|
நல்லாப்பிள்ளை பாரதம்

பதிப்பாசிரியர்:
முனைவர் இரா. சீனிவாசன்
பக். 1608. விலை ரூ. 1500.
முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2007
வெளியீடு
கலைக் கோட்டம்
12, புதுத்தெரு, விநாயகபுரம்
அம்பத்தூர், சென்னை - 600 053 |
ஈ.வே.ரா பெரியார் உட்பட அவைதிக மரபில் நின்று சிந்தித்த அரசியல் சார்ந்தவர்கள்
உட்பட ஆய்வறிஞர்களான வையாபுரிப்பிள்ளை, வ.அய். சுப்ரமணியம் போன்ற
பேராசிரியர்கள்கூடத் தங்கள் விமரிசனத்திற்கான பிரதியாகவும் ஆய்வுக்கான பிரதியாகவும்
பார்ப்பனியமயமாக்கப்பட்ட வைதிக பாரதத்தையே கொண்டனர். இவர்களிலும் விரிவான தளத்தில்
பாரதம் பற்றிய தன் கருத்துகளைப் பதிவுசெய்த டாக்டர் அம்பேத்கர்கூட இந்த
வட்டத்திலிருந்து விலகவில்லை எனக் கூறலாம். ஆனால், பாரத தேசம் முழுமையிலும் ஏன்
தமிழ்நாட்டிலும் இந்த வைதிகமயப்பட்ட பாரதம் மட்டுந்தான் இருந்ததா என்று கேள்வி
எழுப்பினால், அப்படி இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
அரசு அதிகாரம் பற்றிப் பங்காளிகளுக்குள் நடைபெற்ற ஒரு சிறிய போர் பற்றியதான
பழங்கதையை அவைதிக மரபைச் சார்ந்த சமணர்கள் தங்களுக்கான வாழ்க்கை நெறியை
உருவாக்கித்தரும் ஒரு புராணமாகக் கட்டமைத்துக் கொண்டனர். அதன் பெயர் சைன பாரதம்
என்பதாகும். வைதிகப் பார்ப்பனியம் தங்களுடைய சமூக, பண்பாட்டு மேலாதிக்கத்திற்கான
ஒரு பேரிதிகாசமாக இதனை மாற்றிக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக ஜெயம் என்ற பெயர்
கொண்டிருந்த அந்த நூல் மகாபாரதம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்படிப் பெயர் மாற்றம்
ஏற்பட்டது ஓரிரண்டு வருடங்களில் நடந்துவிடவில்லை. சுமார் 500 ஆண்டுகளில் இந்த
மாற்றம் ஏற்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெறும் பெயர் மாற்றம்
மட்டும் ஏற்படவில்லை. 8,000 பாடல்களினால் ஆனதான இந்நூல் 96,000க்கு மேற்பட்ட
பாடல்கள் உள்ளதாகப் பெருக்கமடைந்தது. இதற்குக் காலங்காலமாக நாட்டுப்புறங்களில்
படிப்பறிவில்லாத மக்களிடம் வழங்கிய கதைகள் பல இந்தப் பாரதக் கதையில் புகுத்தப்பட்டு
மகாபாரதம் என்று பெயர் சூட்டப்பட்டது.
அம்பேத்கரும் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரும் பாரதம் பற்றி ஆய்வுசெய்த
மேனாட்டறிஞர்கள், இந்திய அறிஞர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் கருத்துகளை
அடிப்படையாகக்கொண்டு சில முடிவுகளைத் தெரிவிக்கின்றனர்.
1. வியாசரால் எழுதப்பட்ட நூலின் பெயர் பாரதம் அன்று. ஜெயம் என்பதுதான் அதன் பெயர்.
அந்த நூல் 8,800 ஸ்லோகம் என்று சொல்லப்படுகின்ற பாடல்களில் இயற்றப்பட்டது.
2. வியாசரின் மாணவரான வைசம்பாயனர் அதனை 24,000 பாடல்களாக்கிப் பாரதம் எனப்
பெயரிட்டார்.
