Google   www kalachuvadu.com

பதிவு: அற்றைத் திங்கள், 30.12.2007, சென்னை.
கண்ணுக்குப் புலனாகாத இயக்கம்
ந. கவிதா

நவீன ஓவியக்காரர்கள் குறிப்பாக இளந்தலைமுறை ஓவியக்காரர்களை அன்றைய கூட்டத்தில் அதிகமாகக் காண முடிந்தது. முன்பைப் போல இலக்கியவாதிகளுக்கும் ஓவியக் கலைஞர்களுக்குமான நட்போ பரஸ்பரப் பகிர்தல்களோ இந்தத் தலைமுறையினரிடம் இல்லை என்று குறைபட்டுக்கொண்டவர்களின் வார்த்தைகள் அந்த அரங்கில் வலிமையோடு நிரம்பியிருந்தன.

இராம. பழனியப்பன் தன் ஓவியங்களை ஸ்லைடுகளாகத் திரையிட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் பார்வையாளர்களுக்கு விளக்கினார். வழக்கமாகச் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரை ஒவ்வொரு அற்றைத் திங்களிலும் இடம்பெறும். இராம. பழனியப்பன் நேரடியாகவே தன் பேச்சைத் தொடங்க, அறிமுக உரைக்கான தயாரிப்புகளுக்கு அங்கே இடமற்றுப் போயிருந்தன.

நவீன ஓவியங்களின் பரிச்சயம் அல்லது நவீன ஓவியங்கள் புரியவில்லையென்ற குறைபாடு பற்றிய சில தகவல்களோடு தனது உரையைத் தொடங்கினார். தேவகோட்டையில் பிறந்து நவீன ஓவியத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக வளர்ந்திருக்கும் அவருக்கு ஓவியத்தின்மீதான பிடிப்பு பல படிநிலைகளைக் கடந்தபின் ஏற்பட்டதே.

அவர் தனது ஓவியங்களைத் திரையிட்டு விளக்கியபோதுதான் அரங்கில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த சில ஓவியங்கள் பற்றிய புரிதல் ஏற்படத் தொடங்கியது. எண்ணிற்கும் ஓவியத்திற்கும் என்ன தொடர்பு? வண்ணங்களும் உருவங்களும் இல்லாமல் எண்களும் குறிகளும் எப்படி ஓவியங்களாகியிருக்கின்றன என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை துலக்கமானது.

அறிவியல் கொண்டிருந்த ஆச்சரியங்கள் விஞ்ஞானியாக வர வேண்டுமென்ற எண்ணத்தை வளர்த்ததையும் பின் கட்டக்கலை நிபுணராகும் ஆசை ஏற்பட்டதையும் சொன்ன இராம. பழனியப்பன், தான் ஓவியராக உருவாவதற்குள் கடந்துவந்த உளரீதியான மாற்றங்களையும் தேடல்மிகுந்த தளங்களையும் குறிப்பிட்டார்.

அறிவியலிலும் கணிதத்திலும் கொண்டிருந்த ஆர்வம் இது போன்ற எண்ணங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கக்கூடும் என்கிற அவருக்கு வானமும் அதன் நட்சத்திரங்களும் அங்கே நிகழ்கிற மாற்றங்களும் படைப்பு உருவாவதற்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கின்றன.

காலம், வெளி இவற்றில் உறவுகள் அதற்கான சூழல் அவற்றிற்குள்ளிருக்கும் உளவியல் என்று கண்ணிற்குத் தெரியாத அரூபமான இயக்கத்தின் வெளிப்பாட்டை ஓவியமாகத் தீட்டும் இவரது ஓவியங்கள் பெரும்பாலும் மனிதனின் புறவடிவை, புற இயக்கத்தைக் காட்சிப்படுத்தாது அகத்திற்குள் நிகழும், நகரும் பிம்பங்களைக் காட்சிப் படுத்துபவையாகவே இருக்கின்றன.

பதின்மூன்று வயதில் தான் பார்த்த திரைப்படமொன்றில் இடம்பெற்ற விமானப் போர்க்காட்சிகள், தன் மனத்தில் விமானம், ஏவுகணைகள் குறித்த உருவங்கள் பதிந்திடக் காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது என்றார் இராம. பழனியப்பன்.

காலமும் வெளியும் அடையும் மாற்றங்கள். அதில் மனிதர்கள், அவர்களின் உளவியல் இயக்கம் என்பன போன்ற பிம்பங்கள் தனது ஓவியத்தில் இடம்பெறுகின்றன என்று சொல்லும் இவரது தொடக்கால ஓவியங்கள் எண்கள், கணித உருக்கள், ஏவுகணைகள், கோள்கள் என்பவற்றைச் சுற்றியே மையமிட்டவைமாய் இருந்திருக்கின்றன.

தனது பிறந்த நாளன்று ஏற்பட்ட ஓர் அனுபவந்தான் தனது முதல் படைப்பு 'Dancing Step on my birth day' உருவாகக் காரணம் என்றார். ஏறிச் செல்லும் வேகத்தில், கடந்துவிடும் யத்தனிப்பில் நாம் கடந்து செல்ல உதவிய படிக் கட்டுகளின் அழகை மறந்துவிடுகிறோமே. இதுதான் அந்தப் பிறந்த நாளில் நிகழ்ந்தது.

இயங்கும் பொருள்களையும் பறக்கும் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் இயந்திரங்களின் அமைப்பையும் வரையத் தொடங்கிய இவருடைய ஓவியங்கள் கண்ணுக்குப் புலப்படாத இயக்கத்தைப் பதிவுசெய்தாலும் அனுபவத்திலிருந்து பிறந்தவை.

கால வெளிக்கும் மனித அனுபவத்திற்குமான உறவைச் சூழலோடு பொருத்திக் காணும் இயல்புகொண்ட இவரது ஓவிய மனம் கணிதச் சூத்திரங்களையும் குறியீடுகளையும் கூடத் தன் ஓவியப் பரப்பில் கொண்டு வந்திருக்கிறது. பல வெளிநாடுகளுக்கும் சென்று கண்காட்சிகளை நடத்தியும் உரையாற்றியும் வரும் இவர் பல்வேறு தனிக் கண்காட்சிகளையும் நடத்தியிருக்கிறார். தற்போது லலித்கலா அகாடமியின் இயக்குநராக இருக்கும் இவர் தன் பணி குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

உள்ளடக்கம்