நவீன இலக்கியமும் சுடலைமாடனும்

சுந்தர ராமசாமி, சி.சு. செல்லப்பா வரப்போகிறார் என்று இரண்டு மூன்று நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்லப்பா நாகர்கோவிலுக்கு வரப்போகிற காரணத்தையும் நான் செய்ய வேண்டிய காரியங்களையும் விரிவாக சுரா சொன்னார். என் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பத்மநாபனிடம் சில முன்னேற்பாடுகளைப் பற்றி விவாதித்தார்.
நான் அப்போது சுராவினுடைய வீட்டின் அருகே குடியிருந்தேன். அவரைத் தினமும் சந்திக்கும் வழக்கம் இருந்தது. பெரும்பாலும் மாலையில் கோ.பா. சாலையில் நடந்துபோவோம். சில சமயம் பத்மநாபன் சாரும் வருவார். அப்போது பேச்சுவாக்கில் செல்லப்பா பற்றிச் சொல்லியிருக்கிறார். பத்மநாபன், செல்லப்பாவைத் தான் முதலில் சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னார்.
பேராசிரியர் ஜேசுதாசன், வகுப்பில் செல்லப்பா பற்றியும் அவரது எழுத்து பத்திரிகை பற்றியும் சொல்லியிருக்கிறார். எழுத்து இதழ் தொகுப்பைப் படிக்கத் தந்தார். அப்போது அதை ராஜமார்த்தாண்டன்தான் முழுதும் படித்தார். பேராசிரியரிடமும் அவர்தான் விவாதித்தார். செல்லப்பா பற்றி ஜேசுதாசனுக்கு மிக நல்ல அபிப்பிராயம். அதனால் எங்கள் மனதிலும் செல்லப்பா உயர்ந்த இடத்தில் இருந்தார்.
செல்லப்பா, சுரா வீட்டிற்கு 11 மணிக்கு வந்தார். திருநெல்வேலி வரை ரயிலில் வந்தார்; பின் நாகர்கோவிலுக்கு பஸ்ஸில் வந்தார். அப்போது இங்கு ரயில் வரவில்லை. ஏற்கெனவே 50களில் நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டுக்கு வந்த அனுபவம் செல்லப்பாவுக்கும் இருந்தது. அந்த ஞாபகத்தில் சுரா வீட்டிற்குச் சரியாக வந்துவிட்டார்.
செல்லப்பாவின் வருகைக்கான காரணத்தை சுரா ஏற்கெனவே சொல்லியிருந்தார். எழுத்துப் பிரசுரம் புத்தகங்கள் தேங்கிவிட்டன; கணக்குப் பார்க்காமல் பிரசுரித்திருக்கிறார். ராஜம் அய்யரின் Rambless inVedanda எனச் சில புத்தகங்கள் விற்குமா என்பது பற்றிக் கூட யோசிக்காமல் 500 பிரதிகள் போட்டிருக்கிறார். ந. பிச்சமூர்த்தி, ராஜம் அய்யர், க.நா.சு. எனச் சிலரின் நூற்களையும் வெளியிட்டிருந்தார். செல்லப்பாவினுடைய நூற்கள் அதிகம்.

இந்தப் புத்தகங்களையெல்லாம் நேரடியாக விற்பனை செய்வதற்குரிய பயணம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பெரும்பாலும் ஏதேனும் நகரத்தில் தெரிந்தவரின் வீட்டில் இருந்துகொண்டு அங்குள்ள கல்லூரிகளுக்கும் புத்தகப் பிரியர்களுக்கும் நேரடியாகப் புத்தகங்களை விலைக்குக் கொடுத்திருக்கிறார். இதில் கடன் இல்லை.
மதுரையில் பேரா. கனகசபாபதி, தூத்துக்குடியில்
ஆ. சிவசுப்பிரமணியம், திருநெல்வேலியில் மேலும் சிவசு என உதவியிருக்கின்றனர். இங்கெல்லாம் அவருக்குக் கணிசமாகப் புத்தகங்கள் விற்பனையாயிருக்கின்றன. இந்த நம்பிக்கையில் நாகர்கோவிலுக்கு வந்தார்.
