|
காலச்சுவடு பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நூல்கள்
வெளியீட்டு விழா, மதுரையில் (ஹோட்டல் தமிழ்நாடு) 27.01.2008 ஞாயிறன்று மாலை 6.30
மணி அளவில் நடந்தது. மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் துணைவியார் திருமதி கமலா
ராமசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். வெளியீட்டு
விழாவிற்கு முன்னிலை வகித்து உரையாற்றிய மனித வள நிறுவனமான மாஃபாவின் நிர்வாக
இயக்குநர் திரு. க. பாண்டியராஜன், சமூகத்துக்குப் புத்தகங்கள் எவ்வளவு
அத்தியாவசியமானவை என்பதைச் சொல்லி, 'காலச்சுவடு மிகப்பெரிய அளவில் வளர்வதற்கு
வாய்ப்புள்ளது என்றும் காலச்சுவடு ஆட்கள் ஏனோ தயங்கிக்கொண்டிருக்கிறார்கள்' என்றும்
குறிப்பிட்டார்.
தேன்மொழி தாஸின் கவிதைத் தொகுப்பான ஒளியறியாக் காட்டுக்குள் நூலை வெளியிட்டுப்
பேசிய கவிஞர் சுகுமாரன், இந்தக் கவிதைகளின் நிலக்காட்சிகள் மலைப் பிரதேசத்தைச்
சார்ந்தவையாக இருப்பதாகவும் தன் கவிதைகளில் காணப்படுகிற சில அம்சங்கள் இந்தக்
கவிதைகளிலும் இருப்பதால் தனக்கு மிகவும் நெருக்கமானவையாக உள்ளன என்றும்
குறிப்பிட்டார்.
தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிதண்ணீர் பெற்றுத் தருவதற்கான தனது
போராட்டங்களை இந்திரா பதிவுசெய்துள்ள நீர் பிறக்குமுன் நூலை வெளியிட்டுப் பேசிய
சமூகப் போராளி சாலை செல்வம், இந்திராவின் போராட்டமும் அவரது பதிவும் எவ்வளவு
முக்கியமானவை என்று சொன்னார்.
வெ. செந்திவேலு எழுதியுள்ள சொக்கத்தங்கம் செம்புலிங்கம் நூலை வெளியிட்டு சமூகம்சார்
கொள்ளையனான செம்புலிங்கத்தைப் பற்றிய தகவல்களை தொ. பரமசிவன் பகிர்ந்துகொண்டார்.
அம்பையின் சிறுகதைத் தொகுப்பான வற்றும் ஏரியில் மீன்கள் தொகுப்பை வெளியிட்டு
அம்பையின் கதைகளைப் பற்றிப் பேசிய செ. ரவீந்திரன் தனது புதுதில்லி நாள்களில்
அம்பையுடன் ஏற்பட்ட பரிச்சயத்தையும் நட்பையும் நினைவுகூர்ந்தார்.
பொ. வேல்சாமியின் கோவில் - நிலம் - சாதி நூலை வெளியிட்டு உரையாற்றிய ஆ.
சிவசுப்பிரமணியன் நூலில் உள்ள சில தகவல் குழப்பங்களை வெளியிட்டதோடு, இப்போது இந்து
உயர்சாதி வகுப்பினராகக் குறிப்பிடப்படும் சைவப் பிள்ளைமார் முந்தைய நூற்றாண்டுகளில்
உயர் வகுப்பினராக இருந்திருக்கவில்லை, இதை நூலாசிரியர் கணக்கில் எடுத்திருக்க
வேண்டுமென்றார்.
