மார்ச் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேங்கை வயல் அறம் பிறழ்ந்த நீதி
      இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு
      தமிழகத்தின் இரும்புக் காலம்
      ரசனையில் கரையும் மாயம்
      கல்விப்புல ஆய்வுகள்: எதார்த்தமும் எதிர்பார்ப்பும்
      சாய்மணக் கதிரையிலிருந்து பார்த்தவையும் படித்தவையும்
      அகதிகள் ஏன் நாடு திரும்ப வேண்டும்?
      கவிதையின் பாட்டும் பாட்டின் கவிதையும்
      உணவு போலிச் செய்திகளும் அரசியலும்
      காலச்சுவடும் கறுப்பிலக்கிய மொழிபெயர்ப்புகளும்
    • கதை
      மாயப் பின்னல்
      காந்தி புன்னகைக்கிறார்
    • கற்றனைத்தூறும்-4
      சாதிக் குப்பையில் அலைந்தலைந்து அழிதல் அழகல்லவே!
    • பதிவு
      மந்தையிலிருந்து ஒரு குரல்
      மலையேறி நின்றார்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி
    • கவிதைகள்
      பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
    • தலையங்கம்
      ஆணவத்தீ
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2025 பதிவு மலையேறி நின்றார்

மலையேறி நின்றார்

பதிவு
இரா. மோகனவசந்தன்

சென்னைப்  பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறையும் காலச்சுவடும் இணைந்து நடத்திய ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு 20.02.2025 அன்று நடைபெற்றது. பெருமாள் முருகனுடைய அனைத்து இலக்கிய வகைமைகளையும் உள்ளடக்கும் வகையில் கருத்தரங்கத்தை ஒருங் கிணைத்திருந்தனர். தமிழ், ஆங்கிலம், மலையாளம் எனப் பன்முகத்தன்மையுடன் உரைகள் அமைந்திருந்தன. பொதுவாக முத்தமிழ் என்று அழைக்கப்பட்டாலும் கல்விப்புலச் சூழலில் இயல் தமிழ்குறித்து மட்டுமே கருத்தரங்குகள் ஒருங்கிணைக்கப்படும். ஆனால் இந்தக் கருத்தரங்கில் இசைத்தமிழ் குறித்து மிக விரிவான உரை, பாட்டும் பகிர்வுமாக இடம்பெற்றது. பெ.மு.வினுடைய புனைவுகள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. திரைத்துறை சார்ந்தவர்களிடையே பெருமாள்முருகன் படைப்புகள்குறித்து பரவலான அறிமுகம் உண்டு. அவருடைய ஆக்கங்களை ஏற்கெனவே திரைப்படங்களாக எடுத்தவர்களையோ, எடுக்க அனுமதி பெற்றவர்களையோ அல்லது அவரது படைப்புகள்குறித்த அறிமுகமுள்ள திரைத்துறை சார்ந்தவர்களையோ அழைத்து ஓர் உரையை அமைத்திருக்கலாம். இக்கருத்தரங்கு வெறும் பாராட்டுரைகளாக இல்லாமல் ஒரு மதிப்பீட்டுத் திறனாய்வு நோக்கில் அமைந்தது சிறப்பு என்று கூறலாம்.

சென்னைப் பல்கலையின் தமிழ் மொழித் துறைத் தலைவர் ய. மணிகண்டன் தன் தலைமையுரையிலேயே பெ.மு. என்கிற மனிதர் யார்? அவர் எப்படியான தன்மையுள்ளவர் என்கிற சித்திரத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிட்டதால் அந்த மனிதருக்குள் உருவாகி வெளிவந்துள்ள படைப்புகள் கருத்தரங்கில் எத்தன்மையதாக மதிப்புக்குள்ளாகப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு உண்டானது. அறிமுகவுரையாற்றிய காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன், பெ.மு.வின் ஆக்கங்களில் மரபும் நவீனமுமான பண்புகள் குறித்துப் பேசினார். 90களிலிருந்து இப்போதுவரை அவரின் படைப்புகள் யதார்த்த எழுத்தின் மீட்பாக அமைந்துள்ளன என்றார். பழமையான இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியம்வரை அவருடைய ஆக்கங்களிலும் மொழியிலும் தொழிற்படும் நவீன பண்புகள்குறித்துப் பேசினார். மரபை எங்கே ஆதரிக்க வேண்டும், எங்கே புறந்தள்ள வேண்டும் என்கிற ஓர்மை பெ.மு.விற்கு உண்டு என்பதையும் எடுத்துக்காட்டினார். மரபையும் நவீனத்தையும் இணைக்கிற ஓர் இணைப்புள்ளியாகப் பெ.மு. திகழ்கிறார் என்கிற கோணத்தில் அரவிந்தனின் உரை அமைந்திருந்தது.

