|
சொல்லவியலாத வெறுமையை, இழப்பைப் பகிர்ந்துகொண்டு தமது ஆற்றாமையைச் சொல்லிவிட
வார்த்தைகளைத் தேடிய உடைந்த குரல்களின் கனம் நிரம்பியதாயிருந்தது அந்த
மாலைப்பொழுது. ஓவியம் பற்றித் தெரிந்தவர்களின் கூட்டம் மட்டுமல்ல. ஆதிமூலத்தின்
இயல்பினால் அவர்மீது அன்புகொண்ட பலரும் பல்துறைக் கலைஞர்களோடும் விமர்சகர்களோடும்
அந்த அரங்கில் நிறைந்திருந்தனர்.
மூத்த தலைமுறையினர் மட்டுமின்றி இந்த இளந்தலைமுறையினரும் தம் துறையின் முன்னோடிக்
கலைஞனுக்கு மரியாதை செலுத்தக் குழுமியிருந்தார்கள். ஓவியர்கள், இலக்கியவாதிகள்,
விமர்சகர்கள் என்று பலரும் தம் நெஞ்சார்ந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நடிகர் சிவகுமார் வரைந்திருந்த இளம் வயது ஆதிமூலத்தின் ஓவியம் அந்த அரங்கில்
மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஆர்.வி. ரமணியின் ஜிலீமீ லிவீஸீமீs ஷீயீ விணீலீணீtனீணீ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
காந்தி ஓவியங்களை நகை செய்யும் சிற்பிகளாய்ப் பலரும் செதுக்கிக்கொண்டிருந்த
காலகட்டத்தில் தமது கோடுகளால் ஆதிமூலம் உயிர்ப்பித்த காந்தி ஓவியங்களை மையப்படுத்தி
எடுக்கப்பட்டது இந்த ஆவணப்படம். ஓவியம் தீட்டும் ரகசியங்களை யாருடனும்
பகிர்ந்துகொள்ளத் தயங்கும் கலைஞர்களின் மத்தியில் ஆதிமூலம் சற்றே வேறுபட்ட ஆளுமை.
வழிபாட்டிலிருக்கும் காந்தியை வரைந்து முடித்து அமரும் ஆதிமூலத்தின் முகத்தில்
தெரியும் நிறைவும் பெருமூச்சும் தன் மனத்தில் கனன்றுகொண்டிருக்கும் எண்ணத்தைத் தான்
நினைத்தவாறு அப்படியே வெளிப்படுத்திவிட்ட கலைஞனின் ஆசுவாசத்தைத் தெரிவிப்பதாக
இப்படத்தில் அமைந்திருக்கும் காட்சி பார்வையாளர்களின் உணர்வுத் தளத்தைத் தீண்டியதை
உணர முடிந்தது.
ஆதிமூலத்தின் மரணம் தந்த வருத்தத்தைக் காட்டிலும் அவர் நம்மிடையே விட்டுச் சென்ற
நவீனக் கலை மரபின் மீதான பெருமிதம் நிறைந்திருப்பதையும் அவர் நம்மிடம்
தந்திருப்பது, தம் கோடுகளால் உயிர்ப்பித்தது நவீனமானாலும் அந்தக் கோடுகள் தமிழின்
பண்பாட்டை, மரபைத் தனித்த அடையாளத்தோடு பகிர்ந்துகொண்டிருப்பதற்கான புரிதலையும்
காணும் சூழல் அங்கே வாய்த்திருந்தது.
மாணவராகவும் நண்பராகவும் தம்மோடு இருந்த காலகட்டத்தில் ஓவியக் கலையை எப்படித்
தனித்துவத்தோடு கையாண்டாரோ, அதேபோல அவரிடம் பொதிந்து கிடந்த பிறர் மீதான அன்பும்
தனித்த அக்கறையும் அவரைத் தனித்தவம் மிக்கவராகக் காட்டின என்பதையும் தமையத்த
கலைஞர்களையும் இளங்கலைஞர்களையும் அவர்களது முயற்சிகளுக்கெனப் பாராட்டியும்
ஊக்கப்படுத்தியும் புத்துணர்வு தந்தவை அவரது வார்த்தைகள் என்பதையும் அவரது
சமகாலத்திய கலைஞர்கள், நண்பர்கள் வழித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அங்கே இருந்தது.