செல்லப்பாவின் நூற்களைப் பெரும் அளவில் விற்க ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கை சுராவிற்கு இருந்தது. என்னிடமும் பத்மனாபனிடமும் இது பற்றிப் பேசினார். அப்போது தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு இணைப்புக் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டன. அரசு நிதியுதவி பெறாத கல்வி நிலையங்கள் இல்லாத காலம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெற்ற 10 கல்லூரிகள்தாம் இருந்தன. பள்ளிக்கூடங்களில் புத்தகங்கள் வாங்க மாட்டார்கள். தற்கால இலக்கியங்களைப் படிக்கும் தீவிர வாசகனும் குறைவு. இதையெல்லாம் யோசித்துப் பார்த்த பத்மநாபன் சுராவிடம் பேசினார். சுரா புத்தகங்களை விற்க வேறு வழி செய்திருந்தார்.
நாகர்கோவிலில் வேப்பமூடு ஜங்ஷனிலிருந்த கோமளா புக் ஸ்டோர் உரிமையாளர் சுராவுடன் படித்தவர். நெருங்கிய நண்பரும்கூட. அந்தப் புத்தகக்கடை அப்போது பிரபலமாக இருந்தது. செல்லப்பாவின் புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து விற்கச் சொல்லலாம், முன்பணமும் வாங்கலாம் என்றார் சுரா. அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
நாகர்கோவில் மைய நூலகத்தில் அப்போது நூலகர் பொறுப்பில் இருந்த ஒருவர் ‘சாயாவனம்’ கந்தசாமியின் நெருங்கிய உறவினர். சுராவைப் பார்க்க அவர் வருவார். அவரிடமும் சுரா சொல்லியிருந்தார். இப்படியான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் சுரா செல்லப்பாவை வரச் சொல்லியிருந்தார்.
செல்லப்பா நாகர்கோவிலுக்குக் கொண்டு வரவேண்டிய புத்தகங்களை அட்டைப் பெட்டிகளில் வைத்துக் கட்டி லாரி பார்சலில் சுராவின் ஜவுளிக்கடை பெயருக்கு அனுப்பிவிட்டார். அப்போது சுதர்சன் கடையில் வேலை பார்த்த ஆறுமுகம் புத்தகக் கட்டுகளை லாரி ஆபிசிலிருந்து எடுத்துவந்து சுராவின் வீட்டின் முன்புற இடதுபக்க அறையில் வைத்துவிட்டார். அந்த அறை அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. புத்தகப் பார்சல் வந்த இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் செல்லப்பா வந்தார்.
நானும் பத்மநாபனும் சுரா வீட்டிற்கு முதலிலேயே போய் விட்டோம்; யாரும் வரவில்லை. செல்லப்பாவும் சுராவும் முன் ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது செல்லப்பாவிற்கு 62-63 வயது இருக்கலாம். (பிறப்பு 29 செப் 1912) ஆனால் 75 வயது மதிக்கத்தக்க முதியவராக இருந்தார். முரட்டுக் கதர் ஒற்றை வேட்டி; வெள்ளைநிறக் கதர்சட்டை. வாரப்படாத குறைந்த நரைமுடிகள். மெலிந்த உடல்; ஒடுங்கிய முகம். மிக மிக எளிமையாக இருந்தார்.
பத்மநாபன் அவரைப் பற்றி விரிவாகச் சொன்னார். செல்லப்பாவின் ஊர் சின்னமன்னூர்; அப்பா சுப்பிரமணிய அய்யர்; அரசு வேலை பார்த்தவர். பி.ஏ. பொருளாதாரம் படிப்பு. வத்தலக்குண்டுவில் நடந்த (1941 ஜனவரி 10) ஒரு போராட்டத்தில் பங்கு கொண்டு சிறைக்குப் போனார்; 6 மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தபோது முழுநேர காந்தியவாதியாகிவிட்டார். ஒருவகையில் தீவிர ஈடுபாடு. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு அப்போது அவரைப் பற்றிய பெரிய பிம்பத்தை உண்டாக்கின.
