இரவுக் காவல்
ஓவியம்: மு. நடேஷ்
இரவுக் காவல்
அடர்ந்த மரத்தின் பரந்த கிளைக் குடிலில்
தங்கியிருக்கும் கமக்காரனின் பார்வை
நெற்கதிர்களுக்குக் காவலிருக்கும் அந் நள்ளிரவில்
மழை நனைத்த பறவையின் சிறகுலர்த்தலென
அறுவடை வயலின் மேலாக கள்ளத்தனமாகப் பயணிக்கின்றன
ஓரோர் வடிவங்களில் வெண்முகில் கூட்டங்கள்
காலம் காலமாக அந்த நிலத்துக்கு வந்து போகும்
அவனது வழிநெடுகவும்
நிலைத்திருக்கும் புராதன கல் அரண்கள்
எங்கிருந்து பார்த்தாலும் தொலைவில் தெரியும்
பிரமாண்டமான வெண்ணிற ஸ்தூபி
தன்னைக் கைவிடாது எப்போதும் காக்குமென
நம்பியிருக்கிறான்
நீர் வாழ் சிறு ஜந்துகளாகவிருக்கின்றன
அசையும் நீரோடையில் அசையாததும்
சலனமற்றதுமான ஒற்றைக் கால் தரிப்பென நிற்கும்
பச்சைக் கண்களும், கூரிய மஞ்சள் சொண்டுமுள்ள
நாரைப் பட்சியின் உத்தேசம்
கனவில் போதி மரத்தைக் கண்டுகொண்டிருந்தவன்
தன் நிலத்தில் இருளோடு
காட்டு யானைகள் ஊடுருவியது போன்ற
அரவம் கேட்டுக் கீழே இறங்குகிறான்
மூங்கில் ஏணி வழியே விரைந்து
வழிநெடுகப் புராதன கல் அரண்கள்
தொலைவில் தெரிகிறது ஸ்தூபி
இறுதியில் வேட்டையை நிகழ்த்திவிடுகிறது
முதலில் பாய்ந்த புலி
மின்னஞ்சல்: mrishansh@gmail.com