Google   www kalachuvadu.com

குறும்படம்
சொல்லாமல் சொல்வது
குவளைக் கண்ணன்

 
குறும்படம்  மௌன ஓலங்கள்
நேரம்  50 நிமிடங்கள்
ஒளிப்பதிவு  அல்போன்ஸ் ராய்
இசை  ப்ரஸன்னா ராமஸ்வாமி
இயக்கம்  ரோகிணி

எல்லாவற்றுக்கும் சட்டங்கள் உள்ள ஒரு தேசம் இது. அதிலும் குறிப்பாக எண்ணற்ற தடைச் சட்டங்கள் உள்ள தேசம். மக்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை ஏற்பட்ட கணங்களுக்குச் சாட்சியாக இருப்பவை இந்தத் தடைச் சட்டங்கள். இந்தியர்களான நாம் வயதில் மூத்தவர்களை, படித்தவர்களை, பெண்களை, மற்றவர்களை, சட்டத்தை என்று எல்லாவற்றையும் மதிப்பவர்கள். ஆனால், எதன் மீதும் அக்கறை அற்றவர்கள்.

குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் என்று ஒரு சட்டம் அமலில் உள்ளது. ஆனால் அநேகமாக எல்லாத் துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் குழந்தைகளின் உழைப்பு நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துத் தரும் சிறு நிறுவனங்களிலும் குடிசைத் தொழில்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் கூச்சமின்றி உழைக்க வைக்கப்படுகிறார்கள். விவசாயம், நெசவு போன்ற தொழில்களிலும் குழந்தைகள் நமக்கு உதவி வருகிறார்கள். காதைச் செவிடாக்கக்கூடிய விசைத்தறிகள் மற்றும் நூற்பாலைகளின் இரைச்சலில் எத்தனை குழந்தைகள் கிடக்கிறார்கள். குழந்தைகளின் வருமானம் அந்தக் குடும்பங்களுக்கு அவ்வளவு அத்தியாவசியமாகப் போய்விடுகிறது. குறைந்த கூலி தரலாம் என்பதற்கு மேல் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதற்குப் பெரிய காரணங்கள் எதுவும் தென்படவில்லை. நமக்கு எதன் மீதும் அக்கறை இல்லாததைப் போல், இந்த விஷயத்தின் மீதும் அக்கறை இல்லை. இந்தியா மிகப்பெரிய மெய்ஞ்ஞான மரபைக் கொண்ட தேசம். இப்படிப்பட்ட அக்கறையற்ற போக்கின் ஆணிவேர் நமது ஆழ்மனத்தில் கிடக்கக்கூடிய மெய்ஞ்ஞானத்தில் இருக்கக்கூடும். அதனால்தான் நாம் நம்மிடமே அக்கறையற்று இருக்கிறோம்.

திரைப்படங்கள் தமிழர்களின் அத்தியாவசியங்களில் ஒன்று. உணவு, உடை, இருப்பிடத்திற்குப் பிறகு திரைப்படம் வருகிறதா அல்லது முன்னால் வருகிறதா என்பது மட்டும் விவாதத்திற்குரியது. இந்தத் திரைப்படங்களின் தயாரிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஈடுபடுபவர்களில், குறிப்பாக நடிப்பவர்களில், காட்சிச் சட்டத்தின் மையத்தில் நிற்பவர்களும் உண்டு; ஓரங்களில் இருப்பவர்களும் உண்டு. இப்படித் திரைப்படங்களில் காட்சிச் சட்டத்தின் மையத்தில் நின்று, சிரிக்கச் சொன்னால் சிரித்து, அழச் சொன்னால் அழும் குழந்தைகளைப் பற்றிய ஆவணப்படம் மௌன ஓலங்கள். 50 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப் படத்தை, 5 வயதில் நடிக்கத் தொடங்கிய திரைப்பட நடிகை ரோகிணி இயக்கியுள்ளார். வனவிலங்கு புகைப் படங்களுக்காகவும் வனவிலங்குத் திரைப்படங்களுக்காகவும் அறியப்படுகிற அல்போன்ஸ் ராய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ப்ரஸன்னா ராமஸ்வாமி பின்னணி இசை அமைத்துள்ளார்.

குழந்தைகள் தொடர்பான அனைத்துமே மிகுந்த கவனத்தைக் கோருபவை. இப்படி நடிக்க வைக்கப்படும் குழந்தைகள் பள்ளிக்குப் போகிறவர்கள். இதில் ஒரு குழந்தை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பி இரவு 11 மணிக்கு வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு உறங்கப் போனதைச் சொல்கிறது. ஒரு குழந்தை தன்னை கராத்தே வகுப்புக்கு அனுப்பாததை ஏக்கத்தோடு குறிப்பிடுகிறான். ஒரு குழந்தை பிறந்த முதல் மாதத்திலிருந்து தொலைக்காட்சித் தொடரில் நடிக்கிறது என்கிறார் அதன் தந்தை.

