|
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம்
அது. சுமார் 150 தலித் குடும்பங்களும் 2,000 சாதி இந்துக் குடும்பங்களும் உள்ள ஊர்.
2006 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்குப் புருஷோத்தமன்
என்ற தலித் சமூகத்தவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். போட்டியிலிருந்து
விலகிக்கொள்ளுமாறு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த, பாமக வேட்பாளர் குமார் என்பவரது
அச்சுறுத்தலுக்கு அவர் பணியவில்லை.
13.10.2006 அன்று நடைபெற்ற தேர்தலில் சாதி இந்துக்கள் சிலரது வாக்குகளும்
புருஷோத்தமனுக்குக் கிடைத்தன. உடனே அவருடைய தேர்தல் முகவர்கள் தாக்கப்பட்டனர். தலித்
மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த
இத்தாக்குதலில் வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட
பொருள்கள் நாசப்படுத்தப்பட்டன. வரதராசு, மாயவன் ஆகிய இருவரது வீடுகளும் தீயிட்டுக்
கொளுத்தப்பட்டன. தலித்துகள் பயன்படுத்தும் கிணற்றில் விஷம் கலக்கப்பட்டது. தொடர்ந்து
தலித் மக்கள் சமூகப் புறக்கணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். விடுதலைச் சிறுத்தைகள்
இயக்கத்தின் நிர்வாகிகளும் தாக்கப்பட்டனர். அக்கட்சியின் கொடிக் கம்பமுங்கூட
வெட்டிச் சாய்க்கப்பட்டது. பின்னர் இப்பிரச்சினையை முன்வைத்து இந்த இயக்கம் மட்டுமே
போராடியது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தை
ஒருங்கிணைத்தது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கந்தான்.
இத்தாக்குதலுக்கு உள்ளான கிராமத்தின் பெயர் பத்திரக்கோட்டை, இக்கிராமம் இரண்டு
தமிழ்த் திரைப்படங்களில் கதையாடலுக்கான பின்புலமாக இடம்பெற்றிருக்கிறது.
பத்திரகோட்டை என்னும் இக்கிராமம் சார்ந்த, இழந்துபோன கடந்த காலப் பெருமித நினைவுகளை
மீட்டெடுக்கும் விதமாக இதே ஊரைச் சார்ந்த தங்கர்பச்சான் அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு
ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
பத்திரக்கோட்டையில் வாழும் மாதவர் படையாட்சி என்னும் மனிதனின் வாழ்க்கையை
நெகிழவைக்கும் விதத்தில் சொல்லிச் செல்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு என்னும் அவரது
சமீபத்திய திரைப்படம். கிராம வாழ்வின் மையமாக விளங்கும் பழைய மதிப்பீடுகளில்
உருவாகிவரும் மாற்றங்களை வலியுடனும் இயலாமையுடனும் எதிர்கொள்ளும் மாதவர் படையாட்சியை
மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கதையாடல் மனித உறவுகளிலும் உணர்வுகளிலும் ஏற்படும்
மாற்றங்களை வேதனையோடும் விமர்சனத்தோடும் எதிர்கொள்கிறது.
பத்திரகோட்டை என்னும் அசலான கிராமத்துக்கும் தங்கர்பச்சான் புனைந்து காட்டும்
பத்திரக்கோட்டைக்கும் இடையேயான இடைவெளி நிரப்பப்பட முடியாததாக உள்ளது.
யதார்த்தத்தில் சொத்தையும் உறவினர்களையும் இழந்து ஊரைவிட்டு வெளியேறுபவர்களாகவும்
வெளியேற்றப்படுபவர்களாகவும் ஒடுக்கப்பட்ட மக்களே உள்ளனர். ஆனால், தங்கர்பச்சானின்
திரைப்படம் அதைப் பற்றி எதுவும் பேசாமல் தலித்துகளின் மீது தொடர்ந்து வன்முறையை
ஏவும் படையாச்சி என்னும் ஆதிக்க சாதியினரைப் பற்றியே பேசுகிறது. அவர்களது 'துயரங்களையும்
தவிப்புகளையும்' குறித்து 'உள்ளத்தை உருக்கும்' ஒரு சித்திரத்தை உருவாக்க
முயல்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். அதையே தமிழகக் கிராம வாழ்வின் பொது
அடையாளமாகவும் கட்டமைக்க முயல்கிறார்.