ஆ. இரா. வேங்கடாசலபதி தனக்கே உரிய பாணியில் நிறுவனங்களின் வரலாற்று ஓர்மையை எடுத்துக்காட்டி, பெ.மு.வின் ஆங்கில மொழிபெயர்ப்புகள், அவற்றிற்கான ஆங்கில ஏடுகளின் மதிப்புரை, அந்த மதிப்புரைகள் ஓர் எழுத்தாளருக்கும், அவருடைய எழுத்திற்கும் எப்படியான அங்கீகாரத்தைக் கொடுக்கின்றன என்பதை விளக்கி, தமிழ்ச் சூழலில் அருகிவரும் நூல் மதிப்புரைகள், அவற்றிற்கான இதழியல் சூழல் இல்லாமை போன்றவை குறித்தும் பேசினார்.

2016 இடைவெளிக்கு முன்பும் பின்புமான பெ.மு.வின் எழுத்து முறைகுறித்த அவரது விமர்சனம், பெ.மு.வைத் தொடர்ந்து வாசிக்கிற அவரது வாசகர்களுக்கும் உண்டு. அதாவது தந்திரோபாயமாக அசுர உலகம்பற்றி எழுத முனைந்து அதுவே பெ.மு.வினுடைய கோட்பாடாக மாறி நிற்கிறது. அப்படி எழுதியதை முற்று முழுவதுமாகத் தர்க்க ஒழுங்கிற்குள் எழுத முடிந்ததா என்கிற விமர்சனத்தை முன்வைத்தார். ஏனெனில் அவை பெரும்பரப்புக் கொண்ட படைப்புகளாக விரியவில்லை; எனவே அவ்வாறு பெரும்பரப்பாக விரித்து எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை வைத்து வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்களிடமும் கருத்துப் பிரச்சாரம், கலைப்பணி போன்றவற்றைச் செய்து பெ.மு. வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் அதியமான், பெ.மு.வின் உழைப்பையும் நுண் அறிவையும் குறிப்பிட்டுப் பேசினார். ‘‘குன்றேறி நிற்பார் முருகன் (பெருமாள்முருகன்) என்று தொடக்க காலத்திலேயே நினைத்தேன். ஆனால் மாமலை ஏறி நிற்கிறார்,’’ என வாழ்த்தினார். பெ.மு. ஒரு நேர்காணலில், ‘ஆசிரியர் என்பது எனது ஜீவனம்,’ எழுத்தாளர் என்பது எனக்கு ஜீவிதம், என்று குறிப்பிட்டதை மையமிட்டும் உரையாற்றினார்.

பெ.மு.வின் பார்வையில் ‘கல்வியும் சாதியும்’ எனும் பொருண்மையில் ஆய்வாளர் தமிழ் காமராசன் உரையாற்றினார். காலனியம் உருவாக்கிய பொதுவெளிகளான போக்குவரத்து, திரையரங்கம், அரசியல் போலவே கல்வி வளாகங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், எல்லா இடங்களிலும் உரையாடல் நடைபெறுகிறது. கல்வி வளாகங்களில் அப்படி ஏதேனும் உரையாடல் நடைபெறுகிறதா என்கிற கேள்வியை எழுப்பி, ‘‘பொதுவெளியோடு உரையாட மறுக்கும் பேராசிரியர்களே வேகமாக வீட்டுக்குச் செல்கிறார்கள்,’’ என்கிற பெ.மு.வின் கருத்தை அடியொற்றிப் பேசினார்.

‘புனைவில் இசைக்கப்படும் விடுதலை’ என்கிற பொருண்மையில் பெ.மு.வின் சிறுகதைகளை முன்வைத்து ஆய்வாளர் ஜார்ஜ் ஜோசப் உரையாற்றினார். பெ.மு.வின் மொத்தச் சிறுகதைகளையும் மதிப்பிடும் திறனாய்வாக இவ்வுரை அமைந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் மதிப்பீட்டை மனமுவந்து ஏற்று பெ.மு. பேசியது ஓர் எழுத்தாளருக்குரிய நல்ல சனநாயகப் பண்பை நினைவூட்டியது. ஜாகீர் ஹூசைன் பெ.மு. கவிதைகளை அரபு, பாரசீகம், உருது மொழிகளின் கவிதைகளோடு ஒப்பிட்டுப் பேசினார். ஆழி அரசி, ‘பூக்குழி’ நாவலை ஃபூக்கோவின் எடுகோள்களோடும் அம்பேத்கரின் கருத்துகளோடும் ஒப்பிட்டுப் பேசினார்.

இதன்பிறகு டி.எம். கிருஷ்ணா குழுவினரின், இசையும் பாட்டும் பேச்சுமான நிகழ்வு நடந்தது. அழகியல் சார்ந்து தமிழிசையும் கர்நாடக இசையும் வேறுவேறு என்பதை உடைக்க வேண்டும் எனக் காத்திரமாகப் பேசிய டி.எம். கிருஷ்ணா, ‘கர்நாடக இசையில் காத்திரமான கருத்துகளைச் சொல்லக்கூடிய பாடல்களுக்காகவே’ பெ.மு.விடம் சென்றதாகக் குறிப்பிட்டார். பெ.மு.வோடு இணைந்து உருவாக்கிய ஐம்பூதத்து இயற்கை குறித்த பாடல்கள், வட்டார வழக்குப் பாடல்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை உணர்த்தும் மலக்குழி உள்ளிட்ட பாடல்கள் (கர்நாடக இசையின் இனிமையானது காதுக்கே, ஆனால் இப்படியான பாடல்கள் நெஞ்சுக்குள் வலியை உணர்த்துபவை என்றும் குறிப்பிட்டார்), பெரியார் பாடல், லெனின் சிலை உடைப்பை ஒட்டி எழுந்த பாடல், சங்க இலக்கியக் கீர்த்தனைகள் போன்றவை உருவான விதத்தைப் பற்றியும் அவற்றில் உள்ள சிக்கல்களையும் குறிப்பிட்டு, ‘‘நாம் இசை சார்ந்த மொழி குறித்தும் சிந்திக்க வேண்டும்,’’ என்பதை வலியுறுத்திப் பேசினார்.