3. வைசம்பாயனர் தவிர, வியாசரின் வேறு மாணவர்களான சைமினி, பைலன், சுதன், சுமந்தன்
போன்றவர்களும் பாரதக் கதையைத் தனித் தனியே எழுதினர்.
4. வியாசர், வைசம்பாயனர் ஆகிய இருவருடைய பாரதத்தையும் மேலும் விரிவாக்கி சவுதி
என்பவர் 96,836 பாடல்களாக்கி மகாபாரதமாக்கினார், இந்த நான்காம் பகுதி அம்பேத்கர்
மட்டும் சொல்வதாகும்.
இவ்வாறு காலந்தோறும் பாரதத்தை விரிவாக்கும் பணி கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப்
பின்னும் தொடர்ந்ததாக அம்பேத்கர் கூறுவதுடன் அதற்கான சான்றுகளையும் தருகின்றார்.
1. பொதுவாக மகாபாரதத்தின் காலம் கி.பி. 200க்கும் கி.பி. 400க்கும் இடைப்பட்டது
எனலாம். பிற்காலத்தில் மேலும் கூட்டிப் பெரியதாக்கி வெளியிடப்பட்ட நூல்களின்
காலத்தையும் திருத்தப்பட்ட நூல்களின் காலத்தையும் சேர்க்காமல் சொல்லப்படும்
காலக்குறிப்பு மட்டுந்தான் இதுவாகும்.
2. மகாபாரதத்தில் ஹீனர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. கி.பி. 455இல் ஸ்கந்தகுப்தன்
ஹீனர்களைத் தோற்கடித்தான். இருப்பினும் இதற்குப் பிறகும் ஹீனர்களின் படையெடுப்பு
கி.பி. 528வரை நிலவியது. ஆகவே மகாபாரதம் ஏறத்தாழ ஸ்கந்தகுப்தன் காலத்தில் அல்லது
அதற்குப் பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
3. மகாபாரதம் மிலேச்சர்கள் அல்லது இஸ்லாமியர் பற்றிக் குறிப்பிடுகின்றது, 190ஆம்
அத்தியாயம், வனப் பருவம் பாடல் 29இல் இந்த உலகம் முழுவதுமே இஸ்லாமிய உலகமாகவே
மாறிவிடும். இதனால் யாகங்கள், புனிதமான சடங்குகள், சமய விழாக்கள் யாவுமே
அற்றுப்போகும். இது வருங் காலத்தில் நடைபெறப் போவதாகக் கூறினாலும் தொல்பழங்கதைகள்
நடந்தவற்றை மட்டுமே குறிப்பிடுபவை என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றார்
அம்பேத்கர்.
4. இத்துடன் வனப்பருவத்தில் வருகின்ற விரசாலர், யதுகர் போன்ற சொற்களைக்கொண்டு
இஸ்லாமியர்களின் தொடர்பைச் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் மகாபாரதம் இஸ்லாமியர்
வருகையின் பின்னர்தான் முழுமையாகத் தொகுக்கப்பட்டது என்னும் கருத்தை
முன்வைக்கின்றார். தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கும்பகோணம் பாரதப் பதிப்பில்
மிலேச்சர்களின் நடவடிக்கைகள் 192க்குப் பிறகான பாடல்களில்தான் உள்ளன. ஆனால்,
இஸ்லாமியர்கள் என்ற சொற்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதக் கதையில் சில பகுதிகளைப் புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை,
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற பழந்தமிழ் நூல்கள் உவமைகளாக
எடுத்துப் பேசுகின்றன. அடுத்துவந்த காலங்களில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற
குறிப்பும் மகாபாரதம் தமிழ்ப்படுத்திய என்ற சின்னமனூர் செப்பேட்டு வாசகமும் கி.பி.
8ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலங்களிலேயே தமிழர்கள் பாரதக் கதையைப் பற்றி நன்கு
அறிந்திருந்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. தமிழ் ஆய்வாளர்கள் எல்லோரும் ஒரே
குரலில் வியாச பாரதத்தைத் தமிழர்கள் மொழிபெயர்த்ததாகக் கருதுகின்றனர். ஆனால்,
பி.சா. சுப்ரமணிய சாஸ்திரி போன்றோர் வியாச பாரதம் எந்த மாதிரி வடிவத்தில் இருந்தது
என்பதை அறிய முடியவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுகின்றது. சங்க இலக்கியங்களின் காலம் என்பது
கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் கி.பி. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டுவரை என்று
இன்றைய நவீன ஆய்வுகள் உறுதி செய்கின்றன. தமிழ்க் காவியங்களின் காலம் கி.பி. 6ஆம்
நூற்றாண்டுக்கு முன்னரானது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கி.பி. 2ஆம்
நூற்றாண்டு தொடங்கி கி.பி. 12ஆம் நூற்றாண்டுவரையிலான காலத்தில் உருவானதான
மகாபாரதத்திலிருந்து கதைகளைத் தமிழ் நூல்கள் எடுத்தாண்டுள்ளன என்று கூறுவதை எப்படி
ஏற்றுக்கொள்வது? இதற்கான விடையைக் காண வேறொரு கோணத்தில் இருந்து நாம் தொடங்குவது
நியாயமாக இருக்கும். வைதிகமயப்பட்ட பாரதத்திற்கு இணையாக அவைதிகத் தன்மையுள்ள பாரத,
இராமாயணக் கதைகளும் இந்தியா முழுமையும் வழங்கிவந்துள்ளன. ஜைன பாரதம், ஜைன ராமாயணம்
என்ற கதைகள் பாண்டவ புராணம் போன்ற சைன நூல்களில் உள்ளன. இது தவிர, நாட்டுப்புறம்
சார்ந்து தன்னிச்சையாக வளர்ச்சி பெற்ற கதைகள் பல பாரதப் பிரதிகளில் கலந்துள்ளன.
மற்றொரு குறிப்பிடத்தக்க செய்தி தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் இடைநிலைச்
சாதிகளைச் சேர்ந்தவர்களும் பாரதக் கதாபாத்திரங்களான தர்மன், பீமன், அர்ச்சுனன்,
சகாதேவன் போன்ற பெயர்களைத் தங்களுக்குப் பெருவாரியாகச் சூட்டிக்கொள்வதை இன்றும்
காண்கிறோம். ஆனால், இந்தப் பெயர்களைப் பார்ப்பனர்கள் எவரும் தங்களுக்கோ, தங்கள்
பிள்ளைகளுக்கோ சூட்டிக்கொள்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால், அதில்
வரும் முக்கியப் பாத்திரமும் வைணவர்களின் தெய்வமும் ஆன கிருட்டிணன் பெயரை எல்லாப்
பார்ப்பனர்களும் சூட்டிக்கொள்கின்றனர்.
இதுவன்றியும், வைதிகப் பாரதக் கதைகளுக்கும் அவைதிகப் பாரதக் கதைகளுக்கும் கதை
நிகழ்ச்சிகளில் பல இடங்களில் மாறுபாடுகள் உள்ளன. வட இந்தியப் பாரத ஏடுகளுக்கும்
தென்னிந்திய ஏடுகளுக்கும் அதேபோன்ற கதை மாறுபாடுகள் பல இடங்களில் உள்ளன என்பதைச்
சுத்தாங்கர் தன்னுடைய பாரதப் பதிப்பில் குறிப்பிடுகின்றார். நாட்டுப்புறத்தில்
வழங்கும் ஏணியேற்றம், அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, பஞ்சபாண்டவர் வனவாசம்,
புலந்திரன் தூது போன்ற நூல்களும் வியாச பாரதக் கதையிலிருந்து பல பகுதிகள் வேறாக
அமைந்தவைதாம். சைன பாரதக் கதையில் கர்ணன் உள்பட பஞ்சபாண்டவர்கள் அனைவரும் பாண்டு
மன்னனுக்குப் பிறந்தவர்கள் என்றுதான் உள்ளது. சூரியனுக்குப் பிறந்தவன்,
வாயுவுக்குப் பிறந்தவன், வருணனுக்குப் பிறந்தவன் போன்ற வியாச பாரதப் பிறப்பு அதில்
கூறப்படவில்லை. துச்சாதனன் பாஞ்சாலியைத் துகில் உரிகையில் கிருட்டிணன் சேலைகளை
நீட்டிப்பதாக உள்ள பகுதி என்பது பாஞ்சாலியின் ஒழுக்கச் சிறப்பால்தான் அது
நிகழ்ந்தது என்று குறிப்பிடுகின்றது. இந்த இடத்தில் கிருட்டிணனுடைய பங்கு எதுவும்
சைன பாரதத்தில் இல்லை.
