மழிக்கப்பட்ட மீசை

கருத்துரிமைக்கும் படைப்புச் சுதந்திரத்துக்கும் எதிரான தொடர் தாக்குதல்களின் அண்மை நாள் இரை எஸ். ஹரீஷ். நவீன மலையாள இலக்கியத்தின் புதிய தலைமுறை எழுத்தாளர். தனது காத்திரமான சிறுகதைகள் மூலம் வாசக, விமர்சகக் கவனத்தை ஈர்த்தவர். இன்று எழுத்தை நாடுவதைக் குறித்து அஞ்சும் நிலையில் முடங்கியிருக்கிறார். அவரை முடக்கியது இந்து அடிப்படைவாத சக்திகள்.
இதுவரை சிறுகதைகளை மட்டுமே எழுதி வந்த ஹரீஷின் முதல் நாவல் மலையாள இலக்கிய உலகில் மேலான இதழாகக் கருதப்படும் மாத்ருபூமி வார இதழில் வெளியாகத் தொடங்கியது. நான்கு வாரங்கள் நாவலின் அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில் மாத்ருபூமி நிறுவனம் நாவல் இனி தொடர்ந்து வராது; நாவலாசிரியர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டார் என்று அறிவித்தது. இந்து அமைப்புகள் சிலவற்றின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தான் படைப்பைத் தொடர விரும்பவில்லை என்று ஹரீஷ் தெளிவுபடுத்தினார்.
‘மீசை’ என்ற பெயரில் ஹரீஷ் எழுதி வந்த நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் இரு பாத்திரங்கள் மேற்கொண்ட உரையாடலே மீசையை மழிக்க இந்து அமைப்புகள் வற்புறுத்தக் காரணமாக அமைந்தது. அந்த உரையாடல் இந்துப் பண்பாட்டையும் கோவில் கலாச்சாரத்தையும் இந்துப் பெண்களின் மாண்பையும் அவமதிப்பதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டின. நாவல் வெளியான மாத்ருபூமி இதழின் பிரதிகள் எரிக்கப்பட்டன. மாத்ருபூமி புக்ஸின் விற்பனையகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஹரீஷின் தொலைபேசி எண்ணில் அழைத்து வசைமழை பொழியப்பட்டது. அவரது குடும்பத்தினர் அவமதிக்கப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் படங்கள் ஆபாசமாக இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த அசம்பாவிதங்கள் பொறுக்க முடியாமல் நாவலைத் திரும்பப் பெறுவதாக ஹரீஷ் அறிவித் திருக்கிறார்.
தமிழகத்தில் பெருமாள்முருகனுக்கு நிகழ்த்தியதை இந்து அடிப்படைவாத அமைப்புகள் கேரளத்தில் ஹரீஷுக்கு நிகழ்த்தியிருக்கின்றன. இந்த அடிப்படையில் இது தனித்த சம்பவம் அல்ல; தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வரும் அடக்குமுறைச் செயல்பாட்டின் வெளிப்பாடு என்பது விளங்கும். கருத்துக்களை மாற்றுக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத பிற்போக்கு மனப்பாங்கினர் தங்கள் அதிகாரத்தை வன்முறை மூலமே நிறுத்தப் பார்க்கிறார்கள். தங்களுக்கு எதிரான விமர்சனங்கள் எழக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள். எழுமானால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று அச்சுறுத்துகிறார்கள். கல்புர்கி முதல் கௌரி லங்கேஷ் வரையிலான கருத்துப் போராளிகளைப் பலிகொண்டு இதை நிறைவேற்றுகிறார்கள். முதன்மையாக இது இந்திய அரசியல் சட்டம், தனது குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்து, வெளிப்பாட்டு உரிமைகளுக்கு எதிரானது. அதிகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை ஆதரிக்கும் அரசு இருப்பது இந்த விபரீதச் செயல்களுக்குப் போலி நியாயங்களைக் கற்பித்துச் சொல்ல உதவுகிறது. அதை மதத்தின் பெயரால் எளிதில் நிறைவேற்றிக்கொள்ள அடிப்படைவாதிகளால் முடிகிறது.
