|
நவீன மலையாளக் கவிதைகளில் பிரபலமான கவிதை கே.ஜி. சங்கர பிள்ளை எழுதிய ‘பல
போஸிலுள்ள போட்டோக்கள்’. அந்தக் கவிதைக்குத் தூண்டுதலாக இருந்தவர் வைக்கம் முகம்மது
பஷீர் என்பது இலக்கிய வட்டாரங்களில் பேசப்படும் செய்தி. அந்த அளவுக்கு ஏராளமான
புகைப்படங்கள் பஷீரை மையமாக்கி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயத்த நிலையில் பஷீர்
இருந்தவையும் தற்செயலாக எடுக்கப்பட்டவையும் உண்டு. அதில் ஒரு புகைப்படத்தைப்
பார்க்கும்போதெல்லாம் எனக்குள் மெல்லிய சிரிப்புப் புரளும்.
வைக்கம் முகம்மது பஷீருக்குக் கோழிக்கோடு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம்
அளித்துச் சிறப்பித்தது. கேரளத்தின் அன்றைய ஆளுநர் பா. ராமச் சந்திரன்
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்தார். பட்டமளிப்பு விழா அங்கி, தலையில் குஞ்சம்
வைத்த தொப்பியுடன் பஷீர். அந்தக் கோலத்தில் பஷீர் மேற்கொண்டிருக்கும் செய்கைதான்
என்னுடைய சிரிப்புக்குக் காரணம். பொதுவாகப் பட்டமளிப்பவர் நிமிர்ந்தும் பட்டம்
பெறுபவர் தலைவணங்கியும் இருப்பார்கள். இந்தப் புகைப்படத்தில் பட்டம்பெறும் பஷீர்
நிமிர்ந்து நின்றிருப்பார். ஆளுநர் தலைகுனிந்து வளைந்திருப்பார். பஷீர் கைகளை
உயர்த்தி ஆளுநரை ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பார். சிரிக்காமல் அந்தப்
புகைப்படத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இதுவரை
பலித்ததில்லை. வெறும் ஒரு புகைப்படம் என்பதைக் கடந்து பஷீரின் ஆளுமை சார்ந்த ஓர்
அம்சத்தை அதில் நான் இனங்கண்டு கொள்வதாகவே தோன்றுகிறது. ஓர் எழுத்தாளனின் பெருமிதம்
வெளிப்படுகிற புகைப்படம் அது. அதற்கான அங்கீகாரத்தை மலையாள இலக்கிய உலகம் அவருக்கு
வழங்கியிருந்தது. அந்த அங்கீகாரத்துக்கான முற்றான தகுதியையும் பஷீர்
கொண்டிருந்தார். பணிவு கலந்த கர்வமே அந்தத் தகுதியின் அடிப்படை. ‘நான் வாழ்வதனால்
எழுதுகிறேன்’ என்ற கர்வம் பஷீரின் எல்லா எழுத்துக்களிலும் மிளிர்கிறது. வாழ்வனுபவம்
கலையைத் தீண்டித் திறந்துவிடுகிற ஒரு பரந்த உலகம் பஷீரின் எழுத்துக்களில்
இயங்குகிறது. அதுதான் மலையாள இலக்கியத்தில் ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட இடத்தில்
அவரை நிறுவியிருக்கிறது.
m
பஷீர் எழுதவந்த கால அளவில் இலக்கியவாதிக்குக் கற்பிக்கப்பட்டிருந்த எந்தத்
தகுதியும் அவருக்கு இருக்கவில்லை. பள்ளிப் படிப்பைக்கூட நிறைவுசெய்யாதவர்.
தாய்மொழியான மலையாளத்திலோ பண்டித மொழியான சமஸ்கிருதத்திலோ தேர்ச்சியில்லாதவர்.
குடும்பப் பெருமையும் கிடையாது. சமூக மரபிலோ கீழ் மட்டத்தைச் சேர்ந்த
பொருட்படுத்தப்படத் தேவையில்லாத இஸ்லாமியர். அப்பாவின் ஏச்சும் சுதந்திரப் போராட்ட
வேட்கையும் அவரை வீடு கடத்தின. உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை
புகுந்தார்.
தண்டனைக் காலம் முடிந்து நாடோடியாக இந்தியா முழுவதும் அலைந்தார். சந்நியாசியாகவும்
சூஃபியாகவும் திரிந்தார். வாழ்க்கைச் செலவுகளுக்காக எல்லா வேலைகளையும் செய்தார்.