பல இந்திய மொழிகள் இராமாயண, பாரதக் கதைகளின் வழியாகத்தான் தங்களுடைய மொழியின் முதல்
இலக்கியத்தைப் பெற்றுள்ளன. இதற்கு மாறான மொழிகள் தமிழும் கன்னடமுந்தான்.
தமிழ்மொழியின் பாரதக் கதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பயின்று வந்தாலும் பாரதக்
கதையை முழுமையாகச் சொல்லும் நூல் 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய நல்லாப்பிள்ளை பாரதம்
மட்டுந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1888இல் அச்சு வாகனம் ஏறிய இந்நூலின்
பதிப்பாசிரியர் சிதம்பரம் சாமிநாதையர் இதனை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பு என்று
கூறுகிறார். ஆனால், 2007 இன் பதிப்பாசிரியர் இரா. சீனிவாசன் மறுத்து வடமொழியில்
வழங்கும் பாரதக் கதையை உள்வாங்கிக்கொண்டு இயற்றப்பட்ட ஒரு புதிய நூல் என்றே கூற
வேண்டும் என்று மொழிகின்றார். இந்தக் கருத்தை உறுதி செய்வதற்கு நல்லாப்பிள்ளை
பாரதம் வடமொழி பாரதத்திலிருந்தும் வில்லிபுத்தூரார் பாரதத்திலிருந்தும் மாறுபாடாக
இருக்கக் கூடிய பல பகுதிகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். அவற்றுள் இரண்டு
இடங்கள் குறிப்பிடத்தக்கன:
1. சபா பருவத்தில் துச்சாதனன் தொட்டதால் அவிழ்ந்த கூந்தலைப் போரில் துரியோதனனும்
துச்சாதனனும் இறக்கும்வரை முடிக்கமாட்டேன் என்று திரௌபதி சபதம் செய்ததும், ஸ்திரி
பருவத்தில் அவள் கூந்தலை முடித்ததும் நல்லாப்பிள்ளை பாரதத்தில் உள்ளன. வியாச
பாரதத்தில் இப்பகுதி இல்லை.
2. குருசேத்திரப் போரில் அரவான் களபலி இடுதல் வியாச பாரதத்தில் இல்லை.
நல்லாப்பிள்ளை பாரதம், வில்லிபாரதத்தில்தான் உள்ளது.
வைதிக, அவைதிகப் பாரதக் கதைகளில் காணும் வேறுபாடுகளைப்போன்ற வேறுசில வேறுபாடுகளை
நல்லாப்பிள்ளை பாரதத்தின் பதிப்பா சிரியர் இரா. சீனிவாசன் சுட்டிக்காட்டுவது
கவனிக்கத்தக்கது. பொதுவான நம்பிக்கையின்படி பாரதம் என்பது வைதிகத்தின் குரலாகத்தான்
கருதப்படுகின்றது. ஆனால், அதில் வரும் பாத்திரங்களான சந்திர குலத்தில் தோன்றிய
அரசர்கள் வேறு குலப் பெண்களை மணந்துள்ளனர். யயாதி, தேவயானை, சந்தனு, சத்தியவதி,
விசயன், உலூபி போன்றவர்களும் குலம் மாறி மணம் புரிந்தவர்களே. இப்படியான பல
இடங்களைச் சுட்டும் அவர், வருணமுறையில் பாரதம் அமைந்ததாகக் கூற முடியாது என்கிறார்.