கேரளத்தில் இப்போது நடப்பது இடது முன்னணி ஆட்சி. அந்தச் சூழலில் இந்த அச்சுறுத்தலை அரங்கேற்றியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவும் பொருள்படுகிறது. கருத்துச் சுதந்திரத்துக்கு ஓரளவு இணக்கமான அரசு இது. இதுபோன்ற நடவடிக்கை மூலம் சுதந்திரமாகக் கருத்துச் சொல்பவர்களின் அடைக்கல மையத்தைக் காலி செய்யும் திட்டமும் வெளிப்படுகிறது. ஹரீஷின் பிரச்சனையில் இடதுசாரி பண்பாட்டு அமைப்புகள் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கின்றன. மூத்த தலைவரான வி.எஸ். அச்சுதானந்தன் ஹரீஷுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். ‘இது கேரளத்தில் முதன்முறையாக நடக்கும் சம்பவம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அது ஓரளவே உண்மை.ஒரு பத்திரிகையில் படைப்பு நிறுத்தப்படும் சம்பவம் கேரளத்தில் இது இரண்டாம் முறை. நெருக்கடி நிலைக் காலத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘தர்மபுராணம்’ நாவல் மலையாள நாடு வார இதழில் தொடராக வெளியாக ஆரம்பித்தது. முதல் அத்தியாயம் வெளியானதுமே நிறுத்தப்பட்டது. அன்று ஆட்சியில் இருந்த அரசை விமர்சிக்கிறது என்பதன் பேரில் வெளியீடு முடக்கப்பட்டது. நாடு முழுவதும் அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் அப்படி நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கருத்துக்களும் தகவல்களும் பரவலாகியிருக்கும் இன்றைய சூழலில் மேலதிக ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட வேண்டிய தருணத்தில் இந்த அச்சுறுத்தல் பீதியை அளிக்கிறது. மறைமுகமான நெருக்கடிக் கால கட்டத்தில் வாழ்கிறோமா என்ற அபாயகரமான வினாவை எழுப்புகிறது. விஜயனின் நாவலில் அரசியல் விமர்சனம் இருந்தது. ஹரீஸின் கதையில் அதுபோன்று எதுவுமில்லை. இரண்டு கதாபாத்திரங்கள் பேசும் பேச்சு மட்டுமே. அதைக் கதாசிரியரின் கூற்றாக எடுத்துக்கொண்டு இந்து அமைப்புகள் களமிறங்கியிருக்கின்றன. மீசை நாவல் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளப் பகுதியொன்றில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆதிக்கச் சாதியினர் விதித்திருந்த தடையை மீறி மீசை வளர்ப்பதைச் சித்தரிக்கும் கதைப் பொருளைக் கொண்டது. அந்த வரலாற்றை மறுப்பதன் மூலம் ஒடுக்கப்பட்டவருக்கு எதிரானதாகவும் இந்து அமைப்புகள் மாறுகின்றன.
பெருமாள்முருகன் பிரச்சனையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ஒரு படைப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை வீசி எறியுங்கள். ஒரு புத்தகத்தை வாசித்தாக வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை. இலக்கிய ரசனைகள் மாறுபட்டவை. ஒருவருக்கு ஏற்பானதும் உவப்பானதுமான ஒன்று இன்னொருவருக்கும் அப்படியானதாக இராது. எனினும் எழுதுவதற்கான சுதந்திரம் தடைசெய்யப் பட முடியாததே.’’ ஹரீஷின் படைப்புக்கும் இது நூற்று வீதம் பொருந்தும்.
பொதுவாக முற்போக்காளர்களின் மண் என்று சொல்லப்படும் கேரளத்தில் இந்த உரிமை மீறல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வைக்கம் முகம்மது பஷீரின் ‘பகவத் கீதையும் சில முலைகளும்’ சிறுகதையையும் ‘நிர்மால்யம்’ திரைப்படத்தையும் வரவேற்ற மலையாளி சமூகத்தில் ஹரீஷின் எழுத்துக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை பயத்தை அளிப்பதாகும். மாற்றுக் கருத்துக்கள் பேசப்படக் கூடாது; மாற்று நம்பிக்கைகள் முன்வைக்கப்படக் கூடாது; மாற்றுச் சிந்தனைகள் எழக் கூடாது என இவை எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக அமைப்பின் பன்முகத்தன்மையை மறுக்கிறது. அச்ச உணர்வை விதைத்துத் தங்களது அதிகாரத்தை அறுவடை செய்யவே சங்கப் பரிவாரங்கள் முற்படுவதை இது தெளிவாகக் காட்டுகிறது.
“இந்த நாட்டை ஆள்பவர்களுக்கு எதிராகப் போராட முடியாத பலவீனன் நான். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு முன்னால் நிற்க முடியாமல்தான் நாவலைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன்’’ என்ற ஹரீஷின் சொற்களில் வெளிப்படுவது இயலாமை மட்டுமல்ல, அச்சமும்தான்.இதை விதைக்கவே அடிப்படைவாதிகள் முயல்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெறாமல் தடுப்பது ஜனநாயகத்தின் மீதும் கருத்து உரிமை மீதும் பற்றுள்ளவர்களின் இன்றியமையாக் கடமை. அதைச் செய்யத் தவறினால் கேரள சமூகம் மட்டுமல்ல மொத்த இந்திய சமூகங்களும் காவி இருளுக்குள் வீழ்த்தப்படும். அது யாருக்கு நல்லது?