அன்று செல்லப்பாவைப் பார்க்க ராஜமார்த்தாண்டனும் கட்டைக்காடு ராஜகோபாலும் வந்திருந்தனர். ராஜமார்த்தாண்டன் என்னுடன் படித்தவர்; கல்லூரி விடுதி அறைத்தோழர். கட்டைக்காடு ராஜகோபாலை அப்போதுதான் பார்த்தேன். மணவாளக்குறிச்சி அருகே பெரிய தென்னந்தோப்பு அவருக்கு இருந்தது. தீவிர வாசகர். சொந்தமாக நிறைய புத்தகங்கள் வாங்குபவர். இவர் செல்லப்பாவிடம் மொத்த புத்தகங்களில் இரண்டு செட் வாங்கினார்; ஒரு செட் ராஜமார்த்தாண்டனுக்கு.
திருப்பதிசாரம் எம்.எஸ். தாமதமாக வந்தார். அவரைச் செல்லப்பாவிடம் அறிமுகப்படுத்தியபோது செல்லப்பா ஏற்கெனவே பழகியது போல் சிரித்தார். அவர்களுக்குள் கடிதத்தொடர்பு இருந்தது; எம்.எஸ். எழுத்து பத்திரிகையின் நாஞ்சில்நாட்டு ஏஜென்ட் மாதிரியும் செயல்பட்டிருக்கிறார் என்பது அப்போது தெரிந்தது. எம்.எஸ்.ஸும் செல்லப்பாவும் உரையாடியபோது கிடைத்த விஷயங்களில் எதுவுமே தனக்குத் தெரியாது என்று சுரா பின்னர் சொன்னார். எம்.எஸ். நாகர்கோவிலில் மணிக்கொடி, எழுத்து பத்திரிகைகள் வாங்கிய ஒருவரின் பெயரைச் சொன்னார். செல்லப்பாவுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. சுரா மவுனமாக இருந்தார்.
செல்லப்பா பொதுவாகப் பேசிவிட்டு ந. பிச்சமூர்த்தியின் கவிதைக்கு வந்தார். கும்பகோணத்தில் அவர் வாழ்ந்தபோது நடந்த விஷயங்களைக் கவிதைகளாக்கியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு ஒரு கவிதையைச் சொன்னார். அதுவரை மவுனமாக இருந்த சுரா என்னையும் பத்ம நாபனையும் பார்த்து ஏற்கெனவே சொன்ன விஷயங்களை மறுபடியும் சொன்னார். செல்லப்பாவின் பேச்சைத் திசை மாற்றும் உத்தி அது என்று தெரிந்தது.
செல்லப்பா எங்கள் இருவரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார். “மதுரை பல்கலைக்கழகத்தில் கனகசபாபதி என்ற ஆசிரியர் இருக்கிறார். தற்கால இலக்கியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பவர் அவர் ஒருவர்தான். பல பேராசிரியர்களுக்குப் புதுமைப்பித்தன் பெயரே தெரியவில்லை. நாவல், சிறுகதை எழுதுபவர்களுக்கு மரியாதையே இல்லை,” என்று சொல்லிக்கொண்டே போனார்.
நான் கேரளக்கல்லூரி ஜேசுதாசன் சாரைப் பற்றிச் சொன்னேன். “அறுபதுகளிலேயே புதுமைப்பித்தனைப் பாடத்திட்டத்தில் வைத்தவர்; எழுத்து பத்திரிகையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்” என்றேன்.
பத்மநாபன் “எங்கள் கல்லூரிக்கு நாளைக்கே நீங்கள் வரலாம்” என்றார். ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தத்திலிருந்து கொஞ்ச தூரத்தில்தான், அண்ணா கல்லூரி இருக்கிறது. காலை 10-11 மணிக்கு வந்துவிடுங்கள். அங்கேயே மதிய உணவு முடித்துவிடலாம். சுசீந்திரம் ஊர் சக்தி கணபதி உங்களை அழைத்து வருவார். அவர் ஓவியர்; சிற்பி; இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்” என்றார். சுரா, இராஜமார்த்தாண்டனிடம் ஒருநாள் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். மார்த்தாண்டன் அப்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி ஆய்வு மாணவராக இருந்தார்.
