நவம்பர் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      இந்தியாவின் தெளிவற்ற மதச்சார்பின்மை
      பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி
      கொலையும் களப்பலிகளும் மறுமலர்ச்சியின் பூபாளம்
      இது ஷி--ஜிங்பிங்கின் காலம்!
      நோபல் பரிசு: அன்னி எர்னோ ஆபாச எழுத்தாளரா?
      சோழர் காலத் தமிழர் பெருமிதமும் ‘கங்காபுரம்’ நாவலும்
    • கதை
      பூனையின் தவம்
      நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள்-?
    • பாரதியியல்
      பாரதிக்கும் வ.உ.சி.க்கும் உதவிய சுதேசமித்திரன் ஆசிரியர்
    • தொடர்
      என்றென்றும் வாசகர்
    • அஞ்சலி; தெ. சுந்தரமகாலிங்கம் (1940-2022)
      நெகிழவைக்கும் மரண சாசனம்
    • சுரா கடிதங்கள்
      சுரா பக்கங்கள் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 3
    • திரை
      அடையாளச் சிக்கல்: ‘இட’மாக மாறும் ‘நிலம்’
    • ஆடுகளம்: பாபர் ஆசம்
      தேசத்தின் மரியாதையைச் சுமக்கும் மட்டை
    • ஊடகம்: சிராங்கூன் டைம்ஸ்
      சிங்கையிலிருந்து உலகை நோக்கி: விரியும் இதழியக்கம்
    • தலையங்கம்
      ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஒழியட்டும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2022 சுரா கடிதங்கள் சுரா பக்கங்கள் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 3

சுரா பக்கங்கள் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 3

சுரா கடிதங்கள்


(இடமிருந்து வலம்) பின் வரிசை: சு.ரா., க்ரியா ராமகிருஷ்ணன், சிவராமன்
முன் வரிசை: அச்சுதன் கூடலூர், க்ரியா நிறுவனர் ஜெயலட்சுமி, அச்சுதனின் நண்பர் மார்சி

 

சுந்தர ராமசாமியின் இலக்கியச் செயல்பாடுகளில் அவருடைய கடிதங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் நூல்கள், எழுத்தாளர்கள், இலக்கியச் சூழல் ஆகியவை குறித்து விரிவாக எழுதுவது சுந்தர ராமசாமியின் வழக்கம். வாசிப்பு அனுபவப் பகிர்வு, விமர்சனம், விவாதம் ஆகியவை கொண்டதாக அவர் கடிதங்கள் அமைந்துள்ளன.

பல்வேறு பொருள்கள் குறித்த தன் கருத்துக்களை சு.ரா. வெளிப்படையாகவும் விரிவாகவும் பகிர்ந்துகொண்ட ஒரு சில முக்கியமான நண்பர்களில் ஒருவர் மதுரை சிவராமன். சுந்தர ராமசாமியின் நீண்டகால நண்பர்களில் ஒருவர். ‘க்ரியா’ பதிப்பகச் செயல்பாடுகளில் தொடக்கம்முதல் ஈடுபட்டுவந்தவர்.

1979ஆம் ஆண்டுமுதல் 1994ஆம் ஆண்டுவரை சு.ரா.வுக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. ஜே.ஜே.: சில குறிப்புகள், க்ரியா பதிப்பகம், காலச்சுவடு உருவாக்கம் முதலானவை குறித்த பல முக்கியமான செய்திகள் இந்தக் கடிதங்களில் பதிவாகியிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தின் இலக்கியச் சலனங்களின் முக்கியமானதொரு பகுதியைப் பிரதிபலிக்கும் இந்தக் கடிதங்களில் நுட்பமான பல கூறுகள் பொதிந்துள்ளதை உணரலாம். சு.ரா.வின் பார்வைகள், அக்கறைகள், ஆதங்கங்கள், கனவுகள், முயற்சிகள் ஆகியவற்றையும் இந்தக் கடிதங்களின் வழி அறியலாம்.

சிவராமனுக்கு சு.ரா. எழுதிய கடிதங்களின் தொகுப்பின் மூன்றாவது பகுதி இது. சென்ற இதழில் (2022, அக்டோபர், இதழ் 274) வெளியான கடிதங்களில் (04.06.82 தேதியிட்ட) கடைசிக் கடிதம் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு சு.ரா. எழுதியது. சிவராமனுக்கான கடிதமாக அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவறுக்கு வருந்துகிறோம். சிவராமனுக்கு எழுதிய கடிதங்களில் பேசிய சில விஷயங்களை இந்தக் கடிதத்திலும் சு.ரா. விவாதிப்பதால் அக்கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறோம்.