எங்கே இருந்தாலும் நாம் செய்யும் செயல்களை ஆதிமூலம் கவனித்துக்கொண்டிருக்கிறார்
என்கிற மனரீதியான பலம் இப்பொழுது இல்லாமல் போனதை பெரும் பலவீனமாக உணர்வதாகச்
சொன்னார் மருது.
வயோதிகத்திலும் பேச முடியாத நிலையிலும் தன் மாணவனுக்காக நினைவுமடல் எழுதிக்
கொண்டுவந்து வாசிக்கத் தந்த ஓவியரும் கலைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல் வருமான
சந்தான ராஜின் வருகை, நவீன ஓவியக் கலைக்கென அளப்பரும் பங்களித்த ஆதிமூலத்தின் மீதான
அன்பையும் கலைஞன் மீதான மரியாதையையும் காட்டிற்று.
ஓவியத் துறை சார்ந்தவர்களோடு மட்டுமில்லாமல் பிற கலைஞர்களோடும் எழுத்தாளர்களோடும்
நட்பு கொண்டிருந்த ஆதிமூலம்தான், மாற்றுப் பத்திரிகைகளாக வெளிவந்த பல இதழ்களுக்கும்
முகப்பெழுத்தையும் சின்னத்தையும் வரைந்து கொடுத்தவர். நவீன ஓவியத்தைப் பரவலாகப்
பலரும் அறியும் விதத்தில் வெகுசனப் பத்திரிகைகளோடும் தொடர்புகொண்டிருந்தவர்.
ஆரம்பக்காலத்தில் தெருக் கூத்தினைப் பிரச்சாரம் செய்தபோது, கூத்து ஓவியங்களை
வரைந்து தந்தவரும் அவர்தான்.
எங்கும் எதற்காகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத ஆதிமூலம் வரைந்த கோடுகளின்
நேர்த்தி, எந்தச் சூழலிலும் பொருந்தி நிற்கும் உக்கிரம் கொண்டது. தான் செய்ய
வேண்டிய காரியங்கள் எப்பொழுதும் இன்றும் நிறைய இருக்கின்றன என்பதாக உணரும் ஆதிமூலம்
ஒருபோதும் தன்னைச் சிகரம் தொட்ட மனிதராக எண்ணிக்கொள்ளாதவர். தனக்கென்று தனி
அடையாளத்தை, முன்னிலையைக் கோராத ஆதிமூலத்தின் ஓவியக் கோடுகள் அவரது இயல்பிற்கு
மாறானவை. ஏனெனில், தமிழ் அடையாளத்தோடு பிசிரற்றுத் தீட்டப்பட்ட அவரது கோடுகளின் வழி
பிறந்த தனித்துவம் நவீனக் கலை மரபில் அவருக்கான இடத்தை முன்னிலைப்படுத்தியது என்பதை
அங்கே கூடியிருந்தோர் உரைகள் உணர்த்தின.
இந்தக் கூட்டத்தில் கண்ணன், ஓவியர் தட்சிணாமூர்த்தி, ஓவியர் சந்தானராஜ், ஓவியர்
ட்ராஸ்கி மருது, ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, ப்ரஸன்னா ராமஸ்வாமி,
சா. கந்தசாமி, ந. முத்துசாமி, மணா, பா. செயப்பிரசாகம், மதன், நடிகர் சிவக்குமார்,
விமர்சகர் லட்சுமி வெங்கட்ராமன் ஆகியோர் உரையாற்றினர்.
|