பாரதிக்கும் வ.உ.சி.க்கும் உதவிய சுதேசமித்திரன் ஆசிரியர்
தமிழின் முதல் நாளிதழான சுதேசமித்திரன் முதன்மையாக மூன்று கட்ட வரலாற்றைக் கொண்டது. அந்த மூன்று கட்டங்களிலும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் முறையே ஜி. சுப்பிரமணிய ஐயர், ஏ. அரங்கசாமி ஐயங்கார், சி.ஆர். சீனிவாசன் ஆகியோர். மூவருக்கும் பாரதிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கின்றது. பாரதியியலில் ஒவ்வொரு நிலையில் முக்கியமான ஆளுமைகளாக இவர்கள் திகழ்கின்றனர். வ.உ.சி. இயலிலும் மூவருக்கும் குறிப்பிடத்தக்க இடம் இருக்கின்றது.
சுதேசமித்திரனைத் தொடங்கி நடத்திய, சுதேசமித்திரன் நாளிதழின் புகழ்பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்த ஜி. சுப்பிரமணிய ஐயர்தாம் பாரதியின் இதழியல் குருநாதர். அவர் ஆசிரியர் பொறுப்பில்தான் பாரதி உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தன் ‘சந்திரிகையின் கதை’ படைப்பில் அவரை ஒரு பாத்திரமாக பாரதி ஆக்கியிருந்தார். அவரைக் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாரதி எழுதியுமிருக்கின்றார். புதுவையில் புகலிடவாசம் புரிந்துகொண்டிருந்த சூழலில், எழுத்து வெளிப்பாட்டுக்கும் வருவாய்க்கும் உரிய எல்லா வாயில்களும் அடைபட்ட நிலையில், 1915இல் சுதேசமித்திரனை