செப்டம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்
      1990களுக்கு முந்தைய சாதிக் கண்டன எழுத்து
    • கண்ணோட்டம்
      நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
    • கதை
      வின் பண்ணணும் சார்...
      உற்சாகம்
      மனக்கோட்டையும் ஏமாற்றமும்
    • அஞ்சலி: புலவர் செ. இராசு (1938-2023)
      அரிய ஆவணப் பதிப்பாளர்
    • அஞ்சலி: கத்தர் (1949-2023)
      சரிந்த சமர்க்களம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
    • விருது
      விருது
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      இரண்டு நூல்கள்
      சூழ்நிலைகளின் சித்திரிப்பு
    • தலையங்கம்-2
      நூல்களை ஒடுக்கும் சக்திகள்
    • தலையங்கம் -1
      மறக்க முடியுமா?
    • கவிதைகள்
      காலை - அறிமுகம்
      இரவுக் காவல்
      மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      “நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      கு. அழகிரிசாமியும் பாரதியும்
    • அறிக்கை
      மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2023 தலையங்கம்-2 நூல்களை ஒடுக்கும் சக்திகள்

நூல்களை ஒடுக்கும் சக்திகள்

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

2023 ஈரோடு புத்தகக் காட்சியில் ‘எதிர்’ பதிப்பக அரங்கில் மதிமுகவைச் சேர்ந்த மு. செந்திலதிபன் எழுதிய, ‘இந்துத்துவப் பாசிசம்: வேர்களும் விழுதுகளும்’ என்ற நூலை விற்கக் கூடாது எனவும் அந்நூல் தொடர்பான விளம்பரப் பதாகைகளைக் காட்சிக்கு வைக்கக் கூடாது எனவும் தமிழ்நாட்டுக் காவல்துறை மிரட்டியிருக்கிறது. கூடவே ‘மே 17 இயக்கத்தின் நிமிர்’ பதிப்பகம் வெளியிட்டிருந்த ஆர்எஸ்எஸ் தொடர்பான நூலுக்கும் காவல் துறை மிரட்டல் விடுத்திருக்கிறது. திராவிடர் கழகத்தின் வெளியீடான மஞ்சை வசந்தனின், ‘அர்த்தமற்ற இந்து மதம்’ என்ற நூலையும் விற்கக் கூடாது என வலியுறுத்தியிருக்கிறது.

2020இல் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த புத்தகக் காட்சியில் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பக அரங்கில் அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி அரங்கைக் காலி செய்யும்படிப் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு கூறியது (அப்போது அதன் தலைவராக இருந்தவர் ‘செண்பகா பதிப்பகம்’ ஆர்.எஸ். சண்முகம்). பதிப்பக உரிமையாளர் அன்பழகனுக்கு எதிராக பபாசி கொடுத்த புகாரின் அடிப்படையில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் திருச்சி ஏனாங்குளத்தூர் கடைவீதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் சுன்னத்-வல் ஜமாத் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகக் குழு தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தன்னுடைய தீர்ப்பில் பபாசியின் இந்த நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தார். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தது தவறு எனத் தீர்ப்பளித்த சுவாமிநாதன், ஆரோக்கியமான ஜனநாயகச் சூழலுக்கு எதிர்ப்புக் குரல் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதைக் குறிப்பிடுகையில் இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். எதிர்ப்புக் குரலின் முக்கியத்துவத்தைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி ஒய்.வி. சந்திரசூட்டின் கருத்தை விரிவாக மேற்கோள்காட்டிய சுவாமிநாதன், “எதிர்ப்புக் குரலை ஒடுக்க முனைவது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல” எனக் குறிப்பிட்டு பபாசியின் செயலைப் பின்வருமாறு சுட்டிக்காட்டினார். “அண்மையில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) நடத்திய 43ஆவது புத்தகக் கண்காட்சியில் ஒரு பதிப்பாளர் தான் வாடகை கட்டி எடுத்திருந்த அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார். அரசாங்கத்திற்கு எதிரான புத்தகத்தை விற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவரை வெளியேற்றுவதற்கான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.”