செப்படி வித்தைக்காரனின் உதவியாளர், கைரேகை ஜோதிடர், தனிப் பயிற்சி ஆசிரியர்,
டீக்கடைக்காரர் என்று கிடைத்த எல்லாப் பாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டார். ஹஜ் பயணக்
கப்பலில் சமையற்காரராகப் பணிபுரிந்து வெவ்வேறு நாடுகளைப் பார்த்தார். ‘காலம்
குப்பைபோலக் கடந்த பிறகு’ கேரளம் திரும்பி பத்திரிகையாளனாக, புத்தகக் கடைக்காரராகப்
பிழைக்கப் பார்த்து முடிவில் எழுத்தாளனாக வாழத் தீர்மானித்தார். கிட்டத்தட்ட
ஐம்பதாம் வயதில் திருமணம் செய்துகொண்டார்.
வாழ்ந்து பெற்ற இந்த அனுபவங்கள்தாம் பஷீரின் மூலப்பொருள். தன்னுடைய அனுபவமல்லாத
ஒருவரியைக் கூட அவர் எழுதியதில்லை. புனைவுக்கும் தான் வாழும் எதார்த்த உலகுக்குமான
வேறுபாட்டைத் தன்னுடைய படைப்பில் இல்லாமலாக்கினார். அவரது அச்சேறிய முதல்
படைப்பாகக் கருதப்படும் ‘பிரேமலே கனம்’ (காதல் கடிதம்)மட்டுமே அதிகபட்சம் புனைவின்
சாயலைக் கொண்டிருக்கிறது. கதாநாயகன் கேசவன் நாயர், நாயகி சாராம்மா. இந்தப்
பெயர்களில் அக்காலத்திய இலக்கிய நிர்ப்பந்தத்துக்குக் கீழ்ப்படியும் பஷீரைக்
காணலாம். உண்மையில் கேசவன் நாயர் பஷீர்தான் என்பது எளிதாகவே விளங்குகிறது. இந்த
நாவலைத் தவிர்த்த பிற எல்லாப் படைப்புகளும் அசலான பஷீர் படைப்புகள்தாம். நாயராகவோ
நம்பூதிரியாகவோ பிசாசாகவோ இடம்பெறும் பாத்திரங்களும் பஷீரின் வார்ப்புகள்தாம். அந்த
வார்ப்புகளுக்கு நடைமுறை உலகில் அப்பட்டமான முன்மாதிரிகளும் உண்டு.
பஷீரின் எழுத்துக்கள் முன்னுதாரணமற்றவை. அதுவரையிலான புனைவெழுத்துக்களில் முஸ்லிம்
பின்னணி இடம்பெற்றிருக்கவில்லை. இலக்கியத்தில் சீராட்டப்பட வேண்டிய பிரிவல்ல என்ற
இலக்கிய மனப்பாங்குக்கு அறைகூவலாக நின்றவை பஷீரின் படைப்புகள். அவரது பிரபலமான
நாவல்களான பால்ய கால சகி, என்டுப்பூபாக்கோரானண்டார்ந்து (எங்கள் தாத்தாவுக்கு ஒரு
யானை இருந்தது)’, பாத்தும்மயுடெ ஆடு (பாத்தும்மாவின் ஆடு) ஆகியவை வெளிவந்து
பஷீருக்கு இலக்கியப் புகழைப் பெற்றுத் தந்த பின்னரும் இந்தத் தீண்டாமை இருந்தது.
‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ நாவலைப் பாடத்திட்டத்தில் சேர்த்தபோது
நாயர் சர்வீஸ் சங்கம் சொசைட்டி எதிர்ப்புத் தெரிவித்தது. நாவலில் இடம்பெறும்
பாலியற் குறிப்புகளும் வர்ணனைகளும் எதிர்ப்புக்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும்
நாலாம் வேதக்காரனுக்கு இலக்கியமாவது உலக்கையாவது? என்ற இளப்ப மனப்பான்மையில்
முளைத்தது அந்த எதிர்ப்பு. பொதுவாக அப்படி ஓர் ஒவ்வாமை பஷீரின் படைப்புகள்மீது
இருந்தது. அன்றைய கல்வி அமைச்சரான ஜோசப் முண்டச்சேரி அந்த எதிர்ப்பை
உதாசீனப்படுத்தி பஷீரின் படைப்பைப் பாட நூலாக்கினார். இன்று பஷீரை மறுவாசிப்புச்
செய்யும்போது இந்த மனப்பான்மை குறித்துக் கேலிதான் எழுகிறது.
