|
1. அபத்தம்
இதழியல் பணியில் சில சாபங்கள் உண்டு. மிகக் கடுமையான முயற்சியின் பயனாக
விளைந்திருக்கும் ஒரு இதழைப் பார்க்கத் தொடங்கிய சில மணித்துளிகளில் உறுத்தலான ஒரு
பிழை கண்ணில் பட்டுவிடும். அச்சாவதற்கு முன்னால் ஏன் இப்பிழை கண்ணில் படவில்லை
என்பதை விளங்கிக்கொள்ள முடியாது. இத்தகைய ஒரு உறுத்தல் இல்லாமல் எந்தக் காலச்சுவடு
இதழையும் ருசித்ததாக நினைவில் இல்லை. இத்தகைய சில பிழைகள் தவிர்க்க முடியாதவை என
மனசாந்தி அடையலாம். பிழைதிருத்தம் வெளியிட்டு அமைதி கொள்ளலாம்.
கடந்த காலச்சுவடு இதழில் ஏற்பட்ட ஒரு பிழை மிகுந்த அவமானத்தைத் தந்தது. நீல.
பத்மநாபன் அவர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்றதற்கான வாழ்த்துக் குறிப்பில்
இடம்பெற்ற புகைப்படம் மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கருடையது. ஆதிமூலம் அஞ்சலிக்
கூட்டத்திற்காகச் சென்னை சென்றிருந்த அன்று, முதல் பிரதி அச்சகத்திலிருந்து கையில்
கிடைத்தது. நிமிடங்களில் கண்ணில்பட்ட இந்தப் பிழை மரண அடிபோல மனத்தில் இறங்கியது.
பிழை ஏற்பட்ட விதத்தை விசாரித்து விளங்கிக்கொண்டேன் என்றாலும் அதைப் பேசுவதில் பயன்
இல்லை. தமிழின் மூத்த படைப்பாளியின் புகைப்படம் காலச்சுவடு போன்ற ஒரு இதழில்
பிழையாக வெளிவருவதை மன்னிக்க முடியாது.
வாசகர்களிடமும் நீல. பத்மநாபன் அவர்களிடமும் மன்னிக்க முடியாத பிழைக்காக
மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
m
2. வலது கரம்
'நெய்தல்' கூட்டம் ஒன்றில் நண்பர் முருகனைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே
இரண்டு விஷயங்கள் தெளிவுறத் தெரிந்தன. முகத்தில் எப்போதும் இன்முக பாவமும் போதையின்
சாயலும். இலக்கிய வாசிப்பு அப்போதுதான் தொடங்கியிருந்தது. நுட்பமான வாசிப்பு.
பின்னர் 'நெய்தல்' கிருஷ்ணனின் இலக்கிய மற்றும் அல் - இலக்கிய நடவடிக்கைகளில்
முருகன் எப்போதும் உடன் இருந்ததால் அடிக்கடி சந்தித்தோம். கிருஷ்ணனின் வலது கரம்
என்பது முருகனுக்கு நண்பர்கள் மத்தியில் செல்ல அடையாளம். என்மீது முருகன் மிகுந்த
பிரியம் கொண்டிருந்ததற்கான காரணத்தைக் கிருஷ்ணன் இன்றுவரை எனக்கு விளக்கவில்லை.
பல ஆண்டுக் கஞ்சாப் பழக்கம் உடலைப் பெருமளவிற்குச் சீரழித்திருந்தது. திருமணம்
செய்துகொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. நான் சந்தித்த காலகட்டத்தில் கஞ்சா நின்றுபோய்
குடி உச்சத்தில் இருந்தது.
கோட்டாரில் அரிசி மில்லில் வேலை. நல்ல திறமை, நேர்மை. அரிசி கொள்முதலுக்கு முதலாளி
நம்பிக்கையோடு அனுப்பும் நபர். செலவுக் கணக்கில் போக்கு வரத்துச் செலவு, உணவு
இத்தியாதியுடன் ஒரு குவாட்டர் பிராண்டியும் இருக்கும். வன்மத்தையும் வக்கிரத்தையும்
சமூகத்தின் மீது துப்புவதற்கான முகாந்திரமாகக் குடி முருகனுக்கு இருக்கவில்லை.
மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கிருஷ்ணனைச் சந்தித்த முருகன் விரைவில்
இறந்துவிடுவேன் எனக் கூறித் தன் வாழ்வின் கோலத்தை மிகுந்த துக்கத்தோடு
பகிர்ந்துகொண்டிருக்கிறார். மரணமடைந்த அன்று காலை தாயாரிடம் தன் நெற்றியில்
திருநீறு பூசி பூஜை அறையில் கிடத்திவிடும்படி கேட்டிருக்கிறார். இதையெல்லாம் வாழும்
காலத்தில் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
m
3. காலக் கனவு
மதுரையில் அ. மங்கை, வ. கீதா இணைந்து உருவாக்கியிருந்த 'காலக் கனவு' நாடகத்தைப்
பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மதுரையில் நாடக நிகழ்விற்கு நண்பர்
தேவேந்திரபூபதியின் 'கடவு' அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. அதில் ஒரு பாத்திரத்தை
ஏற்றிருந்த பிரேமா ரேவதி என்னை அழைத்தது மதுரை செல்வதற்கான தூண்டுதலாக இருந்தது
(பூபதி என்னை ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை!). சென்றதற்கான இன்னொரு காரணம்
நண்பர் சுரேஷ் குமார இந்திரஜித் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும்
நிலையில் பார்த்து விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம். முன்னறிவிப்பு இல்லாமல் மதுரை
விஜயம். முதல் தொலைபேசி அழைப்பு, நண்பர் படுக்கையில் இல்லை; அலுவலகம்
மீண்டுவிட்டார் என்பதை அறியத்தந்தது. நண்பர் மீண்டுவிட்டதில் மகிழ்ச்சிதான்
என்றாலும், கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. அன்று காலை நான் பங்கேற்கவேண்டிய ஒரு
தனிப்பட்ட நாடகம் ரத்து செய்யப்பட்டுவிட்டது போல!
நவீன நாடகங்கள் பத்துப் பதினைந்து பார்த்திருப்பேன். 'காலக் கனவு' நிகழ்வை மிகுந்த
ஈர்ப்புடன் பார்க்க முடிந்தது. எனக்குப் பலப்பல புதிய செய்திகள். 'கற்பாபிமானம்'
என்ற பெரியாரின் தொடர் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவரது பெயர் சொல்லி இயங்கும்
பல சமகாலப் பண்பாட்டுப் பழமைவாதிகளை விளங்கிக்கொள்ள அவரே ஒரு கருவியைத் தந்ததுபோல.
பாரதிக்கு முன்னும் பின்னும் நகர்ந்து தமிழ்ப்பெண்ணின் விடுதலைக்கான குரல்களையும்
செயல்பாடுகளையும் அந்நிகழ்வு அரங்கேற்றியது. அப்போராட்டத்தின் வரலாற்றை
மீட்டுக்கொள்வது இந்நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்திருக்கலாம்.
பிரதியைத் தயாரித்திருந்த வ. கீதா தேசிய, திராவிட, இடதுசாரி இயக்கங்கள்,
கிறிஸ்தவம், இலக்கிய முயற்சிகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடுநிலையோடு
தொகுத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது. அ. மங்கையின் இயக்கத்தில் நாடகம்
தியேட்டருக்கான சாத்தியங்களைக்கொண்டிருந்ததா என்பது பற்றிய விவாதம் பின்னர் அறையில்
எழுந்தது. ஒரு 'வாசிப்பு', 'நிகழ்த்துதல்' என்ற அளவில் நல்ல முயற்சி என்பதே பொதுக்
கருத்தாக இருந்தது.
பங்கெடுத்த பெண்கள் எல்லோருமே நாடகப் பிரதியின் கருத்தியலோடு மனம் ஒன்றியவர்கள்
என்பதால் நிகழ்த்துதல் இயல்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது.
நாடகப் பிரதி நூலாக வரவேண்டியது அவசியம்.
m
4. பேநசீரின் படுகொலை
பேநசீரின் படுகொலை அவருக்கு ஒரு நாயகி அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த டயானா
கிடைத்துவிட்ட ஆர்வத்துடன் ஊடகம் சடலத்தை மொய்க்கும் ஈ போலக் களமிறங்கியது. பேநசீர்
நாயகிதான். ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் ஒரு சமூகத்தில் அவரது செயல்பாடுகள்
பீதியைக் கிளப்பின. அவரைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை
தாலிபான் மூர்க்கர்களுக்கு அவரது பெண்மை ஏற்படுத்தியது. பல்வேறு சமரசங்களைச்
செய்துகொண்ட பேநசீர் ஆணாதிக்கத்திற்கு அடங்கவில்லை. ஆனால், பாகிஸ்தானிய
நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஆணாதிக்கப் பிரதிநிதி போன்றிருக்கும் ஜர்தாரி என்ற
கிரிமினல் முட்டாளை அவர் திருமணம் செய்துகொண்டது பெரும் முரண்பாடு.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் ராஜீவ் காந்தி உதிர்த்த, 'பெரு மரம்
வீழும்போது பூமி அதிரும்' என்ற வாக்கியம்போலக் கடந்த நூற்றாண்டில் இன்னொரு
வாக்கியம் தெற்காசியாவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்குமா என்பது சந்தேகமே.
