பிப்ரவரி 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
டிசம்பர் 2023
    • கட்டுரை
      கர்நாடக சங்கீதத்தின் : பிராமணமயமாக்கலும் எம்.எஸ். சுப்புலட்சுமியும்
      ‘எவரும் பிராமணராகலாம்’
      பொதுமகளும் குலமகளும் : 1990 சினிமாக்களில் நடைபெற்ற ஊடாட்டம்
      மறுமலர்ச்சி: ஈழத்தின் முன்னோடிச் சிற்றிதழ்
    • கதை
      உங்களுடன் வந்தவர்
      பரிசுப்பொருள்
      இறந்தவர் நடமாட்டம்
    • அஞ்சலி
      அ. சிவானந்தன் (1923-2018) : அரசியலே வாழ்வு
      ஞாநி (1954-2018) : நம் காலத்து நாயகன்
    • விருதுகள்
      ‘விளக்கு’ விருதுகள்
    • பதிவு
      41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
    • நேர்காணல்
      குடும்ப வன்முறை: அன்பில் ஏன் பாரபட்சம்?
    • புதிதினும் புதிது
      இன்று புதியவர்கள்
      அற்புதங்களைத் திறப்பவை
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      ஏடது கைவிடேல்
    • தலையங்கம்
      உண்மைகள் சொன்னவர் - வண்மைகள் செய்தவர்
      அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக் கூட்டும் தாலிபானியம்
    • கவிதை
      கவிதை
      கவிதை
      பிரார்த்தனைகள்
      வாரத்துக்கு ஏழு பந்துகள்
      அரூபமானவை பூனையின் கண்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2018 தலையங்கம் அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக் கூட்டும் தாலிபானியம்

அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக் கூட்டும் தாலிபானியம்

தலையங்கம்

ஒரு கருத்தைக் காட்டிலும் அந்தக் கருத்து எதிர்கொள்ளப்படும் விதம் சில சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது. குறிப்பாக, தங்களால் ஏற்க முடியாத கருத்தை ஒருவர் வெளியிடுவதே குற்றம் என்று கருத்தாளரின் வாயை அடைக்கும் செயலில் சிலர் ஈடுபடும் விபரீதம் அரங்கேறும் நிலையில் வினைகளைக் காட்டிலும் எதிர்வினைகள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாதது. அதிலும் இத்தகைய எதிர்வினைகள் எண்ணிக்கைப் பலத்துடனும் அதிகாரப் பின்பலத்தோடும் சண்டியர்தனமாக முன்வைக்கப்படும்போது மூலவினை ஒரு பிரச்சினையே இல்லை என்று கருத வேண்டிய நிலையும் உருவாகிவிடும். ஆண்டாளைப் பற்றி வைரமுத்து முன்வைத்த கருத்தின் நிலை இதுதான்.

ஓர் இலக்கியப் பிரதியில் கையாளப்பட்ட சமூக-வரலாற்றுத் தகவல்களை முன்னிட்டு ஓர் எழுத்தாளர் துரத்தி அடிக்கப்பட்டதைப் பார்த்தோம். சட்டம் தடைசெய்யாத உணவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்ததற்காகச் சிலர் கொளுத்தப்பட்டதைப் பார்த்தோம். மத நம்பிக்கைகளையும் மத அரசியலையும் விமர்சித்ததற்குப் பரிசாக நெற்றியில் துப்பாக்கிக் குண்டைப் பெற்றவர்களையும் பார்த்தோம். கவித்துவமான புனைவில் இடம்பெற்று மக்களின் பொதுப்புத்தியில் நம்பிக்கையாக நிலைபெற்றுவிட்ட ஒரு பெண் பாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட படத்துக்காக இயக்குநரின் தலை உருளும் என்னும் அறிவிப்பையும் கேட்டோம். இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரலாற்றுத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டதற்காகத் தலையைக் கொய்துவரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் சாட்சியாகவும் நாம் நின்றோம். பக்தி மரபைச் சேர்ந்த மகத்தான ஒரு கவியைப் பற்றிய ஒரு சொல்லுக்காக ஒருவர் தூற்றப்படுவதையும் இன்று பார்த்துவருகிறோம்.