'மண் மணம் கமழும்' தமிழ் சினிமாக்களின் பொதுவான அடையாளம் இது. தமிழ் சினிமாக்களில்
தமிழ்க் கிராமம் முழுமையான அளவில் சித்தரிக்கப்பட்டதே இல்லை. பல்வேறு வகுப்பினரிடையே
நெருக்கமாக வாழும் தலித் சாதியினரின் இருப்பு தந்திரமான முறையில்
மறைக்கப்பட்டுவருகிறது. கிராம வாழ்வின் முக்கிய அம்சமான சாதிய முரண்பாடுகளை ஓரளவு
பதிவுசெய்ய முயன்ற இந்திரா படம் இவற்றில் முக்கியமானது எனச் சொல்லலாம். இருந்தும்
வேறுசில பிரச்சினைகளைக் காட்டி நம் விமர்சகர்களால் இப்படம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
வேறெந்தப் படங்களைவிடவும் மண்மணம், கிராமியம், மரபு சார்ந்து உருவாக்கப்படும்
படங்கள் சாதியம் எனும் 'சவாலை'ச் சந்தித்தே தீர வேண்டும். ஆனால், பெரும்பான்மைச்
சாதியினரின் எதிர்ப்புகளுக்குப் பயந்தோ சொந்த சாதிப் பற்று காரணமாகவோ தமிழ் சினிமா
இயக்குநர்கள் இச்சவாலை எதிர்கொள்வதில்லை. தமிழ் சினிமா ஆதிக்க சாதிகளின் பிரதிகளாகவே
தேங்கிப்போய்விடுகிறது. அத்தகைய தளத்தில்தான் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தையும்
வைத்துப்பார்க்க வேண்டும்.
தான் 15 வருடங்களுக்கு முன்பு எழுதிய நாவலைத் தங்கர்பச்சான் தற்பொழுது
திரைப்படமாக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதை, நாவலின் கதையாடலில் காலம் கோரும்
மாறுதல்களைப் புறக்கணித்திருக்கிறது.
மாதவரின் நெருக்கடிகளுக்கும் துயரங்களுக்கும் காரணமானவை விவசாயச் சமூகங்கள்
விடாப்பிடியாகப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பழைய பிற்போக்கான மதிப்பீடுகளே என்பதைத்
தங்கர்பச்சான் வசதியாக மறந்துவிடுகிறார். விவசாயச் சமூகங்களின் பொதுப் பண்பாக
இருக்கும் இவ்வகை எதார்த்தத்தை மறுத்து அதனைத் தான் சார்ந்த வன்னியர் சாதி வாழ்வின்
தனிப்பட்ட நெருக்கடியாகக் காட்டும் முனைப்பே இயக்குநருக்கு மேலோங்கியிருக்கிறது.
படம் முழுவதும் மாதவரைப் படையாட்சியாக அடையாளம் காட்டுவதற்குப் பெரிதும் முயல்கிறார்
இயக்குநர்.
குறிப்பிட்ட சமூக மக்களின் வாழ்வைச் சொல்லும் திரைப்படம் சாதி சார்ந்த கூறுகளை
எப்படி விமர்சிக்கிறது அல்லது புரிந்துகொள்கிறது எனப் பார்ப்பது அவசியம். கதையாடல்
மூலமாகவும் அரசியல் குறியீடுகள் சார்ந்த காட்சிப்படுத்துதல்களின் வழியாகவும்
சாதியமைப்பினை விமர்சனத்திற்கு அப்பால் நிறுத்துகிறது இத்திரைப்படம்.
பத்திரக்கோட்டை உள்ளாட்சித் தேர்தலில் (2006) வன்முறை நடப்பதற்கு முன்பே இந்நாவல்
எழுதப்பட்டுவிட்டது. நாவல் எழுதப்படும் முன்பு சாதிப்பாகுபாடுகளோ அவை சார்ந்த
வன்முறைகளோ இல்லாமல் இருந்தது எனச் சொல்லிவிட முடியாது. கடலூர் மாவட்டத்தின்
சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் இப்படம் காட்டும் முந்திரிக்காட்டுப் பகுதிகளில்தான்
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொடூரக் கொலைகளும் பாலியல் வன்முறைகளும் நடந்திருக்கின்றன.
