Google   www kalachuvadu.com

அண்டை வீட்டார்
கர்நாடகம்:
அடிப்படைவாதச் செயல்கள்
நஞ்சுண்டன்

கர்நாடகத்தில் மிகச் சமீபகாலத்தில் நடந்துள்ள சில நிகழ்வுகளைக் காலச்சுவடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது, யூ. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்கார நாவல் தொடர்பானது. கர்நாடகத்திலுள்ள மங்களூர்ப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பில் இந்தி மொழியைத் தேர்ந்துள்ள மாணவர்களுக்கு நான்காம் பருவத்தில் சம்ஸ்கார பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சந்திரகாந்த் குஸனூர் என்பவர் அதை இந்திக்கு மொழிபெயர்த்துள்ளார். பாடத்திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நான்காம் பருவம் தொடங்கிவிட்ட பிறகு சமீபத்தில் மங்களூர்ப் பல்கலைக்கழக இந்தி ஆசிரியர் சங்கத்தினர் நாவலில் ஆபாசமான இடங்கள் பல உள்ளன; அவற்றை வகுப்பறையில் பாடமாகச் சொல்வது இயலாது; இப்படிப்பட்ட நாவல்களைப் பாடமாக வைத்தால், ஆசிரியர்களே ஆபாசமான நாவல்களைப் படிக்குமாறு மாணவர்களைத் தூண்டியதாக அமைந்துவிடும் என்றும் அதனால் சம்ஸ்காரவை உடனடியாகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் எனத் துணை வேந்தரிடம் புகார் செய்துள்ளனர். பாடத்திட்டலிருந்து அதை நீக்கப் பாடத் திட்டக்குழுவுக்கே அதிகாரமிருப்பதாகவும் தன்னால் அது முடியாது என்றும் துணைவேந்தர் கூறிவிட்டார்.

சம்ஸ்கார வெளிவந்தபோதே அது மாத்வ பிரமாணர்களுக்கு எதிரான நாவல் எனப் பெரும் சர்ச்சை எழுந்தது. எல்லாவற்றையும் மீறித் தமிழ் உள்ளிட்ட ஏராளமான இந்திய மொழிகளுக்கு அது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டுமல்லாது, பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் சம்ஸ்கார சென்றுள்ளது. இந்தியா மற்றும் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பல ஆண்டுகளாக அது பாடமாக இருந்துவந்துள்ளது. ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் கன்னடத் திரைப்படமும் சம்ஸ்காரதான். தற்போது, மாணவர்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதற்காக அதற்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் நடந்துவருகிறது. சர்ச்சையும் எதிர்ப் பிரச்சாரமும் அனந்தமூர்த்திக்கோ அவர் நூல்களுக்கோ புதிதல்ல. இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் லிங்கதேவரு ஹளெமனெ கர்நாடகத்தின் மிக மதிக்கப்படும் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவர். பெரும் செல்வாக்கு உடைய கன்னட நாளிதழான பிரஜா வாணியில் 18 பிப்ரவரி 2008 அன்று சம்ஸ்காரவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். இன்னும் பல இதழ்களிலும் சம்ஸ்காரவைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கூடாது என எழுத்துக்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சர்ச்சை ஒரு பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தொடர்பானது. பேராசிரியை ராஜலட்சுமி ஆந்திராவின் ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். இவரைக் கர்நாடகத்தின் பிஜாப்பூரிலுள்ள மகளிர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக ஆளுநர் நியமித்தார். உடனே, கன்னட அமைப்புகள் சீறி எழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவரை அப்பதவியில் நியமிக்கப் பலத்த எதிர்ப்பு எழுந்தது. பிறகு ராஜலட்சுமியின் நியமனத்தை ஆளுநர் திரும்பப் பெற்றுக்கொண்டார். கேரளாவின் கோட்டயத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, அதன் முதல் துணைவேந்தராக யூ. ஆர். அனந்தமூர்த்தியை நியமித்தது கேரள அரசு. பிறகு, கேரள மாநில அரசுப் பள்ளிக் கல்விச் சீரமைப்புக் குழுவிற்கு அனந்தமூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகளில் நியமனம் பெற்றுள்ளார்கள். அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, ராஜலட்சுமியின் நியமனத்தை எதிர்ப்பது தவறு என்றும் இப்படிப்பட்ட போக்கால் கர்நாடக மக்கள் மற்ற மாநிலத்தவர்களிடமிருந்து அந்நியப்பட நேரிடும் என்றும் 20 பிப்ரவரி 2008 அன்று கன்னட டைம்ஸ் பத்திரிகையில் நடராஜ் ஹ§ளியார் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தின் பிற்பட்டோர் நலவாரியத்தின் தலைவராக இருப்பவர் முனைவர் துவாரகாநாத். இவர் பகுத்தறிவாளராக அறியப்பட்டவர். சமீபத்தில் தலைக்காவேரியில் ஒரு கோவிலில் தீர்த்தப் பிரசாதத்தை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். அதைக் கேள்விப்பட்ட மதவாத அமைப்பொன்றின் தொண்டர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று கோகோ கோலா பாட்டிலில் கொண்டுசென்றிருந்த தீர்த்தப் பிரசாதத்தைக் கட்டாயப்படுத்தி அவரைக் குடிக்கச் செய்திருக்கிறார்கள்.

இம்மூன்று சம்பவங்களுக்குப் பின்னாலும் ஒரே மனப்பான்மையில் உருவான அடிப்படைவாதம் செயல்பட்டிருப்பதை உணரலாம். கர்நாடகத்தில் அடிப்படைவாதம் பெருகியும் சகிப்புத்தன்மை குறைந்தும் வருவது கன்னட அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது.

உள்ளடக்கம்