சொன்ன மாதிரியே செல்லப்பா சக்தியுடன் 11 மணிக்குக் கல்லூரிக்கு வந்துவிட்டார். அப்போது கல்லூரி முதல்வர் சங்கரலிங்கம்; எம்.எல்.சி. அவர் கல்லூரி நிறுவனரும்கூட. ஆளுங்கட்சியில் செல்வாக்குடையவர். அவரிடம் செல்லப்பாவை தியாகி, சுதந்திரப் போராட்ட வீரர், மகாத்மா காந்தியைச் சந்தித்தவர், இலக்கிய ஈடுபாடுடையவர் என்று பத்மநாபன் அறிமுகப்படுத்தினார். கொஞ்சம் மிகையாகவே சொன்னார்.

செல்லப்பாவைக் கல்லூரி முதல்வர் மிக மரியாதையாக நடத்தினார். நூலகரை அழைத்து செல்லப்பாவின் எல்லா நூற்களையும் இரண்டு செட் வாங்கச் சொன்னார். நூலகர் கேரளத்துக்காரர்; இந்தியில் எம்.ஏ. முடித்துவிட்டு நூலகராய் வந்தவர். மலையாளம் கலந்த தமிழில் செல்லப்பாவிடம் பேசினார். நானும் என் பங்குக்கு மிகையாகவே செல்லப்பா பற்றிச் சொன்னேன்.
தமிழ்த்துறைத் தலைவர் செல்லப்பாவைத் திரும்பிப் பார்க்கவில்லை. வேறோர் ஆசிரியர் உதவியுடன் மாணவர்களிடம் செல்லப்பாவைப் பேச வைத்தேன். புதுக்கவிதை பற்றி செல்லப்பா பேசினார். அப்போது மாணவர்கள் அடிமைகளாக இருந்த காலம். யார் பேசினாலும் மூச்சுவிடமாட்டார்கள்.
செல்லப்பா மைக் இல்லாமல் பேசினார். பிச்சமூர்த்தி, தருமு, சுரா, வேணு கோபாலன் என்னும் பெயர்களை அடுக்கிக்கொண்டே போனார். வால்ட் விட்மனைப் பற்றிச் சொன்னார். ஒன்றரை மணி நேரம் பேசி முடித்தபின் கேள்வி கேட்கலாம் என்றார். மாணவர்களிடம் அவர் கேள்வி கேட்கலாம் என்று சொன்னதே புதிய அனுபவமாக இருந்தது.
கடைநிலை ஊழியர் முதல் துணை முதல்வர் வரை யாரும் கல்லூரி வளாகத்தில் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை நிலவிய காலம் அது. மாணவர்கள் கேள்வி கேட்டாலே ஆசிரியரை அவமதிப்பதாகக் கருதப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அப்படி ஒரு நிலை; யாரும் கேள்வி கேட்கவில்லை.
செல்லப்பா பேசி முடித்துவிட்டு ஆங்கிலத்துறைக்கு வந்தார். அத்துறை ஆசிரியர்களிடம் அவர் உரையாடிய போது ஆங்கில இலக்கியங்களை மேற்கோள் காட்டினார்; செல்லப்பா அன்று 4 செட் புத்தகங்கள்தாம் கொண்டு வந்திருந்தார். கல்லூரி நூலகத்துக்கு இரண்டு செட்; பொருளாதாரப் பேராசிரியர்; ஆங்கிலத்துறை ஆசிரியர் ஆகியோருக்கு ஒரு செட் என எல்லாம் போயின.
பகல் உணவை முடித்துப் புறப்பட்டபோது ஒரு எழுத்தர் செல்லப்பாவிடம் ஒரு கவரை நீட்டினார்; ரசீதில் கையெழுத்து கேட்டார்; செல்லப்பா அந்தக் கவரை வாங்கியபோது பத்மநாபன் “நீங்கள் பேசியதற்குச் சன்மானம்” என்றார். அன்று நடந்ததை சுராவிடம் அவர் சொல்வதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.
