|
அணுசக்திக்கு ஆதரவான கனிமொழியின் பாராளுமன்றப் பேச்சு அதிர்ச்சி தருவதாக
இருக்கிறது. பெண்ணுரிமை, தமிழர் இனப்பற்று, தமிழ் மொழிப்பற்று, ஈழத்தமிழரின் அவலநிலை,
கலங்க வைக்கும் மலேசிய நிகழ்வுகள், நதிநீர்ப் பங்கீட்டுத் தகராறுகள் எனத் தமிழரைப்
பாதிக்கும் பிரச்சினைகள் எத்தனையோ இருந்தும், தனக்கு ஆழமான புரிதல் இல்லாத அணுசக்தி
பற்றி கனிமொழி தனது முதல் பேச்சை அமைத்துக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.
பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பேசும் உரிமை மற்றும் வாய்ப்பு இருந்தும், தமிழினத்
தலைவரின் மகளும் தமிழ்க் கவிஞருமாகிய கனிமொழி ஆங்கிலமொழியைத் தேர்ந்தெடுத்துப்
பேசியதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக பலம் வாய்ந்த அணுசக்தித்
துறையோடு ஒருவித மயக்கத்தில் உழலும் பிரதமரின் கவனத்தைக் கவரவும், தில்லி
மேட்டுக்குடியினரின் ஆமோதிப்பைப் பெற்றுக் கொள்ளவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
அங்கீகாரத்தைத் தன்பால் திருப்பிக்கொள்ளவும் அணுவிஞ்ஞானம், அமெரிக்கா, ஆங்கிலம் எனப்
பொழிந்திருக்கும் உரை பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.
இந்தியாவுடனான அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒப்பற்றது, இந்த வாய்ப்பை நாம் தவறவிடக்
கூடாது என்றெல்லாம் முழங்குவதற்கு முன்பாக அமெரிக்காவுக்கு இந்தியா மீது ஏன் இந்தத்
திடீர்ப் பாசம், எதற்காக விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று சற்றே சிந்தித்துப்
பார்த்திருக்கலாம். அமெரிக்காவிலுள்ள கார்னீகி பவுண்டேஷன் என்னும் நிறுவனத்தில்
ஆஷ்லி டெல்லிஸ் எனும் அறிஞர் 2006ஆம் வருடம் தனது ஆய்வறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்து
விவாதித்தார். அதில் இந்தியாவின் அணுமின் திட்டத்தின் மூன்று நிலைகளை விவரித்து,
இந்தியா - சீனா அணுவாயுத நிலையினை ஒப்பிட்டு, ஓர் ஆபத்தான பரிந்துரையை வழங்கினார்.
அதாவது, தோரியத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் மூன்றாவது நிலைக்கு இந்தியா
போய்விடாது தடுத்து, அவர்களுக்கு வேண்டிய அணுமின் தொழில்நுட்பம், யுரேனியம்
ஆகியவற்றைக் கொடுத்து சீனா அளவுக்கு அணுஆயுதங்கள் தயாரிக்க உதவுவது அமெரிக்காவின்
பாதுகாப்புக் கொள்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். இந்தியாவை
உபயோகித்து சீனாவைக் கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்க அரசின் கொள்கையாக இருக்க
வேண்டும் என்று வாதிட்டார். இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டே அமெரிக்க
அதிகாரவர்க்கம் அணுமின் ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கடுமையாக முயல்கிறது.
நாடு முன்னேற்றம் அடைவதற்கான ஒரு வழியாகவே அமெரிக்க அணுமின் ஒப்பந்தத்தை தி.மு.க.
தலைவர் கருதுவதாக உரையில் சொல்லப்பட்டுள்ளது. எது முன்னேற்றம்? எது வளர்ச்சி?
மேட்டுக்குடியினரின் மின்சாரத் தேவைக்காக ஏழை விவசாயிகளின், மீனவ மக்களின், தலித்
தொழிலாளர்களின் நிலமும் நீரும் கால்நடைகளும் மீன் உணவும் நஞ்சாவதும் குழந்தைகள்
நோய்வாய்ப்படுவதும், எதிர்காலம் இருண்டு போவதுந்தான் முன்னேற்றமா?
2020க்குள் சீனா 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் தயாராகி வருவதாகவும்
இந்தியா 30,000 மெகாவாட் உற்பத்திசெய்ய எண்ணி இருப்பதாகவும் கூறுகிறார் கனிமொழி.