இந்த ஆவணப்படத்தில் ரோகிணி வெளிப்படையாக எதையும் சொல்ல முயலவில்லை. குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் பேசவிடுகிறார். ஒரு குழந்தையின் தாயார் தான் ஒரு தொழில் முனைவோர் என்றும் தனக்குக் குழந்தையை நடிக்கவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்கிறார். ஒரு குழந்தையின் தந்தை அவளது செலவுகள் அவள் சம்பாதிப்பதற்கு மேல் இருக்கின்றன என்கிறார். ஒரு குழந்தையின் தந்தை பெரிய நடிகராக வர முயன்றவர், இவர் மட்டும் பணத்துக்காக நடிக்கவைப்பதை வெளிப்படையாகச் சொல்கிறார். குழந்தையின் ஜாதகத்தை வைத்து 18 வயதில் அவன் பெரிய கலைஞனாக வருவான் என்பவர், திரைப் படங்களைப் பொருத்தவரை வெற்றிக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார். தனது நிறைவேறாத ஆசைகளை மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் இவர் வெளிப்படையாகச் சொல்லவும் செய்கிறார்.

இதில் ஹிந்திப் படத்தில் நடித்த ஒரு குழந்தையிடம் செய்யப்பட்ட ஒரு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ஆண் குழந்தையாக நடித்த பெண் குழந்தை, இந்த நேர்காணலில் தான் பையனாக நடித்ததைப் பற்றி ரோகிணியிடம் சரளமாக, வேகமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறது. 'எதைச் செய்தாலும் உன்னுடைய மிகச் சிறந்ததைத் தர வேண்டும். உன்னுள் இருந்து உன்னுடைய மிகச் சிறந்தது வெளிப்பட வேண்டும்' போன்ற மனித வளச் சிந்தனைகளைப் பேசுகிறது இந்தக் குழந்தை. ஒரு பத்து வயதுக் குழந்தைக்கு அவரது தாயார் இதையெல்லாம் சொல்லித் தந்திருக்கிறார். நாம் குழந்தைகளைப் பெரியவர்களாகத் தயாரிக்கிறோம். இந்தக் குறிப்பிட்ட நேர்காணல் மற்றபடிக்கு அருமையாக வந்துள்ளது. ஓர் அரூப ஓவியத்தின் தன்மையைக் கொண்டுள்ள நேர்காணல் இது. என்ன! இந்த அரூபத் தன்மை பெரியவர்களின் மனப்பாங்குகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது, கேலி செய்கிறது.

குழந்தைகள் தொழிலாளர்களாகும்போது, அவர்களது குழந்தைமை ஒரேயடியாகப் பறிபோகிறது. எதிர்காலத்தில் பெரியவர்களான பிறகு, இந்தக் குழந்தைமை இன்றி அவர்கள் குறைபடப் போகிறார்கள். எதனாலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு இது. மற்ற தொழில்கள் எப்படியோ இந்தக் கனவுத் தொழிற்சாலை கனவுகளையும் ஆசைகளையும் மயக்கங்களையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த மயக்கத்துக்கு ஆட்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக ஆகப் போகிறார்கள்? அவர்களது மனவளம் எப்படி இருக்கும்?இந்தப் படத்தில் ஒரு பத்துப் பதினோரு வயதுப் பெண் குழந்தை ஊஞ்சலில் ஆடும் காட்சியன்று படமாக்கப்பட்டுள்ளது. நிஜத்திலிருந்து கனவுக்குள் போய்ப்போய்த் திரும்புகிறது ஊஞ்சல். ஊஞ்சலாடும் குழந்தையின் கண்கள் கனவில் கிறங்கிக்கிடக்கின்றன. வேறொரு காட்சியில் இதே பெண் குழந்தை புருவங்களைத் திருத்திக்கொள்வதும் இமைகளுக்கு மை இட்டுக்கொள்வதும் காட்டப்பட்டுள்ளன. என்னவொரு லாவகம். என்னவொரு தொழில்முறை நேர்த்தி.

ரோகிணியின் முயற்சியும் அவர் சொல்லாமல் சொல்லிப் பூடகமாக உணர்த்தியுள்ளதும் முக்கியமானவை. பின்னணி இசையின் ஒலி அளவைக் குறைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனது மனப்பதிவுக்கு உதவாமல் இடையூறு செய்கிறது. ஆவணப்படம் முடியும்போது, படத்தில் காட்டப்பட்ட குழந்தைகளின் அண்மைக் காட்சிப் பதிவுகள் கறுப்பு வெள்ளையில் காட்டப்பட்டு, அந்தக் காட்சிகள் குழந்தைகளின் கண்களுக்கு நகர்கின்றன. படம் ஒரு குழந்தையின் கண்களில் சென்று முடிகிறது. முழுத் திரையிலும் குழந்தைகளின் கண்கள் காட்டப்பட்டபோது என் மனதை என்னமோ செய்தது. என்ன செய்தது? அவர்களின் கண்கள் எதையோ சொல்லின எதைச் சொல்லின? குழந்தைகள் தொடர்பான, என் தொடர்பான சில கேள்விகளுக்கு இந்த ஆவணப்படம் என்னை நகர்த்தியுள்ளது. எனது இன்றைய வலிகளில் சிக்கல்களில் எதுவெல்லாம் எனது பிள்ளைப் பிராயத்துக் காயங்களிலிருந்து வருகிறது என்பதை ஒருவாறாகப் பார்க்கத் தொடங்கினேன்.

உள்ளடக்கம்