அடுத்தநாள் கல்லூரி முதல்வர் சங்கரலிங்கம், சுராவின் ஜவுளிக்கடைக்குச் சென்றிருக்கிறார். செல்லப்பாவைப் பற்றி உயர்வாகப் பேசியிருக்கிறார். அவருக்கு அரசு சார்பாக உதவி வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்றாராம். சுராவுக்கு அவர் பேசியது அதிசயமாக இருந்தது; செல்லப்பாவிடம் அதுபற்றித் தான் பேசவில்லை என்றாராம். கிருஷ்ணன் நம்பியும் வேண்டாம் என்றாராம்.
இதன் பிறகு செல்லப்பா புனித சிலுவைக் கல்லூரி, பயோனீயர் கல்லூரி, குழித்துறை கல்லூரி எனப் பல கல்லூரிகளுக்குச் சென்றார். எல்லா இடங்களுக்கும் சக்தி கணபதியும் உதவியாகச் சென்றார். ஒவ்வொரு நாள் மாலையிலும் அன்றன்று நடந்த விஷயங்களை சக்தி சொல்வார். செல்லப்பாவை சக்தி எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தார் பத்ம நாபன். செல்லப்பாவைக் கொஞ்சம் மிகைப்படுத்தலுடன் வர்ணிக்க வேண்டும் எனப் பத்மநாபன் சொல்லி யிருந்ததற்கும் கொஞ்சம் அதிகமாகவே சொன்னாராம் சக்தி. சுராவுக்கு இது பிடிக்கவில்லை. என்றாலும் பத்மநாபன் “... செல்லப்பாவின் புத்தகங்களை விற்க இப்படியான தகிடு தத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது; வேறு வழியில்லை; வெறும் தற்கால இலக்கி யத்தைச் சந்தைப்படுத்த முடியாது; மகாத்மா தொடர்பு காந்தியவாதி, கதராடை எல்லாம் பல கல்லூரிகளில் செல்லுபடியாகின்றன” என்றார். புனித சிலுவை கல்லூரியில் இலக்கியம் பேசவேண்டாம் என்று சுதந்திரப் போராட்ட அனுபவங்களைப் பேசுங்கள் என்றார்களாம்.
இதற்கிடையில் ஒருநாள் பேராசிரியர் பத்மநாபன் தனது சொந்த ஊரான சுசீந்திரத்துக்குச் செல்லப்பாவை அழைத்து வரச்சொன்னார். தற்செயலாக சுரா வீட்டிற்கு வந்த வேதசகாயகுமாரும் சுசீந்திரம் வருவதாகச் சொன்னார். மூன்று பேரும் பத்மநாபன் வீட்டிற்குப் போனோம். சக்திக்கும் சொந்த ஊர் சுசீந்திரம்தான். அவரும் பத்மநாபன் வீட்டிலிருந்தார். பத்மநாபன் வீட்டின் எதிரே பெரிய தெப்பக்குளம்; சுற்றி மதில்; உட்கார்ந்து பேச வசதியான தாவளம். செல்லப்பா நல்ல உற்சாகத்தில் இருந்தார்.
ராஜம் அய்யரின் சொந்த ஊர் வத்தலக்குண்டு; செல்லப்பாவுக்குப் பரிச்சயமான ஊர். அதனால் ராஜம் அய்யரைப் பற்றிப் பல விஷயங்களைச் சேகரித்து இருக்கிறார். சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொன்னார். சக்தி, செல்லப்பாவைக் கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்ற அனுபவத்தைக் கதை சொல்லிகளின் பாணியில் சொன்னார்.