பஷீரின் கதைகள் பெரும்பான்மையும் கேரள முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக்
கொண்டவை. இது மேலோட்டமான பார்வை. பஷீர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த
ஆர்.ஈ. ஆஷர்கூட முஸ்லிம் இனக்குழு உள்ளடக்கம் சார்ந்த படைப்புகளாகவே அவற்றை
மதிப்பிட நேர்ந்திருக்கிறது. ஆனால், ஆழமான கண்ணோட்டத்தில் பஷீரின் கதைகள் பரந்த
சமூகத்தின் மானுடச் சங்கடங்களின் உள்ளோட்டமுடையவை. தன்னுடைய விரிவான
அனுபவத்திலிருந்து பஷீர் உருவாக்கிய தளம் இது. இந்தத் தளத்தில் அழுத்தமாகக்
கால்பதித்து நின்று தன்னுடைய புனைவுகளில் பல அடுக்குகளை உருவாக்கினார். குழந்தையின்
களங்கமற்ற கண்ணோட்டம், ஞானியின் பற்றற்ற பார்வை, சித்தம் கலங்கியவனின் பிதற்றல்,
புரட்சியாளனின் சீற்றம், அங்கதக்காரனின் குத்தல், அராஜகவாதியின் பகிரங்கப்படுத்தல்,
சமூக விமர்சனம், காதல் உணர்வு என்று பல அடுக்குகளைக் கொண்டது அவருடைய
படைப்புத்தளம். அதன்மீது துக்கம் கனத்திருக்கும். ஒரு நகைச்சுவைப் படலம்
கவிந்திருக்கும். ‘நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. வெடித்துச் சிரிக்கலாம்.
ஆனால், அழவும் தோன்றுகிறது’ - மரணத்தின் நிழலில் கதையில் இடம்பெறும் இந்த
வாசகத்தின் விரிவும் ஆழமும்தான் பஷீரின் எழுத்தாக்கம்.
பால்யகால சகி நாவலுக்கு எழுதிய முன்னுரையில் எம்.பி. பால் ‘வாழ்க்கையிலிருந்து
கிழித்தெடுத்த ஓர் ஏடு இது. அதன் ஓரங்களில் ரத்தம் கசிகிறது’ என்று
குறிப்பிட்டிருப்பார். பஷீரின் எல்லாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும். அந்த
ரத்தத்தில் ஒரு சூஃபித்தனமான சிரிப்பும் மிளிர்கிறது என்பதுதான் பஷீரின் மேன்மை.
இந்த இயல்பையட்டியே வைக்கம் முகம்மது பஷீர் இன்று மலையாள வாசகர்களிடையே இலக்கியத்
திருவுருவாகவும் கதைகளின் சுல்தானாகவும் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கிறார்.
m
வாழும் காலத்திலேயே ஐதீகமாக்கப்பட்டவர் பஷீர். அவரளவுக்குக் கேரளக் கலாச்சாரத்தில்
ஊடுருவிய எழுத்தாளர்கள் அபூர்வம். அவரது சிறு செயலும் செய்தி முக்கியத்துவம்
பெற்றதாகக் காட்டப்பட்டது. அவருடைய வீடு ஓர் இலக்கிய ஆர்வலர்களின் புனிதத்தலம்
போலவும் அவர் அதன் மூலவர் போலவும் தோற்றம் கொண்டது. இந்தச் செயலில் பஷீருக்கும்
பங்குண்டு. ஆனால், அது அவர் தன்னை பிரதிஷ்டை செய்துகொள்வதற்காக மேற்கொண்ட
தந்திரங்களல்ல. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றோ ‘அனல் ஹக்’ என்றோ மனிதன்
போற்றிக்கொண்டிருந்த தெய்வீக உணர்வின் வாழ்வியல் சாத்தியங்களை அவர் தன்னுடைய
வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதன் அடையாளம். மதத்தைக் கடந்த இம்மை சார்ந்த ஓர்
ஆன்மீகத்தைக் கடைபிடிக்க அவர் விரும்பியிருக்கலாம். இலக்கியத்தில் அவர் மரபின்
தொடர்ச்சியல்ல. ஆனால், இம்மை சார்ந்த ஆன்மீகத்தில் அவர் ஒரு பெரும் மரபின்
நிகழ்காலச் சந்ததி. அரபி மலையாளத்தின் தொடர்ச்சியாக நான் பஷீரைக் காண்கிறேன். இதன்
மூலம் பஷீர் ஒரே சமயத்தில் ஒரு சூஃபி மரபைப் புனைவெழுத்தில் நிலைநிறுத்தினாரென்றும்
மலையாளத்தின் பேச்சு மொழிக்கு - குறிப்பாக முஸ்லிம்களின் மொழிக்கு - இலக்கிய
அங்கீகாரம் பெற்றுத்தந்தார் என்றும் தோன்றுகிறது.
