|
இந்துத்துவாவின்
வளர்ச்சி கண்டு சிந்திப்பவனும் சீற்றம் கொள்பவனுந்தான் மனிதன். அவ்வகையில்
தலையங்கத்தின் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் அதே நேரத்தில் இடதுசாரிகளைக் கறை
படிந்தவர்களாகப் போகிற போக்கில் சித்தரிப்பது எவ்வகையில் நியாயம்? இந்தியாவில்
மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்க அவர்களை விட்டால் ஆளேது? எத்தகைய இழப்புக்கள்
வரினும் மதவாதச் சக்திகள் பலனடைந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக அவர்கள்
செயல்படுவது வெள்ளிடைமலை. எனினும் பல காரணங்களால் இந்திய ஜனநாயகத்தில், எண்ணிக்கை
விளையாட்டில், தொழில்நுட்ப வளர்ச்சியில் குஜராத் மாநில அரசு மட்டும் ரூ.750 கோடி
பணத்தை வாரியிறைத்து ஊடகங்களைத் தன்பக்கம் வசீகரித்துக்கொண்ட மோடியின் தந்திர வலையை
விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு ஊடகங்களும் முன்வந்து அறுத்தெரியத் துணியவில்லை
என்பதே. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது.
சேகரன்,
பெரணமல்லுர்
ரவிக்குமாரின் 'பிறவழிப் பயணம்' கட்டுரை மனநிறைவைத் தந்தது. தமிழகத்தில் தற்போது
செயல்பட்டுவரும் செயல்வழிக் கற்றலைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விரிவாக
விவரித்துள்ளார். குப்பம் பள்ளியில் கிடைத்த தன்னிறைவு ஏனைய ஊர்ப் பள்ளிகளில்
கிடைக்குமா என்ற என் ஆதங்கத்தைத் தொலைபேசி மூலம் இணை இயக்குநர் ச. கண்ணப்பன்
அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அதற்கு அவர், முழுமையாக இல்லை என்றாலும் தற்போது ஒரு
தாக்கத்தை ஏற்படுத்தியாகிவிட்டது; காலப்போக்கில் வெற்றியின் இலக்கை எட்டும் என்று
முழுமையான நம்பிக்கையுடன் சொன்னார். எம்.பி. விஜயகுமார் அவர்களின் தன்னலங்கருதாத
தெளிந்த நீரோடை போன்ற கல்விப் புரட்சியும் இணை இயக்குநர்கள் ச. கண்ணப்பன், இளங்கோவன்
ஆகியோரின் அயராத ஒத்துழைப்பும் வெற்றிக்கனியைப் பறிப்பது நிச்சயம்.
கா.இர. குப்புதாசு,
செஞ்சி
பத்திரக்கோட்டை கிராமத்தில், பத்திரமாக இருக்க முடியாமல் வெளியேறிவரும் 'தலித்'
மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் பிற இயக்குநர்களைப் போல, தங்கர்பச்சானும் காட்ட (சொல்ல)
மறந்துவிட்டார் என்பது மறுக்கவும் மறக்கவும் முடியாத உண்மை. கிராம மணம் கொண்ட
படங்களை எடுப்பவர்கள் உண்மையான சாதியச் சவால்களைச் சந்தித்து அவற்றைத் தங்களது
படங்களில் வெளியிடத் தயங்காமலிருக்கும் காலம் எப்பொழுதுதான் வரப் போகிறதோ? நமக்குத்
தேவை, இல்லாத ஒன்பது ரூபாய் நோட்டுகளல்ல; உண்மையான பத்து ரூபாய் நோட்டுகள்தான்!
கே.எஸ். கீழாம்பூர் ராமையா
புதுச்சேரி - 6
காலச்சுவடு (96) இதழில் வந்த கோபாலகிருஷ்ணனின் 'இரவை'ப் படித்தேன். மனத்தை
உருக்கிவிட்டது கதை. திருமலை, கணேசன், அம்மாக் கிழவியின் மனவேதனைகளை அழகாக
விளக்கியது. அரூப விவரிப்பில் கதாசிரியர் எங்கோ சென்றுவிட்டார். அதிகம்
கு.ப.ரா.வையும் கொஞ்சம் மௌனியையும் நினைவூட்டுகிறது இரவு. மென்மையும் குரூரமும்
தறியிடும் திருமலையின் மன விவரிப்பில் கு.ப.ரா.வைவிடவும் கோபாலகிருஷ்ணன் ஆழமாகச்
சென்றிருக்கிறார்.