-ஆசிரியர்


மேத்யூ அர்னால்டு 

தஸ்தயேவ்ஸ்கி

சுந்தர ராமசாமி,
நாகர்கோவில்
7.7.1982

அன்புள்ள சிவராமன்,

உங்கள் 25. 6. 82 கடிதம். 8. 7.முதல் 11. 7.வரை மதுரையில் இருப்பேன் என்று எழுதியிருக்கிறீர்கள். அந்த இடைவெளியில் இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கோடை திட்டத்தில் எனக்கு ஏற்பட்ட வேகம் அதிகம் தணிந்துவிடவில்லை. ஊர் வந்ததுமே வேலையை மும்முரமாக ஆரம்பிக்கலாம் என்ற இருந்தேன். அது எவ்வளவு பெரிய கனவு என்பது இப்போது தெரிகிறது. வந்ததிலிருந்து ஒரே வேலைகள். கடையில் எப்போதும் பிரச்சினைகள் இருந்துகொண்டு இருப்பது அலுப்பைத் தருகிறது. தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதையை மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய் மாதிரிப் படித்து முடிக்க வேண்டும் என்று நினைத்ததுபோக மிகக் குறைந்த அளவில்தான் படிக்க முடிகிறது. *அர்னால்டைப் பற்றிய உங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். இவருடைய எழுத்துப் பற்றியும் இவர் இயங்கிய பின்னணி பற்றியும் எனக்குப் போதிய அறிவு இல்லாத நிலையில் பிரச்சினையின் தீவிரத்தை முழுமையாக உணர்ந்துகொண்டேனா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இருப்பினும் வரிசையில் எந்த ஆசிரியரை எடுத்துக்கொண்டாலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்குமென்றே நினைக்கிறேன். விரிவாகக் கூற வேண்டியவற்றை மிகச் சுருக்கமாகவும், அவ்வகையில் முதல் நூலாகவும், நுட்பமற்ற வாசகனை எதிர்நோக்கிப் பேசுவதாக இருக்கும் போதும் இப்பிரச்சினைகள், நோக்கத்தையே கேலி செய்யக்கூடிய அளவுக்குச் சரியக்கூடும். ஆனால் இந்த வேலையை எப்படியும் ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது. எல்லா மொழியிலும் அது பிற்பட்டிருந்த காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் நடந்திருக்கின்றன. நாம் செய்ய முற்படும்போது குறைகளை முடிந்த அளவு நிவர்த்தி செய்ய முற்படுகிறோம். குறைகளையும் வரை களையும் அறிந்த போதத்துடன் இயங்கு கிறோம். இவை நமக்கு வலுத் தரக்கூடியவை. அதனால் நீங்கள் மீட்டும் எளிய அளவிலேனும் உங்கள் வேலையைத் துவக்கலாம் என்று தோன்றுகிறது.

அர்னால்டு உங்களுக்கு அதிகப் பிரச்சினையைத் தரக்கூடியவர் என்றால், அவரை விட்டு மற்றொருவரை எடுத்துக் கொள்ளலாம். பத்திரிகைக்காகவும் வரிசைக்காகவும் நாம் இன்னுமொரு முறை சந்தித்துக்கொள்ளலாம். அந்தச் சந்திப்பின்போது மலையாளப் புத்தகம் வெளியிடுவது பற்றியும் சில தீர்மனங்கள் எடுக்க முடியும். மலையாளப் புத்தகம் வெளியிடுவதில் சில சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன. முக்கியமான ஒரு பாதக நிலையும் இருக்கிறது. புத்தகங்களை விற்பனைக்குக் கொடுக்கும்போது விற்றுமுதலைத் திரும்பப் பெற ஒரு வருட காலம் வரையிலும் பொறுக்க வேண்டும் என்று விஜயகிருஷ்ணன் சொல்வது சோர்வைத் தருகிறது. இந்தப் பிரச்சினையை வேறு விதத்தில் சமாளிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

பவானியும் குழந்தையும் சுகம் என்று நம்புகிறேன்.

அன்புடன்
சுரா

* மேத்யூ அர்னால்டு (Matthew Arnold) ஆங்கில விமர்சகர், கவிஞர்.

 

சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
2.9.1982

அன்புள்ள சிவராமன்,

உங்கள் 28.8.82 கடிதம்.

மிக மோசமான மனநிலையில் இருந்ததினால் கடிதம் எழுதவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். இதைத்தான் நானும் வேறு பாஷையில் எழுத வேண்டியிருக்கிறது. கோடையில் நாம் சந்தித்து, நான் ஊர் திரும்பிய பின், எனக்குப் பல சிரமங்கள். மனக் கஷ்டத்தின் உச்சக் கட்டத்தில் மழை கொட்டித் தீர்த்த பின் தென்படும் வானம் போல் ஒரு ‘வெளி’ விடும். இப்போது அந்த மன நிலையில்தான் இருக்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் நிம்மதி.