2008ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கிழக்கு பதிப்பக வெளியீடான ‘விடுதலைப் புலிகள்’ என்ற நூலுக்கும் இத்தகைய அச்சுறுத்தல் விடப்பட்டு நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையில் நீரின் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்னும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கேரளத்தைச் சேர்ந்த ‘மலையாள மனோரமா’ பதிப்பகம் சென்னைப் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தி அரங்கை மூடவைத்தார்கள். நூல்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் எதிரான இத்தகைய போராட்டங்களும் ஒடுக்குமுறைகளும் வெவ்வேறு முறைகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஈரோட்டுப் புத்தகச் சந்தையில் அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்பட்ட நூல்களின் பொதுத்தன்மை அந்நூல்கள் இந்துத்துவத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்ததே ஆகும். இந்துத்துவம் ஒரு கருத்தியல் என்பதைத் தாண்டி மாபெரும் அரசியல் அதிகாரமாகவும் உருவெடுத்துவிட்ட நிலையில் அதற்கு எதிரான கருத்துக்கள் தீவிரமாக முன்வைக்கப்படுவது இயல்பானதே. ஆனால் இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரான, வலுவான சிந்தனைப் போக்கும் அரசியல் இயக்கமும் இருப்பதாக நம்பப்படும் தமிழ்நாட்டிலேயே இந்த நூல்களை விற்பதற்கு எதிர்ப்பு வருகிறது; அதுவும் காவல் துறையிடமிருந்து. இத்தகைய செயலில் ஈடுபட்ட ஈரோடு வடக்குக் காவல் ஆய்வாளர் சண்முகத்தைப் பணிமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டதைப் பார்க்கும்போது இந்தப் புத்தகங்களுக்கு எதிரான நடவடிக்கையில் அரசின் கை இல்லை என்னும் முடிவுக்கு வரலாம். இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரான கருத்தியலின் அடிப்படையில் நடக்கும் ஆட்சியின்போதே காவல் துறை இப்படி நடந்துகொள்ளுமென்றால் காவல்துறை எத்தகைய அமைப்பாக உள்ளது என்னும் கேள்வி எழுகிறது.

ஈரோடு காவல்துறை ஆய்வாளர் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டிப் பதிப்பகங்களையும் விற்பனையாளர்களையும் மிரட்டியிருக்கிறார். சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ஒரு நூலின் விற்பனையைத் தடுக்க முடியுமென்றால், ஒரு நூல் வெளியாவதை விரும்பாதவர்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி அத்தகைய தடைக்கான சூழலை உருவாக்குவது எளிதாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 2012இல் இலங்கை இனப்பிரச்சினை குறித்த ‘கூண்டு’ என்னும் மொழியாக்க நூலைக் காலச்சுவடு வெளியிட்டது. சிங்களவர்களை மட்டுமின்றி விடுதலைப் புலிகளையும் விமர்சித்த இந்த நூலை மே 17 இயக்கத்தினர் எதிர்த்தார்கள். இந்த நூலுடன் அருந்ததி ராயின் ‘நொறுங்கிய குடியரசு’, ‘சேரன் கவிதைகள்’ உள்ளிட்ட ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நடந்த இடத்தில் மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அருந்ததி ராய் உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் காவல்துறை தலை யிட்டுப் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டிய தாயிற்று. எதிர்ப்பாளர்கள் நினைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ‘உண்டாக்க’ முடியும் என்பதற்கான சான்று இது. எனவே சட்டமும் ஒழுங்கும் ஒரு நூலையோ பதிப்பகத்தின் செயல்பாடுகளையோ முடக்குவதற்கான நியாயமான காரணமாக இருக்க முடியாது.

கருத்து வெளிப்பாட்டு உரிமைகளின் மீது தனிமனிதரோ, அமைப்போ புகார்களைத் தெரிவிக்கும்போது கைது அல்லது மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கிக் காவல் துறை கண்டனத்துக்கு உள்ளாவது இது முதல்முறையல்ல. அத்துமீறிய காவல் ஆய்வாளரைப் பணியிடமாற்றம் செய்ததன் மூலம் நூல்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்று திமுக அரசு காட்டிவிட்டது. ஆனால் இந்த நடவடிக்கை இந்தப் பிரச்சினைக்கு எந்த விதத்திலும் தீர்வாக அமையாது. அண்மையில் சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல் நிலையத்தில், புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் பி. ராஜேந்திரன், சிறுபான்மையினருக்கு எதிராக அப்பட்டமான வெறுப்புப் பிரச்சாரத்தையும் அராஜகமான பெரும்பான்மைவாதத்தையும் வாட்ஸ்அப் மூலம் பரப்பியது அம்பலமானது. தமிழ்ச் சமூகத்தில் இந்துத்துவக் கருத்தியல் வலுவாகி வருவதையே இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட தனிநபருக்கு எதிரான நடவடிக்கைகளில் திருப்தி அடைந்துவிடாமல் இந்தப் பிரச்சினையை ஆழமாக அணுக வேண்டிய தேவையை அரசு உணர வேண்டும்.