குரூர மனந்தான் கதையில் செயல்படும் முக்கியப் புள்ளி. குரூர மனத்தின் செயல்பாடுகளே
கதையில் கவனப்படுத்தப்படும் நிகழ்வு. குரோத மனநிலை கொண்ட திருமலை படிப்பதாக
முரசொலியைக் காட்டுவது ஏன்? திருமலையின் இத்தகைய குரோத மனப்பான்மையின் காரணங்களுள்
ஒன்று முரசொலியின் எழுத்துக்கள் என்று கோபாலகிருஷ்ணன் சூசகமாகச் சொல்கிறாரா? உடன்
பிறப்புகளிடம் நடந்துகொள்ளும் உண்மையான நடைமுறை இதுதான் என்கிறாரா?
எவ்வளவு சிரமத்துக்கிடையிலும் தொடர்ந்து பத்திரிகை படிக்கிறவன் என்று சொல்ல ஆசிரியர்
விரும்பியிருந்தால் அது ஏன் வேறொரு பத்திரிகையாக இல்லை. காலச்சுவடில் முரசொலி என்று
வரும் பத்தி ஹைலைட் வேறு!
முரசொலி வாசகர்களின் கவனத்துக்கே வராத ஒரு குறுவெளியில் அவர்களைக் குரூரமாகத்
தாக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. தாக்கும் சுதந்திரத்தை நான் மறுக்கவில்லை.
முரசொலியைத் தாக்க ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்களை
எடுத்துச் சொல்லித் தாக்கவேண்டும். அதுதான் சரியான போர்முறை.
-பழ. அதியமான்,
சென்னை
'பிறகொரு இரவு' சிறுகதை யதார்த்தத் தளத்தில் ஆரம்பித்து ரொம்ப தூரம் சென்று சட்டென
ஆகாயத்துக்கு நேரே எழும்பிப் பறக்கத் தொடங்கிவிட்டது. காந்தி என்ற ஆளுமைக்கு
எவ்விதக் களங்கமோ சிதைவோ ஏற்படாதபடி மிகவும் கவனமாய் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுக்
கதைகள் எழுதுவோருக்கு இக்கதை ஒரு முன்மாதிரி. 'படைப்புச் சுதந்திரம்' என்னும்
போர்வையில் வரலாற்றைத் திரிக்கும் கதைகளும் வரலாற்றுக் கதைகள் என்றே
அழைக்கப்பட்டுவருகின்றன. வரலாற்று மாந்தர்களைப் புதிய வெளிச்சத்தில் அணுகும்
படைப்புகள் பல வேளைகளில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெறுவதுண்டு. நீங்களோ காந்தியை
முன்வைத்துச் சமூகத்தை நிறுத்தப் பார்த்திருக்கிறீர்கள். ஃபேன்டசி நிலைக்குக் கதை
தாவிவிட்டாலும் மனம் பரவச நிலை அடைந்து போதையில் அமிழ்ந்து விடவில்லை. சமூகத்தை
மதிப்பிடவே எத்தனிக்கிறது. அந்த மதிப்பீடு மனத்தை அரிக்கிறது. ஒரு சிறுகதையால்
செய்ய முடிந்த அதிகபட்ச விளைவை உண்டாக்குகிறது. கதை, பல இடங்களில் கவித்துவத்தால்
மிளிர்ந்திருக்கிறது. சில இடங்களில் கட்டுரைத் தன்மை மேலோங்கி நிற்கிறது என்பதையும்
சொல்லியாக வேண்டும். கடைசியாக ஒன்று, சோகமான நிகழ்வொன்றைக் காந்தியிடம் தனிக்லால்ஜி
விவரிக்க, காந்தியை அது பாதிக்கிறது. வாசகர்களையுந்தான். அதைத் தொடர்ந்து 'கிளம்புவதற்குத்
தயாரான தனிக்லாலின் முகத்தில் சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது' என எழுதியிருப்பது
அந்தச் சூழலுடன் ஒவ்வாததாக உள்ளது. கதையின் நெருடலான இடம் இது.