சர்வமத சம பாவனை, எம்மதமும் சம்மதம், சகிப்புத்தன்மையின் பிறப்பிடம், பரந்த மனப்பான்மையின் வாழிடம், கடவுளையும் கேள்விக்குட்படுத்தும் அறிவார்த்த மரபு ஆகிய பெருமைகளை, உரிமைகோரல்களை எல்லாம் உயிரற்ற பிணங்களாகக் கருதி எரித்துவிட்ட ஒரு குழு, இந்தியப் பொது வெளியைத் தாலிபான்மயமாக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. தர்க்கம், விவாத தர்மம், எதிர்ப்புக்கான நாகரிக வழிகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்தபடி எழுகிறது சகிப்பின்மையின் வெறித்தாண்டவம். கடுமையான கருத்து வேற்றுமைகள் கொண்டவர்களையும் ஓரணியில் திரட்டிவருகிறது இந்தப் பெரும்பான்மை தாலிபானியம்.

இந்தத் தாலிபானியத்தைத் துணிச்சலோடும் தெளிவான அரசியல் பிரக்ஞையோடும் கருத்துச் சுதந்திரம், விவாதத்துக்கான வெளி ஆகியவை சார்ந்த முனைப்புடனும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது. கருத்துச் சுதந்திரம், விவாதச் சூழல் ஆகியவற்றை நரகமாக்குவதுடன், விவாதத்துக்கான சொல்லாடல்களையே நரகலாக்கிவிடக்கூடிய அபாயம் இது. படைப்புச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டவர்களும் இந்தத் தாலிபானியத்துக்கு எதிராக நிற்க வேண்டிய தருணம் உருவாகியிருக்கிறது.

இந்துத் தாலிபானியத்துக்கு எதிரான குரலை அழுத்தமாகக் கொடுக்க வேண்டிய அதே வேளையில் முன்வைக்கப்பட்ட கருத்தைக் கருத்துத் தளத்தில் எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் அறிவுச் சூழலில் புழங்குபவர்களுக்கு இருக்கிறது. எதிர்வினைகள் எவ்வளவு கண்டிக்க அல்லது தண்டிக்கத் தக்கவையாக இருந்தாலும் அவற்றை முன்னிட்டு மூல வினையை விவாதமின்றி ஏற்றுக்கொள்ளவோ அலட்சியப்படுத்திவிடவோ முடியாது. எனவே வைரமுத்து முன்வைத்த கருத்து விவாதத்துக்குரியதாகிறது.

ஆழமான கருத்தாடல்களுக்கோ காத்திரமான சிந்தனைகளுக்கோ பெயர்போனவரல்ல வைரமுத்து. மேலோட்டமான மொழியால் கிளுகிளுப்புகளின் மயக்கத்தை உற்பத்திசெய்யும் அவருடைய எழுத்துச் செயல்பாடு ஆழமான விஷயங்களைக் கையாளும் திறன் கொண்டதும் அல்ல. கட்டுரையின் போக்குக்கோ அதன் பின்புலத்துக்கோ தொடர்பற்ற ஒரு வாக்கியத்தை இடையில் நுழைப்பதிலிருந்தே அவருடைய மேம்போக்கான சீண்டலைப் புரிந்துகொண்டுவிட முடிகிறது. மேற்கோள் காட்டப்படும் நூலின் பதிப்பகம், வாக்கியம் இடம்பெற்ற கட்டுரையை எழுதியவரின் பெயர் ஆகியவற்றைச் சரிபார்க்கும் கவனம்கூட இல்லாத ஒருவர் ஆய்வுக் களத்துக்கே வரக் கூடாது. தமிழை ஆண்டாள் (இது கண்ணதாசன் கையாண்ட தொடர்) என்று ஆண்டாளைப் பாராட்டுவதற்கும் ஆண்டாள் யாராக வாழ்ந்தாள் என்பதற்கும் தொடர்பே இல்லை என்னும் எளிய தர்க்கத்தைக்கூடக் கணக்கில் கொள்ளாத ஆர்வக்கோளாறுதான் போகிறபோக்கில் கட்டுரையின் கருப்பொருளுக்குத் தொடர்பற்ற வாக்கியத்தை நுழைத்துவிட்டுப் போகும். வெகுஜனத் திரைப்படங்களின் பாத்திரங்களுக்காக எழுதப்படும் பாடல்களில் சுய விருப்பம் சார்ந்து இதர சங்கதிகளை நுழைத்து சுய திருப்தி காணும் போக்கின் நீட்சியாகவே இது வெளிப்படுகிறது.