கிறிஸ்தவ மகளிர் கல்லூரிக்கு அவர்கள் போன விஷயத்தை ஏற்கெனவே சுராவிடம் சொல்லிவிட்டார். எனக்கும் அது தெரியும்; என்றாலும் மீண்டும் ஒருமுறை சொன்னார். அந்தக் கல்லூரிக்குச் செல்லப்பாவும் சக்தியும் 10 மணிக்குப் போயிருக்கின்றனர். தமிழ்த்துறைத் தலைவரைப் பார்க்கப் போனபோது அவர் முதல்வரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். முதல்வர் அறையில் இல்லாததால் இருவரும் விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் துறைத்தலைவர் வந்துவிட்டார். அவர் சக்தியை மட்டும் முதல்வர் அறைக்குள் அழைத்திருக்கிறார். சக்தி, செல்லப்பாவையும் உடன் அழைத்ததற்குத் துறைத்தலைவர் நீங்கள் மட்டும் வாருங்கள் என்று சொல்லிவிட்டார். சக்திக்கு அந்தப் பேராசிரியரிடம் பேசுவதற்குக்கூட நேரமில்லை; கட்டாயமாக அவரை முதல்வர் அறைக்குள் அனுப்பிவிட்டார்.

சக்திக்கு ஏற்கெனவே புத்தகங்களை விற்ற அனுபவம்; செல்லப்பா பேசியது தெரியும்; அதைச் சொன்னார். முதல்வர் ஒரு செட் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். நூலகத்தில் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக்கொண்டு திரும்புவதுவரை செல்லப்பாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் சக்திக்குப் புரிந்தது. செல்லப்பாவை அன்று தியாகியாக அறிமுகப்படுத்தவில்லை. Modern Literature புத்தகங்கள் கொண்டுவந்ததாக துறைத்தலைவரிடம் சொல்லியிருக்கிறார். சக்தி பேன்ட், ஷு சகிதம் டிப்டாப்பாக இருந்திருக்கிறார். செல்லப்பா பழுப்பேறிய துவைத்த கதர் வேட்டி, ஷேவ் பண்ணாத முகம், சீவப்படாத நரைத்த தலையுடன் இருந்தார். துறைத்தலைவர் Modern ஆசாமிதானே Modern Literature படிப்பார் என்று தானாக ஊகித்துக்கொண்டார். கடைசியில் பேராசிரியரை வழியனுப்பும்போது சக்தியிடம் பேசிய பேச்சிலிருந்து எல்லாவற்றையும் புரிந்துகொண்டார். இந்தக் கிண்டலும் கல்லூரிக்கு வெளியே வந்த பிறகுதான் செல்லப்பாவிற்குப் புரிந்ததாம்.
எல்லோருடைய சிரிப்பும் அடங்கிய சில நிமிடங்களில் நிலை மாறிவிட்டது. வேதசகாயகுமார் செல்லப்பாவிடம் க.நா.சுவைப் பேச ஆரம்பித்து அவரை உச்சாணிக் கொப்பில் இருப்பது மாதிரி தோற்றத்தை உருவாக்கி ந. பிச்சமூர்த்தியைக் கொஞ்சம் விமர்சித்துவிட்டு ராஜம்அய்யரைச் சாதாரணமாகச் சொல்ல ஆரம்பித்தார். செல்லப்பாவின் முகம் மாறியது; அவரின் குரல் உயர்ந்தது; குமாரை மட்டம் தட்டுவதற்காக ஆங்கிலப் புத்தகங்கள் சிலவற்றின் பெயரைச் சொல்லி படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். பத்மநாபன் நிலைமை மோசமாவதைக் கண்டு, “சரி முந்நூற்று நங்கை கோவிலுக்குப் போகலாம்” என்றார்.
அந்தக் கோவிலில் சக்தியின் மாமனார் பூசகராக இருந்தார். அவர் மந்திரவாதியும்கூட. நாங்கள் சென்றபோது மாலை பூஜை முடிந்த நேரம், கூட்டமில்லை; அன்று விஷேச பூஜை நடந்திருக்கிறது. சக்தி மாமனாரிடம் எங்களைப் பற்றிச் சொன்னார். பூசகர் புளியோதரை, சிறிய வடை, அரவணை (ஒருவகை சர்க்கரைப் பொங்கல்) எல்லாம் வாழை இலையில் வைத்துத் தந்தார். செல்லப்பா அய்யங்கார் வீட்டுப் புளியோதரை பற்றிப் பேச ஆரம்பித்தார். குமாரின் விமர்சனக் காட்டம் அரவணையின் இனிப்புச் சுவையில் கரைந்துபோனது.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்றார் சக்தி. பிரம்மாண்டமான அந்தக் கோவில் கோபுர அடிஸ்தானம், வசந்த மண்டபம், சித்திர மண்டபம், செண்பகராமன் மண்டபம் என்னும் மண்டபங்களின் சிற்பங்களைப் பற்றி விரிவாகச் சொன்னார் சக்தி. நா. பார்த்தசாரதியை நான் அந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. செல்லப்பாவிற்கு அதிலெல்லாம் நாட்டம் இல்லை, ஈடுபாடில்லை என்பது தெரிந்தது. நான் செல்லப்பாவின் இந்த ரசனை பற்றி சுராவிடம் சொன்னபோது வெ.சா. மற்றவர்களைவிட வேறுபட்டு நிற்பது இதனால்தான் என்றார்.
