|
மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன?
மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி.
நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.
ஆனால், பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மலையாளம் இரண்டாம் மொழியாகவே
இருக்கிறது. மழலையர் பள்ளியில் முதலில் கற்பிக்கும் அரிச்சுவடி மலையாளமல்ல;
ஆங்கிலந்தான். சரஸ்வதி பூஜைக் காலத்தில் குழந்தைகளை எழுத்தறிவிக்க உட்காரவைத்து
'ஹரிஸ்ரீ' என்று எழுதவைப்பது பத்திரிகைகளும் பிற நிறுவனங்களும் நடத்தும் சூடான
வியாபாரம். ஆனால், மறுநாள் அந்தக் குழந்தை ஏ.பி.சி.டி ஐ நோக்கியே திரும்புகிறது.
சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும்
நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய
நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.
அதே சமயம் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம். மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும்
மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே. நாடகங்கள் மலையாளம்.
கதையும் கவிதையும் நாவலும் மலையாளம். அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.
ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம்
வெறும் 'செக்கண்ட் லாங்வேஜ்'. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?
'பயன்பாடு' என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம்
பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. 'பயன்'
என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை
எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று.
வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.
சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான
கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது
செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க
எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன்
அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும்
மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும்
அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.
இந்த விஷயத்தில் மலையாளி திருப்தியடைந்தவனே. இவ்வளவு காரியங்களை நிறைவேற்றும்
மலையாளத்தை அவன் இரண்டாம் மொழியாகவேனும் படிக்க முடிகிறதே. பேச்சு மொழி பிறப்பிலேயே
வாய்த்துவிடுகிறது.
ஆனால், இதற்கு அடுத்த தளத்தில்தான் மலையாளி மலையாளத்தைப் பற்றிப் பரிதவிக்க
நேரிடுகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள்,
சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.
அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை
விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை
விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும்
சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில்
வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி
அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.
அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும்
வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி
மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு
அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு
இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள்,
தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு
கொழுத்தார்கள்.
சராசரி மலையாளி நோஞ்சான் ஆனான். அவன் அவர்களுடைய இரையும் அடிமையும் ஆனான். அவனுடைய
மலையாளம் வெற்றுப் பை ஆனது. மலையாளம் அவனுடைய இதயத்தின் மொழியாக இருந்தது. ஆனால்,
வாழ்க்கையை உருவாக்க அவனுக்கு உதவாத மொழியாக ஆனது.
காரணம், கேரளத்துக்குள்ளே மலையாளிகளுக்கு விருப்பமான ஒரு பொருளாதார நிலை
இல்லாமல்போயிற்று. அரசியலால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள்
தொழிற்சாலைகளையும் பொருளாதார முயற்சிகளையும் திட்டமிட்டுக் கவிழ்த்தன. விவசாயியைப்
பூர்ஷ்வா என்று சித்தரித்து அவனை மண்ணைக் கவ்வச்செய்தன. உண்ணும் அரிசி முதல்
பூஜைக்கான பூக்கள்வரை - அவ்வளவு எதற்கு?
தென்னைகளின் நாடான கேரளத்திலுள்ள கயிறுத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் நார்கூட-
அண்டை மாநிலங்களிலிருந்து தருவிக்க வேண்டிய நிலையை உருவாக்கின. அரசு ஊழியர்களின்
முறைகேடுகள் பொதுச் சேவைத் துறைகளை அலங் கோலமாக்கின.
அமைச்சர்கள், அதிகாரிகளின் கையாலாகாத்தனம் கேரளத்தை ஒரு ஆட்சியிலிருந்து இன்னொரு
ஆட்சியை நோக்கிக் காற்றுப்போன பந்தைப் போல உதைத்து எறிந்திருக்கிறது.
மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால்
தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ
வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற
வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும்
புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய
பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம்
செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.
பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான்
இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை,
தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும்
அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம்
அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும்
குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: 'மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக
மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை
பேசுபவர்களுமல்ல.'
தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர்
எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.
தமிழில்: சுகுமாரன்
|