Google   www kalachuvadu.com

பதிவு
சென்னைப் புத்தகக் கண்காட்சி:
தேடல் மிகுந்த வாசகர்களுக்கான வெளி
ந. கவிதா

இடைவிடாது கொட்டித் தீர்த்துச் சென்னையின் அழகு காட்டிய மழை நாளான 4.1.08 அன்று தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் தொடக்க விழா இன்றியே குறைந்தபட்ச வாசகர்களோடு சென்னைப் புத்தகத் திருவிழா தன் முதல் நாளை ஆரம்பித்தது. அரங்க ஏற்பாடுகளையும் பராமரிப்பு முயற்சிகளையும் ஒரே நாளில் தோற்கடிக்கும் எத்தனிப்பு அந்த மழைக்கிருந்தது. இம்முறை கிட்டத்தட்ட 560 கடைகள். அண்ணாந்து பார்க்கவைக்கும் பெரிய பேனர்களோடு வரவேற்பு முகப்பிலேயே பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கப் பதிப்பகங்கள் முயன்றன. ஏழு நுழைவாயில்கள்கொண்ட அரங்க அமைப்பு கடந்த ஆண்டுகளின் நெரிசலான வாசக நடமாட்டத்தைக் குறைந்திருந்தது. டிக்கெட் கவுண்டர்களும் அப்படியே.

புத்தகக் கண்காட்சியின் முதலிரண்டு நாள்களை மழை அபகரிக்க, தொடர்ந்துவந்த வேலை நாள்களும் தமது பங்கினை எடுத்துக்கொண்டன. மாலை நேரங்கள் மட்டுமே சற்றே பரபரப்பைக் கொண்டிருக்க, பொங்கலை ஒட்டிய விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகரிக்கும் என்னும் எதிர்பார்ப்பும் சற்றே பொய்யானது.

வண்ணவிளக்குகளும் திரும்பும் இடமெல்லாம் விளம்பரத் தட்டிகளுமாகக் களைகட்டிய சென்னை சங்கமத்தின் விளம்பரக் கவனிப்பிற்கு முன்னால் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விளம்பரங்கள் நிற்க முடியுமா? ஆட்டமும் பாட்டமுமாக உற்சாக மூட்டும் நாட்டுப்புறக் கலைவடிவங்களோடு புத்தகச் சந்தையின் நிறைவு நாளன்றே திருவிழா நம்ம தெரு விழாவும் நிறைவு விழாக் கண்டது. புத்தக அரங்கின் மாலைப் பொழுதின் பரபரப்புக் குறைய இதுவும் காரணமோ?

புத்தகங்களை வாங்கியடுக்கி வண்டிகளில் வைத்துத் தள்ளிச் செல்லும் வாசகர்களையும் இந்த நாள்களில் பார்க்க முடிந்தது. காட்சி ஊடகத்தின் ஆக்கிரமிப்பு வாசிப்புப் பழக்கத்தை விழுங்கிவிட்டதாகத் தோன்றும் இந்நவீன யுகத்தில் தேடிக் களைத்து வேறிடங்களிலிருந்தும் வேறு ஊர்களிலிருந்தும் வந்து புத்தகங்களை வாங்கிச்செல்லும் வாசகர்களைக் கண்டு மகிழ்ச்சியடையப் பல தருணங்கள் கிடைத்தன.

பல பதிப்பகங்கள் கண்காட்சி தினங்களில் புதிய புத்தக வெளியீட்டிற்கான அரங்குகளைக் கொண்டிருந்தன. பிரபல படைப்பாளிகளும் கலைஞர்களும் வெளியீட்டு அரங்குகளில் பங்குபெற்று வாசகர்களுடன் உரையாடவும் கையெழுத்திடவும் செய்தார்கள். புத்தக அரங்குகளின் பொது மேடையில் ஒவ்வொரு நாளும் பட்டிமன்றங்களும் கவியரங்குகளும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. குறும்படங்களும் திரையிடப்பட்டன. முதல்வரின் பிள்ளைப் பருவத்திலிருந்து இதுவரையிலான அரிய புகைப்படங்கள் அவரது பிறந்த வீட்டைப் போலத் தோற்றமளித்த கலைஞர் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. புத்தகக் கடைகள் தங்களது விளம்பரங்களுக்காகத் தந்த பலூன்களைக் கண்ட குழந்தைகள், பலூன் கடைகளாகப் புத்தகக் கடைகளைத் தம் பெற்றோருக்கு அடையாளங்காட்டி அடம்பிடித்த காட்சிகளுக்கும் அங்கே இடமிருந்தது.