அடுத்தநாள் காலையில் நாகர்கோவில் இந்துக்கல்லூரிக்கும் மாலையில் சுங்கான்கடை அய்யப்பா கல்லூரிக்கும் போகலாம் என்று முடிவு செய்தோம். பத்மநாபன் இந்துக் கல்லூரிக்கு வரவிருப்பம் இல்லை என்று சொன்னார். சக்தி வருகிறேன் என்றார். அடுத்த நாள் காலையில் சக்தியும் பத்மநாபனும் என் வீட்டிற்கு வந்துவிட்டனர். நிகழ்ச்சியில் மாற்றம் என்றார் சக்தி. அய்யப்பா கல்லூரி முதல்வர் இன்று கல்லூரிக்குப் போகவில்லை; அவர் வீட்டிலிருக்கிறார். போகலாம்; அவரின் கணவர் என் பழைய சக ஆசிரியர் என்றார். அவர் சொன்னபடி போனோம்.
அய்யப்பா கல்லூரி நாயர் சாதியின் அமைப்பு நிர்வாகத்தில் இருந்தது. முதல்வர் சுமத்திரா மேனன்; இந்தி பேராசிரியர். தமிழ் கொஞ்சமும் தெரியாது. அவரது கணவர் ஸ்ரீதர மேனன் ஆங்கிலப் பேராசிரியர். முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர். நாங்கள் அவர் வீட்டிற்குப் போனபோது மேனன் கோழிக்குத் தவிடு கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அவருடைய மாணவன். எங்களை அடையாளம் கண்டுகொண்டார்.
பத்மநாபன் செல்லப்பாவைத் தியாகி தற்கால இலக்கியவாதி என ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினார். மேனன் செல்லப்பாவிடம் ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் கேட்டார். செல்லப்பா தன் நிலைப்பாடு விமர்சனம் பார்வை பற்றிப் பேசினார். அருமையான ஆங்கிலப் பேச்சு. சுரா செல்லப்பாவின் ஆங்கிலப் பேச்சு பற்றி சொல்லியிருக்கிறார். இந்தச் சமயத்தில் முதல்வர் சுமித்திரா மேனன் வந்தார். பத்மநாபன் மலையாளத்தில் அவரிடம் செல்லப்பாவைப் பற்றிச் சொன்னார். திருமதி மேனனும் மலையாளத்தில் செல்லப்பாவிடம் பேசினார். பத்மநாபன் செல்லப்பாவிற்கு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சுமத்திரா மேனன் இரண்டு செட் புத்தகங்களுக்குப் பில் போடச் சொன்னார். உடனே பணம் கொடுத்துவிட்டார். கல்லூரிக்கு நானே புத்தகங்களைக் கொண்டு சென்றுவிடுவேன் என்றார். இதெல்லாம் நான் எதிர் பார்க்காதது. செல்லப்பாவிற்கு மட்டுமல்ல; பத்மநாபனுக்கும் நம்பமுடியவில்லை.