இதுவே பாரதக் கதையின் வெற்றியும் ஆகும். பொதுவாகப் பாரதக் கதையின் இலக்கிய
வடிவத்தில் மட்டுந்தான் வருணமுறை புகுந்துள்ளது. கதைப்பாடல், கூத்து முதலிய
வடிவங்களில் வருணமுறையை வலியுறுத்தும் நோக்கம் அறவே இல்லை என்கிறார்.
நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர்
தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்னும் பெயரில்
சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார்.
சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின்
இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல்
வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச்
சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப்
பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக
வெளியீட்டில் குறிப்பு உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான
காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிக் களிக்கும் பொது அரங்கங்கள் என்பது
கிடையாது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் நிகழ்ந்த நாடகக் கொட்டகைகளில்
தீண்டத்தகாதருக்கு அனுமதி இல்லை என்று விளம்பரப்படுத்திய தகுதி உள்ளது தமிழ்ச்
சமூகம். இது போலச் சாதிகளாகப் பிளவுண்டு கிடந்த தமிழ்ச் சமூகத்தில் பாரத, இராமாயணக்
கதைகள் என்பது பெரும்பாலும் கோவில்களில்தான் நடைபெற்று வந்தன. எனவே, கடந்த
காலங்களில் பெருவாரியாக உழைக்கும் மக்கள் கோவிலுக்குள் சென்று அத்தகைய கதைகளைக்
கேட்டிருக்க முடியாது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான அரங்கத்தை அவர்களே
உருவாக்கிக்கொண்டனர். மற்ற சூத்திரச்சாதித் தமிழர்களும் தங்களுக்குள்ளாகவே இக்கதை
சொல்லும்/படிக்கும் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொண்டனர்.
இதன் விளைவாகக் கேட்போர் நிலைக்கு ஏற்ற பிரதிகள் உருவாயின. எனவே ஒரே பொருள் / கதை
பற்றிக் கூறும் பிரதிகளில் அல்லது கதைப் பாடல், கூத்துகளில் பலவிதமான மாறுபாடுகள்,
இலக்கியப் பிரதிகளில் இல்லாத கதைகள், செய்திகள் போன்றவை உள் நுழைந்தன.
நல்லாப்பிள்ளை பாரதம் பாரதப் பிரசங்கிகளுக்கு ஏற்ற நூலாக இருந்ததால் பிரபல்யமானதாக
இருந்தது என்று பதிப்பாசிரியர் சீனிவாசன் கூறுகிறார். சூத்திரச் சாதி
பிரசங்கிகள்தான் இதனைப் பெரிதும் பயன்படுத்தி இருப்பர். பார்ப்பனர்கள் இதனைக்
கவனத்தில் கொள்ளாததினாலேயே வில்லிபாரதம் போன்று அதிகமான பதிப்புகள் வரவில்லை என்று
பேராசிரியர் வீ. அரசு கூறுவதைக் கவனிக்க வேண்டும். அதே வேளையில் இந்த நூல்
பார்ப்பனியத்தைப் புறந்தள்ளிவிட்டது என்று கொள்ள முடியாது. வைதிகத்தை
ஏற்றுக்கொண்டாடிய சூத்திரத் தமிழர்களாகிய பிரதி என்று இதனைக் கூறலாம். கதைப்
பாடல்கள், கூத்துகள் போன்றவற்றைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிகள் என்று
கூறலாம்.
13,949 பாடல்கள் உள்ள நூல் நல்லாப்பிள்ளை பாரதம். இதன் முந்தைய பதிப்புகளில்
பாடல்கள் சீர்பிரிக்கப்படாமல் ஏட்டுச்சுவடியில் உள்ளதுபோலப் பதிப்பிக்கப்பட்டன.
