மார்ச் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேங்கை வயல் அறம் பிறழ்ந்த நீதி
      இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு
      தமிழகத்தின் இரும்புக் காலம்
      ரசனையில் கரையும் மாயம்
      கல்விப்புல ஆய்வுகள்: எதார்த்தமும் எதிர்பார்ப்பும்
      சாய்மணக் கதிரையிலிருந்து பார்த்தவையும் படித்தவையும்
      அகதிகள் ஏன் நாடு திரும்ப வேண்டும்?
      கவிதையின் பாட்டும் பாட்டின் கவிதையும்
      உணவு போலிச் செய்திகளும் அரசியலும்
      காலச்சுவடும் கறுப்பிலக்கிய மொழிபெயர்ப்புகளும்
    • கதை
      மாயப் பின்னல்
      காந்தி புன்னகைக்கிறார்
    • கற்றனைத்தூறும்-4
      சாதிக் குப்பையில் அலைந்தலைந்து அழிதல் அழகல்லவே!
    • பதிவு
      மந்தையிலிருந்து ஒரு குரல்
      மலையேறி நின்றார்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி
    • கவிதைகள்
      பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
    • தலையங்கம்
      ஆணவத்தீ
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2025 மதிப்புரை பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி

பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி

மதிப்புரை
சுடர்விழி

உப்பு வண்டிக்காரன்
(நாவல்)
இமையம்

வெளியீடு: 
க்ரியா வெளியீடு
No.58, TNHB காலனி. 
சானாடோரியம், தாம்பரம், 
சென்னை - 47
பக். 248 ரூ. 350

முப்பது ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் எட்டு நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இமையத்தின் ஒன்பதாவது நாவல் ‘உப்புவண்டிக்காரன்’.

 மருத்துவத்துறை, கல்வித்துறை, சமூக ஊடகவியல், அரசியல், ஆன்மிகம் என எந்தத் துறை சார்ந்து இவர் கதைகள் எழுதினாலும் அக்குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய பல்வேறு நுட்பமான செய்திகளையும் தரவுகளையும் ஓர் ஆய்வாளருக்குரிய கவனத்துடன் தேடித் திரட்டி அவற்றைப் புனைவினூடாக மிகக் கச்சிதமாகத் தருவதில் தனித்து ஒளிர்கிறார். கூர்மையான மொழியும் வாசிப்பிற்கு அலுப்பு ஏற்படுத்தாத எடுத்துரைப்பியலும் மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்பித்துக்கொண்டே செல்லும் உரையாடலும் இமையத்தின் கூடுதல் பலம். சாதி அரசியல், தேர்தல் அரசியல், தேர்தலில் பெண்களை நிற்கவைப்பதன் பின்னுள்ள அரசியல், ஆணவக்கொலை, ஜல்லிக்கட்டு அரசியல், பக்தியை வணிகமாக்கும் அரசியல் என்று சமகாலத்து நிகழ்வுகளின் அறியப்படாத பல உள்ளடுக்குகளை வெளிச்சமிட்டுக் காட்டும் இவரது கதைகள் சமூகத்தின் மீதான விமர்சனங்களாகவும் விசாரணைகளாகவும் அமைகின்றன.

‘உப்புவண்டிக்கார’னும் சமகாலத்தின் ஆவணமே. உலகத்தை உறையவைத்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் பேரவலத்தை, பெருவலியைப் பேசும் நாவல். உலக வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாக, உலகத்தை அச்சத்தில் நிறைத்த, மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் முக்கியச் சவாலாக இருந்த, போக்குவரத்து, கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் கோவில் என அனைத்தும் மூடப்பட்ட, வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது என்று பொதுமுடக்கத்திற்கு ஆட்படுத்தப்பட்ட, முகக்கவசமும் கைகழுவுதலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட, குடும்பத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் தீண்டாமல் வாழப் பழக்கப்படுத்தப்பட்ட, இணைய வகுப்புகள்- வொர்க் ஃப்ரம் ஹோம் என்று சொல்லக்கூடிய புதிய கல்விமுறையும் தொழில்முறையும் கட்டாயம் ஆக்கப்பட்ட, உலகெங்கும் பல லட்சம் உயிர்கள் பலியான, எண்பது வயதைக் கடந்தவர்கள் தம் வாழ்நாளில் இப்படி யொரு காலகட்டத்தைச் சந்தித்ததில்லை என்று பேரச்சத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தியதான கொரோனா காலக்கட்டம் அது.