ஜே.ஆர்.வி. எட்வர்டு,
நாகர்கோவில்
"பத்திரக்கோட்டை: தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை" கட்டுரை குறித்து தமிழ் மொழியின்
அவலப் போக்கிற்கும் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டுத் தளத்திற்கும் தான் ஒரு
காவலன் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தங்கர்பச்சானால் இயக்கப்பட்ட அநேகத்
திரைப்படங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கருத்தியல்ரீதியாக எந்தவிதப்
பயன்பாட்டையும் அளிக்காது.
தலித் சாதியினரின் இருப்பு குறித்துப் பிரச்சினைக்குள்ளாக்கும் சாதி இந்துக்களின்
சாதிய வெறியை இருட்டடிப்புச் செய்த தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு
திரைப்படத்தின் மூலக் கலைஞனின் பார்வை (அதாவது இயக்குநர்) தமிழர்களின் காசு மட்டும்
வேண்டும். தலித் மக்களின் சமூக நீதி பற்றி எனக்கென்ன அக்கறை என்பது. எப்படி இவரது
தார்மீக நெறியைப் பிரதிபலிப்புச் செய்ய இயலும்? என்று தமிழர்களிடையே எழும்
கேள்விக்கு இவரது பதில் என்னவாக இருக்கும். ஒரு திரைப்படம் கலை என்கிற ரீதியில்
மக்களைப் பண்படுத்துவதைத் தவிர்த்துவிட்டுச் சாதியையோ மதத்தையோ அதன் உணர்வினால்
பிளவுபடுத்துகிற பணி முழுமையான கலைஞனைப் பிரதிபலிக்கச் செய்ய இயலாது. அதுவும்
கிராமத்தின் ஒவ்வொரு அசைவிலும் அதன் உயிர் நாடியை மிக நெருக்கமாக இருந்து
கண்காணித்த தங்கர்பச்சான் இது போன்ற திரைப்படத்தை எடுத்திருப்பதை வேதனைக்குரியதாகக்
கருதுகிறேன்.
பா. செல்வவிநாயகம்,
சென்னை - 600 110
படைப்பிலக்கியம் பற்றிய விமர்சனத்தை விட்டுவிட்டுத் தனிமனிதனைப் பற்றி
விமர்சித்துள்ளார். வன்னியர் குல சத்திரியராகத் தன்னை வருணித்துக்கொண்ட
மனோபாவத்தில் இருந்து மாறி, தங்கர்பச்சான் தமிழ் தேசியம் பேசுவது தவறா? இதற்கு
முந்தைய படமாகிய பள்ளிக்கூடத்தில் "தலித்"தாக நாயகனை முன்னிலைப்படுத்திய உணர்வை
மறுக்க முடியுமா? நச்சுக் கருத்துகளை விதைத்துவரும் தமிழ்த் திரையுலகில் இருந்து
மாறுபட்டு வருகின்ற படைப்பாளியைச் சாதியவாதியாக முன்னிலைப்படுத்துவது என்ன நியாயம்?
பா.ம.க. ஒன்றிணையும் முன்பே விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தானாக, முன்வந்து
"இந்துத்துவ எதிர்ப்பு மாநாட்டில்" கலந்துகொண்டது ஏன்? தன்னுடைய பத்திரக்கோட்டையில்
அழகி திரைப்படப் பாராட்டு விழாவில் ஒரு தலித்தைக்கூட மேடையேற்றாததைக் கண்டிக்கிற,
பகிரங்கமாக மேடையிலேயே திட்டிய துணிச்சல், எவ்வகை சார்ந்தது. தனி மனித பலவீனங்கள்
ஒன்றிரண்டைத் தூக்கிப் பிடித்து, ஒட்டுமொத்தமாகத் தகர்ப்பது நியாயமா?
"படையாட்சி"யென்ற ஒரு சொற்பிரயோகம் மட்டுமே போதுமானதா அவரது ஒன்பது ரூபாய் நோட்டை
விமர்சிக்க?
