|
மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் பொறுப்பில் தற்போது செயல்பட்டு
வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் சென்னைக்கு வர உள்ளது. அதற்கெனத் தமிழ்நாடு அரசு
இருபத்தைந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசு எழுபத்தாறரைக் கோடி
ரூபாய் வழங்குகிறது. இத்தகைய பின் புலத்துடன் தமிழ் சார்ந்த நிறுவனம் தமிழகத்தில்
அமைவது வரவேற்கத்தக்க செய்தி.
ஆனால், ஏற்கெனவே தமிழ் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் கதி செம்மொழி
மையத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. மிக விரிவான எதிர்காலத் திட்டங்களுடன்
தொடங்கப்படும் அமைப்புகள் அத்திட்டங்கள் பற்றிய எந்த உணர்வும் அற்ற சாதாரண
நிறுவனங்களாகச் சுருங்கிப் போவது தமிழகத்தின் இயல்பான வழக்கம்; சாபக்கேடு.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ் சார்ந்த ஆய்வுகளுக்காகத்
தொடங்கப்பட்ட நிறுவனம். அது இன்று மிகக் குறைந்த அளவுக்கான செயல்பாடுகளையே
கொண்டுள்ளது. ஆய்வு நூல்களை உருவாக்குவதும் வெளியிடுவதுமான அதன் பணிகள் அனேகமாக
நின்றுவிட்டன. பிஎச்.டி. ஆய்வுகளை உருவாக்கும் கல்லூரி நிலையிலேயே அதன் செயல்பாடுகள்
உள்ளன.
தமிழ், தமிழகம் சார்ந்த பல்துறை ஆய்வுகளுக்காக ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று அரசு கலைக்கல்லூரியின் நிலைக்குக்
கீழிறங்கிப் போய்விட்டது. அகழ்வாய்வுகள், கடல் சார் ஆய்வுகள், ஓலைச்சுவடி சேகரம்,
பதிப்புகள், கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உள்ளிட்ட ஆவணமாக்கம், பலவித அகராதித்
தயாரிப்பு என விரிவான திட்டங்களுடன் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் அது. இன்று அங்கு
ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. தரமான புத்தக வெளியீடுகளும் இல்லை. முதுகலை,
எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் தொடங்கப்பட்டு இன்னொரு கல்லூரியாக நடைபெற்று
வருகின்றது.
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நிறுவனம்
ஒருகாலத்தில் அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றை அச்சில் பதிப்பித்து வெளியிடும் பணியைச்
செய்து வந்தது. இன்று அதன் இருப்பே தெரியாத அளவு செயல் மங்கிப் போயிற்று. சரஸ்வதி
மகால் நூலகம் (தஞ்சாவூர்) ஓலைச் சுவடிகளை அச்சில் பதிப்பித்து வெளியிடும் மற்றோர்
நிறுவனம். அதன் செயல்பாடுகளும் முடங்கிவிட்டன. உயர்கல்வி சார்ந்து பல்துறை நூல்களை
வெளியிட்டு வந்த தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் இன்று பள்ளிப் பாடநூல்களை மட்டும்
விற்பனை செய்யும் கடையாக இருக்கிறது.
தமிழ் வளர்ச்சியோடு தொடர்புடைய நிறுவனங்கள் பல இருந்தும் அவற்றின் நிலை இதுதான்.
இந்நிலைக்குக் காரணம் இந்நிறுவனச் செயல்பாடுகளில் அதீதமான அரசியல் தலையீடு
நேர்ந்தமையே. ஒரு அரசு உருவாக்கிய நிறுவனத்தை அடுத்து வரும் அரசு கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுவது இங்குத் தொடர் நிகழ்வு. யாருக்குப் பெயர் கிடைப்பது என்னும் அரசியல்
போட்டியில் தத்தளித்து முடங்கிப்போகின்றன இந்நிறுவனங்கள்.
திட்டங்களை வகுப்பதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் சரியான தலைமை அமையாததும்
முக்கியமான காரணமாகும். தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு முதல் துணைவேந்தராக அமைந்த
வ.அய். சுப்பிரமணியன் பல திட்டங்களை உருவாக்கும் வல்லுநராகவும் அவற்றைச்
செயல்படுத்தும் ஆற்றல்கொண்ட நிர்வாகியாகவும் இருந்தார். ஆனால் அவரை அடுத்து வந்த
துணைவேந்தர்கள் அப்பல்கலைக் கழகத்தின் நோக்கத்தைக்கூடப் புரிந்துகொள்ளும்
திறனற்றவர்களாகவும் நிர்வாகக் குறைபாடு உடையவர்களாகவும் அமைந்தனர். அதற்குக் காரணம்
அவர்கள் அரசியல், சாதி உள்ளிட்டவற்றால் பதவி பெற்று வந்தவர்கள் என்பதுதான்.
துணைவேந்தர் நியமனமே இப்படி என்றால் அந்நிறுவனத்தின் மற்ற பணியாளர் நியமனம் பற்றிச்
சொல்ல வேண்டியதில்லை. துறைப் புலமையற்று நாற்காலி தேய்க்கும் நபர்களால் ஒரு
நிறுவனம் ஆக்கிரமிக்கப்பட்டால் சிதைவுதான் முடிவாகும். நிதி ஒதுக்கீடு இல்லாமை,
பணியிடங்களை நிரப்பாமை, திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வின்மை ஆகியவற்றால் இவை
பெயரளவுக்கான நிறுவனங்களாகச் சுருங்கிப் போயின.