பஷீர் நாடோடியாக வாழத்தொடங்கி சூஃபிகளுடன் அலைந்து திரிந்தவர். அந்தக் காலப்
பகுதியில் அவர் அறிந்திருந்தது அன்று முஸ்லிம்களுக்கிடையே புழங்கிய அரபி மலையாளம்
மட்டுமே. நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களின் எதிர் இலக்கியமாக இருந்துவந்த
அரபி மலையாளத்தின் தொடர்ச்சியாக பஷீரைக் காண விரும்புகிறேன். அரபி மலையாளம்
இஸ்லாமிய மரபுக்கு ஏற்புடையதல்ல என்று மதப் பண்டிதர்கள் விலக்குக்
கற்பித்திருந்தார்கள். ஆனால், அந்தக் கலப்பு மொழியில்தான் கீழ்த்தள முஸ்லிம்கள்
தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்கள். அந்த மொழியில் கனவு கண்டார்கள்.
ரகசியம் பேசினார்கள். அவர்களுடன் மானசீக நெருக்கம் கொண்டிருந்த சூஃபிகள் தங்களது
பங்களிப்புகளைச் செய்ததும் அந்த மொழியில்தான். அபரிமிதமான சமஸ்கிருதச் சொற்களுடன்
பேசப்பட்ட அன்றைய மலையாளம் முஸ்லிம்களுக்குக் கூழாங்கல்லை மெல்லுவதுபோலக்
கடினமானதாக இருந்திருக்கலாம். சமுதாய மறுமலர்ச்சி பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தைச்
சேர்ந்த எழுத்தாளரான பஷீர் எழுத்தச்சன் உருவாக்கிய மலையாளத்தை முஸ்லிம்களுக்கும்
உரிமையுடையதாக மாற்றச் செய்த முயற்சி அவருடைய படைப்பு மொழி. அது எளிமையின்
அழகியலைக் கொண்டிருந்தது. எளியவனின் ஆன்மீகத்தைக் கொண்டிருந்தது. அந்த எளிமையும்
ஆன்மீகமுந்தான் பஷீரை மலையாளத்தின் சுல்தான் ஆக்கியது.
நாலு அட்சரம் வாசிக்கத் தெரிந்த, கொஞ்சம் இலக்கிய வாசனையை நுகரக்கூடிய மலையாளி
வாசகர்களிடம் ‘உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?’ என்று கேட்டால் உடனடியாக
வரும் பதில்: ‘வைக்கம் முகம்மது பஷீர்’. இதில் பெரும்பான்மையானவர்களின் பதில்
மேலோட்டமானது. பஷீரின் ஒரு கதையைக்கூட அவர்கள் படிக்காமலிருக்கக் கூடும். எனினும்
அந்தப் பதிலைச் சொல்லத் தூண்டும் அம்சம் கலாச்சாரப் பொதுமை சார்ந்தது. பால்ய கால
சகியில் இடம்பெறும் ஒரு காட்சி இலக்கிய வாசனை கொண்ட எந்த மலையாளியின் நினைவிலும்
பதிந்திருப்பது. மஜீதும் சுஹ்ராவும் பள்ளித் தோழர்கள். கணக்குப் பாடத்தில் மஜீத்
ஞான சூனியம். ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு நீண்ட நேர
யோசனைக்குப் பிறகு அவன் சொல்லும் பதில்: ‘உம்மிணி பல்ய ஒந்நு’. (இன்னும் பெரிய
ஒன்று). மஜீதின் இந்த மகத்தான கண்டுபிடிப்புக்கு விழுந்து சிரித்தவர்கள் கதையின்
பாத்திரங்கள் மட்டுமல்ல. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பஷீரின் வாசகர்கள் இந்த
வாசகத்தைச் சொல்லிச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். முட்டாள்தனத்தைப் பற்றிய
விமர்சனமாகவோ உயர்வு நவிற்சிக்கான அடைமொழியாகவோ இந்த வாசகத்தைச்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சநிலை இந்த வாசகம் அதை எழுதியவருக்கே புகழ்
மொழியானது என்பதுதான். மிகுந்த உரிமை பாராட்டலுடன் ‘உம்மிணி பல்ய எழுத்துக்காரன்’
என்று பஷீர் குறிப்பிடப்படுவது சாதாரணம்.
முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில்
ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்க்கை இலக்கிய இயக்கம்) என்று
அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கரப்
பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களில் எழுத்தில் புதுவகையை
உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப்
பிற எழுத்தாளர்கள் முன்னிறுத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான
உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால், பஷீர் இந்த முழுமையற்ற உலகை
நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும் இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள்
என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே அவரது கதை
மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன.
பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்
பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள். அந்தப்
பாத்திரங்கள்மீது வாசகனும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின்
வெற்றி.
சமகால எழுத்தாளரான தகழிதான் பஷீரை விடவும் சமூக எதார்த்தச் சித்தரிப்பில் மேலானவர்.
சமூக எதார்த்தங்களை ஆராயும் கூர்மை தகழியின் எழுத்துக்களில் உண்டு. பஷீரின்
எழுத்தாக்க நோக்கம் அதுவல்ல. இந்த உலகை அவருடைய கருணையின் கைகள் தழுவிக்
கொள்கின்றன. மனிதர்கள்மீதும் இயற்கைமீதும் சர்வ சராசரங்களின் மீதும் அவரது கைகள்
படர்வது போன்ற நடையையும் மொழியையும் பஷீர் உருவாக்கியிருந்தார். அவருடைய
நடப்புலகுக்கும் படைப்புலகுக்கும் வேற்றுமை காண்பது அரிது. ஏறத்தாழ இல்லை என்பதே
நிஜம். சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு இணையாகவே பிரபலங்களும் பிறரும் பஷீரின்
எழுத்துக்களில் இடம்பெற்றிருக்கிறார்கள். காந்தி முதல் ஈ.எம்.எஸ்.வரை. போக்கிரி
முதல் சூஃபிவரை. கடவுள் முதல் சைத்தான்வரை. ஆடு முதல் யானைவரை. தேள் பாம்பு முதல்
காக்கைவரை. அவர்களை எல்லாம் இணைக்கும் மையமாக பஷீரும். இந்த எழுத்து முறை அவரது
எழுத்தை அதன் களங்களிலிருந்தும் சூழலிலிருந்தும் விடுவித்தது என்று கருதுகிறேன்.
இதுவே பஷீரைச் சகலரும் அங்கீகரிக்கும் எழுத்துக் கலைஞனாக்கியது. மிகவும் எளிமையான
மொழியில் இந்த வெற்றியை ஈட்டுவது சுலபமல்ல என்பதற்கு இன்றும் மலையாளத்தில்
கிடைக்கும் ஒரே எடுத்துக்காட்டும் அவர்தான்.
m
மலையாளத்தில் தொடர்ந்து வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் பஷீர் முக்கியமானவர். 1943
முதல் 1991 வரையான காலம்தான் அவர் தீவிரமாக எழுதிய காலம். கிட்டத்தட்ட ஐம்பது
ஆண்டுகள். எனினும் அவரது படைப்புலகத்தின் பரப்பு இரண்டாயிரம் பக்கங்கள் மட்டுமே.
ஆனால், அதே அளவுக்கு அவரைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம்.
அதைவிட ஆச்சரியம் தொடர்ந்து எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதிக்கும்
எழுத்தாளராக இருக்கிறார் என்பது. இந்த அர்த்தத்தில் பஷீரை நான் நவீனத்துவராகக்
கருதுகிறேன். அப்படியான நோக்கங்கள் அவருக்கு இருந்ததில்லை. தற்செயலாகவோ திட்டமிட்டோ
படைப்பில் புதிய திசைகளைத் திறந்தவர் அவர்.
பஷீரின் மொழி இலக்கியத்தனமானது அல்ல. பேச்சு மொழியிலிருந்து உருவானது அது.
கடைசிவரைக்கும் திருத்தமான மொழி அவருக்குக் கைவரவே இல்லை. பஷீரின் கையெழுத்துப்
படியை வாசித்த அவருடைய சகோதரர், பள்ளி ஆசிரியரான அப்துல் காதர் அவரிடம் கேட்டார்.