சென்னைக்கு நீங்கள் மாற்றலாகிப் போகக்கூடும் என்ற செய்தி காதில் விழுந்தது. இதை ஒட்டிப் பல விஷயங்களை நான் கற்பனை செய்துகொண்டேன். உங்கள் சந்தோஷத்தை நினைத்து ‘சந்தோஷப் பட்டுக்’கொண்டேன். இப்போது மீண்டும் உத்தமபாளையம் என்று ஆகியிருப்பது கஷ்டம்தான். மனது ரொம்பவும் விரும்பும் புத்தகத்தைத்  தேர்ந்தெடுத்துப் படிப்பது சிறிது ஆசுவாசம் தரும். ‘நிகழ்ந்துகொண்டிருப்பதுதான் நிஜம். அதற்கு அப்பால் கேட்டு நிற்க ஒன்றும் இல்லை’ என்பதைக் காண மறந்து முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறோம். இந்த முரண்டு நம்மை விட்டு நீங்கிவிட்டால் நமக்கு எவ்வளவோ நிம்மதி ஏற்படும். எல்லாவற்றிற்கும் அடிப்படை பயம்தான். இந்தப் பயத்தை - நம்மிடம் அது ஒவ்வொரு கணமும் வேர்விட்டுப் படர்வதை - நம்மால் பார்க்க முடிந்தால் பிசுபிசுத்துப்போகும் அது. ஆனால் பார்க்க மறுக்கிறோம். எப்படியோ நிமிர்க்க முடியாதபடிக் கோணிக்கொண்டு விட்டோம்.

உங்கள் உடலுக்கு என்ன? அதிலும் அடுத்தடுத்து மூன்று டாக்டர்களைப் பார்க்கும்படி ஏதோ ஒரு சிறு விஷயத்திற்கு அதிகமாக அலட்டிக்கொண்டு விட்டீர்களா?

பவானியும் குழந்தையும் சுகம் என நம்புகிறேன். அவர்கள் மதுரையில் உங்கள் தாயாருடன்தானே இருக்கிறார்கள்.

திலீப்பிடமிருந்து கடிதம் வந்தது. அவருக்கு மனம் துள்ளிக்கொண்டிருக்கிறது. அம்பிகையின் கடாட்சம் அப்படி. நாமும் சேர்ந்து கொஞ்சம் துள்ளுவோம் என்றால் தலைச்சுமை அழுத்தம் தாங்க முடியவில்லை.

ஜே.ஜே. கருத்தரங்கு ஏற்பாடுகள் சுத்த மோசம், பல கட்டுரைகள் படித்தார்கள். ஒன்றும் காதில் சரியாக விழவில்லை. விழுந்த பகுதிகளும் ஆழமற்றவை, எல்லாம் நாவலுக்கு வெளியே நின்று நாவலாசிரியரைப் பார்த்து, ‘என் விருப்பத்தை ஏன் பூர்த்தி செய்யவில்லை, படவா?’ என்ற எளிமையான கேள்வியை கஷ்டமான பாஷையில் கேட்கும் கட்டுரைகள். மோஹன் கட்டுரை வந்திருந்தால் சற்று சமன் செய்த மாதிரி இருந்திருக்கும். அதுவும் வரவில்லை. வெங்கட் சாமிநாதன் கட்டுரையை மட்டும் - ஏன் என்று தெரியவில்லை - டேப் செய்து போட்டார்கள். அதுவும் சரியாகக் காதில் விழவில்லை . விழுந்த பகுதிகளில் அவர் ஜே.ஜே.யை ஏற்றுக்கொள்ளாத தமிழ்ச் சமூகத்தைச் சாடுகிறார். அவருடைய ஜன்மாந்தர ‘விரோதி’களையும் ஒரு கை பார்ப்பதாகத் தெரிகிறது. எனக்கு இது முக்கியம் இல்லை. என் விஷயம் ஏன் அவருக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை - அதற்கான காரணம்.