ராஜீவின் மரணத்திற்குப் பின்னும் அவரது ஆத்மா அந்த வாக்கியத்தைச் சிலுவையாகச்
சுமந்துகொண்டிருக்கிறது. பேநசீரின் படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட வன் முறையை
நியாயப்படுத்தி, இந்திரா காந்தியின் மரணத்தை நினைவு கூர்ந்து, அதே வாக்கியத்தை உலக
ஊடகங்களின் முன் உதிர்த்தார் ஜர்தாரி. அவரைக் கிரிமினல் முட்டாள் என்றதன் சான்று
இது.
பேநசீரின் மரணம் பாகிஸ்தானில் ஜனநாயகத்திற்கு விழுந்த பேரடியாகப்
பார்க்கப்படுகிறது. இது மிகை. பேநசீர் ஜனநாயக உணர்வுக்குப் பெயர் போனவர் அல்ல,
ஊழலுக்குப் பெயர் போனவர். (அவரது கணவரின் பட்டப்பெயர் திருவாளர் 10 சதவீதம்). உலக
அளவில் இதுவரை ஆட்சிக்கு வந்த பெண்கள் ஜனநாயகவாதிகளாக இருந்தது அரிது என்பது
ஆழ்ந்து பரிசீலிக்கப்படவேண்டிய செய்தி. அதிகாரத்திற்கு வந்ததும் தாங்கள் 'பெண்மை'க்
குணம் உடையவர்கள் அல்ல, இரும்புக் கரம் கொண்டவர்கள் என நிறுவுவதே அவர்களின் முதல்
பணியாக உள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் முஷாரப்பிற்கு எதிராக உருவான ஜனநாயக இயக்கத்திற்கும்
பேநசீருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பர்மாவில் டோ அவுன் சான் சுஜீ (ஞிணீஷ்
கிuஸீரீ ஷிணீஸீ ஷிuuளீரீவீ)யை முன்னிறுத்தி நடக்கும் இயக்கம் போல பாகிஸ்தானில்
ஜனநாயக இயக்கம் பேநசீரையோ வேறு எந்த அரசியல் தலைவரையோ முன்னிறுத்தி நடைபெறவில்லை.
காரணம், அனைத்துத் தலைவர்களுமே பாகிஸ்தான் மக்கள் பார்வையில் கறைபடிந்தவர்கள்.
ஜனநாயக இயக்கம் மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரால் உச்ச நீதிமன்ற நீதிபதி
இஃப்திகார் முகமது சௌத்ரியை முன்னிறுத்தி நடந்தது. பேநசீர் பாகிஸ்தான்
திரும்பியதும் உலகக் கவனம் முழுவதும் அவர் பக்கம் குவிய ஜனநாயக இயக்கம்
தடம்புரண்டது. அதன் அடையாளமான இஃப்திகார் முகமது சௌத்ரியை முஷாரப் சட்ட விரோதமாகத்
தலைமை நீதிபதி பதவியிலிருந்து பணிநீக்கம் செய்தபோது அதை பேநசீர் கண்டிக்கக்கூட
இல்லை.
பேநசீரின் மரணத்தால் சாதகம் பெற்றது முஷாரப்பும் தாலிபான்களும். பேநசீருக்குப்
பிறகு முஷாரப்பிற்கு மாற்றுத் தேசியத் தலைமை இப்போதைக்கு இல்லை. தாலிபான்களுக்கும்
அவர்களுக்கு எதிரான பெரும் குரல் ஒடுங்கிவிட்டது. இழந்தது ஜனநாயக இயக்கம். ஏனெனில்,
அவர் மரணத்தோடு அவ்வியக்கமும் தளர்ந்துவிட்டது. ஆனால், பேநசீரின் மரணம் ஜனநாயக
இயக்கத்திற்கு முடிவுகட்டிவிடாது. தேர்தலுக்குப் பின்னர் அது வேகம் பெறும். பெற
வேண்டும். ஏனெனில், தேர்தல் முடிவுகள் முஷாரப்பிற்கு எதிராக இருந்தாலும்
சுதந்திரத்திற்குப் பின்னர் பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வரும் ராணுவத்திடமே அசலான
அதிகாரம் தொடர்ந்து இருக்கும். அந்நிலையை ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கம்தான் மாற்றி
அமைக்க முடியும். |