காவல்துறை குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வற்ற அமைப்பாகவே இயங்கிக்கொண்டிருப்பது குறித்த கவலையை இந்நிகழ்வு வலுப்படுத்துகிறது. காவல்துறை தான்தோன்றித்தனமாகவும் நவீன சிந்தனைப் போக்கிற்கு எதிரான மனப்பான்மையுடனும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இந்தச் செயல்பாடுகள் காவல்துறைமீதான மக்களின் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் உறுதிப்படுத்துகின்றன. போலி மோதல் கொலைகள், காவல் நிலைய மரணங்கள் எனக் காவல் துறையின் சட்ட, மனித உரிமை விரோதப் போக்குகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. கைது, விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவருக்கெதிரான சித்திரவதைகள் முதலானவை தொடர்பாகத் தெளிவான நீதிமன்ற வழிகாட்டுதல்களும் சட்டங்களும் இருக்கும்போதே அவை சர்வ அலட்சியமாக மீறப்படுகின்றன. அத்தகைய தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத கருத்துரிமை, நூல்கள் தொடர்பான விஷயங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள் இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து காவல் துறையை நெறிப்படுத்த வேண்டும். உரிய வழிகாட்டுதல்களின்றி அந்த அமைப்பு இயங்குவது ஜனநாயக அமைப்புகளின் வலுவின்மையையும் போதாமைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

இன்றைக்குப் பல்வேறு நூல்கள், மரபார்ந்த ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் பல்வேறு தளங்களிலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். பல்வேறு சிந்தனைகளும் சார்புகளும் பொதுவெளிகளில் கொட்டிக் கிடக்கின்றன. தங்களுக்கு உவப்பில்லாதவற்றைக் கேட்கும்போதோ படிக்கும்போதோ இதனால் எங்கள் மனம் புண்ணாகிவிட்டது எனச் சிலர் புகாரளிப்பதும் அதன் அடிப்படையில் சாரமற்ற கைதுகள் மேற்கொள்ளப்படுவதும் சர்வசாதாரண நிகழ்வாய் மாறிவருகிறது. கருத்து வெளிப்பாட்டுக் களங்கள் விரிவடைந்துவரும் நிலையில் இனி வரும் காலங்களில் புண்படும் மனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். பல புகார்கள் காவல் நிலையக் கதவுகளைத் தட்டலாம். இது காவல்துறை, நீதித்துறை, அரசு நிர்வாகம் போன்ற அமைப்புகளின் பொறுப்பை மேலும் பல மடங்கு கூட்டியிருக்கிறது.

காவல் துறையின் சீர்திருத்தம் குறித்து எவ்வளவுதான் குரல்கள் எழுந்தாலும் அந்த அமைப்புக்குள் மாற்றம் நிகழ்வதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. கருத்துரிமை, நூல்கள், படைப்புகள் போன்றவற்றில் காவல்துறைக்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். எனவே கருத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்பாட்டு உரிமை தொடர்பில் நீதிமன்றங்களின் கண்காணிப்பில் தெளிவான, உறுதியான செயல்முறைகளையும் அவசியம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளையும் காவல் துறைக்குப் பயிற்றுவிப்பது அரசின் பிரதான கடமை.

காவல் துறையினர் ஆட்சேபித்த நூல்கள் தடைசெய்யப்பட்ட நூல்கள் அல்ல. இந்நிலையில் அந்த நூல்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எழுந்தபோது ஈரோடு புத்தகக் கண்காட்சி நிர்வாகம் பதிப்பாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்க வேண்டும். தென்னிந்தியப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அமைப்பான பபாசி பதிப்பாளர்களுக்காகக் குரலெழுப்பியிருக்க வேண்டும். பதிப்பாளர்களின் பிரதிநிதியாக அரசாங்கத்திடம் பேசியிருக்க வேண்டும். அவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது என்னும் யதார்த்தம் நூல்களுக்கும் நூல் வெளியீட்டாளர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலின் வலிமையைக் கூட்டுகிறது.

கருத்துரிமையின் முக்கியமான பண்பாட்டுக் கூறான நூல்கள் விஷயத்தில் அரசு, காவல் துறை, அதிகார வர்க்கம், பதிப்பாளர் சங்கங்கள், புத்தகக் கண்காட்சி நிர்வாகங்கள், ஊடகங்கள் என எல்லாத் தரப்பினரும் கூடுதலான கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நேரில் வந்து மிரட்டிய காவல் துறை அதிகாரி சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல இது.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.