இச்சூழலில் செம்மொழி ஆய்வு மையம் சென்னைக்கு வருகிறது. இம்மையப் பதவிகளைப்
பெறுவதற்கும் திட்ட நிதிகளை வாங்குவதற்கும் பலர் போட்டியிடுவர். அரசியல்
செல்வாக்கும் ஊழலும் அவற்றைத் தீர்மானிப்பதாக மாறிவிடக் கூடாது. இதன் ஆலோசனைக்
குழுவில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளவர்கள் இப்போதைய அரசுக்கு வேண்டியவர்கள்
என்பது வெளிப்படையாகத் தெரியும் செய்தி. தற்போது இம்மையத்தின் தலைவராக முதல்வர்
செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொழி சார்ந்த நிறுவனம் ஒன்றிற்கு அத்துறை
வல்லுநர் ஒருவர் தலைவராக அமைவதுதான் பொருத்தமாக இருக்க முடியும். தலையாட்டிப்
பொம்மையாக இல்லாமல் சுயமாகச் செயல்படும் அளவு அதிகாரம் கொண்டதாகவும் அப்பதவி அமைய
வேண்டும்.
தற்போது மைசூரில் செயல்பட்டுவரும் இம்மையம் பலகோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது.
செம்மொழித் தமிழுக்கென இம்மையத்திடம் உள்ள திட்டங்கள் பற்றித் தெளிவு ஏதுமில்லை.
அவை சரியான முறையில் வெளியே பரப்பப்படவும் இல்லை. ரகசிய பேரங்களுக்கும்
பங்கீடுகளுக்கும் வாய்ப்பிருக்காது என்பதால் வேண்டுமென்றே திட்டங்கள்
பரவலாக்கப்படாமல் உள்ளன. ஊடக வசதிப் பெருக்கம் மிக்க இக்காலத்தில் சமூகத்தின்
கடைக்கோடியிலிருக்கும் சாமான்யனுக்கும் தகவல்களைக் கொண்டுசேர்க்க முடியும்.
அப்போதுதான் ஆர்வமும் உழைப்பும் உடையவர்களை இனம் காண இயலும்.
'பணம் நிறைய இருக்கிறது. ஆட்கள்தான் இல்லை' என்று அம்மையத்தின் தற்போதைய தலைவர்
பேராசிரியர் ராமசாமி கருத்தரங்க மேடைகள் பலவற்றில் வெளிப்படையாகக் கூறுகிறார். தன்
முனைப்பு புரையோடிக் கிடக்கும் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வளாகங்களில் ஆட்களைத்
தேடினால் எப்படி அகப்படுவார்கள்? 1980களிலேயே பல்கலைக் கழகங்கள் அறிவுப்புலம்
என்னும் தகுதியை இழந்துவிட்டன. ஆர்வம்மிக்க பலரும் ஓய்வு பெற்றனர். தனியார் கல்வி
நிறுவனங்களிலும் அரசு பள்ளி, கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பிறதுறைகளில்
பணியாற்றிக்கொண்டே ஆர்வத்தின் காரணமாகத் தமிழ் சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர்,
எழுத்தாளர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் ஆட்களை அடையாளம் காணவேண்டும்.
ஆண்டு முழுக்கச் சும்மா இருந்துவிட்டு மார்ச் 31ஆம் நாளுக்குள் இத்தனை கோடியைச்
செலவிட வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தால் கடைசி இரண்டு மாதங்களில் அவசர அவசரமாக
வாரி இறைக்கும் வகைத் திட்டங்களால் என்ன பயன்? சந்தி பிரித்துச் செய்யுளை
அச்சிட்டுவிட்டால் செம்பதிப்பு, நகலெடுத்துக் கொடுத்தால் பதிப்பாசிரியர் என்பதான
நிலையில்தான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.
தமிழ் இன்றும் வாழும் மொழியாக இருக்கும்போதும் கி.பி. 600க்கு முற்பட்ட
இலக்கியங்கள் பற்றித்தான் ஆராய வேண்டும் என்று அபத்தமான வரையறையைக் கொண்டுள்ளது
இம்மையம். பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் உதவும் நிதி முகவராக இம்மையம்
உள்ளது. முன்னாள், இந்நாள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்களுக்கு
மேலும் சில வகைகளில் வருமானத்திற்கு வழி வகுக்கும் திட்டங்கள் செயல்படுவதாகத்
தெரிகின்றன. தமிழுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர்கள்,
செய்துகொண்டிருப்பவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மட்டும் இல்லை. கல்விப்புலம்
சாராதவர்கள் முக்கியமான காரியங்களை ஆற்றியிருக்கிறார்கள். அத்தகைய ஆற்றல்
உடையவர்களைத் தேடிக் கண்டடைந்து பணிகளை ஒப்படைக்கும் திறந்த மனப்பான்மை இம்மையச்
செயல் திட்டத்தில் இல்லை.
செம்மொழித் தமிழ் என்னும் நோக்கின் அடிப்படையில் பரவலான திட்டங்கள் பலவற்றை
உருவாக்குவதும் அவற்றைச் செயல்படுத்துவதற்கு அரசியல் தலையீடுகள் அற்ற சுதந்திரமான
நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவதும் பல்கலைக்கழகப் பட்டங்களை அளவுகோலாகக் கொள்ளாமல்
அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் திறந்த நடைமுறைகளின் வழிப்பட்டதுமாகச்
செம்மொழி ஆய்வு மையம் அமைய வேண்டும். இல்லையேல் ஏற்கெனவே முடங்கியும் சுருங்கியும்
போய்விட்ட நிறுவனங்களின் பட்டியலில் மேலும் ஒன்றாகச் செம்மொழி ஆய்வு மையமும்
சேர்வதைத் தவிர்க்க இயலாது.
|