முத்துசாமி கட்டுரையைப் படிக்க வேண்டும் என்றும் படிக்க வேண்டாம் என்றும் அபிப்பிராயப் பேதம் வந்தது. அவருடைய கட்டுரை, கட்டுரை ஏன் அவரால் எழுத முடியவில்லை என்பதைப் பற்றி. ஜனநாயகப் பண்புகளை ஏற்றுக்கொண்டு கொஞ்சம் படித்தார்கள். மூன்று பக்கங்கள் படித்த பின் பலரும் படிக்க வேண்டாம் என்று சொல்ல நிறுத்திக்கொண்டார்கள். ‘காகங்கள்’ கூட்டத்தில் பங்குகொள்ளும் நண்பர்கள் சுமார் 25 பேர் வந்திருந்தார்கள். ஒருவர்கூட வாயைத் திறக்கவில்லை. உள்ளூர்க் கூட்டம் என்பதால் நான் இவர்களுடைய அபிப்பிராயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மூச்! இதுதான் எனக்குப் பெரிய ஏமாற்றம்.

இந்தக் கூட்டம் நடந்த நேரத்தை ஒட்டித் தற்செயலாக ஜெயராமனும் ரவியும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இருந்தது - உள்பதற்றத்தோடு இருக்கும் குழ்நிலை என்றாலும் - ஏதோ ஒரு விஷயத்தில் சந்தோஷமாக இருந்தது. ஜெயராமன் ஒருவிதமான நிம்மதியை அடைந்திருக்கிறார். நிம்மதியாக இருக்கிறார் என்பது ஒரு பட்டுக்குடையைத் தலைக்குமேல் அவர் விரித்துக் கொண்டிருப்பதுபோல் தெளிவாகத் தெரிகிறது.

அன்புடன்
சுரா

 

சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
30.9.1982

அன்புள்ள சிவராமன்,

உங்கள் 18.9.82 கடிதம்.

அக்டோபர் 4இல்தான் நீங்கள் சென்னையை விட்டுக் கிளம்புகிறீர்கள் என்று எழுதியிருந்ததால் இந்தக் கடிதத்தைச் சென்னை விலாசத்திற்கே எழுதுகிறேன், சென்னை விஷயங்கள் பற்றி எனக்கு எழுதுங்கள். முக்கியமாக உங்களுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் நடந்த பேச்சுக்கள் பற்றி. சிறு பத்திரிகை இயக்கம் மிகவும் சோர்வடைந்துவிட்டது மாதிரித் தெரிகிறது. இந்நிலையில் 83 ஜனவரியில் வெளிவருகிற மாதிரி நாம் நமது பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

க்ரியாவுக்குப் பணப் பிரச்சினை தீர்ந்துவிட்டால் அது நிறையப் புத்தகம் கொண்டு வர முடியும் என்று எழுதியிருக்கிறீர்கள். இந்தக் கனவு நிறைவேறிப் பார்க்கத் துடிப்பாக இருக்கிறது. ராமகிருஷ்ணனுடன் நாம் எல்லோரும் அதிக அளவில் ஒத்துழைத்தால் பத்திரிகையையும் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை ரொம்பவும் படுத்துகின்றன. நமக்கு வைராக்கியமும் குறைவு. ஆசிரியர் பொறுப்பு ராமகிருஷ்ணனுக்கு இல்லாமல்கூடக் கொண்டு வரமுடியும். வெளியூர்களில் இருந்துகூட. ஆனால் இது இன்று நமக்கு இருக்கும் பல பலன்களை இழந்து நிற்பது ஆகிவிடும்.

சென்ற ஞாயிறு அதிகாலை மதுரை போய் அன்று பிற்பகலே ‘காகங்கள்’ கூட்டத்தை உத்தேசித்து ஊர் திரும்பினேன். அவகாசக் குறைவினால் மோஹனையோ வேறு நண்பர்களையோ சந்திக்க முடியவில்லை. வரும் வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால் ‘காகங்கள்’ கூட்டத்திற்கும் வந்து சேர முடியவில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கும் நேரத்தில் சென்னை வந்து பத்து நாட்கள் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு இருக்கிறது. உடலும் மனசும் ரொம்பவும் களைத்துவிட்டது. கடையில் பிரச்சினைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. நான் சென்னை வரும்போது நீங்களும் வந்து தங்கும் அவகாசம் இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப நான் எனது பயணத்தில் மாற்றம் செய்துகொள்ள முடியும்.

திரு. சங்கரராஜு நம் வீட்டுக்கு வந்திருந்தார். அலுவல் காரணமாக வந்திருந்ததினால் அவருக்கு அதிக ஓய்வு இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பேசிக்கொண்டோம். உங்களை உத்தமபாளையத்திலிருந்து தூக்கி மதுரையில் போட்டுவிட முடியும் என்றார். உங்கள் பிரச்சினையை அவர் மனதிற்குள் வைத்துக்கொண்டிருப்பது மாதிரிப் பட்டது.