எதிர்காலத் தலைமுறையினர் இப்படியொரு காலம் இருந்ததா என்று அதிசயிக்கலாம். வேண்டுமானால் கூகுள் செய்து இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தகவல் பெறலாம். ஆனால் கொரோனா தொற்று இருக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் வருவாய்த் துறையினரால் குடும்பத்துடன் அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்வாப் டெஸ்ட் எடுத்து அதன் முடிவு வரும்வரை விடுதியில் தங்க வைக்கப்பட்டு, கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததும் வேறொரு விடுதியில் தனியறையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு மூச்சுவிடக் கஷ்டமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் மரணம் ஏற்பட்டு, அழுது பரிதவிக்கும் பெற்ற மகனிடம்கூட இறந்தவரின் உடலைக் காட்டாமலும் கொடுக்காமலும் அனாதைப் பிணமாக அரசே புதைத்துவிட்ட கொரோனா காலத்தின் முழுச் சித்திரத்தை அக்காலம் ஏற்படுத்திய அத்தனை அவஸ்தைகளுடனும் அலைக்கழிப்புகளுடனும் படைத்துக் காட்டியிருக்கிறார் இமையம்.

விருத்தாசலம் பக்கத்தில் வேப்பூர் வட்டம் விளம்பாவூர் கிராமத்தில் கொரோனாவால் இறந்த செல்லமுத்துவின் மரணத்தில் தொடங்கி, கதையின் முக்கிய பாத்திரமான கவர்னரின் தாய் முத்துக்கருப்பாயியின் மரணத்தில் முடிகிறது கதை. செல்லமுத்து உயிருடன் இருந்த காலத்தில் ‘இருந்தா செல்லமுத்து மாதிரி இருக்கணும்’ என்று பேசிய ஊர்க்காரர்கள் செல்லமுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்ததும் அவன் இறப்புக்குச் சென்றவர்களையெல்லாம் சந்தேகத்தின் பேரில் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றபோது ‘ஊருக்கே நல்ல மனுஷன்னு நெனச்சோம். சாவுறப்ப ஊரயே நெருப்ப வச்சி கொளுத்தன மாதிரி கொளுத்திப்புட்டுப் போய்ட்டான்’ என்று திட்டுகிறார்கள். சக மனிதர்கள்மீதான நேசத்தையும் மதிப்பையும் தகர்த்து எதிரில் வருபவர்களை எதிரியாகப் பார்க்கவைத்த அன்றைய சூழல் உருவாக்கிய மனிதர்களின் மனநிலையோடு கதை தொடங்குகிறது.

