அந்தச் சிறு பகுதி
ஒரு க்ளாஸில் ஒன்றைப் பொய்யாக ஊற்றியதும்
அது பொய்யாக நிரம்பியது
அதை எடுத்து அவருக்குப் பொய்யாகக் கொடுக்க
அவரும் பொய்யாக வாங்கி மடக்மடக்கெனக் குடித்து
‘ஏ...ப்’ என்றார்
கொஞ்சம் புளிப்பதாகக் கூறிப் பரவாயில்லை என்றார்
எனக்குப் புளிப்பு பிடிப்பதால் நேர்ந்த தவறென
அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு
எப்பொழுதும்போலப் பொய்யாக எழுந்து போய்விட்டார்
எப்பொழுதுமே இப்படித்தான் அவர்
பொய்யாகப் போய்விடுவார்
எப்படியும் திரும்பப் பொய்யாக வருவார்
அந்த க்ஷணமாகக்கூட இருக்கலாம் அது
எப்படியாயினும் இடைப்பட்டு
ஒருசிறுபகுதி இருக்குமல்லவா?
கூறவந்ததைக் கூறிவிட்டேன்
இனி உங்கள் பாடு.
மின்னஞ்சல்- selvasankarand@gmail.com