எனக்கும் அவர்மீது தனிபட்ட கருத்து வேறுபாடு உண்டு. அதற்காக ஒரு படைப்பாளியை...
முழுவதுமாகப் புறக்கணிப்பது அல்லது கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.
அமீர்அப்பாஸ்,
இராஜகம்பீரம்.
'இந்துத்துவத்தின் புத்துயிர்ப்புக்கு மிக முக்கியக் காரணம் காங்கிரஸ் கட்சியின்
மிதமான இந்துத்துவா ஆதரவு நிலைபாடுதான். தன் மதச்சார்பற்ற கொள்கையைத் துறந்த
காங்கிரஸ் இந்துத்துவாவுடன் சமரசம் செய்துகொண்டது. அதன் விளைவுதான் மோடியின்
வெற்றி. குஜராத் இனப்படுகொலைகளை, தெஹல்கா அம்பலப்படுத்தியும் மோடி வெற்றி
பெற்றதற்குக் காரணம் இந்து சமூகத்தின் பொது மனோபாவம் மாற்றிக்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுக்கவும் இதே நிலைதான். அதனால்தான் தெஹல்கா
புலனாய்வுக்கு எந்த எதிர்வினையும் எழவில்லை. இத்தகைய சகஜ நிலையையும் அமைதியையும்
நிலை நாட்டியிருப்பதே பாசிசத்துக்கு, மோடிக்குக் கிடைத்த சாதனையாகக் கொள்ளலாம்.
இந்தப் புத்துயிர்ப்பின் எதிர்வினைதான் ஒரிஸா கலவரம். இந்துத்துவத்தின் சோதனைச்
சாலையான குஜராத் இப்போது தொழிற்சாலையாக மாறியிருக்கிறது. இப்போதைய சோதனைச்சாலை
ஒரிஸா நாடு முழுக்கவும் ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவை இந்துத்துவமாக்கத்தான்.
வெறிகொண்டு அலைகிறது காவிக் கூட்டம். யார் தடுத்து நிறுத்துவது என்பதே கேள்வி.
ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்,
கோவை.
புத்தகத் தயாரிப்பும் விற்பனையும் காரைக்குடி வட்டாரத்திலே தொடங்கி, சென்னையை
முற்றுகையிட்டு நெல்லை, கோவை, மதுரை என்று விரிவடைந்து, இன்று தெற்கே காலச்சுவடு
பதிப்பகமாக விரிவு பெற்றிருக்கிறது. இன்றைய குமரி மாவட்டத்தினருக்குக் காலச்சுவடே
இலக்கிய ஊற்று. அதன் செயல்கள் சென்னை, கோவை, மதுரை என விரிவடைவதைக் கண்டு
மகிழ்ச்சியடைகிறேன். என் அன்பான பாராட்டுக்கள்.
பொன்னீலன்,
மணிக்கட்டிப்பொட்டல்.
எழுத்தாளர்கள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவற்றை ஒரே படைப்பாகத் தொகுத்து
வெளியிடுவதைப் போல ஆதிமூலம் வரைந்த ஓவியங்களைத் தொகுத்தால் அது தமிழ்நாட்டுக்குக்
கிடைத்த வளமாக இருக்கும். தமிழ் எழுத்துருவில் அவர் செய்த முயற்சியும் நெசவுக்கு
அவர் செய்த வடிவமைப்பும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. காலச்சுவடும் அவருக்காக ஒரு
சிறப்பிதழை கொண்டுவந்தால் நல்லது.
சேது - வேலுமணி,
செகந்த்ராபாத்.
ரவிக்குமாரின் சமீபத்திய கல்வி ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் மாணவர்களின்
எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவையாக விளங்குகின்றன. எவ்வளவோ
கருத்து முரண் இருந்தாலும், வளர் சமூகம் முழுமையான, நடுநிலையான அறிவியல் சமச்சீர்
கல்வியைப் பெற வேண்டும் என்கிற தனிமனித முனைப்பு, அதற்கான அவரது பணிகள் அரசியலை
விடவும் சமூக அக்கறையில் பாசாங்கற்ற பயணத்தை மேற்கொள்பவராகத் தெரிகிறார் என்பதைப்
பிறவழிப் பயணம் கட்டுரை விளக்குகிறது.