‘இக்கா, இதில் ஆக்யாத (செயப்பாட்டு வினை) மில்லையே?’ அதைக் கேட்ட பஷீர் சொன்ன
பதில்: ‘போடா உன்னுடைய லொடுக்கூஸ் ஆக்யாதம்’. இலக்கண வழு நிரம்பிய இந்த மொழியை
பஷீர் தெரிந்தே பயன்படுத்தியிருந்தார். அந்த மொழியை ராவிச் செப்பனிட்டார். ஒரு
கதையைப் பலமுறை செழுமைப்படுத்தியிருக்கிறார். ஓர் எழுத்தாளனின் பயிற்சி
என்பதைவிடவும் புதிய ஒரு மொழியை உருவாக்க அவர் செய்த எத்தனம் என்று தோன்றுகிறது.
இந்தப் புதுமொழியில்லாமல் அவர் தன்னுடைய படைப்புலகில் இயங்கியிருக்க முடியாது.
பச்சை மலையாளத்தில் பேசியிருந்தால் அடித்தள வாழ்வில் உழலும் அவருடைய
கதாபாத்திரங்கள் எதிர்வினை அற்றவர்களாகியிருந் திருப்பார்கள். அவருடைய படைப்புலகில்
மனிதர்களுக்குச் சமமாக இடம்பெறும் ஜீவராசிகளை நாம் நேசிக்க முடியாற்போயிருக்கும்.
பாத்தும்மாவின் ஆடு நாவலில் வரும் ஒரு காட்சியில் பஷீரின் சகோதரி வளர்க்கும் ஆடு
பஷீரின் புத்தகத்தை மேய்ந்து தின்றுவிடுகிறது. ஏட்டின் ஓரங்களில் ரத்தம் கசியும்
பால்யகால சகிதான் அந்தப் புத்தகம். புத்தகம் விழுங்கிப் பசி தீராத ஆடு ரூபாய்த்தாளை
விழுங்கியதும் பஷீர் குறுக்கிடுகிறார். ‘ஹே, அஜ சுந்தரி, புத்தகத்தின் பிரதி
வேண்டுமானால் வேறே தருவித்துத் தருகிறேன். ஆனால், இதற்கு வேறு பிரதி கிடையாது’.
பாத்தும்மாவின் ஆட்டுக்கு இந்த மொழி தெளிவாகவே புரிந்திருக்கும்.
இதைத் திருத்தமான இலக்கிய வழக்கில் சொல்லி பஷீர் பாணி நகைச்சுவையைக் கொண்டுவர
முடியாது. இதிலிருக்கும் களங்கமற்ற மனநிலையைச் சாத்தியப்படுத்தவும் முடியாது. இது
மொழிசார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. படைப்பும் படைப்புக்கு ஆதாரமான வாழ்வும் இரண்டறக்
கலந்த பிரச்சினை. பஷீரின் படைப்புகள் மையங்கொள்ளும் இந்தப் பரவச மன நிலையை அவருடைய
மொழிதான் உத்தரவாதம் செய்கிறது. மனநல விடுதியில் கழித்த நாள்கள் பற்றி பஷீர் எழுதிய
முன்னுரை (பாத்தும்மாவின் ஆடு)யில் மருந்துக் கஷாயம் மூக்கில் இறங்குவதை ஒற்றை
வார்த்தையில் விவரித்திருப்பார். அந்த வார்த்தையிருப்பது பஷீரின் பிரத்தியேக
மொழியில். “இப்படியாக இருக்கும்போது என்னுடைய வலது மூக்கில் பலா இலைக் குழாயை
இறக்குகிறார்கள். அப்புறம் மிளகான மிளகுகளையும் எல்லா இஞ்சியையும்
துளசிச்சாற்றையும் சிவப்பு வெங்காயத்தையும் மருந்துகளையும் அரைத்துக் குழம்பாக்கி
ஒரு துளி திராவகத்தை அதில் ஊற்றுகிறார்கள். உக்கிரமும் வீரியமுமான உறைப்பின் உதயம்.
ப்பூ என்று வலுவான ஒரு பீய்ச்சல். வலது மூக்கில் திராவகம் முழுவதும் அணுகுண்டு
வெடிப்பதுபோல அப்படியென்றால். . . ப்ளுங்கோஸ் டும்.” பஷீர் கண்டுபிடித்த இந்தப்
பொருளற்ற வார்த்தை எவ்வளவு பொருள் பொதிந்தது.