தங்கர் பச்சானுடைய கிராமத்தில் அல்லது அவர் போன்றோர் முன்வைக்கும் கிராமங்களில்
இருப்பதாகச் 'சொல்லும்' பிரச்சினைகள் மட்டுமே இருப்பதில்லையே! பல்வேறு
பிரச்சினைகளைப் போலவே சாதி முரணும் கிராம மனிதர்களின் பிரதான சிக்கலாகவே
இருந்துவருகிறது. பல கிராமங்களிலும் சாதி அடையாளத்திற்கு எதிராகத் தலித் மக்கள்
போராடிவருகின்றனர். பறை அடிக்க மறுப்பு, ஆண்டை வீட்டில் சோறு வாங்க மறுப்பு என
நுட்பமான போராட்ட வடிவங்கள் ஏராளம். ஆனால், ஆதிக்க சாதிப் பிரதிகளில் இந்த அம்சங்கள்
எவ்வித விமர்சனங்களும் இல்லாமல் பதிவாகி வருகின்றன. தேவர் மகன் படத்திலுங்கூடக்
கிராம மனிதர்களின் முரட்டுத்தனத்தைச் சொல்லப் பங்காளி முரணையே பயன்படுத்தி
இருக்கின்றனர்.
ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சமூக மக்களின் வாழ்வைச்
சொல்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இச்சமூக மக்களின் வாழ்வை அரசியல்படுத்துவதிலும்
நிகழ்காலத்திய சாதி சார்ந்த அதிகார மையங்களோடு இணைப்பதிலுந்தான் பிரச்சினை
இருக்கிறது.
ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் விளம்பரம் நாளேடுகளிலும் சுவரொட்டிகளிலும்
வெளியானபோது "தொடங்கிவிட்டது மாதவர் படையாச்சியின் பயணம், உலகத் தமிழர்களை
ஒருங்கிணைக்க வருகிறார் மாதவர் படையாச்சி" என்னும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
சாதிகளால் பிரிந்து கிடக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கப் படையாச்சி என்னும் சாதி
அடையாளத்தை முன்வைக்கும் முழக்கம் இது. தமிழன், படையாச்சி என இரண்டு அடையாளங்களின்
மூலமாகவும் அதிகாரத்தை நிறுவிக்கொள்ளும் தந்திரமான போக்கு எனவும் இதனைக்
குறிப்பிடலாம். சாதி அடையாளத்தைக் கடப்பதற்காகவே தமிழன் எனவும் அடையாளத்தை
முன்னெடுத்த அயோத்திதாசர் வழிப்பட்ட ஒடுக்கப்பட்டோ ரின் வழிமுறை ஒருபுறமிருக்க, சாதி
அடையாளம், தமிழ் அடையாளம் ஆகிய இரண்டில் எதையும் விட்டுத் தராத மறைமலையடிகள்
வழிப்பட்ட ஆதிக்க சாதி மரபை பச்சான் உள்ளிட்டோ ர் வெளிப்படுத்துகின்றனர்.
வெளிப்படையான இந்த விளம்பரங்கள் சுயசாதியினரையே ஒன்றுதிரட்டப் பயன்படும். இத்தகைய
அரசியலைத் தங்கர்பச்சான் அறியாதவரல்ல என்பதுதான் இங்குக் குறிப்பிட வேண்டிய
விசயமாகும்.