எழுத்தாளர் ஆர். சிவகுமார் பெ.மு.வின் எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜனனி கண்ணன், கவிதா முரளிதரன் ஆகியோர்களின் மொழிபெயர்ப்பை மதிப்பிடும் வகையில் பேசினார். மொழிபெயர்ப்பு சார்ந்து அசோகமித்திரன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு பெ.மு.விற்குக் கிடைத்திருக்கிறது என்று வாழ்த்தினார். மொழிபெயர்ப்பாகிச் செல்கின்ற மொழியின் மதிப்புரை எவ்வளவு முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார். தி. ஜானகிராமனுடைய தஞ்சை உரையாடலுக்கு இணையானது பெ.மு.வின் புனைவு என்கிற அவருடைய பார்வை சிறந்த பார்வையாக அமைந்தது. அவர் கொங்கு வட்டாரம் சார்ந்தவர் என்பதால், அந்த வட்டார வழக்கு சார்ந்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்கள், சிக்கல்கள் குறித்தும் விரிவான உரை நிகழ்த்தினார். தமிழ்ச் சூழலில் கல்விப் புலத்திற்குள் மொழிபெயர்ப்புகளின் தேவையையும் வலியுறுத்திப் பேசினார்.

‘Aradhanareeswaran: Poovarasum Pulimaravum’ என்கிற பொருண்மையில் பி.எம். கிரிஷ் எழுதிய கட்டுரையானது மலையாளத்தில் வாசிக்கப்பட்டது. பெ.மு.வின் அர்த்தநாரியையும் சு.ரா.வின் ஒரு ‘புளியமரத்தின் கதை’யையும் ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்திருந்தது அக்கட்டுரை.

‘பெருமாள்முருகனை வாசித்தல்: மொழிபெயர்ப்பாளர் நோக்கு’ என்கிற தலைப்பில் உரையாற்றிய ஜனனி கண்ணன், பெ.மு.வின் எழுத்துகளை வாசிக்கும் மொழிபெயர்ப்பாளர் மொழியின் வேரை அறிந்துகொள்ள வேண்டிய தேவை, அந்த மண்ணின் பழக்கவழக்கங்கள், உணர்வுகள், கதை சொல்லும் முறை, தொழில்முறைச் சொற்கள், வாழ்வியலின் ஆழமான அர்த்தங்கள், சாதி - சமூகம் குறித்த கதைப் பாத்திரங்கள், நிலப்பரப்பு சார்ந்த விவரணைகள் போன்றவை குறித்துப் பேசி, சிலவற்றை மொழிபெயர்க்காமல் அப்படியே தமிழில் வழங்கப்படுவது போன்றே வழங்கி, மொழிபெயர்ப்பு நூலின் பின்புறம் சொற்பொருள் விளக்க அகராதி வைப்பதன் அவசியம் குறித்தும் பேசினார். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ‘பெருமாள்முருகனை மொழிபெயர்த்தல்: நெருக்கடிகள்’ என்கிற தலைப்பில் பெ.மு.வின் எழுத்துகளை மொழிபெயர்ப்பதில், தான் பெற்ற அனுபவத்தையும் அதிலிருக்கும் சவாலான சிலவற்றையும் முன்வைத்துப் பேசினார்.

நிறைவுரை நிகழ்த்திய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, ரசனைவாத மரபின் தேர்ந்த ரசனைவாதியாகத் தன்னுடைய பேச்சை அமைத்திருந்தார். அவரது மெய்ப்பாட்டு உணர்ச்சிகளுடன் தமிழும் ஆங்கிலமுமாக அவர் ஆற்றிய உரை  பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. நிறைவுரையாற்றிய பெ.மு., தான் ஒரு நேரத்தில் பூமணி குறித்து மதிப்பீடு செய்ததைப் போல, முனைவர் பட்ட ஆய்வாளரான ஜார்ஜ் ஜோசப் தன்னைக் குறித்து மதிப்பீடு செய்திருப்பதாக மகிழ்ந்து பாராட்டினார். பல்வேறு உரையாளர்களின் கருத்துகளுக்கும் பதிலளித்து மனமுவந்து ஏற்றுக்கொண்ட பெ.மு., இக்கருத்தரங்கில் வாயிலாகத் ‘‘தன்னை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு’’ ஏற்பட்டது என்று தெரிவித்து நிறைவுசெய்தார்.

இரா. மோகனவசந்தன்: முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.