காண்பதன் மூலம், மதத்தைத் தனியார்மயமாக்கும் நோக்குடன் அது செயல்பட்டதில்லை. சூழலுக்கேற்ற தார்மீகமான பகுத்தறிவின் மாதிரி உருவகமாகவும் இது விளங்குகிறது. எனினும் அத்தகைய “கொள்கை சார்ந்த இடைவெளி” எந்த அளவுக்குக் காலத்தின் சோதனையைத் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது? அது எந்த அளவு கொள்கை ரீதியானது? அல்லது மதச்சார்பின்மை பற்றிய இத்தகைய குறைந்தபட்ச புரிதல் உறுதியற்ற தன்மைக்கு உட்படக்கூடியதா? மதச்சார்பின்மையின் காலனித்துவ வரையறைகளிலிருந்து, அல்லது காலனித்துவத்திற்கு முந்திய பேரரசர் அக்பரின் தீன்-இ-இலாஹி போன்ற மத ஒத்திசைவின் வகைமைகளிலிருந்து இது எந்த அளவு வித்தியாசமானது?
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பாக எழுந்துள்ள தற்போதைய சர்ச்சை, நாடு தழுவிய கலவரங்களுக்குக் காரணமாக அமைந்து மசூதி இடிப்பில் போய் முடிந்த பாபர் மசூதி தொடர்பான நீண்ட காலப் பிரச்சினை போன்ற சிக்கலை மீண்டும் ஏற்படுத்திவிடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது இந்தியாவில் மதச்சார்பின்மையின் நிலை என்ன (மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவோம் என்று அரசியல் சாசனத்தின்படி அரசு உறுதி ஏற்றுள்ளது என்பதை மீண்டும் கவனப்படுத்தியுள்ளது. ராமர் கோயில் சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ஒருமித்த தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பின் மூலம், இந்து தேசியவாதிகள் கோரியபடி, இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தை ராமர் கோவில் கட்டுவதற்காக வழங்கி, அயோத்தியில் மசூதி கட்ட மாற்று இடத்தைத் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் பாபர் மசூதி சர்ச்சையைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. இந்த முடிவு வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991க்கு அரசியலமைப்பு சார்ந்த அங்கீகாரத்தை வழங்கியது. இந்திய மதச்சார்பின்மை நடைமுறைக்கு வந்த 1947, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவில் இருந்த எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் அப்போது நிலவிய சமயத் தன்மைகளை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறியது. பாபர் மசூதி தொடர்பான சர்ச்சை 1947க்கு முந்தியது என்று கருதப்பட்டதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதுபோன்ற சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி, மதத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. இந்துக்கள் சிலர் ஞானவாபி மசூதியில் தினமும் வழிபாடு செய்ய அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததையடுத்து அந்த வளாகத்திற்குள் இந்து மதச் சின்னங்கள் ஏதேனும் புதைந்திருக்கின்றனவா என்று ஆய்வுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபோது இந்த நம்பிக்கை பொய்த்துப்போனது. மசூதியின் வசுகானாவில் (இஸ்லாமியத் தொழுகைக்கு முன் அங்க சுத்தி செய்யும் சடங்கை மேற்கொள்வதற்கான இடம்) சிவலிங்கம் இருந்ததற்கான ஆதாரம் ஆய்வில் கிடைத்ததாக மனுதாரர்களின் வழக்கறிஞர் கூறினார். வசுகானாவை மூடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் தேனீக்கூட்டைக் கலைத்ததுபோல் ஆயிற்று. இந்தியா