அழைத்துச்செல்லப்பட்டவர்களில் கவர்னர் குடும்பத்தின் மீது கதை குவிமையம் கொள்கிறது. கவர்னரின் பெற்றோர் சண்முகம் - முத்துகருப்பாயி. ‘உப்புவண்டிக்காரன்’ என்னும் இந்நாவலின் தலைப்புக்கு உரியவர் சண்முகம். மூவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்கிற முடிவு வந்து மூவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு கல்லூரி மாணவர் விடுதியில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். செல்லமுத்து சாவுக்குச் சென்ற தன்னால்தான் தன் பெற்றோருக்குக் கொரோனா வந்தது என்கிற குற்ற உணர்ச்சியிலும் எப்போதும் இணைபிரியாமல் வாழ்ந்த பெற்றோரை ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாத நிலைக்கு ஆளாக்கிவிட்டதையும் நினைத்து நினைத்து கவர்னர் குமைகிறான். ஊருக்குப் போயிருந்த காரணத்தால் தன் மனைவியும் இரு குழந்தைகளும் இப்பிரச்சினையிலிருந்து தப்பித்துவிட்டனர் என்கிற நிறைவு இருந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது, அறையை விட்டு வெளியே வரக் கூடாது, பக்கத்து அறைகளில் இருக்கும் பெற்றோரிடம் கூடப் பேசக் கூடாது என்று மிரட்டும் மருத்துவத்துறைக் கண்காணிப்புக்கும் காவல்துறை அதிகாரத்திற்கும் கட்டுபட்ட வாழ்க்கை அவனுக்கு நரகத்தினும் கொடிதாய் இருந்தது. தப்பித்து ஓடிவிடலாமா என்று நினைக்கிறான். தனக்குத் தானேயும் அல்லது அவனிடம் கைப்பேசி வழியாகப் பேசும் அவனது மனைவிடமும் ஊர்க்காரர்களிடமும் புலம்பிக் கொண்டிருக்கும் புலம்பல்கள் மீண்டும் மீண்டும் நாவலில் இடம்பெற்றிருப்பது கூறியதுகூறல்போலத் தோன்றினாலும் தனிமையும் வெறுமையும் ஒரு மனிதனை இப்படித்தானே புலம்ப வைத்திருக்கும் என்பதை உணர்கிறபோது கூறியது கூறல் குற்றமாக அல்லாமல் யதார்த்தமாகவே வெளிப்படுகிறது. கைப்பேசி தவிர எதுவுமற்ற அறையில் கடந்தகால நினைவுகள், ஊரிலுள்ள மனிதர்கள், தன்னுடைய பொறுப்பற்றத்தனம், பெற்றோருக்கு இதுவரை எதுவும் செய்யவில்லையே என்கிற குற்றஉணர்வு, உப்பு வணிகம் செய்வதற்காகச் செல்லும் அப்பா அம்மாவின் பயணமும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் என்று ஒவ்வொரு நினைவாக எழும்பி மோத மோத அதன் வழியே உப்புவண்டிக்காரனின் வாழ்க்கை காட்சியாக விரிகிறது.

‘ஊரில் முப்பது நாப்பது பேருக்கு மண்ணாங்கட்டி, கருப்பன் என்றெல்லாம் பெயர் வைக்கக்கூடிய அந்த நாட்களை’ நினைவு கூரும் சண்முகம் தம் மகனுக்கு கவர்னர் என்று பெயர் வைத்து அழகு பார்த்திருப்பதற்குப் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்துகொள்ளலாம். இருபது வயது முதலாகத் தலையில் உப்பு மூட்டையை ஏற்றி ஊர்ஊராக விற்றுப் பண்டமாற்றாக வரகு, சோளம், கம்பு வாங்கி வந்து பின் அந்தத் தானியத்தையும் விற்கும் தொழில் செய்து வந்தவர். திருமணத்திற்குப் பின் மனைவியையும் உடனழைத்துக்கொண்டு அவள் தலையில் கத்தரிக்காய் கருவாடு ஏற்றி அதையும் சேர்த்து விற்று இருவருமாய் இணைந்து பிழைப்பு நடத்தியவர்கள்.  தலைச்சுமை காலத்தில் ‘உப்பே உப்பே’ என்று கூவி விற்றவர் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் வண்டி வாங்கியதும் ஊருக்குப் பொதுவான இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ‘உப்பு வண்டி வந்திருக்கு’ என்ற தெருத் தெருவாகச் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து ஆறு காணிநிலம் வாங்கியது, கிணறு வெட்டியது, சிமெண்ட் வீடு கட்டியது என எல்லாமே உப்பு விற்ற காசுதான். சின்னச் சின்ன கடைகளில்கூட சால்ட் பாக்கெட் விற்பனைக்கு வரத் தொடங்கியதும் இவர்களது உப்பு வணிகம் குறையத் தொடங்கியது. ‘விற்பனையே இல்லை’ இந்த வணிகத்தை நிறுத்திவிட வேண்டியதுதானே’ என்று பலரும் கூறியபோதும் நிறுத்தாமல் உப்பு வண்டிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தவர். அப்பாவும் மகனும் இளம் வயது முதலே அதிகம் பேசிக்கொள்ளாதவர்கள். இருவர் உரையாடலும் அம்மாவின் மூலம்தான். அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியும் மௌனமும் அடக்கப்பட்ட அன்பும் மருத்துவவிடுதி தனியறைக்குள் பீறிட்டு நினைவுகளாகவும் உரையாடல்களாகவும் வெளிப்படும் இடம் நாவலின் கனதியான இடம். ‘பெத்தவன்’ அப்பாவுக்குப் பிறகு அழுத்தமான இடத்தை கவர்னர் அப்பாவுக்கு வழங்கியிருக்கிறார் இமையம். இறுதிவரை எதுவுமே பேசாமல் மகன் நினைவுகூரும் பண்புகள் வழியாகவே பேருருவம் கொள்கிறார் உப்புவண்டிக்காரன்.

