ஆங்கில அகராதியும் ஒரு வார்த்தை பித்தரும்

தலைப்பாக்கட்டுப் பிரியாணி சாப்பிடாத தமிழர்கள் இருக்க லாம். ஆனால் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியை ஒரு தடவையாவது கையில் ஏந்தி அதன் பக்கங்களைப் புரட்டாத தமிழர்களின் எண்ணிக்கை, முக்கியமாக காலச்சுவடு வாசகர்களிடையே மிகக் குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் இங்கே வாசிக்கப்போவது முழுக்க முழுக்க ஒக்ஸ்போர்ட் அகராதியைப் பற்றி அல்ல. இந்த அகராதிக்கும் ஈழத்தில் சின்ன கிராமமான மானிப் பைக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது பற்றிய தகவல் பின்னே வரும். அதற்கு முதல் இன்னுமொரு செய்தி, திடுக்கிடும்படியானது அல்ல. ஆனால் இந்தக் கட்டுரை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது.
சென்ற கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் மூன்று புத்தகங்கள் என் வீட்டுத் தபால் பெட்டி வழியாக வந்து விழுந்தன. இவை அரசுக்கு வரிகட்டுவதைத் தவிர்ப்பதை உயரிய கலையாக்கின நிறுவனமான ஆமெஸானிலிருந்து தனிப்பட்ட அட்டைப்பெட்டியுடன் வந்திருந்தன. இவற்றுக்கு அனுப்பாணை செய்ததாக