முழுவதும் உள்ள இதர மசூதிகள் குறித்தும் இதே போன்ற உரிமைகோரல்கள் எழுந்தன. நூறு ஆண்டுகளுக்கும் முந்திய அனைத்து முக்கிய மசூதிகளிலும் இதேபோன்ற ஆய்வு நடத்தப்பட வேண்டும், அந்த மசூதிகளில் உள்ள நீர்நிலைகளை வசுகானாவுக்கு (அங்க சுத்திக்கு) பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் செல்லாது எனக் கூறிச் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடைக்கால முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் தொடர்புள்ள வரலாற்றுச் சின்னங்களான தாஜ்மஹால், குதுப் மினார் போன்றவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இத்தகைய சர்ச்சைகளால் உருவாகக்கூடிய முடிவில்லாத மத மோதல்களுக்கான வாய்ப்பு, பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கிய இயக்கத்தின் சாரதியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தையே (ஆர்எஸ்எஸ்) எச்சரிக்கை அடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது. “ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தைத் தேட வேண்டும்?” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
நடைமுறையில், இந்திய மதச்சார்பின்மை பற்றிய சொல்லாடல், இந்தியாவின் சமயம் பற்றிய முந்திய காலனித்துவச் சொல்லாடல்களுடனான தொடர்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. வலதுசாரி இந்து தேசியவாதத்தின் சமகால வெளிப்பாடுகளும் இதில் அடங்கும். ‘முஸ்லிம் படையெடுப்பாளர்களால் தொடர்ந்து ஒடுக்கப்படும் இந்து நாகரிகம்’ என்னும் கதையாடல் இத்தகைய தொடர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. முஸ்லிம்கள் கொள்ளையடிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற படிமம் சமகால இந்து தேசியவாதச் சொல்லாடலில் மீண்டும் மீண்டும் வருகிறது. இது பிரிட்டிஷ் அரசை அதற்கு முந்திய முஸ்லிம் ஆட்சியாளர்களைவிட உயர்ந்ததாகச் சித்திரிக்க விரும்பிய ஜேம்ஸ் டோட், ஹென்றி எலியட் போன்ற கீழைத்தேய அறிஞர்களுக்கு விருப்பமான கருத்துரு. இந்தியா, சமயத்தன்மை ஆழமாக ஊடுருவியிருக்கும் இடம். மதத்தையும் அரசையும் பிரித்துவைத்தல் என்ற பொருளைக் கொண்ட மதச்சார்பின்மை இந்தியாவுக்குப் பொருந்தாது, இந்தியா பொருள் சார்ந்த விஷயங்களைப் புறக்கணிக்கும் ஆன்மீக நாடு என்னும் கருத்தை ஜெர்மானிய இந்தியவியலாளர் ஃப்ரெட்ரிக் மேக்ஸ் முல்லர் அழுத்தமாக முன்வைத்ததை நான் 2018இல் ரூட்லெட்ஜ் பதிப்பகம் வெளியிட்ட Idolatry and the Colonial Idea of India: Visions of Horror, Allegories of Enlightenment (உருவ வழிபாடும் இந்தியாவைப் பற்றிய காலனித்துவக் கருத்துருவும்: அச்சமூட்டும் பார்வைகளும் அறிவொளியின் உருவகங்களும்) என்னும் என்னுடைய நூலில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். தொழில்துறை நாகரிகத்தின் மீதான கற்பனாவாத விமர்சனத்திற்கு ஃப்ரெட்ரிக் இந்தியாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். அவரது எழுத்து – குறிப்பாக ‘இந்தியா நமக்கு என்ன கற்பிக்க முடியும்?’ (India: What Can It Teach Us?) என்ற தலைப்பைக் கொண்ட பிரசுரம் - இந்தியாவுக்கான மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட இந்திய தேசியவாதத்தின் மீது வலுவாகச் செல்வாக்கு செலுத்தியுள்ளது.
