பூனை பியானோ பிரிட்டோ
பூனை
சந்துக்கு திடீரென்று ஒரு களை வந்து விட்டது. சந்து என்றால் நாங்கள் குடியிருக்கிற சந்து அல்ல. சந்தின் சந்து. எங்கள் வரிசை வீடுகளின் கட்டட முடிவுக்கும் அடுத்த கட்டடச் சுவருக்கும் இடையிலான, அதிகம் யாரும் புழங்காத சந்து. இரண்டாவது வீட்டுக்காரர் அவரது மீசையை வெயில்பட பார்த்து வெட்டவும், உள்மூக்கிலிருந்து நீளும் முடிகளை ஒட்ட நறுக்கவும், நான் ரகஸிய-சுவாரஸிய அலைபேசி பேச்சுகளைத் தொடரவும், ஐந்தாவது வீட்டின் துணிகள் காயவும் பயன்படுத்தி வந்தோம். (ஒரே ஒரு முறை மூன்றாவது வீட்டுப் பெண் முட்டிக்கால்களைக் கட்டிக் கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.) பருவமழை பொய்த்தாலும் சந்தில் மழைச்சத்தம் கேட்கும். மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் நிறைந்துவிட்டால் வழிந்து சந்தில் விழும். ஐந்தாவது வீட்டின் சன்னலுக்குள் சாரல் தெறிக்கும். அருவிக்குப் பக்கத்து வீடல்லவா? சத்தம்