இலங்கைத் தமிழரும் தற்போது தமிழகத்தில் வசித்துவருபவருமான தொ. பத்தினாதனின் போரின்
மறுபக்கம் நூலை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது உரையின்போது,
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் நிலை பற்றியும் அகதி முகாம்கள் பற்றியும்தான்
ஜூனியர் விகடனில் எழுதியதற்குப் பிறகு தமிழக முதல்வர் ஒரு 'உண்மை அறியும் குழு'
அமைத்ததையும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தங்களது பரிந்துரைகளைக் கலைஞர்
செயல்படுத்தியதையும் குறிப்பிட்டு இலங்கைத் தமிழர்கள் தற்போது தாங்கள் வசிக்கும்
நாட்டையே தங்கள் நாடுபோல் பாவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அ. ராமசாமியின் தமிழ் சினிமா - அகவெளியும் புறவெளியும் நூலை வெளியிட்டுப் பேசிய
அம்ஷன்குமார், இந்த நூலைப் போன்ற திரைப்பட இலக்கியம் சார்ந்த நூல்களின் அவசியத்தைத்
தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
சுந்தர ராமசாமி எழுதியுள்ள தி. ஜானகிராமன் நினைவோடை நூலை வெளியிட்டுப் பேசிய சா.
கந்தசாமி, தி. ஜானகிராமன் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியவர்களுடனான தனது நினைவுகளைப்
பகிர்ந்துகொண்டார்.
ஆனந்தின் அளவில்லாத மலர் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய 'மையம்' ராஜகோபால், ழ
பத்திரிகை வெளிவந்திருந்த காலத்தில் இலக்கியத்துடன் தனக்குப் பரிச்சயம்
ஏற்பட்டதையும் அந்தச் சமயத்தில்தான் சென்னை திருவல்லிக்கேணியில் ஆனந்தை
முதன்முதலாகச் சந்தித்ததையும் ழ இதழ் நின்ற பிறகு 'மையம்' பத்திரிகையைக்
கொண்டுவந்ததைப் பற்றியும் குறிப்பிட்டார். பின்னர் அவர் 'கவிதைகளில் ஆளே
இருப்பதில்லை, காலம் பற்றிய மெய்ஞ்ஞானக் கவிதைகள்' போன்ற ஆனந்த் கவிதைகளைப் பற்றிய
மேலோட்டமான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். 'ஆனந்த் கவிதைகள் ஆழமான
முறையில் அத்தனையோடும் உறவு கொள்பவை. அனைத்துக்கும் ஒன்றோடு ஒன்று உள்ள உறவைச்
சொல்பவை' என்றார்.
தேவேந்திர பூபதியின் அந்தர மீன் புத்தகம் பற்றிப் பேசிய ஆனந்த், தேவேந்திர
பூபதியின் வெளிச்சத்தின் வாசனை தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்டுள்ள இந்தக்
கவிதைகளின் வெளிப்பாட்டில் உள்ள தனித்தன்மையைக் குறிப்பிட்டார். புதிய
பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்படும் பயணத்தின் சாட்சியாக இந்தக் கவிதைகள்
அமைந்துள்ளதாகச் சொல்லி 'குரங்கு ஒரு உருவகம்/நிலையற்ற மனச் செய்கையின்
படிமம்/உருவக மனம் குரங்கு என்றொரு/சொல்லை உருவகிக்கிறது என்ற பூபதியின் கவிதை
வரிகளையும் தான் சொன்னதற்கு நிரூபணமாக வாசித்துக் காட்டினார்.
இந்த வெளியீட்டு விழாவில் முதலில் நூல்களை வெளியிடும் சம்பிரதாயம் வரிசையாக நடக்க,
பிறகு நூல்களைப் பற்றிப் பேசியவர்கள் தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளை ஆற அமர
அவசரமில்லாமல் பேசினார்கள். நிகழ்ச்சியை பவுத்த அய்யனார் தொகுத்து வழங்கினார்.
விழா நடந்த திறந்த வெளியில் கொசுக்கடி இருந்தாலும் வீசிய காற்று இலக்கிய
நிகழ்ச்சிகளில் ஏற்படும் புழுக்கம் உண்டாகாமல் பார்த்துக்கொண்டது. 6:30 மணிக்குத்
தொடங்கிய நிகழ்ச்சிகள் முடிவதற்கு 10:15 ஆகியிருந்தது. நேரம் போனது தெரியவில்லை.
|