பொருள் நிரம்பியது என்று கருதப்பட்ட இலட்சியங்களும் நோக்கங்களும் பொருளற்றவையாக
மாறும் மானுடச் சூழலைப் பற்றியும் பஷீர் கவனம் கொண்டிருந்திருக்கிறார். மதில்கள்
நாவலில் வரும் ஒரு வாசகம் அதற்கு உதாரணம். சிறைத் தண்டனை அனுபவிக்கும் பஷீருக்கும்
அதே சிறையின் பெண்கள் பகுதியில் கைதியாக இருக்கும் நாராயணிக்கும் ஏற்படும் காணாமலே
காதல்தான் கதை. தனிமைச் சிறையில் தவிக்கும் பஷீருக்கு நாராயணியின் குரல் நெருக்கம்
சிறை வாழ்க்கையில் ஆறுதல் தருகிறது. அவளை நேரில் சந்திக்க வாய்ப்புக்
கிடைக்கவிருக்கும் தருணத்தில் விடுதலை செய்யப்படுகிறார்.
‘யூ கேன் கோ மிஸ்டர் பஷீர், யூ ஆர் ஃப்ரீ,’
நான் நடுங்கிப் போனேன். என்னுடைய கண்கள் காணாமற் போயின. காதுகள் கேட்காமல் போயின.
எல்லாம் சேர்ந்து ஓர் இரைப்பு. எனக்கு எதுவும் புரியவில்லை. நான் கேட்டேன்:
“ஒய் ஷ§ட் ஐ பி ஃப்ரீ. ஹ¨ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?”
தம்பி ஜெயிலர் சிரித்தார். பிறகு சொன்னார். “உங்களை விடுதலை செய்யும்படி உத்தரவு
வந்திருக்கிறது. இந்த நிமிடம் முதல் நீங்கள் சுதந்திரமானவர். சுதந்திரமான
உலகத்துக்கு நீங்கள் போகலாம்” சுதந்திரமானவன். . . சுதந்திர உலகம். . . எது
சுதந்திர உலகம்.. பெரும் சிறைக்கல்லவா போக வேண்டும்.
யாருக்கு வேண்டும் இந்தச் சுதந்திரம்?
பஷீர் என்ற சுதந்திரமான எழுத்தாளனைத் தவிர யார் இந்தக் கேள்வியை எழுப்ப முடியும்?
m
பஷீரின் பரந்த தரிசனத்தில் உயர்வு தாழ்வுகள் இல்லை. அவருடைய மனிதர்கள் எல்லாரும்
சாதாரணர்கள். நன்மை தீமைகள் இல்லை. அவருடைய பாத்திரங்களில் பலரும் இருண்ட
வாழ்க்கையைச் சிரித்துக் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுடைய கேள்விகள் புனிதமான சமூக
நடைமுறையைக் குலைக்கின்றன. ‘ஆனைவாரியும் பொன்குரிசும்’ (யானை விழுங்கியும்
பொற்சிலுவையும்) கதையில் திருடனான தோமா காவல் துறை அதிகாரியிடம் உரையாடும் காட்சி
இதற்கு உதாரணம்.
‘இன்ஸ்பெக்டர் கடுவா மாத்தன் கேட்டார்: “ஒரு மெய்யான கிறிஸ்தவனான நீ ஏன்
இப்படிப்பட்ட இந்தப் பயங்கரப் பாவத்தைச் செய்தாய்? தங்கச் சிலுவையை நீ எதற்காகத்
திருடினாய்?” தோமா சொன்னார்: “வேணும்னா எஜமான் என்னோட நாக்கில ஆணியடிச்சுக்குங்க.
கர்த்தாவான யேசு மெசியாவை அறைஞ்சது மரச் சிலுவையிலேதான? தேவாலயத்துக்கு எதுக்குங்க
தங்கச் சிலுவை?’ இந்தப் பாத்திரம் நாயகனா? எதிர் நாயகனா? பஷீரின் உலகில் அந்த
வேற்றுமை இல்லை. காரணம் அவரிடமே அந்தப் பிரிவினை இல்லை. பெரும்பான்மையான
தருணங்களில் பஷீர் என்ற எழுத்தாளனும் பஷீர் என்ற மனிதனும் இருவரல்லர்.
அப்படியானால் பஷீர் இன்று கொண்டாடப்படுவது போல ஒரு சித்தனா? “நான் காய்கறியல்ல;
வெண்டைக்காயல்ல. மனிதன்” என்று அவர் சொற்களால் அறைந்ததும் உண்டு. ஏற்றுக்கொண்டு
முழுமையாக்கக் கடினமான பாத்திரம் மனிதனுடையதுதான் என்று ஒருமுறை பஷீர்
குறிப்பிட்டிருந்தார். அது சொந்த வாழ்க்கையிலிருந்து அவர் கண்டடைந்த முடிவுங்கூட.