அன்புடன்
சுரா

சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
17.11.82

அன்புள்ள சிவராமன்,

உங்கள் கடிதம்,

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி எப்படி இருக்கிறது? உத்தமபாளையம் கல்லூரியைவிட இதமாக இருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் பத்து கிலோமீட்டர் போய் வருவதில் இரண்டு மணிநேரம் வீணாகிவிடும். இது பெரிய நஷ்டம்.

திலீப் திருமணத்திற்கு எப்படியும் வர வேண்டும் என்று இருக்கிறேன். இங்கே பல அசௌகரியங்கள். எப்படி வரப்போகிறேன், எத்தனை நாட்கள் தங்க முடியும் என்றெல்லாம் முடிவாகச் சொல்ல முடியாத நிலை.

* பத்மநாபன் இங்கும் வந்திருந்தார். பொதுவான விஷயங்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்தோம். காலை வந்தவர் இரவு ஊர் திரும்பிவிட்டார்.

மு.த.வின் கட்டுரை பற்றி உங்களைப் போலவே ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார். நீங்கள் குறிப்பிடும் குறைகள் இருக்கலாம். ஆனால் இவற்றால் உறுத்தல் ஏற்படாமல் கட்டுரையைப் படித்தேன். தனிநபர் பற்றிய கோபதாபங்கள் இல்லாமல் விஷய ரீதியாகத் தன் மனதுக்குப் படுவதை அவர் எழுதிக்கொண்டு போவதில் எனக்கு ஏற்பட்ட பாராட்டுணர்வு பிற குறைகளைப் பார்க்கத் தடுத்திருக்கலாம்.


புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனைப் பற்றிய உங்கள் ஏமாற்றம் நீங்கள் தந்திருக்கும் மேற்கோள்களை வைத்துப் பார்க்கும்போது சரியாக இருக்கிறது. ஆனால் புதுமைப்பித்தனின் மொத்த ஆகிருதி இப்பலவீனங்களையும் தாண்டி நிமிர்ந்து நிற்பதாக எனக்குப் படுகிறது. பல்வேறு ஆசிரியர்கள் பற்றி நின்று நிலவும் அபிப்பிராயத்திற்கு மாறாகவும், ஆனால் பொருட்படுத்தும்படியும் உங்களுக்கு அபிப்பிராயங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்க, இவற்றைக் கட்டுரை வடிவில் ஏன் இன்னும் தராமல் இருக்கிறீர்கள்? பல பிரச்சினைகள் உங்களுக்கு இருப்பினும் அதிக ஓய்வுள்ள வேலை உங்களுடையது. இம்முயற்சிகளில் நீங்கள் ஈடுபடாமல் இருப்பது எனக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. நீங்கள் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

விடுமுறையில் படிப்பதற்கு என்னென்ன புத்தகங்கள் எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

மோஹனைச் சந்தித்தீர்களா? அவர் எப்படி இருக்கிறார்? நீங்கள் அவ்வப்போது அவரைச் சந்தித்து ஊக்குவித்தால் ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் முடித்துவிடக்கூடும். அவர் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு இரண்டாம்பட்சமான விஷயம் என்றாலும் அவர் வாழ்க்கைக்கு அது பின்னால் உதவக்கூடும். எனக்கு ஆயாசம் தருவது, எவரும் பொருட்படுத்தும்படி நாவல் துறைபற்றி அவர் உருவாக்கியுள்ள கருத்துக்கள் பிறருக்குத் தெரியாமல் முடங்கிக் கிடக்கும் நிலைதான். ஒவ்வொருவர் சம்பந்தமாகவும் காலம் ஏன் இப்படி அர்த்தமற்றுப் போக வேண்டும் என்பது தெரியவில்லை.

அன்புடன்,
சுரா.

* பத்மநாப ஐயர்

சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
21.1.1983

அன்புள்ள சிவராமன்,

உங்கள் 17.1.83 கடிதம்.

நீங்கள் வராமற் போனது சற்று ஏமாற்றமாக இருந்தது. வெள்ளிக்கிழமையை ஒட்டி நீங்கள் வரலாம் என்ற நினைப்புடன் இருந்தேன்.

செல்வி வள்ளி* வந்துவிட்டுப் போனார். ஒரு நாள்தான் இருந்தார். என்றாலும் ரொம்பவும் மன நிறைவாக இருந்தது. ‘காகங்க’ளின் விசேஷக் கூட்டமொன்றையும் அவருக்காகக் கூட்டினேன். அவரைச் சந்திக்க முடிந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம்.

நான் இப்போதைக்கு எங்கேயும் வெளியே கிளம்புவதாக இல்லை . கடுமையாக உழைக்க வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் நடைமுறையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது செய்யும்படியான சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. இனியேனும் செய்ய வேண்டும்.