தமிழ் சினிமாவின் சாதித் திமிர் கொண்ட அம்சங்களுக்கு எதிரான தலித் மக்களின்
போராட்டம் நெடியது. நந்தன், அரிச்சந்திரன் போன்ற படங்களின் தலித் மக்களை
இழிவுபடுத்தும் சித்தரிப்புகளுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, சண்டியர் திரைப்படத்
தலைப்புக்கெதிரான போராட்டம் வரையிலுமான பலவற்றை இவ்வாறு சொல்லலாம். மறுமலர்ச்சி
படத்திற்கு ராசு படையாச்சி என முதலில் பெயர் சூட்டப்பட்டதும் அப்படத்தில்
பறையடிக்கும் காட்சி காட்டப்பட்டதும் கடலூர் மாவட்டத் தலித் மக்களின் எதிர்ப்புக்கு
இலக்காகிப் பின்னர் படத்தலைப்பு மாற்றப்பட்டதோடு பறையடிக்கும் காட்சியும்
நீக்கப்பட்டதும் நினைவுகூரத் தக்கவை. அப்படத்தின் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்தான்
என்பதும் கடலூர் மாவட்டந்தான் அவரது சொந்த மாவட்டம் என்பதும் கவனிக்க வேண்டிய
செய்தியாகும்.
இப்படத்திற்குள்ளேயே இதே போன்ற பல பிரச்சினைகள் இருப்பதைக் கவனிக்கலாம்.
நாஞ்சில்நாடனின் நாவலை அடிப்படையாகக்கொண்ட சொல்ல மறந்த கதை படத்தில் நாவலில் இல்லாத
பாத்திரமாகப் பாமக எம்.பியைத் திணித்துப் பூஜித்த இவர் ஒன்பது ரூபாய் நோட்டு
நாவலில் இல்லாத சிலவற்றை இப்படத்திலும் காட்டுகிறார். கடைசிமுறையாக ஊருக்குத்
திரும்பிவரும் மாதவரிடம் கதாபாத்திரமொன்று அப்பகுதியிலேயே பெரிய கட்சியாகப் பாமக
கொடியைக் காட்டிப் பேசும் வசனங்கள், அக்கட்சிக் கொடி கட்டிய காரிலேயே மாதவரின்
பேரன் வந்திறங்குவது, வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டுப் போராட்டத் துப்பாக்கிச் சூடு
குறித்த உரையாடல் எனப் படம் முழுதிலும் சாதியோடும் சாதியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியோடும் இணைத்தே பாத்திரங்களை
அடையாளப்படுத்துகிறார். கதையோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாத இக்காட்சிகள்
பிரதிக்கு வெளியேயான சாதிக்கான நியாயத்தைப் பிரதிக்குள்ளேயே கட்டமைக்க முயல்கின்றன.
தங்கர்பச்சானின் முந்தைய எல்லாப்படங்களிலும் சாதிகளை எவ்வாறு பதிவுசெய்துவருகிறார்
என்று அலசுவது இதனை மேலும் புரிந்துகொள்ளப் பயன்படும். சாதிமுரண்களைப்
பதிவுசெய்யும்போது கூர்மையற்ற முரண்களாகவே முன்வைக்கும் இவர் படைப்புகளில்
இரங்கத்தக்க சாதியாக வன்னியர்களையும் அவர்களுக்கு மேலான சாதியாக முதலியார் போன்ற
சாதியினரையும் ஆங்காங்கு சொல்லிச் சென்றுவிடுகிறார். அதோடு வன்னியர்களுக்கு அடுத்த
சாதியினரைக் காட்ட நேர்ந்தால் ஆசாரி, குயவர் (பள்ளிக்கூடம்), துணிவெளுப்பவர்
(ஒன்பது ரூபாய் நோட்டு) போன்ற உழைக்கும் சிறுபான்மைச் சாதிகளையே காட்டிச்
சென்றுவிடுகிறார். ஆனால், நெருக்கமாக வாழ்ந்துகொண்டு ஆதிக்க வகுப்பினர்களுக்கு
எதிராகப் போராடும் தலித் சாதியினரைச் சொல்லுவதில்லை.
மாதவரின் பெண்ணைக் காதலிக்கும் வேலையாளான தண்டபாணி என்ற பாத்திரம் தலித்தாக
இருந்திருக்க வேண்டிய பாத்திரம். இது போன்ற வாய்ப்பினையும் 'சாதித் துரோகம்'
செய்யாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். அதே வேளையில் தலித் மக்கள் குறித்த சில
பதிவுகளும் இவரது படங்களில் உண்டு. பள்ளிக்கூடம் படத்தில் பஞ்சமி நிலம் வேண்டி
நடத்தப்படும் போராட்டத்தை இந்த வகையில் சொல்ல முடியும். ஆனால், பஞ்சமி நிலத்தை
யாரிடமிருந்து யார் மீட்க வேண்டும்? யாருக்காக? போன்ற அம்சங்கள் சொல்லப்படவில்லை.