இந்த ஆண்டு புதிய வெளியீடுகள் அளவிற்குப் பேசப்பட்ட கிளாசிக்குகளும் மறுபதிப்புகளும் வெளி வந்திருக்கின்றன. வெகுசன இதழ்களில் தொடர்ந்து எழுதியும் கவனிக்கப்பட்டும் வந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான தேடல் எல்லாக் கடைகளிலும் தொடர்ந்தது.

ஆன்மிகமும் ஜோதிடமும் இன்னும் மக்களிடம் தமது இடங்களை விடாப்பிடியாய்க் கொண்டிருப்பதும் சினிமாவிற்கு இருக்கும் அசைக்க முடியாத இடமும் இந்தக் கண்காட்சியிலும் வெளிப்பட்டன. சீரிய இலக்கியங்களுக்கும் மாற்றுச் சிந்தனை கொண்ட பதிப்பக வெளியீடுகளுக்குமான கவனம் அவற்றிற்கேயான வாசர்களிடமிருந்தது. பெரிய பதிப்பகங்கள் சில எல்லாக் கடைகளிலும் தங்களது புத்தகங்கள் கிடைக்குமாறு செய்திருந்தது வாசகர்களுக்குச் சலிப்பினை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இம்முறை பதினான்கு நாள்கள் நடந்தது இக்கண்காட்சி. என்ன காரணங்கள் இருந்தாலும் தேடலுடைய வாசகர்களின் வரவு குறைந்ததாகத் தோன்றவில்லை.

காலச்சுவடு அரங்கில் ஒவ்வொரு நாளும் புத்தக வெளியீடு இருந்தது. வாசகர் வட்டத்தின் முதல் பதிப்பினையடுத்து நீண்டகால இடைவெளிக்குப் பிறகு சிட்டி, தி. ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரியினைக் காலச்சுவடு கொண்டுவந்ததற்கான வரவேற்பினை உணரமுடிந்தது. அதோடு கிருத்திகாவின் வாஸவேச்வரம், ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் போன்ற கிளாசிக்குகளையும் காலச்சுவடு கொண்டுவந்திருந்தது. பேசப்பட்ட பேபி ஹால்தரின் விடியலை நோக்கி, ஸ்ரீகுமாரின் அழியா முத்திரை போன்ற மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டன. புதுமைப்பித்தன், சு.ரா. படைப்புகள் தங்களுக்கான இடத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொண்டே இருப்பதை அவற்றைத் தேடிவாங்கும் வாசகர் கூட்டம் நிரூபித்துக்கொண்டிருந்தது இந்தக் கண்காட்சியிலும்.

சென்னைப் புத்தகச் சந்தையில் இம்முறை எதிர்பார்த்த விற்பனை இல்லை எனப் பரவலாகப் பேசப்பட்டது. காலச்சுவடு அரங்கில் நிறைவான விற்பனை இருந்தது. கடந்த ஆண்டைவிட விற்பனையில் 25% உயர்வு இருந்ததை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

வெகுசன எழுத்து, வெகுசன சினிமா கவர்ச்சி, பகட்டு, ஆடம்பரம், அதிகாரத்தின் முன்குழைதல் ஆகியவற்றைத் தவிர்த்த நேர்மையான ஆழமான பண்பாட்டுப் பணிக்கு வாசகர் தரும் ஆதரவாகவே இதை உணர்கிறோம். தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை இந்தக் கண்காட்சி எங்களுக்கு வழங்கியுள்ளது.

உள்ளடக்கம்