R. பாலமுருகன்,
திண்டுக்கல்
ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை படித்தேன். பாண்டியர்களின் ஆட்சிக்காலமான 3ஆம்
நூற்றாண்டில் அவர்களது நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உள்ளதென ஆட்சியர்
உதயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குச்
சங்கத் தமிழ் நூல்களில் சான்றுகள் உள்ளன.
தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பார்த்தபோது, ஒரு மாட்டை 20 பேர்
பிடிக்கத் துரத்தும்போது மாடு மிரண்டுபோய்ப் பார்வையாளர்களைத் தாக்குகிறது. பலர்
காயமடைகின்றனர். ஆனால், ஒவ்வொருவராகக் காளையை அடக்குவதுதானே வீரம்.
ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
சாகித்திய அகாடமி, மூத்த எழுத்தாளர் நீல. பத்மநாபனுக்குக் காலம் கடந்து கௌரவம்
அளித்துள்ளது பற்றிக் கரிசனத்துடன் பாராட்டியது சிறப்பு. அமரர் ஆதிமூலம் அஞ்சலிக்
கட்டுரைகள் மூன்றும் பாராட்டுக்குரியவை. மூவரும் அவருடன் நட்புகொண்ட தருணங்களை மனம்
திறந்து பாராட்டியுள்ளனர்.
காந்தியக் கலைஞனாகவும் காந்தியத்தோடும் எளிமை, அன்பு, குழந்தை மனத்துடனும்
எழுபதாண்டுகள் வாழ்ந்த அம் மாமனிதனின் வாழ்வு மரணமில்லாப் பெருவாழ்வு என்பது உண்மை.
டி. தருமராஜனின் புத்தக மதிப்புரை என் கவனத்தை ஈர்த்தது. எம். எஸ். எஸ். பாண்டியன்
அவர்களின் "Brahmin & Non Brahmin - Genealogies of The Political Present"
புத்தகம் பற்றியதானாலும் பல கருத்துருக்களைக் கட்டுடைப்புச் செய்து எழுதியுள்ள
விதம் பாராட்டுக்குரியது.
குரு. ராதாகிருஷ்ணன்,
நெல்லிக்குப்பம்
பிப்ரவரி 08 இதழில் 'பிராமின் நான் பிராமின்' என்னும் ஆங்கில நூலுக்கு டி.
தருமராஜன் எழுதிய திறனாய்வு என்னை முறுவலிக்கச் செய்தது. பிராமணன் அல்லாத வறுமையில்
உழலும் ஒரு சிறுவன் முன்னேற ஒரு பிராமணர் உதவுகிறார் என்றால்கூட, அதற்கு
எதிர்வினையான ஒருபொருள் காணப்படும் அளவுக்கு வெறுப்பை வளர்க்கின்றனர். இது
அவர்களுக்கு நலன் பயக்காது.
'பிராமணர்களின் உண்மை முகத்தைப் பறைகின்றவர்களே பறையர்கள்' என்று அயோத்திதாசர்
முடிவுக்கு வந்திருக்கிறார் எனத் திறனாய்வாளர் கூறுகிறார். 'பறை அறிவித்தல்'
என்னும் வழக்கம் தொன்றுதொட்டு தமிழகத்தில் இருந்துவருகிறது. பறை, தப்பு, தமுக்கு,
முரசு முதலானவை தோல் இசைக் கருவிகள். இப்பறையைப் பயன்படுத்தி வந்தவர்களே பறையர்
என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தொழிலால்தான் மனித குலம் சாதிகளாகப் பிரிந்தன
என்னும் கூற்றை இது மெய்ப்பிப்பதாகிறது.
பிராமணர், ஆரியர் என்போர் திராவிடர் அல்லர் என்பதை மறுத்து எழுந்ததுதான் திராவிட
இயக்கம். இன்றும் சுத்த சுயம்பிரகாச திராவிடர்களாக இருப்பவர்கள் திராவிடப்
பிராமணர்கள். மற்றவர் ஆதிதிராவிடர்கள். இந்தத் திராவிடப் பிராமணர்களில் ஒரு
பகுதியினர் தென் கர்நாடகா பகுதியிலும் ஹைதராபாத் நகர் சார்ந்தும் இன்றும்
இருக்கின்றனர். 'த்ராவிட' என்னும் சொல்லே வடமொழிச் சொல்.