மதத்தையும் அரசையும் பிரிப்பது என்னும் ‘மேற்கத்திய’க் கருத்தாக்கத்திற்குப் பதிலாக, கீழைத்தேயச் சொல்லாடல்களில் இந்திய மதச்சார்பின்மையானது முகலாயப் பேரரசர் அக்பரின் தீன்-இ-இலாஹியின் கருத்தாக்கத்துடன் அதிக நெருக்கத்தைக் கொண்டிருக்கலாம். தன்னுடைய சாம்ராஜ்யத்தில் இருந்த மதங்களான இந்து மதம், இஸ்லாம் ஆகியவற்றை மட்டுமின்றிக் கிறிஸ்தவம், சமணம், ஜொராஷ்டிரம் முதலான அனைத்து மதங்களையும் ஒத்திசைவுடன் ஒன்றிணைக்க அக்பர் முயன்றார். சுதந்திர இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் ஹஜ் யாத்திரைகள், சீக்கியர்களின் புனிதத் தலங்கள், முஸ்லிம் வக்ஃப் வாரியங்கள், இந்து சமய அறநிலையங்கள் ஆகியவற்றுக்கான செலவுகளை நிர்வகிப்பது அல்லது சலுகை அளிப்பது வழக்கத்தில் உள்ளது. மதத்தையும் அரசையும் பிரிக்கும் ‘மேற்கத்திய’க் கருத்துக்குப் பதிலாக, அனைத்து மதங்களுக்கும் சமமான ஆதரவை வழங்க விரும்புவதன் மூலம், இந்திய மதச்சார்பின்மை பல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக்கூடும். ஒரு மதத்திற்கு ஆதரவாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றவர்களால் விரோதமாகப் பார்க்கப்படும் நிலையில் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் யாரையுமே திருப்திப்படுத்தாமல் போகக்கூடும். இது மதச்சார்பின்மையை அடையாள அரசியலில் சிக்க வைக்கிறது. பாரதீய ஜனதா கட்சியும் சங்க அமைப்புகளும் முன்னிறுத்தும் பெரும்பான்மைவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையும் இதில் உள்ளது. அரசு மதங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றால் அது பெரும்பான்மையினரின் மதமான இந்து மதத்திற்கே அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதம்.
மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களின் பிரச்சினை, இந்தியாவின் குழப்பமான மதச்சார்பின்மையின் சஞ்சலங்களை எடுத்துக்காட்டுகிறது. இது உலக அளவிலான மதச்சார்பற்ற நடைமுறையிலிருந்து விலகி, அண்டை நாடான பாகிஸ்தானின் அணுகுமுறையோடு பொருந்திப் போகிறது. இது மதச்சார்பற்ற அரசியலுக்குப் பதிலாக மத அடிப்படையிலான அணுகுமுறைக்கு உறுதியளிக்கிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு அல்லது வாரிசுரிமை தொடர்பான விஷயங்களில் வெவ்வேறு தனிநபர் சட்டங்களை அது ஆதரிக்கிறது.
மதச்சார்பற்ற இந்தியாவிலும் இஸ்லாமிய பாகிஸ்தானிலும் உள்ள தனிநபர் சட்டங்கள், பிரிட்டிஷ் அரசிடமிருந்து பெறப்பட்டவை. பிரிட்டிஷாரின் சட்ட ஆட்சி இதுபோன்ற விஷயங்களில் மதச் சட்டங்களைச் சார்ந்திருந்தது. பல்வேறு மதச் சமூகங்களின் தொகுப்பாக இந்தியாவைக் காணும் ஆங்கிலேயர்களின் பார்வையை இது பிரதிபலித்தது. தேசியத்திற்கான தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை. நவீன குடியுரிமை பல்லடுக்குகள் கொண்ட மாதிரியைக் காட்டிலும் தட்டையான மாதிரியையே சார்ந்துள்ளது. நவீன தேசிய - அரசு அரசியலமைப்பு, சட்ட உரிமைகள் ஆகியவற்றின் மூலம் குடிமக்களுக்கு நேரடியாக அதிகாரம் அளிக்கிறது. காலனித்துவ மாதிரியில் அதிகாரம் பெற்ற குழுக்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் இடையீட்டின் மூலம் குடிமக்கள் அதிகாரம் பெற்றனர். அரசியல் விஞ்ஞானி சுஹாஸ் பால்ஷிகர் கூறியுள்ளபடி, இந்தியாவில், “குடியுரிமையை வடிவமைப்பதில் சாதியும் சமூகமும் தலையிடுகின்றன... ‘பொது’ என்பது குறித்தும், எது பொது நலன் என்பது குறித்தும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் தனித்தனியான கருத்துக்களைக் கொண்டுள்ளன. அந்த அளவுக்குச் சமூகங்கள் இங்கே தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.” வலி மிகுந்ததும் இந்தியாவின் மதச்சார்பின்மையின் எல்லைகளைக் குறுக்கியதுமான மாற்றத்தின்போது இந்தியா மேற்கொண்ட முக்கியமான போராட்டங்களில் ஒன்று பொதுநலனுக்காகப் பாடுபடக்கூடிய தட்டையானதும் சீரானதுமான குடியுரிமை என்னும் கருத்தை அடைவதற்கான போராட்டமாகும்.