எனது கட்டுரைகளைத் திருத்த நானும் ராமகிருஷ்ணனும் சந்தித்துக்கொள்ள வேண்டி யிருக்கிறது. உங்களுக்கும் வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாம் மூவரும் ஒரு வித்தியாசமான ஒரு ஊரில் (அது எந்த ஊர் என்று இப்போது சொல்லத் தெரியவில்லை) தங்கி இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை. அது ரொம்பவும் நன்றாக இருக்கும். ராமகிருஷ்ணனுக்கும் கடிதம் எழுதும்போது குறிப்பிடுங்கள்.

ராமகிருஷ்ணனுக்கு என்ன நெருக்கடி? பண நெருக்கடியா அல்லது வேலை நெருக்கடியா? நீங்களும் அவருடன் எப்போதும் இருக்க முடிந்தால் அவருக்கு பாதிக் கஷ்டங்கள் தீர்ந்துபோகும். மனதுக்கு ஏற்ற துணையில்லாமல் வேலை செய்வது பெரிய கஷ்டம். ஆனால் அதற்கான காலம் இன்னும் வந்துசேரவில்லை

எழுத்து, படிப்பு என்று ஏதாவது உண்டா?

அன்புடன்
சுரா

* ஆபி ஜிஃப்ரன் (Abbie Ziffren) தமிழ் பயின்ற அமெரிக்கர். வள்ளி எனத்  தன்னை அழைத்துக்கொண்டவர். தேர்ந்த வாசகர். சமகாலத் தமிழிலக்கியத்தில் விரிவான வாசிப்பு கொண்டவர். 

 

சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
11.7.83

அன்புள்ள சிவராமன்,

உங்கள் 3.7.83 கடிதம். ராமகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் கடந்த ஒன்றரை மாத காலமாக இங்கு இருக்கிறார். அவருடைய மனைவியாருக்கு உடல் நலன் குன்றி இரண்டு தடவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்யும்படி ஆயிற்று. ஜெயபாலனுக்குச் சமூகவியலிலும் ஈழத்து விடுதலைக் கிளர்ச்சியிலும் மிகுந்த ஆவேசம் உண்டு. ஜனங்கள் மத்தியில் தங்கி, அவர்களது வாழ்க்கையைப் பகிர்ந்து ஆராய்ந்து எழுதுவதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். ஜனங்களிடம் இரண்டறக் கலந்து நிற்பதற்கான தன்மைகளையும் இயற்கையாகக் கொண்டிருக்கிறார். மார்க்சியவாதி. இத்தத்துவத்தின் அடிப்படைகள் எந்த அளவுக்கு உபயோகமானதோ அந்த அளவுக்கு மட்டும் ஏற்றுக்கொள்பவர். தத்துவத்துடன் இறுக்கமான உறவோ, எளிமையான விடைகளைத் தத்துவத்தில் தேடும் புத்தியோ இல்லை. விருப்பு வெறுப்புக்களைப் பெரிதும் கடந்தவர். ‘க்ரியா’வுடனும் நம்முடனும் இவர் இணைப்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இவருடைய தமிழ்க் கட்டுரைகள் சிலவற்றை நகல் செய்து அறிமுகக் கடிதம் ஒன்றையும் எழுதி இங்கு வந்திருந்த மோஹன் வழியாக ராமகிருஷ்ணனுக்குக் கொடுத்து அனுப்பினேன். பல கடிதங்களுக்கு ராமகிருஷ்ணனிடமிருந்து பதில் இல்லை. அலுவல்களில் அழுந்திக் கிடக்கிறார் என்று நினைக்கிறேன்.

இதற்கிடையில் திருமதி ஜெயபாலனுக்கு ஜப்பானிலிருந்து வர வேண்டிய பணம் வந்து சேரவில்லை. ஆஸ்பத்திரி பில்லும் கட்ட முடியவில்லை. இங்கு என்னுடன் இருக்கும் நேரத்தை ராமகிருஷ்ணனைச் சந்திப்பதில் பயன்படுத்தலாமே என்று நான் கூறிய யோசனையை ஏற்று ஜெயபாலனும் அவருடைய மனைவியாரும் சென்னை சென்றிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாட்களில் அவர்கள் இங்கு திரும்பிவிடக்கூடும். தில்லி பாங்கிலிருந்து வர மறுக்கும் பணத்தை நான் இங்கு வரவழைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்.