அற்பத்தனமான ஒரு பொய்யை உண்மை என நம்பி, அப்பொய் மீது சார்ந்த இயக்கம்
நாற்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்டு வருவது விபரீதம், கொடுமை. 1947ஆம் ஆண்டு
சென்னையில் கூடிய ஆதிதிராவிடர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'ஹரிஜன
நலத் துறையில் பார்ப்பன அலுவலர்களையே நியமிக்க வேண்டும்' என்பதும் ஒன்று.
ஏதோ பிராமணர் மட்டுமே ஆதிதிராவிடர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கியதாகத்
திறனாய்வு த்வனிக்கிறது. இந்த வகையில் அப்பிராமணர்களின் வழங்கல் குறைவானது அல்ல.
மாறாக, ரவிக்குமாரின் கட்டுரை மிகச் சிறப்பாவும் ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு
வித்திடுவதாகவும் உள்ளது. சேவை வரியைச் சாடும் வகையில் அ. முத்துலிங்கம் கலை
அம்சத்துடன் கூடிய சிறப்பான சிறு கதையை வழங்கியிருக்கிறார்.
எல். சங்கமேஸ்வரன்,
திருமழப்பாடி
டி. தருமராஜன் எழுதிய விமர்சனக் கட்டுரை மாறுபட்டது, சிறப்புக்குரியது. கட்டுரையின்
நேர்த்திக்காகவும் உள்ளன்று வைக்காத கருத்தாக்கத்திற்காகவும் பாராட்டலாம்.
ழாக் தெரிதா, ழாக் லெகான் வரையறைகளைக் குறித்து இன்னும் ஆழமாக விவாதங்களைத்
தொடுத்திருந்தால் கட்டுரை, செய்திகளை ஆழமாக வெளிக்கொணர்ந்ததாக இருந்திருக்கும்.
அயோத்திதாசப் பண்டிதரின் அறிவார்ந்த தளம் தமிழகத்திலும் குறிப்பாகத் தமிழ்
இலக்கியம், அரசியல், தத்துவம், சமயம் ஆகியனவற்றில் எத்துணை மாறுதல்களை
ஏற்படுத்தியிருந்தது என்பதை எம்.எஸ் பாண்டியனின் புத்தக மறுப்பிலேயே வெளிக்கொணரும்
கட்டுரையாசிரியர் மறைமலையடிகளின் விவகாரத்தில் ஏதோ ஒன்றைச் சொல்லவந்து
தெளிவுபடுத்தாமல் விடுவது மாறுபாடானது.
பிராமணிய நிலைத் தன்மையைத்தான் பெரியார் விரும்பினார். அவரது செயல்களால்
பிராமணர்கள் வலுப்பெற்றார்கள் என்பதும் தருமராஜனால் புதிதாகத் தொடங்கப்பட்ட
விவாதம்.
அயோத்திதாசர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கோணங்களில் கோட்பாட்டுக்
கருத்தாக்கமாய் வெளிப்படுத்தியக் கூறுகளுள் ஒன்று பிராமண எதிர்ப்பு. அதையே
செய்முறையாகப் பெரியார் நடத்திச் சென்றார் என்பது வரலாறு. அப்படியென்றால்
பெரியாருக்கு முன்பே அயோத்திதாசரும் பிராமணர்களை அடையாளம் காட்டுவதன் மூலம்
பிராமணர்களின் நிலைத் தன்மையை வலியுறுத்தினரா என்னும் கேள்வியும் எழுகிறது.
முனைவர் இரா. பிரான்சிஸ் சேவியர்,
பாளையங்கோட்டை.
எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள 'Brahmin & Non Brahmin -
Genealogies of The Political Presentt என்னும் நூலுக்கு மிகப் பெரிய விற்பனை
விளம்பரத்தை டி. தர்மராஜன் காலச்சுவடு மூலம் செய்துள்ளார் என்றே நினைக்கிறேன். தமது
விரிவான கட்டுரையில் அயோத்திதாசர் பற்றிய ஒருபக்கச் சார்புள்ள செய்திகளைத்
தருகிறார். கடந்த பதினைந்தாண்டுகளாகத்தான் அயோத்திதாசர் பணி, எழுத்துக் குறித்துக்
கட்சி சார்புள்ளவர்களால் வட தமிழகத்தில் மட்டும் பேசப்படுகிறது என்பதை நடுநிலையோடு
எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
தமிழக அடித்தள மக்களுக்குக் கல்வி வழியாகச் சமூக விழிப்புணர்வு கொடுத்தவர்கள்
கிறித்தவ மிஷனரிகளே என்ற வரலாற்று உண்மையை எவரும் மறுக்க முடியாது.
தே. சுவாமிநாதன்,
அரக்கோணம்.
சக்கரியாவின் கட்டுரையில் மலையாளம் என்னும் சொல்லை எடுத்துவிட்டுத் தமிழ் என்ற
சொல்லைப் பதிலீடு செய்தால் போதும். கூடுதலாக, ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்
வினைச்சொற்களைப் பயன்படுத்தும் தமிழ்போல் நிலைமை கேரளத்தில் இல்லை. இவ்வளவிற்கும்
கேரளத்தைவிட மேம்பட்ட பொருளாதாரச் சூழல், தமிழை ஒரு இயக்கமாகவே நடத்திய கட்சிகளே
ஆளும் கட்சிகள். கேரளத்தைவிட அதிக மக்கள் தொகை உள்ளிட்ட வலுவான காரணங்கள் இருந்தும்
தாய் மொழி தெரியாமல் இருப்பதையே அல்லது பேசாமல் இருப்பதையே பெருமையாகக் கருதும்
மலையாளிகள் இருப்பார்களா என்பது சந்தேகமே.
பூபதி,
பூனே
பிப்ரவரி இதழில், "மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டனி ஆட்சி அமைந்ததோடு
இந்துத்துவம் முடிவுக்கு வந்துவிட்டதென்று நமது 'செக்யூலரிஸ்டுகள்' எண்ணியிருந்தது
இப்போது தவறாகிவிட்டது" எனத் தலையங்கம் குறிப்பிடுகிறது. யார் இந்த
'செக்யூலரிஸ்டுகள்'? இடது முன்னணியென்றால் ஆட்சி அமைத்ததோடு முடிந்தது என்று
அவர்கள் இருந்தது உண்மையா? அப்படியா மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கருதுகிறார்கள்?
மேலும் "மத்தியில் ஆளும் கூட்டணியே இந்த நிலைக்கும் பொறுப்பு. இடதுசாரிகளும்
தங்களது கைகளில் படிந்துள்ள கறையை எளிதில் துடைத்துக் கொண்டுவிட முடியாது"
என்கிறது.
ஜனவரி இதழில், சுவாமி அக்னிவேஷ், ரவிசங்கர் (மதவாத எதிர்ப்பு லேட்
கம்மர்-ஐஐடி-ஏ.ஐ.எம்.எஸ்-இடஒதுக்கீடு எதிர்ப்பில் செம சுறுசுறுப்பு) ஆகியோரின்
மதவாத எதிர்ப்புக்குப் பாராட்டு என்னும் பெயரில் இடதுசாரிகள்மீது அவதூறு மற்றும்
இந்துமதம் வேறு - இந்துத்வா வேறு என்ற உபதேசம்...
டிசம்பர் இதழில், நந்திகிராம் என்னும் பெயரில் புத்ததேவ் பட்டாச்சார்யாவை
விகாரமாய்ச் சித்தரித்து மோடியின் கோர முகம் பற்றிய பிம்பங்களை நீர்க்கச் செய்யும்
முயற்சி. மார்க்சிஸ்டு கட்சியைப் பழிக்க வேண்டுமென்பதற்காக மாவோயிஸ்டுகள் மீதான
திடீர்க் காதல்...