மதச்சார்பின்மையானது மதங்களின்பால் அரசு நடுநிலையைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாகப் பல்வேறு மதங்களின் இருப்பு என்று வரையறுத்துள்ள இந்திய அரசியல், இதனால் வசதியான இடத்தில் நிலைகொள்ளாமல், அதீத நிலைப்பாடுகளுக்கு இடையில் அலைக்கழிகிறது. மதச்சார்பின்மை பற்றிய இந்தக் கருத்தாக்கத்தின் பிரச்சினை என்னவென்றால், அது சமூகங்களைச் சுவர்களால் சூழப்பட்ட தோட்டங்களாகவும், தனிநபர்களை அவர்கள் வரித்துக்கொண்ட அடையாளத்தின் கைதிகளாகவும் பார்க்கிறது. இது குடியுரிமை பற்றிய நவீன கருத்துகளுடனோ அல்லது ஒரு தனிநபரால் தன்னுடைய தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்ள முடியும் என்ற தாராளவாதக் கருத்துடனோ பொருந்திப்போகவில்லை.
மூத்த காங்கிரஸ் தலைவரான மணீஷ் திவாரி, இந்திய மதச்சார்பின்மையில் தனிமைப்படுத்தும் தன்மை இருப்பதாக அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். “மதச்சார்பின்மை குறித்த பிரச்சினை காங்கிரஸ் கட்சியைச் சிறிது காலமாகக் கவலையடையச் செய்துள்ளது. மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களையும் சமமாகக் கருதுவதா அல்லது மதத்தையும் அரசையும் பிரிப்பது என்னும் நேருவிய வரையறைக்குத் திரும்பிச் செல்வதா?” என்று அவர் கேட்டார். ஜவஹர்லால் நேரு மதச்சார்பின்மையை எப்படிப் புரிந்துகொண்டார் என்று பார்ப்பதுதான் அந்த வரையறை. ஆனால் இந்தியாவின் முதல் பிரதமர் அதைச் செயல்படுத்த முனையவில்லை. அவருக்குப் பின் வந்தவர்களும் அதைச் செய்யவில்லை.
இந்தியாவின் மத மோதல்களைத் தவிர்க்கும் முயற்சியில் பல்வேறு வழிமுறைகள் பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் மதச்சார்பின்மை பற்றிய தாராளவாத அணுகுமுறை - எல்லா மதங்களையும் சமமாகக் கருதுவது என்றில்லாமல் அரசு நடுநிலைமையை முன்னிறுத்தி, குடியுரிமை குறித்த நவீன, பின்காலனித்துவப் பார்வையுடன் முழுமையாக ஒத்துப்போகக்கூடிய பார்வை – போதிய அளவு பரிசோதிக்கப்படவில்லை.
ஸ்வாகதோ கங்கூலி: CASIஇன் விசிட்டிங் ஃபெலோ. 2022ஆம் ஆண்டின் வசந்த காலத்துக்கான விசிட்டிங் ஃபெலோ. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் தலையங்கப் பக்க எடிட்டராக 2009முதல் 2021வரை பணியாற்றியுள்ளார்.
https://casi.sas.upenn.edu/sites/default/files/uploads/%28Tamil%29%20Community%20Publics%20and%20the%20Republic_India%E2%80%99s%20Ambivalent%20Secularism%20-%20Swagato%20Ganguly.pdf
தமிழில்: அரவிந்தன்