|
குறிப்பேட்டிலிருந்து...
(இலக்கியக் கட்டுரைகள்)

அ. யேசுராசா
பக். 132. விலை ரூ. 200.
அலை வெளியீடு
இல.1, ஓடைக்கார வீதி, குருநகர், யாழ்ப்பாணம். |
ஈழத்தின் முக்கியமான நவீனப் படைப்பாளிகளில் குறிப்பாகக் கவிதையில் ஒருவர்;
ஈழத்தின் முதன்மையான கலை, இலக்கிய இதழான அலை வெளியீட்டில் இணையாசிரியராகவும்
தனித்தும் செயல்பட்டவர்; மு. பொன்னம்பலம் ஆசிரியராக இருந்த திசை இதழில்
துணையாசிரியராகப் பணியாற்றியவர்; இடதுசாரிச் சிந்தனைகளில் ஈடுபாடுகொண்டவரெனினும்
எழுபதுகள், எண்பதுகளில் ஈழத்தில் ஆதிக்கம் செலுத்திய 'வறட்டு' மார்க்சிய இலக்கிய
விமர்சனப் போக்குக்கு எதிரான விவாதங்களில் முனைப்புடன் ஈடுபட்டவர்; இளம்
படைப்பாளிகளுக்காகக் கவிதை என்னும் இதழை நடத்தியவர்; இலக்கியப் படைப்பு அனுபவம்
சார்ந்ததாக, கலாபூர்வமானதாக, உருவ அமைதிகொண்டதாக வெளிப்பட வேண்டும் என்பதைத்
தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் அ. யேசுராசா.
ஏற்கெனவே வெளிவந்துள்ள யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத்
தொகுப்பும் அறியப்படாதவர்கள் நினைவாக . . . ! கவிதைத் தொகுப்பும்
குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பேட்டிலிருந்து . . . இவரது ஆறாவது நூல். இந்தத்
தொகுப்பில், 1971 - 2006 காலகட்டத்தில் யேசுராசா எழுதிய கட்டுரைகள், மதிப்புரைகள்,
மொழிபெயர்ப்புகள் மற்றும் அவருடனான நேர்காணல் ஒன்றும் அடங்கியுள்ளன.
ஒரு படைப்பாளி என்பதைவிடவும் தன்னை நல்ல வாசகன் என்றே பல சந்தர்ப்பங்களிலும்
குறிப்பிடும் யேசுராசா, ''ஒரு கலை இலக்கிய ரசிகன் என்று சொல்லுகின்றபோது, என்னுடைய
முதல் காதல் சினிமாதான்; இரண்டாவது, கவிதை என்று சொல்லலாம்'' என்கிறார். இதனை அவரது
எழுத்தும் செயல்பாடும் உறுதிப்படுத்துகின்றன.
இந்தத் தொகுப்பில் யேசுராசாவுடனான நேர்காணல் மற்றும் 'ஈழத்துத் தமிழ்ச்
சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சினையும்', 'ஈழத்துத் தமிழ்க் கவிதை ஆய்வரங்கு',
'சி.வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே...', 'மற்றவர்க்காய்ப் பட்ட துயர்'
(இ. பத்மநாப ஐயர் பற்றியது), 'சுந்தர ராமசாமி நினைவுகள்', 'மனிதனாயிருந்த மனிதன்'
(ஏ.ஜே. கனகரத்தனா பற்றியது) ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மதிப்புரைகள்,
மதிப்புரைக்கான நோக்கத்தைத் தெளிவாக உள்வாங்கி எழுதப்பட்டுள்ளன.
ஒரு எழுத்தாளர் தன்னுடைய எழுத்துக்களை நூலாக்கி வெளியிடுவதில் 'ஒருவித சுயநலம்'
இருக்கிறது; ஆனால் பிறரது படைப்புகளை வெளிக்கொண்டு வருவது, இலக்கிய இதழ்களுக்கு
ஆதரவளிப்பது, தரமான படைப்புகளை மொழிபெயர்த்துப் பரவலாக்குவது போன்ற
செயல்பாடுகளிலேயே 'பொதுநல அக்கறை' மிகுந்துள்ளது என்று உறுதிபட நம்புகிறார்
யேசுராசா. இதன் அடிப்படையிலேயே பத்மநாப ஐயருக்கு 'இயல் விருது' வழங்கப்பட்டதை,
அவரது 'பொதுநல அக்கறைக்கு' அளிக்கப்பட்ட அங்கீகாரமாகக்கொண்டு பாராட்டுகிறார்.
நாற்பதாண்டுகளாகத் தொடரும் யேசுராசாவின் இலக்கிய வாழ்க்கையிலும் இந்தப் 'பொது நல
அக்கறை' அடிநாதமாக இருப்பதை இந்தத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிறது.
"'நான் எழுதியவற்றை ஒரு முறையாவது திருத்தி எழுதுவதில்லை' என்று பொறுப்பில்லாமல்''
செங்கை ஆழியான் சொல்வதாகக் குறை கூறுகிறார் யேசுராசா. ஒரு படைப்பாளி அவ்வாறு
கூறுவதை அவனது படைப்பின் மீதான தன்னம்பிக்கை சார்ந்த நிலைபாடாகவே கொள்ள வேண்டும்.
புதுமைப்பித்தனும் இதுபோல் கூறியுள்ளார். அதற்குத் தக, புதுமைப்பித்தனின்
சிறுகதைகள் பலவும் அவரது தன்னம்பிக்கைக்குச் சாட்சியங்களாகவும் நிற்கின்றன. ஆனால்,
செங்கை ஆழியானின் நாவலுக்கு யேசுராசா எழுதியுள்ள மதிப்புரையைப் படிக்கும்போது அவரது
விமர்சனத்தின் நியாயத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்துப் பிழைகளில்லாமல் நூலாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.
|