சீனா, அமெரிக்காவிடமோ அல்லது வேறு யாரிடமோ கையேந்தி நிற்கவில்லை என்பதையும், இந்திய
அணு சக்தித் துறையினர் 2000 வருட முடிவுக்குள் 20,000 மெகாவாட் மின்சாரம்
தயாரிப்போம் எனத் தம்பட்டம் அடித்து, சாதிக்கத் தவறியதையும் சுட்டிக்காட்டியாக
வேண்டும்.
பெருகிவரும் நம் நாட்டின் ஆற்றல் தேவை பற்றிக் கவலைப்படுகிறார் கனிமொழி. காற்றாலை
உதவாது, இயற்கை எரிபொருள் கைகொடுக்காது என்றெல்லாம் காரணங்கள் கூறும்போது, இந்தியா
ஓர் ஏழை நாடு என்பதையும், நம் மக்களுக்குக் கல்வி, வீட்டுவசதி, உடல்நலம்,
போக்குவரத்து எனப் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இருப்பதையும் கருத்தில்கொள்ள
வேண்டும்.
உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, நாட்டின் பாதுகாப்பும் முக்கியமானதுதான்.
ஆனால் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் அணுவாயுதப் போட்டியில்
இறங்கும்போது, நமது நாட்டின் ஏழ்மையும் வறுமையும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
அணுமின் உற்பத்தி மிக அதிகமான செலவை ஏற்படுத்தும் என்பதும், அணுக்கழிவினைப்
பாதுகாத்திட அதைவிட அதிகமாகச் செலவாகும் என்பதும், 40 ஆண்டுகள் மின்உற்பத்திக்குப்
பிறகு அணு உலைகளைச் செயலிழக்கச் செய்ய இன்னும் அதிகம் செலவாகும் என்பதையும் கனிமொழி
அறிந்திருக்கக்கூடும்.
இறுதியாக, மூன்று மைல் தீவிலும், செர்னோபிலில் நடந்த அணுமின் விபத்துக்களை அவை
அப்படி ஒன்றும் பெரிதானவை அல்ல என்பது போன்று சாதாரணமாக உரையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இலட்சக்கணக்கான மக்களை நேரடியாகவும்,
மறைமுகமாகவும் பாதித்த இந்த விபத்துக்கள், பல நாடுகளின் வளர்ச்சியையும்
நல்வாழ்வையும் பெருமளவில் பாதித்திருக்கின்றன என்பது தான் உண்மை.
1979 மார்ச் 30ஆம் தேதி மூன்று மைல் தீவின் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும்
சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கவர்னர்
ரிச்சர்டு தார்ன்பெர்க் உத்தரவிட்டார். சிலமணி நேரங்களுக்குள் 1,40,000 மக்கள் அவசர
அவசரமாக வெளி யேற்றப்பட்டனர்.
அந்த மின்நிலையத்தின் கட்டடத்துக்குள் கசிந்திருந்த கதிரியக்கக் கழிவுகளை அகற்றும்
பணி 1979ஆம் ஆண்டு தொடங்கி 15 வருடங்கள் நடந்தது. அதற்கான செலவு 4,400 கோடி ரூபாய்.
1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வறிக்கையின்படி, மூன்று மைல்
தீவு அணு உலைகளின் 12 கிலோ மீட்டர் சுற்றளவில் புற்றுநோய் 4 மடங்கு
உயர்ந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது. செர்னோபில் விபத்தினால் 20 லட்சம் ஏக்கர்
விவசாய நிலம் பாழாகிப்போனது. 3,30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்களை அப்
புறப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் இதர உதவிகள் வழங்கவும்
இதுவரை 2,88,000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. யுக்ரெயின், பெலரூஸ், ரஷ்யா போன்ற
நாடுகளில் 1986 - 2000 வருட காலகட்டத்தில் ஏற்பட்ட விவசாய இழப்பின் மதிப்பு மட்டுமே
5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். யுக்ரெயின், பெலரூஸ் நாடுகள் தமது தேசிய பட் ஜெட்டில்
6 - 7 விழுக்காடு பணத்தை செர்னோபில் விபத்துத் தொடர்பான திட்டங்களுக்கு ஆண்டுதோறும்
செலவிட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட உண்மைகளை ஒதுக்கிவைத்து, உணர்வுகளைப் புறந்தள்ளி, மனிதநேயத்தை மறந்து
கிட்டப்பார்வையோடு கனிமொழியின் பாராளுமன்ற முதல் உரை அமைந்தது உண்மையி லேயே
துரதிருஷ்டமானது.
சு.ப. உதயகுமார்
(சு.ப. உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில்
ஒருவர்.) |