அன்று பத்து மணிக்கு மேல் இந்துக் கல்லூரிக்குப் போகலாம் எனத் திட்டமிட்டோம். பத்மநாபனுக்கு வர விருப்பமில்லை. சுரா வீட்டிற்குச் சென்றுவிட்டார். சக்தி என்னுடன் வந்தார். செல்லப்பாவிடம் பெரிய கல்லூரி, பெரிய நூலகம், முதுகலைப் படிப்பு உள்ள துறை என்றெல்லாம் நானும் சக்தியும் சொல்லிய வார்த்தைகள் அவருக்கு அந்தக் கல்லூரியின் மேல் அபரிமிதமான மதிப்பையும் அந்தத் துறையில் நாலு கனகசபாபதிகளாவது இருப்பார்கள் என்ற நம்பிக்கையையும் உருவாக்கிய மிதப்பில் இருந்தார். சுரா இந்துக்கல்லூரி தமிழ்த்துறையில் பெரிய வரவேற்பு இருக்காது என்று சொல்லியிருக்கிறார். பின்னர்தான் அதை அறிந்தேன். ஒருநாள் சுரா வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் நம்பிகூட அப்படித்தான் பேசியிருக்கிறார்.

நாங்கள் முதல்வரைத்தான் முதலில் பார்க்கப் போனோம். அவர் துறைத் தலைவரைப் பாருங்கள், எனக்கு இப்போது சி.சு.வைச் சந்திக்க நேரமில்லை என்று சொல்லிவிட்டார். துறைத் தலைவரின் அறைக்குப் போனோம். அந்தத் துறைத்தலைவர் தொல்காப்பியக் கடல். இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களைக் கரைத்துக் குடித்தவர். பழைய உரைகளைக்கூட மனப்பாடமாகச் சொல்லுவாராம். மிகப்பெரும் ஆளுமை என்று பெயர் வாங்கியவர்.
நான் செல்லப்பாவைப் பற்றிச் சொன்னேன். கொஞ்சம் மிகைப்படுத்தலுடன் சொன்னேன். தமிழகத்தில் Modern Poem துறையில் சீரியசான ஆசாமி. Modern Poem பற்றி விரிவாக எழுதியவர் என்றேன். அவர் எல்லாம் கேட்டுவிட்டுச் சிரித்தார். மாடனுக்கும் ஒரு Literature ஆ; சுடலைமாடனுக்கு மட்டுமா வாதைகளுக்கும் சேர்ந்தா, என்றார்.
அந்த இலக்கணக்கடல் பெரிய நகைச்சுவையைப் பேசியதாக நினைத்துச் சிரித்தார். கூடியிருந்த பேராசிரியர் களும் சிரித்தார்கள். காளமேகத்தைப் போல் சிலேடையாக (Modern - மாடன் சிறுதெய்வம்) பேசியதாக அவர்களுக்கு நினைப்பு. சக்தியின் அருகில் இருந்த ஒருவர் இலக்கியம் Modern ஆனால் Dress மட்டும் ஏன் இப்படி என்று மெதுவாக அவர் பங்குக்குக் கேட்டார்.
செல்லப்பாவுக்கு அவர் பேசியதன் அர்த்தம் புரியவில்லை. Modern என்பதைச் சுடலைமாடன் என்ற நாஞ்சில் நாட்டு நாட்டார் தெய்வமாகக் கூறிக் கிண்டலடித்தது புரியவில்லை. கடைசியில் ஒரு செட் புத்தகம் கூட வாங்கவில்லை. மற்ற ஆசிரியர்களும் வாங்கவில்லை. துறைத் தலைவருக்குப் பிடிக்காத காரியம் அது என்ற பாணியில் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள்.
நாங்கள் புறப்பட எழுந்து நின்றபோது, துறைத் தலைவர் அந்த ஜவுளிக் கடைக்காரர் (சுரா) வீட்டில்தான் இவர் இருக்கிறாரா என்றார். நான் பதில் சொல்லவில்லை. செல்லப்பாவுக்கு அதுவும் கிண்டல் என்று புரியவில்லை. ஆனால் அவர் அவமானப்படுத்துகிறார் என்பது மட்டும் புரிந்தது. அவர் புத்தகம் வாங்காததைவிட அடிப்படையான மரியாதை கூட தரவில்லையே என்று சக்தி ஆதங்கப்பட்டார்.
மின்னஞ்சல்: perumalfolk@yahoo.com