|
இந்தியப் பொருளாதாரம் மற்றும் விவசாயத்திற்குப் பசுமைப் புரட்சி பெரும்
நன்மையைச் செய்திருக்கிறது என்று ஒரு தரப்பும் பசுமைப் புரட்சியால் விளைந்த
நன்மைகளை விடத் தீமைகளே அதிகம் என்று ஒரு தரப்பும் தொடர்ந்து விவாதத்தில்
ஈடுபட்டுவருகின்றன. உலகமயமாதலின் பின்னணியில் விவசாயத் துறையின் நிலை குறித்த
விவாதம் தீவிரமடைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் பசுமைப் புரட்சியையும் அதன்
விளைவுகளையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இயற்கை வேளாண்மை, கழிவு நிர்வாகம் முதலான துறைகளில் மிகுந்த அக்கறையுடனும்
செயலூக்கத்துடனும் செயல்பட்டுவரும் சங்கீதா ஸ்ரீராம், பசுமைப் புரட்சியை விரிவான
பரிசீலனைக்கு உட்படுத்துகிறார்.
அக்டோபர் 2005 (இதழ் 70), பிப்ரவரி 2006 (இதழ் 74) ஆகிய இதழ்களில் இந்தியாவின்
பாரம்பரிய வேளாண் முறைகளின் சிறப்புப் பற்றியும் பசுமைப் புரட்சிக்கு முந்தைய நிலை
பற்றியும் சங்கீதா ஸ்ரீராம் எழுதியிருந்தார். முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க பல
சிறப்பம்சங்களைப் பெற்றிருந்த இந்திய வேளாண்மை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பல்வேறு
காரணங்களால் சீரழிந்தது என்பதே அக்கட்டுரைகளின் சாராம்சம். லட்சக்கணக்கான மக்களைப்
பலி கொண்ட கொடிய பஞ்சங்களுக்குத் தீர்வாகப் பசுமைப் புரட்சி பங்காற்றியது என்று
சொல்லப்படும் வாதங்களையும் சங்கீதா மறுக்கிறார். உற்பத்தி - விநியோகத் துறையில்
நிலவிய மோசமான நிர்வாகமும் ஆங்கிலேயரின் கொடூரமான வரிக் கொள்கைகளும் சுரண்டலுமே
பெருத்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்கிறார் சங்கீதா. பஞ்சம் நிலவிய காலங்களின்
உணவு உற்பத்தி குறித்த ஆங்கிலேயர்களின் ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டே சங்கீதா
பஞ்சங்கள் பற்றி நிலவும் கருத்தாக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய நிகழ்வுகள் இந்திய விவசாயத்தின்
அடிப்படைகளை எப்படிக் குலைத்தன என்பதையும், பசுமைப் புரட்சியை வரலாறு, அறிவியல்,
தொழில்நுட்பம், கலாச்சாரம், சூழலியல், சமூகவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற
பல்வேறு கோணங்களில் இனிவரும் கட்டுரைகளில் சங்கீதா ஆராய்கிறார். சங்கீதா ஸ்ரீராம்
இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு தானே இயற்கை வேளாண்மை முறைகளைச் சிறியளவில்
செய்தும் வருகிறார். அதோடு, நம் சூழலியலுக்கேற்ற பாரம்பரிய உணவுப் பயிர்களை
நகர்ப்புற மக்களிடம் பிரபலப்படுத்தம் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
மண் சார்ந்த கலைகள், விவசாய முறைகள், வாழ்க்கை முறைகள் ஆகிய பலவும் வேகமாக
மாறுதலுக்கும் உலகளாவிய வர்த்தகப் போக்குகளின் தாக்கத்திற்கும் உள்ளாகிவரும் இன்றைய
சூழலில் இத்தகைய பரிசீலனை முக்கியத்துவம் பெறுகிறது. இத்துறையில் அக்கறையும்
ஈடுபாடும் கொண்டவர்கள் இந்தப் பரிசீலனையை ஆரோக்கியமான விவாதமாக வளர்த்தெடுப்பார்கள்
என்னும் நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் பிரசுரிக்கப்படுகிறது. |