படிகளில் தமிழவனின் கட்டுரையைப் படித்தேன். இதனுடன் இணைத்துப் படிக்க வேண்டிய தமிழவனின் மற்றொரு கட்டுரை இலக்கிய வெளி வட்டத்தில் வந்துள்ளது. ‘சாதா’ விமர்சனத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியாத உண்மையின் ஒளிகளில் எவை இவருடைய ஸ்பெஷல் விமர்சனத்தில் சிக்கின என்பது எனக்குத் தெரியவில்லை. சாதாவிலும் இதைவிட அதிக தூரமும் ஆழமும் போக முடியும் என்று நினைக்கிறேன். போய்க் காட்டியிருக்கிறார்கள். ராஜேந்திரனுக்கு* இந்த விமர்சனம் சற்று விசேஷமாகவே பட்டிருக்கிறது. சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது என்கிறார். **குமாரைச் சந்தித்தேன். இவர் மிகுந்த ஆவேசத்துடன் தமிழவனின் கருத்துக்களை மறுத்து நீண்ட நேரம் பேசினார். உங்கள் கருத்தையும் ராஜேந்திரனின் கருத்தையும் அவரிடம் சொன்னேன். எங்களை (உங்களையும் அவரையும்) யாராலும் ஏமாற்ற முடியாது என்றார். கொல்லிப்பாவை தனது பிரசுரக் கோட்பாடுகளை புனருத்தாரணம் செய்துகொண்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார். எனது ஜே.ஜே. ஜாதி வெறி கொண்டு எழுதப்பட்ட நாவல் எனக் கூறும் தரும சிவராமுவின் கட்டுரையைக் கொல்லிப்பாவை பிரசுரிக்க மறுத்திருக்கிறதாம். மார்த்தாண்டனும் உதவி ஆசிரியர் ராஜகோபாலும் சிவராமுவின் கட்டுரையைப் பெரும் உளறல் என்றார்களாம். இதுவும் குமார் சொன்னது. நீண்ட இடைவெளிக்குபின் மார்த்தாண்டன் என்னைச் சந்தித்து கொல்லிப்பாவைக்கு எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எவ்வளவு சுவையான அரசியல்! எனக்கு விருப்பமில்லை. சிறு பத்திரிகைகள் இன்னும் மேலான நோக்கம் கொள்ளாதவரையிலும் அவற்றில் எழுதவேண்டாமென்று நான் இருக்கிறேன்,

இன்று காலையில் குளித்துக்கொண்டி ருக்கும்போது எழுத வேண்டும் என்ற ஆவேசத்தின் மின்னல் ஒன்று என் மனதில் வெட்டிற்று. இப்போது அதிகமும் மேல் மாடியில் தான் இருக்கிறேன். ஏகாந்தம் பல சமயங்களில் குற்றாலத்து அருவிக்குக் கொடுத்தது போல் மனதுக்கு ஜில்லிப்பு ஏற்படுத்துகிறது. பாத்ரூம் ஜன்னல் வழி பார்த்தபோது நாலைந்து ஆடுகள் காம்பவுண்டு செடிகளை, ‘சிறு அவகாசமே உண்டு’ என்ற பரபரப்பில் தத்தளிப்புடன் கடிப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து கத்தினால் கேட்காது. கோலமும் வெளிவர ஏற்றதல்ல. அதனால் செயல்பாடு ஸ்தம்பித்துவிட்டது. கேட் பாதி திறந்து கிடக்கிறது. பொறுப்பின்மை எங்கிருந்து ஆரம்பமாயிற்று என்று யோசித்தபோது கீரைக்காரன் செய்த காரியம் என்பது தெரிந்தது. இவன் திரும்பிப் போகும்போது ஆடுகளைப் பார்த்துக்கொண்டே ஒரு சத்தம்கூட எழுப்பாமல் கேட்டைச் சாத்தாமலும் வெளியே போனான். இவனும் இவனுடைய முன்னோர்களான கீரைக்காரர்களும் இதையே செய்துவந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலேயே என் தகப்பனார் இவனுடைய முன்னோர்களில் ஒருவனான கீரைக்காரனுடன் பலத்த சண்டை போட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது.

சில நிமிஷங்களுக்குப் பின்னால் கடைச் சிப்பந்தி வீட்டின் பின்னாலிருந்து ஓடி வந்து ஆடுகளை விரட்டினான். இவன் விரட்டிய விதம் சுந்தர விலாஸுடன் இவன் கொண்டிருக்கும் நெருக்கமான பிணைப்பைக் காட்டக் கூடியதாக இருந்தாலும் படு கொடுமையாக இருந்தது. ஆடுகளை விரட்டுவதல்ல, அந்தத் தலத்திலேயே கொல்ல வேண்டும் என்பதே இவனுடைய நோக்கம்போல் கற்களால் அவைகளைத் தாக்கினான். இந்த மாதிரி சமயங்களில் ஆடுகள் எழுப்பும் சப்தம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