தனியறையில் இருந்த சண்முகத்திற்குத் திடீரென மூச்சுவிடச் சிரமம் ஏற்பட பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்படுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பாவைப் பார்க்க எவ்வளவு முயன்றும் அனுமதி கிடைக்காமல் கவர்னர் விரட்டப்படுகிறான். விடுதி அறையில் தாய் தனித்திருக்க, மருத்துவமனையிலோ அப்பா மூச்சுப் பிரச்சினையில். இரண்டு உறவுகளுக்கிடையில் கவர்னர் அல்லாடும் காட்சி கல் நெஞ்சையும் கரையச் செய்திடும். அடுத்த இரண்டு நாட்களில் அம்மாவுக்கும் அதே மூச்சுப்பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இருவரையும் காண முடியாமல் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கும்போது அப்பாவின் மரணச்செய்தி வந்தடைகிறது. அப்பாவின் முகத்தைக் காட்டச்சொல்லி மருத்துவமனை காவலாளி முதல் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் என்று அனைவரிடமும் கவர்னர் கதறும் காட்சி அனைவரையும் உலுக்கிவிடக்கூடியது. இறுதிவரை அப்பாவைப் பார்க்க முடியாத வலியிலும் அம்மாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஊருக்குப்போக வேண்டிய சூழலிலும் கவர்னரோடு சேர்ந்து நாமும் தவிக்கிறோம். அனாதைப் பிணமாகப் புதைக்கப்பட்ட அப்பாவின் பிணத்திற்குக் குடும்பத்துடன் சென்று சூடமும் வத்தியும் ஏற்றி வைத்துவிட்டு வரக் கண்ணீரோடு சுடுகாடு சென்றவனுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வருகிறது. அம்மாவின் இறப்புச்செய்தி.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை வழியாக வாசிக்கும் ஒவ்வொருவரின் அனுபவங்களையும் நினைவுகளையும் மீண்டெழச் செய்திருக்கிறார் இமையம். கொரோனாவால் உறவுகளை இழந்த பலர் வாழ்க்கையோடு உறவாடும் இக்கதையில் அக்காலகட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டவர்களின் வலிகளையும் கண்ணீர்த் துளிகளையும் சொற்களுக்குள் சிறைபிடித்திருக்கிறார். முழுமையான ஆவணமாகச் சிறுசிறு நுட்பமான செய்திகளையும் கவனத்தில் கொண்டு கொரோனா ஏற்படுத்திய உடல் பிரச்சினைகளைக் காட்டிலும் உளவியல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட முழு முதல் நாவல் என்று உப்புவண்டிக்காரனைக் கூறலாம்.

 கொரொனாவின் கோரத்தாண்டவத்தைப் பேசிச் சமகாலத்தை ஆவணப்படுத்திய நாவல் என்கிற வகையில் மட்டுமல்லாமல் சால்ட் பாக்கெட்டை இணையத்தில் வாங்கும் இன்றைய தலைமுறையினர் அறியாத தலைச்சுமை உப்புவணிகம் பற்றியும், புனைவுகளில் அதிகம் பேசப்படாத அப்பா மகன் உறவின் உணர்வெழுச்சிகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்த வகையிலும் இந்நாவல் கூடுதல் முக்கியத்துவமும் கவனமும் பெறுகிறது.

              மின்னஞ்சல்: sudaroviya@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.