பழந்தமிழ்க் கவிதைகளில் நீண்ட நாள் பயிற்சி உள்ளவர்களுக்கே அந்தப் பாடல்களைப்
புரிந்துகொள்வதில் பெரும் தடுமாற்றம் ஏற்படும். பேராசிரியர் இரா. சீனிவாசன் அவ்வளவு
பாடல்களையும் சீர்பிரித்து யாவரும் எளிதில் படிக்கும் வண்ணம் பதிப்பித்துள்ளார்.
பாரதக் கதையில் வருகின்ற எண்ணூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்களின் பெயர், உறவு
முறைகள், செயல்கள் போன்றவற்றை வாசகர்கள் எளிதில் உணர்ந்துகொள்ளும் வண்ணம் சிறப்புப்
பெயர் விளக்கம் 72 பக்கங்களில் தொகுத்துக் கொடுத்திருப்பதுடன் 13 தலைப்புகளில்
பாரதம் பற்றிய பல்வேறு தலைப்புச் செய்திகளை ஒரு நூல் அளவுக்குத் தொகுத்திருக்கும்
சிறப்பு வாசகர்களுக்குப் பெரிதும் பயன்தரக் கூடியது. நல்ல தாளில் சிறப்பாக அச்சிட்ட
பார்க்கர் பதிப்பகத்தினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. படிப்பவர்களுக்குத்
துன்பம் நேராமல் இவ்வளவு வேலைகளைச் செய்தவர்கள் இந்த நூலை 2 அல்லது 3 பாகங்களாகப்
பிரித்துப் போட்டிருந்தால் மிக்க உதவியாக இருந்திருக்கும். அத்துடன் இந்நூலில்
10,254 பாடல்கள் வரைதான் உள்ளது. மீதி பாடல்கள் 3,695உம் உடனே வெளியிடப்பட
வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான பாரத நூல் தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக
அமையும்.
குறிப்பு: கட்டுரையில் "பிரதி" என்று வரும் இடங்கள் "ஸ்மீக்ஷீsவீஷீஸீ" என்ற
பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட நூல்கள்:
1. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு: தொகுதி 7, தமிழில் முதல்பதிப்பு:
1999, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.
2. றி.ஷி. சுப்ரமணிய சாஸ்திரி, வடமொழி நூல் வரலாறு, அண்ணாமலை நகர், சிதம்பரம்,
1946.
3. தோ. ஜம்புகுமாரன், ஜைன பாரதம், 5/3, தெற்கு போக் சாலை, சென்னை.
4. சையது முகமது அண்ணாவியார், சாந்தாதி அசுவமகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
5. சையது முகமது அண்ணாவியார், மகாபாரதம் பதினான்காவது அசுவ மேத பருவம்
சாந்தாதியசுவமகம், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம். பெசன்ட் நகர், சென்னை.
6. வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள், முதல்பாகம், அடையாளம், புத்தாநத்தம், 2007.
7. த.கோ. பரமசிவம், "சுத்தாங்கரின் மகா பாரதமும் தமிழ்ச் சுவடிகளும்" தமிழ்க்கலை
(மார்ச்சு, ஜூன், 1986)
8. வே. ஆனைமுத்து, பெரியார் சிந்தனைகள் - பாகம் 3.
9. கலாநிலையம் ராஜகோபாலாச்சாரியார் (பதிப்பு), வில்லிபாரதம், ஸ்டார் பிரசுரம்,
1984.
10. கும்பகோணம் ம.வீ. ராமானுஜாச்சாரியார் (பதிப்பு), மகாபாரத பர்வங்கள், மறுபதிப்பு
சக்ரா பப்ளிகேஷன்ஸ், ஊரப்பாக்கம், 2006-2007.
குறிப்பு: தீண்டதகாத சாதியினருக்குத் தனியான அரங்கங்கள் என்பது அவர்கள் வாழ்கின்ற
இடங்களிலேயே அமைத்துக்கொள்ளப்பட்டு பாரதம், இராமாயணம் போன்ற நூல்கள் வாசிக்கப்பட்டன
என்னும் தகவலைத் தந்த பேராசிரியர் தொ. பரமசிவம், பேராசிரியர் பாளையங்கோட்டை
தருமராஜன் அவர்களுக்கும் நன்றி!
|