தேவதாசி மரபின் வரலாற்று ஆதாரங்கள், சமூக வரலாற்றுக் களத்தில் அச்சொல் பெற்றுவரும் மாற்றங்களின் கோலங்கள் குறித்த தெளிவு, கலையைப் பேணுவதற்காக ஒப்புக்கொடுக்கப்படும் பெண்களின் வாழ்க்கைக்கும் பக்தியின் உச்ச நிலையில் கடவுளுக்குத் தன்னைத் தானே அர்ப்பணித்துக்கொள்ளும் வைணவ பக்தி மரபுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாத அலட்சியம், தேவதாசி என்னும் சொல்லின் சமகாலப் பொருள் குறித்த சுரணையின்மை, ஒரு சொல் பல்வேறு தளங்களில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த பொறுப்பின்மை ஆகியவற்றின் மொத்த விளைவாகவே வைரமுத்து எடுத்தாண்ட மேற்கோளை மதிப்பிட முடிகிறது.

பிறரால் கோயிலுக்கு நேர்ந்துவிடப்படுவதற்கும் தன்னைத் தானே கடவுளுக்கு அர்ப்பணித்துக்கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாடு வெறும் மரபுகள் சார்ந்தது மட்டுமல்ல. ஒன்றில் தனிநபரின் தேர்வும் மற்றொன்றில் அதற்கான வாய்ப்பின்மையும் இருக்கின்றன. மிகுந்த தன்னுணர்வுடன் கண்ணனுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஆண்டாளின் சுய பிரக்ஞையை வைரமுத்து புரிந்துகொள்ள வில்லை, மதிக்கவில்லை என்பதும் அவருடைய நிலையை மிகவும் பலவீனப்படுத்திவிடுகிறது. “இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,” என்று கடவுளிடம் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் பக்தி மனம் வைரமுத்துவுக்கு இல்லாமல் இருக்கலாம். அதைப் புரிந்துகொள்ளக்கூடிய வாசிப்புத் திறன் அவருக்கு இருக்காது என்பதை எப்படி நம்புவது?

பக்தர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்று செருகப்படும் பின்குறிப்பு இதன் எதிர்வினைகள் பற்றிய யூகம் வைரமுத்துவுக்கு ஓரளவேனும் இருந்திருக்கும் என்பதையே காட்டுகிறது. அந்தச் சொல்லின் வேறு அதிர்வுகளை அறியாத பாமரர் அல்ல அவர் என்பதால் அவரிடம் தொழிற்பட்டது அலட்சியமும் பரபரப்பைக் கிளப்பும் வேட்கையும்தான் என்னும் முடிவுக்கும் வர முடியும்.

சர்ச்சைக்குரிய கருத்து என்பதை அறியாமல் வைரமுத்து சொல்லிவிட்டார் என்று நம்ப அவர் கட்டுரையும் அவருடைய பாவனையும் இடம் தரவில்லை. இந்நிலையில் சர்ச்சைக்குரிய விஷயத்தை அதற்கான நியாயங்களுடன் கையாள்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆண்டாள் தேவதாசி என ஒருவர் சொன்னார் என்றால், அந்தக் கருத்தை முன்வைக்கும் வைரமுத்து அது பற்றிய தன் கருத்தைச் சொல்ல வேண்டும் அல்லவா? அந்தக் கருத்தின் மதிப்பு என்ன என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் அலச வேண்டும் அல்லவா? அது விவாதிக்க வேண்டிய கருத்து என்று அவர் நினைக்கிறார் என்றால் அது ஏன் விவாதத்துக்குரியதாகிறது என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? இவை எதையுமே செய்யாமல், கட்டுரையின் போக்கில் தேவை ஏதும் அற்றதொரு நிலையில் மேற்கோளை வீசும் வைரமுத்து பொறுப்பற்றதொரு பின்குறிப்பையும் மேதாவித்தனமான பாவனையுடன் முன்வைக்கிறார். எனக்கு இந்த மேற்கோளும் தெரியும், அதற்கான எதிர்வினை என்ன என்பதும் தெரியும் என்று அமர்த்தலாக மீசையைத் தடவிவிட்டுக்கொள்கிறார். ‘ஐயா, உங்களுக்கு அந்த மேற்கோளும் பக்தர்களின் எதிர்வினையும் தெரியும்; சரி, அதற்கு மேல் என்ன தெரியும் என்பதையும் சொல்லுங்கள்,’ என்ற கேள்வியை வைரமுத்துவை நோக்கிக் கேட்க வேண்டும்.