இப்படி மதவாதம் போன்றவற்றையெல்லாம் செல்லமாகத் தட்டும்போதெல்லாம் இடதுமுன்னணிமீது
ஒரு குத்துவிடுவதும் காறி உமிழ்வதும் சங்பரிவாரைத் திட்ட நேரும்போதெல்லாம்
மார்க்சிஸ்டுகள்மீதும் அவதூறு பொழிந்து சமன்செய்யும் சர்கஸ் விளையாடுவதும் ஏன்?
இப்படியெல்லாம் செய்துவிட்டு, "நந்திகிராம் அளவுக்குக்கூடக் கந்தமால் படுகொலைகள்
மீடியாவில் இடம்பெறவில்லையே அது ஏன்?" என்று ஒரு அப்பாவித்தனம் தொனிக்கும் வினா...
உங்களுக்குப் போலத்தான் எல்லா மீடியாவுக்கும் மூளை சொல்வதை இதயம் கேட்க
மறுக்கின்றதோ?
பி.கே. ராஜன்.
pkrajan_61@yahoo.co.in
ரவிக்குமாரின் 'பிறவழிப் பயணம்' பத்தி படித்தேன். தமிழகப் பள்ளிகளில் மௌனமாக ஒரு
புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இப்புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே
பிரகாசமானதாக மாற்றப்போகிறது என்ற அவருடைய நம்பிக்கையை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழக அரசு ஏற்கனவே கல்விக் கட்டணம், சீருடை, புத்தகங்கள், மதிய உணவு, பஸ்பாஸ்,
சைக்கிள் எனப் பலவற்றை இலவசமாகக் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
இவையெல்லாம் வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியே எனச் சிலர் எதிர்ப்பாட்டு
பாடிவந்தாலும், நலிவடைந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த ஏழை கிராமப்புற மாணவர்கள்
இடை நிறுத்தம் இன்றித் தொடர்ந்து பள்ளி இறுதிவரை வரச்செய்ய இந்த இலவசத் திட்டங்கள்
பெரிதும் காரணமாக உள்ளன.
இருப்பினும், கால மாறுதலை ஒட்டி அதிகரித்துவரும் பாடத் திட்டங்களினின்றும்
இம்மாணவர்களில் பெரும்பாலானோர் அந்நியப்பட்டு நிற்கும் நிலைமையே நிதர்சனம்.
இக்குறையினை முற்றிலும் களைவதாகவே இப்போது செயல்படுத்தப்படும் செயல் வழிக் கற்றல்
முறை அமைந்துள்ளது. ஒருவகையில் மேற்சொன்ன இலவச உதவிகளைக் காட்டிலும் மகத்தான
விளைவை, தரமான அடிப்படைக் கல்வியை இச்செயல்வழிக் கற்றல் முறை ஏற்படுத்தும் என்னும்
நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதை நடைமுறைப் படுத்துவதில் கீழ்மட்ட நிலையில் சிற்
சில தடைகள் உணரப்பட்டாலும் இம்முறையை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்ததற்காக
எம்.பி. விஜயகுமார் அவர்களையும் அவருக்குப் பூரண சுதந்திரமும் ஊக்கமும்
கொடுத்துவரும் கல்வி அமைச்சரையும் நாம் வணங்கவும் வாழ்த்தவும் வேண்டும்.
இந்த இடத்தில் இன்னொரு அரசு அதிகாரி பற்றியும் குறிப்பிடத் தோன்றுகிறது. அவர்
கிராமப்புற மாணவர்களுக்கான உயர்கல்விக் கடன் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வழங்கக்
காரணமாக இருந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் அவர்கள். பொதுவாக அதிகார
மட்டத்திலுள்ளவர்களின் முறைகேடுகளையும் குறைபாடுகளையும் விமர்சிப்பதற்கான வாய்ப்பே
நமக்கு எப்போதும் அதிகம் என்றாலும், தங்களைக் கட்டுப்படுத்தும் தளைகளை மீறியும்
தமது அர்ப்பணிப்புணர்வு காரணமாக இது போன்று அரும்பணி செய்பவர்களை நாம் அனைவரும்
கூடி பாராட்டும் தருணம் அரிதாகவே கிடைக்கும். அதை ரவிக்குமார் முழு மனதோடு
செய்துள்ளார்.
க. மோகனரங்கன்,
வையப்பமலை 637 410 |