டு லெட் எளிமையின் கலையழகு
நல்ல படங்களைப் பற்றித் தமிழில் அதிகம் பேசப்படுகிறது. சிற்றிதழ்கள் உள்ளிட்ட தீவிர இதழ்களில் மட்டுமின்றி வெகுஜன இதழ்களிலும் நல்ல சினிமா, உலக சினிமா என்று பேசப்பட்டுவருகிறது. இத்தகைய பேச்சுக்கள் நல்ல திரைப்படங்களை எடுப்பதற்கான உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் இயல்பான எதிர்பார்ப்பாக இருக்க முடியும். ஆனால் கலை அனுபவத்தைத் தரும் படங்களைப் பற்றிப் பேசுவது, அத்தகைய படங்களைத் தேடிச் சென்று பார்ப்பது ஆகியவை தமிழ்த் திரைப்படங்களின் சராசரித் தரத்தைச் சிறிதளவும் உயர்த்தவில்லை என்பதே யதார்த்தம். பேசுவதற்கு ஓர் அளவுகோல், செயல்படுவதற்கு வேறு அளவுகோல் என்னும் போலித்தனம் தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கும் நோய்களில் ஒன்று.
திரைப்படம் என்னும் ஊடகம் வாழ்க்கையைக் கலாபூர்வமாக அணுகுவதற்கான ஒரு வழி என்னும் பிரக்ஞையோடு வரும் படங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தப் பிரக்ஞையை முழுமையாக இல்லாவ