Google   www kalachuvadu.com

விவாதம்
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் கொஞ்ச வருடங்களாகவே அப்போதைக்கப்போது மேலெழுந்துவரும் வேறு சில பண்பாட்டுச் சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். ஆடு, கோழி வெட்டுவதற்கான தடைச் சட்டம், பக்தர்கள் தலைகளில் தேங்காய் உடைப்பது, எண்ணற்ற எருமை மாடுகளைக் கொன்று புதைக்கும் சடங்கு என்று ஒரு பட்டியலையே நாம் தயாரிக்கலாம்.

அத்தனை விஷயங்களிலும் சட்டம், நீதி, அரசு போன்ற நவீன அதிகார மையங்கள் பண்பாட்டு நிகழ்வுகளை மாற்றியமைக்கவோ தடைசெய்யவோ முயன்றதை நாம் கவனிக்க முடியும். குறிப்பாக நாட்டுப்புறப் பண்பாட்டு வழக்கங்கள்மீது அரசாங்கமும் நீதிமன்றமும் வல்லந்தமாய்த் தடைகளை விதிப்பதும் கண்டனங்களைத் தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இது போன்ற நெருக்கடிகள் அதிகார நிறுவனங்களால் தொடுக்கப்படும்போதெல்லாம், பண்பாடு தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது பாரம்பரியத்தையும் மரபையும் நீண்ட காலத் தொடர்ச்சியையுமே. இத்தகைய தருணங்களில் எல்லாம் நீதிமன்றமும் அரசும் பகுத்தறிவின் சின்னங்கள் போன்றும், பண்பாடு மூடநம்பிக்கைகளின், பிற்போக்குத்தனங்களின் தொகுப்பாகவும் முன்னிறுத்தப்படுகின்றன.

சட்டம், நீதி, அரசு போன்றவை பண்பாட்டிற்கு வெளியில் இருப்பவையா? இவையும் பண்பாட்டின் அங்கங்கள்தானா? பண்பாட்டை மிகப் பரந்த தளமென்று யோசிக்கக் கூடியவர்கள், மேற்கூறப்பட்ட சமூக நிறுவனங்கள் அனைத்தும் பண்பாட்டின் அங்கமாகவே காணப்படுவதாய்க் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால், பண்பாடு பிற்போக்குத் தனமானதாகவும் அதன் உட்பகுதிகளான சட்டம், அரசு போன்றவை முற்போக்கானதாகவும் எவ்வாறு விளங்க முடியும்?

தன்னால் அண்ணாந்து பார்க்க மட்டுமே முடிகிற அதிகார மையங்களால் தான் பாதிக்கப்படும்போதெல்லாம் நாட்டுப்புறப் பண்பாடு பதற்றத்தோடு முன்வைக்கும் ஒரே ஆயுதம் 'பாரம்பரியமானது, மரபானது', என்பதுதான். ஆனால், பண்பாட்டின் உண்மையான குணம் எப்பொழுதுமே இதுவல்ல. நாட்டுப்புறப் பண்பாடு நிஜத்தில் நெகிழ்வானது. நீதிமன்றங்களின், அரசாங்கங்களின் வன்முறைக்கு எதிரான மனோபாவத்தையே, அது 'தான் மாறாதவன்' என்று சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தனக்கு வெளியிலிருந்து சர்வாதிகாரத்தொனியோடு சொல்லக்கூடிய கட்டளை அல்லது சட்டம் வடிவிலான எந்தவொரு யோசனையையும் அது கண் மூடித்தனமாக எதிர்க்கவே எதிர்க்கிறது. இந்த குணமே தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் நம்புகிறது.

ஒருபுறம் சமூகத்திலிருந்து விலகிப்போன சட்டம், நீதி, அரசாங்கம்போன்ற அதிகார நிறுவனங்கள். இன்னொருபுறம் பதற்றமடைந்திருக்கும் நாட்டுப்புறப் பண்பாடு. இவையிரண்டிற்குமான மோதலே சமீபகாலமாக நமக்குள் மறுபடியும் மறுபடியும் நடக்கின்றது. இதில் அதிகார நிறுவனங்கள் பகுத்தறிவின் பக்கமும் நாட்டுப்புறப் பண்பாடு மூடநம்பிக்கையின் பக்கமும் நிற்பதான மாயையும் தோற்றுவிக்கப்படுகிறது.