பகத்சிங் மாதிரியான புரட்சிக்காரர், சந்நியாசி, பைத்தியக்காரர், பின்னர் சாதாரண
மனிதர். ஒருவகையில் மட்டும் ‘நான் ஞானியாக்கும். ஏனெனில் நான் திருமணமானவன்.
திருமணமாகாதவர்கள் எல்லாரும் அஞ்ஞானிகள்’ என்பது பஷீரின் முத்தாய்ப்பு.
இவற்றையெல்லாம் உள்ளடக்கிய எழுத்தாளனாக இருந்தார் என்பதே அவருடைய இருப்பின்
நியாயம். மனிதர்கள் மீது கருணையும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதே அவரது
படைப்பாக்கத்தின் ஊற்றும் பெருக்கெடுப்பும். அப்படியான ஒரு கணத்தை பஷீரைச் சந்தித்த
தருணத்தில் அனுபவித்திருக்கிறேன். இருபது வருடங்களுக்கு முந்தைய ஒரு இடவப்பாதி மழை
நாளில் பஷீரைத் தேடிப் போயிருந்தேன். விட்டுவிட்டுப் பெய்கிற மழை காரணமாக வழக்கமாக
உட்காரும் மரத்தடியை விட்டு வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தார். பேச்சு தொடர்வதற்
கிடையில் அவர் வீட்டு உபசரிப்புப் பானமான சுலைமானி வந்தது. பால் கலக்காத அந்தத்
தேநீரைப் பருகி முடித்துக் கண்ணாடித் தம்ளரை நிமிர்ந்த வாக்கில் தரையில் வைத்தேன்.
இருமலுக்கிடையில் அதைக் கவனித்த பஷீர் கொஞ்சம் எரிச்சலான குரலில் சொன்னார், “அதினே
கமழ்த்தி வைக்கு”.
தம்ளரைக் கவிழ்த்துவைத்தேன். அருகில் பஷீர் குடித்த தம்ளரும் கவிழ்ந்து
நின்றிருந்தது. அவர் முகத்தில் மீண்டும் வெளிச்சம் படர்ந்தது. பேச்சு மறுபடியும்
தொடர்ந்தது. முடிந்தது. விடைபெற்று இறங்கும்போது நாற்காலியிலிருந்து எழுந்து
நின்றார். அவரது இரண்டு கைகளும் என் தோள்மீது பதிந்தன. மெல்ல இழுத்து அவருக்கு
நேராக நிறுத்தித் தலைமேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தார். “மங்களம். நல்லது வரட்டே.
சுபம்”. நெகிழ்ச்சியுடன் நடந்தபோதும் தம்ளரைக் கீழே வைத்தபோது கிழவர் காட்டிய
கடுப்புக்குக் காரணம் புரியாமலிருந்தது.
பஷீரைப் பற்றிய விவரணப் படம் எடுத்தவரான எம்.ஏ. ரஹ்மானின் கட்டுரையை அண்மையில்
படித்துக்கொண்டிருந்தபோது காரணம் விளங்கியது. சர்க்கரை மிச்சமிருக்கிற டீத் தம்ளரை
நிமிர்த்திவைத்தால் எறும்புகளும் சிறு ஜீவராசிகளும் அதில் விழுந்து சாகக் கூடும்.
அதனால் பஷீரின் முற்றத்தில் எச்சில் தம்ளர்கள் எப்போதும் கவிழ்த்தே வைக்கப்படும்.
பஷீர் எதனால் கொண்டாடப்படுகிறார் என்று புரிகிறது. எறும்புகளின் விசும்பல்கூடப்
பிரபஞ்சத்தின் ஒலிதான் என்று அவர் புரிந்துகொண்டிருந்தார் என்று புரிகிறது. இந்தப்
புரிதல் மனிதனைத் தவிர யாருக்கும் கைகூடாது என்று சொல்லும் பணிவு கலந்த கர்வம்
கொண்டவைதாம் பஷீரின் படைப்புகளா?
குறிப்புகள்:
இதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் ‘பஷீர் - முழுமையான படைப்புகள்’ (1994)
தொகுதிகளிலிருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்டவை.
எம்.ஏ. ரஹ்மான் கட்டுரை ‘அக்னியால் ஒரு சோத்ய சின்னம்’ (நெருப்பால் ஒரு
கேள்விக்குறி) - மாத்ருபூமி வார இதழ் 13-19 ஜனவரி 2008.
தலைப்பு-பஷீரின் ‘பூமியுடெ அவகாசிகள்’ (பூமியின் உரிமையாளர்கள்) சிறுகதையிலிருந்து
எடுக்கப்பட்டது.
|