கதையோடு நேரடித் தொடர்பில்லாத துண்டான இக்காட்சியில் சொல்லப்படும் தலித் மக்களின்
பஞ்சமர் நிலங்கள் வன்னியர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரால்தான் பறிக்கப்பட்டுள்ளன
என்னும் உண்மையைப் பேசும் நேர்மையும் துணிச்சலும் தங்கர்பச்சான் உள்ளிட்ட தமிழ்
இயக்குநர்களுக்கு உண்டா என்பதே கேள்வி.
அதேபோலப் பள்ளிக்கூடம் படத்தில் மாவட்ட ஆட்சியரின் உரையாடல் ஒன்று "இது நாள்வரை
சண்டை போட்டுக்கொண்டிருந்த ரெண்டு சாதியாரும் இப்போ ஒண்ணாயிட்டாங்க" என்பதாக
வருகிறது. எங்கு எப்பொழுது இவ்வாறு நடந்தது என்றுதான் தெரியவில்லை.
இது போன்ற படங்கள் சாதிய ஒடுக்குமுறைகளை மறைக்க முயல்கின்றன எனக் கருதும்
வகையில்தான் அசல் பத்திரக்கோட்டை கிராமம் விளங்குகிறது. ஒரு வகையில் இவர்கள்
காட்டும் கிராமம் பொய்யானது என்றால் மறுவகையில் ஆதிக்க சாதிச் சார்புடையதாகும்.
ஊரும் சேரியும் உள்ள எல்லாக் கிராமங்களும் பத்திரக்கோட்டைகளே. முரணைக் காட்டாதது
மட்டுமல்ல அதனை மறைக்கவே நம் 'சாதி இயக்குநர்'கள் முயல்கிறார்கள்.
தங்கர்பச்சான் பலமுறை "தமிழ் வாழ்வு என்று தென் தமிழகம் மட்டுமே பாரதிராஜா
போன்றோரால் சினிமாவில் சொல்லப்பட்டு வந்துள்ளது. ஆனால், வட தமிழகம்
சொல்லப்படவில்லை. அதனைச் சொல்லுவதே என் நோக்கம்" என்னும் பொருள்படப்
பேசிவந்திருக்கிறார். ஆனால், தெற்கே தேவர் சாதியைக் காட்டியவர் பாரதிராஜா என்றால்
வடக்கே வன்னியர் சாதியைக் காட்டுவேன் என்பதுதான் தங்கர்பச்சானின் இக்கூற்றுக்குச்
சொல்லப்படாத அர்த்தம்போல. சத்தியராஜ் அங்கே பாலுத்தேவர் (வேதம் புதிது) என்றால்
இங்கே மாதவர் படையாச்சி. வட்டார வழக்கு என்பதே சாதி வழக்குதான் என்பதைப் போல,
கரிசல் மண், மதுரை மண் என்றெல்லாம் இலக்கியத்திலும் திரைப்படத்திலும் காட்டப்பட்டவை
ஆதிக்க சாதிமரபுகள்தாம். பாரதிராஜா, பாலாஜி சக்திவேல் போன்றோர் தாம் சித்தரிக்க
எடுத்துக்கொண்ட பரப்பில் வெளிப்படுத்திய நுட்பம், ஸ்தூலமான எதார்த்தம், வெளிப்படைத்
தன்மை, போன்றவை எதுவும் தங்கர்பச்சானின் படங்களில் இல்லை என்பதையும் குறிப்பிட
வேண்டும்.
தங்கர்பச்சானின் படைப்புகள்மீது இவ்வகையான பார்வையைச் செலுத்துவது இலக்கியமும்
சினிமாவும் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, நிகழ்கால அரசியல் நிகழ்வுகளின் மீதான
பார்வையாகவும் மாற்றமடைகின்றன என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சமாகும்.