நிஜத்தில் நாட்டுப்புறப் பண்பாடு இன்னதுதான் என்று வரையறுத்துவிட முடியாத கலவையாகவே இருக்கிறது. அது ஏராளமான தவறுகளாலும் நல்லவைகளாலும் தொடர்ந்து மெருகேற்றப்படுகிறது. ஆனால், வெளிப்புறமிருந்து தனது இருத்தலையே கேள்விக்குள்ளாக்கும் சக்திகள் ஊடுருவுகையில், அது தனது இயல்பை மீறித் தற்காப்பு நடவடிக்கையாகத் தன்னையே கெட்டிப்படுத்திக்கொள்கிற வேலையில் இறங்கிக் கல்போல் மாறிவிடுகிறது.

சமூகங்களை, பண்பாடுகளைப் பகுத்தறிவு மயமாக்குவதற்கு வெளியிலிருந்து நிறுவனங்கள் தேவையில்லை. மனிதர்கள், விலங்குகள்மீதான கருணையைப் போதித்தாக வேண்டிய அவல நிலையில் எந்தவொரு பண்பாடும் இல்லை. செய்ய வேண்டியதெல்லாம் அதனுள் நடைபெறும் உரையாடலை விரிவுபடுத்துவதும் செப்பனிடுவதும் துரிதப்படுத்துவதுமே ஆகும். 'ஜல்லிக்கட்டோ, ஆடு கோழி பலியிடுவதோ விலங்குகளைத் துன்புறுத்தும் செயல்தான்' என்பதே உண்மையானாலும் அதனை அந்தந்தப் பண்பாடும் சமூகமுமே தீர்மானிக்க வேண்டும். வெளியிலிருந்து இயற்றப்படும் சட்டங்களும் தடைகளும் அல்ல.

டி. தருமராஜன்

1. "இருநூறு ஆண்டுகளாகத் தொன்று தொட்டு வருவதினாலேயே அது தமிழின அடையாளம்" ஆகிவிடுமா? அவ்வாறெனில் அதன் மடங்கின் நூற்றாண்டுகளில் கோலோச்சிய சதி, தீண்டாமை, தேவதாசி இன்றும் பல்லிளித்துக்கொண்டிருக்கும் ஜாதிபோன்ற தொன்மைகள் தமிழினத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு அடையாளங்களா?

2. "ஜல்லிக்கட்டில் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆழமான ஆர்வமும் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டுள்ளனர்" எனில் அதேயளவு ஆழமான நம்பிக்கையும் ஆர்வமுங்கொண்ட ஊர்க் கூட்டம், பஞ்சாயத்து என்னும் பெயரில் ஊர் விலக்கம் செய்த வழக்குகளில் - கிராமத்து நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை வன்மையாகக் கண்டித்து அதனை ஒழித்துக் கண்காணிக்கப் பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு அவசியமும் அர்த்தமும் என்ன?

3. காளைகளை மூச்சிரைக்கக்கூட அவகாசமளிக்காமல் ஓட, ஓட விரட்டி மனிதனுக்கும் மாட்டிற்கும் வித்தியாசமற்று, ஒரே உணர்வின் புள்ளியில் மூர்க்கமும் வெறியும் உச்சங்கொண்டு புரண்டு கிடந்து, இறுதியில் களைத்துச் சோர்ந்துவிடும் மாட்டை மண்டியிடச் செய்வதுதான் "அன்று மாடுகள் சுதந்திரமாக்கப்பட்டு பூஜிக்கப்பட" வேண்டிய முறையா?

4. "மாடுகளுக்குத் தேவையற்ற வலியோ ரத்தக் காயங்களோ ஏற்படுவதில்லை" என்பதாக நாம் கற்பனை செய்துகொண்டால் மாடுகள் மறுக்க முடியாதுதான். அதற்காக அது உண்மையென்றாகிவிடாது. ஜல்லிக்கட்டின் கெடுபிடியில் மிரண்டு, அலறிக் களத்திலிருந்து காணாமல் போகும் மாடுகளின் மனோபாவம் பற்றி?

5. ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்பதே ஒரு மனிதாதிக்கமான வார்த்தை. ஒரு காளையை மூன்று முதல் 10 பேர்வரை விரட்டி ஒவ்வொருவரும் தலை, வால், காலெனப் பிடித்து அதனை நிலைகுலையச் செய்து வீழ்த்துவது வீரமா?

வீரம் சொரிந்து வழியும் நம் மறவர் குல மாணிக்கங்கள் தம் ஒரேயரு உயிரையும் அளப்பரிய அன்பின் உறவுகளையும் இழந்து காலம் முழுவதும் நம் சாட்டைக்கும் வாழ்விற்கும் முதுகளிக்கும் மாடுகளையும் வருத்திப் பொங்கல் உணவின் தினவைச் செரிக்க ஆடும் விபரீதத்திற்குப் பணயமாக வேண்டுமா?

வஸந்தகுமார்,
கண்டியப்பேரி

உள்ளடக்கம்