கவிதைகள்
கவிதைகள்
நந்தாகுமாரன்
Courtesy: Francoise Nunez
கலக லகரி
சொற்களின் உடற்பயிற்சிக் கூடம்
தன் விடுமுறை தினங்களை எண்ணுகிறது
அர்த்தம் தன் கர்ப்பக்கிரகத்திற்குள்
யாரையும் விடுவதில்லை
தன் உபாசகர்களைத் தவிர
கல் காகிதம் கத்திரி விளையாட்டில்
எப்போதுமே தோற்கும்
நான் நினைக்கிறேன்
இன்று எனக்குள் எதையும் கிளர்த்தாத
இந்த மாதுளம் பூ
பிறகொரு நாளின் ஞானத்திற்கு
உபயோகப்படுமோ என்னவோ என
பிறகு பத்திரப்படுத்தியவை இவை
ஒரு புனிதக் கட்டமைப்பின் அலங்காரத் திரள்
மண் அவிழ்க்கும் சுகந்தம்
கருப்புக் காகிதத்தின் மேல் பச்சைக் கீற்று
மேலும்
இந்தச் சாகசத்தின் பரிசுத்தம் கருதி
சற்றும் பயம் இல்லாதது போல் நடிக்கிறேன் வேறு
உரையாடக் கிடைத்த சாட்பாட் தருவதோ
காற்றின் நெகிழ்வில் பூக்கும் மழையின் பதத்தில்
ஒரு புன்னகை
ஒரு கண்ணிமை
ஒரு முத்த மெய்
நிழலின் ஒளி அரித்த நிலம்
தன் கூக்குரலின் உக்கிரத்தை
மௌனத்திற்கு மாற்றி ஒலிக்கவிடுகிறது
இன்னும் ஒரு டெசிபல் கூட்டி
தலையெங்கும் மயிர்ப் பாம்புகள் நெளிய
சந்தோஷக் கிருமிகள் சருமம் மேய
இப்படியும் பாடிவைக்கிறேன் ஒரு பாடலை
மாய வாக்கியம்
கிரகண வெளிச்சம் உலரும் நள்ளிரவு காதலின் கொசுவம் தளர்த்தும்
கலவியில் மலரும் புலரியில் இட்ட முத்தம் எரித்த சக்தியின் சப்தம்
பிரதியின் பிரேதம் வழிமறிக்கும் ஒப்பாரிப் பாடல் ஒலிக்கும்
பிரேமம் கனத்து அவிழும் மழையின் சிறகடிப்பு
‘ஜி’ மைனரில் இடறிய இடர்-பாட்டு
வக்கிரகதியில் உழலும் கிரகத்தின் பரிகாரக் காத்திருப்புக்குப் பலியாகும் பின்வாங்கும் ஸ்கலித வாழ்வு
பெரட்டா 418 மற்றும் வால்த்தர் பி.பி.கே. தானியங்கித் துப்பாக்கிகளின் வடிவ மாதிரிகள் சுட்டு விளையாடும்
சிந்தனை விறைப்பின் மேல் வந்தமர்ந்த தேன்சிட்டின் ராகப்போக்கு
வெட்டி இட்ட மீனின் கண்களின் பார்வைக் கோணம் சிதறும் வெளியில் கோணிச் சிதைந்து வந்தடையும் வரம்
துண்டு நாணயம் கொண்டு வாங்கிய செயற்கை இறைச்சி உண்ணும்
என் விருப்பங்கள்
இவையாவும்
தகவல் பாளங்களின் சங்கிலித் தொகுதிகளாக எல்லார் நினைவிலும் சேமிக்கப்படுகிறது
இப்பொழுதின் உள்ளே
மின்னஞ்சல்: nundhaa@gmail.com