Google   www kalachuvadu.com

சு.ரா. பக்கங்கள்
காலத்தின் கனல் - 5

சுந்தர ராமசாமி
'சுந்தர விலாஸ்'
ஆர்.வி. புரம்
நாகர்கோவில். 23.3.71

அன்புள்ள நண்பர் திரு. பொன்னுசாமி அவர்களுக்கு,

வந்தனம். தாங்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தும் கிடைத்தன. பதில் போடாது நாளைக் கடத்தும் காட்டு மிராண்டித்தனம் ரத்த குணமாக இருக்கிறது. மனைவி நினைவுபடுத்திய சந்தர்ப்பங்கள் 'நூறு' இருக்கும். நானே நொந்துகொண்ட தருணங்கள் இன்னொரு 'நூறு' இருக்கும். எதுவும் நிகழாததுபோல் தாங்கள் தங்கள் மனசை என் அருகிலேயே நட்டுக்கொண்டு நிற்கிறீர்கள். நான் என்னை மிகவும் மோசமாக நினைத்துக் கொள்கிறேன். மன்னிக்க வேண்டும்.

தங்கள் வருகையை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உறுதிப்படுத்தி உடன் கடிதம் எழுதவும். தாங்கள் வரும் நாட்களில் எங்கும் போவதற்கில்லை. பேச நிறைய இருக்கிறது, அரசியலிலிருந்து இலக்கியம் வரையிலும். இம்முறை தாங்கள் வரும்போது நண்பர் நம்பியையும் சந்திக்கும்படி செய்து கொள்ளலாம்.

அன்புடன்

சுந்தர ராமசாமி

m

சுந்தர ராமசாமி                                                  நாகர்கோவில்
                                                                                                     22.12.1981.

அன்புள்ள பொன்னுசாமி,

உங்கள் கடிதம். வியப்பும் சந்தோஷமும் ஏற்பட்டன. நாம் சந்திக்காத இடைவெளியில் தான் என்னென்ன காரியங்கள் சாதித்திருக்கிறீர்கள். மந்திர மாயமாக இருக்கிறது. எம்.ஏ. பட்டம், மேற் கொண்டு ஆராய்ச்சி, தபால் வழி சட்டப்படிப்பு! வேலையிலும் குடும்பத்திலும் இருந்துகொண்டு. கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அசுர சாதனைகள்! உங்களை அணைத்த படி உங்கள் கையை வேகமாகக் குலுக்கி முதுகில் 'சொட்டு'த் தருவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அச்சகம் ஒன்று ஏற்படுத்தியிருப்பதிலும் பிரசுர நிலையமும் மாத இதழும் கொண்டுவர எண்ணுவதிலும் மகிழ்ச்சி.

இங்கு நானும் என் குடும்பத்தினரும் நன்றாக இருக்கிறோம். எழுதுவதும் படிப்பதும் கடை வேலையும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மாதந்தோறும் வீட்டில் வைத்துக் கலாச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறேன். இதுவரையிலும் 50, 60 கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். இதைத் தவிர சொல்லும்படி செயல்பாடு ஒன்றுமில்லை. என் நாவல் ஒன்று அச்சில் இருந்துகொண்டிருக்கிறது. இம்மாதக் கடைசியில் வெளிவரக்கூடும்.

அங்கு உங்கள் மனைவிக்கும் குழந்தைக்கும் (அல்லது குழந்தைகளுக்குமா?) எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

சென்னை வரும்போது சந்திக்க இயலும் என நினைக்கிறேன்.

அன்புடன்,

சுரா

(திரு. இ. பொன்னுசாமி முன்னாள் மத்திய அமைச்சர். தற்போது பா.ம.க. மக்களவை உறுப்பினர்.)

m

Sundara Ramaswamy
Room No. 15
Sabu Mansions
Babu Rao Road , Vellore

20.4.72

அன்புள்ள நண்பர் திரு. பொன்னுசாமி அவர்களுக்கு வணக்கம்.

என்னை ரொம்பவும் மன்னியுங்கள். இதற்கு மேல் எதுவும் சொல்வது அர்த்தமற்றது. எனது சூழ்நிலைகள் என்னை இடையறாது சோதிக்கின்றன. இங்கு இருக்கிறேன். எனது சகோதரி மீனா CMC Hospitalஇல் சேர்க்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு Blood Cancer. இங்கு வந்து ஐந்தாறு வாரங்கள் ஆகின்றன. ரொம்பவும் நொந்துபோய்விட்டேன். கூட்டத்திற்குத் தாங்கள் வந்திருக்கக்கூடுமென்று எதிர்பார்த்தேன். நேரில் சந்தித்துப் பேச ஆசை. கூட்டம் முடிந்ததும் திரும்பிவிட்டேன். இப்பொழுது சகோதரியின் உயிர் கடுமையான சோதனைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் நாட்கள். அடுத்த வாரம் சற்று ஆசுவாசம் கிடைக்கும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். ஒருக்கால் அவ்வாறு ஏற்பட்டால் மே முதல் தேதி நான் சென்னை வரக் கூடும். அங்கு அன்று எனது மாமன் மகனுக்குத் திருமணம். அப்பொழுது அவசியம் தங்களைச் சந்திக்கிறேன்.

கமலா இங்கு என்னுடன் இருக்கிறாள். குழந்தைகள் நாகர்கோயிலில் இருக்கின்றனர்.

தாங்கள், தங்கள் மனைவி குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன்.

அன்புடன்

சுந்தர ராமசாமி

உள்ளடக்கம்