தேவதாசி மரபுக்கும் ஆண்டாளுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றித் தனக்குச் சொல்ல ஏதேனும் இருந்திருந்தால் வைரமுத்து சொல்லியிருப்பார். சொல்ல ஏதுமற்ற இடைவெளியைப் பாவனைகளால் இட்டு நிரப்புகிறார். மீசையின் நிறத்தைச் சாயத்தால் மறைக்கலாம். ஆனால், உண்மையின் உருவத்தைப் பாவனைகளால் மறைக்க இயலுமா?

வைரமுத்து நிரூபித்தாலும் நிரூபிக்காவிட்டாலும் ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கக்கூடுமோ என்னும் கேள்வியை எழுப்பிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஆண்டாள் வாழ்ந்ததாகக் கருதப்படும் 8, 9ஆம் நூற்றாண்டுகளில் தேவதாசி மரபு கால் கொண்டிருந்ததற்கான சான்றுகள் இல்லை. இருந்தால் வைரமுத்து அதைத் தர வேண்டும். அப்படியே அப்போது தேவதாசி மரபு இருந்திருந்தாலும் அது 19ஆம் நூற்றாண்டின் இழிநிலையை அடைந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஆண்டாள் தேவதாசியாகவே இருந்திருந்தாலும் கலையைப் பேணுவதற்கான மரபை வரித்துக்கொண்ட பக்திக் கவிஞராகவே அவரைக் காண வேண்டும். இவையெல்லாம் வைரமுத்துவுக்குத் தெரிந்திராமல் இருக்காது. எனில் அவர் ஏன் தன் ஆய்வை விரித்துக்கொண்டு போகவில்லை? விரித்துக்கொண்டுபோக அவகாசமோ விருப்பமோ இல்லாதபோது நிரூபிக்கப்படாத ஒரு சொல்லாடலைக் குசும்பான பின்குறிப்புடன் பயன்படுத்துவது ஏன்? உ.வே. சாமிநாதய்யர் பற்றிய கட்டுரை வாசிப்பின் முடிவில்

ஆரிய அய்யருக்குத் திராவிடத் தமிழினின் வணக்கம் என்று குறிப்பிட்டதும் இந்தக் குதர்க்கத்தின் அடையாளம்

தானே?

ஆண்டாளின் கவிதை என்னும் மகத்தான படைப்புவெளிக்கு முன் நியாயமாகக் கொள்ள வேண்டிய அடக்கத்தையும் இயல்பாக எழும் பிரமிப்பையும் கொள்ளாமல் கேளிக்கைசார் கவியரங்க உரையின் தளத்திலும் பட்டிமன்ற நடுவரின் தொனியிலும் ஆண்டாளின் கவிதையை அணுகும் வைரமுத்து அங்கேயே ஆண்டாளைப் படைப்பு ரீதியாக இழிவுபடுத்திவிட்டார். மொழி அழகு, சொல் நயம், உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய அளவுகோல்களைத் தாண்டி அவரால் ஆண்டாளின் கவித்துவப் பரப்பை அணுக முடியவில்லை. உலகிலுள்ள எல்லாவற்றையும் தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் அவரை இத்தகைய எல்லை தாண்டிய அறிவுலக அசட்டுத்தனங்களில் ஈடுபடவைக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த அசட்டுத்தனமும் அறிவார்ந்த பாவனையும் சேர்ந்து ஒரு சொல்லை உரிய பொறுப்போ முகாந்திரமோ இல்லாமல் பயன்படுத்தவைக்கின்றன. இத்தகைய பயன்பாடுதான் அந்தச் சொல்லை அவதூறாக மாற்றுகிறது. இந்த அவதூறை ஆண்டாள் மீது சுமத்தியதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்தால் அதுவே நியாயமாக இருக்கும்.

வைரமுத்துவுக்கு எதிராக முன்வைக்கப்படக்கூடிய இத்தனை நியாயங்களையும் மீறி, பெரும்பான்மைத் தாலிபான்களிடமிருந்து வைரமுத்துவின் கருத்துச் சுதந்திரத்தையும் அவருடைய பாதுகாப்பையும் சட்டபூர்வமான அவருடைய உரிமைகளையும் பாதுகாக்கக் குரல் கொடுக்க வேண்டிய கடமையை அறிவுலகம் சமரசமின்றி ஆற்ற வேண்டும். தமிழ்ச் சூழலில் அத்தகைய குரல்கள் தற்போது பல தளங்களிலும் ஓங்கி ஒலித்துவருவது அதன் ஆரோக்கியத்தை ஓரளவேனும் நிரூபிப்பதாகவே உள்ளது.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.