அதை வார்த்தைகளில் சொல்லாமல் இருப்பதே அதன் சங்கடத்தை மதிப்பதாகும். இந்த நேரத்தில் தான் எனக்கு எழுத வேண்டும் என்ற மின்னல் ஓடிற்று. ஆடுகள் மூங்கிலைத்தான் அதிகமாகக் கடித்திருந்தன. கேட்டின் பக்கத்திலான அதன் நிலையும் அடர்த்தியும் இலைகளின் நீளமும் தன்னைக் கடிக்கும்படி ஆடுகளைத் தூண்டியிருக்க வேண்டும். நான் இந்த நிகழ்ச்சிகளைக் கலைப்பூர்வமாக அலசிவிட்டு, மூங்கிலுக்கு எழுதும் ஒரு கடிதத்துடன் என் உருவத்தை முடிப்பதான ஒரு நிறைவு என் மனதில் ஓடிற்று. இந்த உருவம் உருவானபோது அதற்குள் பல விஷயங்கள் ஓடி வந்து தொப்பென்று குதித்தன. அநேகமாக இன்றிரவுக்குள் நான் ஏகதேசமாகவேனும் இதை எழுதி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். என் கையால் எழுத வேண்டும் என்றும் எனக்கிருக்கிறது.

கண்ணனை அண்ணாமலையில் போடலாம் என்ற எண்ணத்தில் பத்மனாபன் (அண்ணா கல்லூரி) சில முயற்சிகள் செய்துவருகிறார். அவனை வெளியூரில் போட்டுவிட வேண்டும் என்றே நினைக்கிறேன். எங்களைச் சார்ந்து அவன் இங்கு இருக்கும்போது அவனுக்கு அரை வேட்டியைக் கட்டுவதுகூட கமலா செய்ய வேண்டியிருக்கிறது. எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறான். இதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

நான் இம்மாதம் 20ஆம் தேதி வாக்கில் சென்னை போகக்கூடும். ஒரு வியாபாரி எங்களுக்குத் தர வேண்டிய கமிஷனைத் தராமல் நகர்த்திக்கொண்டிருக்கிறான். போய்ப் பார்க்க வேண்டும். இதற்கு முன்பேகூட நானும் கமலாவும் காந்தி கிராமத்திற்கு ஒரு நடை போய்விட்டு வரலாம் என்ற எண்ணம் உண்டு. ஸ்ரீநிவாசன் எங்களை அழைத்திருக்கிறார். கிளம்பி வந்தால் நான் உங்களுக்கு எழுதவோ, போதிய அவகாசமில்லையென்றால் தந்தி கொடுக்கவோ செய்வேன். மதுரையில் உங்களைச் சந்தித்துவிட்டு காந்தி கிராமம் போகலாம் என்ற எண்ணம். தந்தி வந்தால் பதற வேண்டாம் என்று வீட்டில் சொல்லிவையுங்கள்.

அன்புடன்
சுரா

* நாகர்கோவில் இந்துக் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர்
** எம். வேதசகாய குமார்

பின் குறிப்பு : என் கட்டுரைகளைச் சென்னையில் பார்த்துக்கொண்டிருந்தபோது செய்யுளில் நாவல் உண்டா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு எழுந்தது நினைவிருக்கிறதா? இதுபற்றி நான் ‘நியூ அமெரிக்கன் ரைட்டிங்’ என்ற நியூ அமெரிக்கன் லைப்ரரி புத்தக வெளியீட்டில் படித்திருந்தேன். இந்தப் புத்தகம் இப்போதும் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் இங்கு வந்த பின் அந்தக் கட்டுரையைத் தேடிப் பார்க்கவில்லை. மறந்தும் போய்விட்டேன், நேற்று ஹைட்சனின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இதே கருத்தைக் கூறும் பகுதி வந்தது:

An Introduction to the studyof Literature William Henry Hudson. Edition: March 1965 Page 70

To call Garth’s Dispensary poetry, and to deny the name to some of the magnificent imaginative and emotional passages in Sartor Resartus, seems at first a strange abuse of the word. Nothing but “poetry” Mr.Frederic larrison urges, can properly express what we find in portions of the morte d’ Arthur and in some of the chapters of Job and Isaiah.

Mr.Bagehot goes farther, confessing that he cannot “draw with any confidence” the “exact line which separates grave novels in verse like Aylmer’s Field or Enoch Arden from grave novels not in verse, like silas marner or Adam Bede and such uncertanity as to precise boundaries becomes greater if we subs titute for the narrative poems named such works as The Inn Album, Aurora Leigh, Lucile and Faithful For Ever, in which the resemblance to prose fiction is much more marked. other ques tions s tart up on every side.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.