Google   www kalachuvadu.com

வைக்கம் முகம்மது பஷீர் நூற்றாண்டு விழாச் சிறப்புப் பகுதி

தமிழ் மொழிக்கு மிக நெருக்கமான மொழி மலையாளம் ஆதலால் அதன் இலக்கிய வேர் தமிழகத்தில் அடர்த்தியாகவும் ஆழமாகவும் பரவியுள்ளது. மலையாள இலக்கியவாதிகளான தகழி, பொற்றேகாட், பி. கேசவதேவ், பாலகிருஷ்ணப்பிள்ளை, முகுந்தன், சக்கரியா போன்ற பலர் தமிழக இலக்கியத்தில் ஆழமான, அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். மலையாள இலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் வைக்கம் முகம்மது பஷீர். சுதந்திரப் போராட்டமும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டமும் கேரளாவில் உச்சத்தில் இருந்தபோது, மக்களின் பிரச்சினைகளைப் பேச வேண்டிய இலக்கியமும் எழுத்தும் நம்பூதிரிகளிடமும் உயர்ஜாதி மக்களிடமும் ஆட்பட்டிருந்த நேரத்தில் ஒடுக்கப்பட்ட, பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையைத் தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தார் பஷீர். அனுபவங்களைத் தேடி இந்தியா முழுவதும் பயணித்துள்ள இவர் தனக்கு நேர்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் இலக்கியமாக்கியவர்.

அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை மட்டுமே எழுதி, ஆதிக்கச் சக்திகளைத் தொடர்ந்து கேள்வி கேட்டு, சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு புரட்சி எழுத்தாளராகவே பஷீர் வாழ்ந்திருக்கிறார். தனது மிகச் சிறந்த கதைகளை பஷீர் சிறைவாசத்தின்போது எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பால்யகால சகியும் பாத்துமாவின் ஆடும் தமிழில் வெளியானபோது மிகப் பரந்த வாசகப் பரப்பைச் சென்றடைந்தன. 1908ஆம் ஆண்டு ஜனவரி 21இல் பிறந்த பஷீரது நூற்றாண்டு விழாவைக் கேரளாவிலும் வெளியிடங்களிலும் மலையாளிகள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். தனது எளிமையான அர்த்தச் செறிவுமிக்க கதைகளின் மூலம் தமிழக வாசக மனத்தில் நிரந்தரமாக வாழும் அந்த மகத்தான கலைஞனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பொருட்டுத் தனது சிறு பங்களிப்பாக இந்தச் சிறப்புப் பகுதியைக் காலச்சுவடு பிரசுரிக்கிறது.

ஆசிரியர் குழு
சிறப்புப் பகுதி: பஷீர்: பூமியின் உரிமையாளர்
சிறுகதை: தேன் மாம்பழம்
கட்டுரை: பஷீர் : மொழியின் புன்னகை
சிறுகதை: ஜென்ம தினம்

உள்ளடக்கம்