அதனைச் சுட்டிக்காட்டும்போதுதான் மேற்கண்ட விமர்சனங்களையும் உள்ளாட்சித் தேர்தல்
தொடர்பான பத்திரக்கோட்டை வன்முறையையும் புரிந்துகொள்ள முடியும்.
படம் எடுப்பதோடு மட்டும் தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்கிறவர் அல்ல தங்கர்பச்சான்.
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், கலாச்சாரம், மக்களின் வாழ்நிலை குறித்தெல்லாம்
கருத்துக் கூறுவதோடு அவை தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்டுபவராகவும்
இருக்கிறார். இத்தகைய ஈடுபாடு இருப்பதாலேயே இதே போன்ற செயலூக்கம் இல்லாதவர்களைக்
கண்டிப்பதற்கான 'மேலான' உரிமை தனக்கிருப்பதாகவும் நடந்துகொள்கிறார். அவர்
மேடைகளிலும் நேர்காணல்களிலும் சொல்லும் கருத்துகளைச் சினிமாவிலும் சொல்லிவிட
எத்தனிப்பவர். சொல்ல மறந்த கதையின் கேழ்வரகுக்கூழ், தென்றல் படத்தின் ஈழ அகதிகள்
என்று இவருடைய தொடர்ச்சியான சித்தரிப்புகளை இவ்வகையில் சான்றுகளாகச் சொல்லலாம்.
இதையெல்லாம் கடந்து வட பகுதி சார்ந்த ஒடுக்குமுறையின் அரசியல் பிரதிநிதியான பாமகவும்
ஒடுக்கப்பட்டோ ருக்கான அரசியல் பிரதிநிதியான விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து
செயற்பட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்க மேடைகளில் வலம்வந்ததோடு தனித்தனியே இரண்டு கட்சி
மேடைகளிலும் காட்சியளித்தவர்.
சாதி அடையாளத்தினைத் தமிழ் என்னும் அடையாளத்தினால் கடந்துவிட முடியும் என்பது இந்த
இயக்கத்தின் நம்பிக்கை. அப்படியான நம்பிக்கையினை நாம் தவறென்று சொல்ல முடியாது.
ஆனால், தமிழ் அடையாளத்தினுள் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு சமூகக் குழுவினரும்
இந்நம்பிக்கைக்கு எந்தளவு நேர்மையாக இருந்தனர் என்னும் கேள்வி இங்கு முக்கியமானது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதன் பெயரிலாவது சாதியைக் கடக்கவே விரும்புவர் என்பது
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், இரண்டு குழுவினரும் இணைந்து செயற்படும்
இத்தளத்தில் ஆதிக்கச் சாதியினருக்கே பொறுப்பு அதிகம். சாதியைப் பாதுகாத்து
செயற்படுத்திவரும் ஆதிக்கச் சாதியினரின் பிரதிநிதிகளே சாதி எனும் நோய்க் கூறுக்கு
எதிராகப் போராட வேண்டும். அதுவே சொல்லப்படும் அரசியல் நம்பிக்கைக்கு உகந்ததாய்
இருக்க முடியும். சாதி ஒழிப்பு குறித்த அம்பேத்கரின் நிபந்தனையும் இதுதான்.
பிற இயக்கங்களும் தலித் இயக்கங்களும் பொது அடையாளத்தின் கீழ் இணைந்து செயலாற்றிய
கடந்தகால அனுபவங்கள் வேறுவிதமானவை. பெரும்பாலும் இத்தகு பொது அடையாளங்களைச் சாதி
முகத்தினை மறைத்துக்கொள்ளவே இதுவரையிலும் ஆதிக்க சாதியினர் பயன்படுத்திவந்துள்ளனர்.
சில சமயங்களில் மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சாதிகளிடையேயான இயல்பான
முரண்பாடு தலைதூக்கும்போது பொது அடையாளத்தில் செயற்பட்ட ஆதிக்க சாதியினர் மௌனமாக
இருப்பதன் மூலமாகவோ நேரடியாகச் சொந்த சாதியினருக்கு ஆதரவாகப் பேசுவதன் மூலமாகவோ
நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே நின்றுள்ளனர்.
திராவிடன், தமிழன் போன்ற பொது அடையாளங்கள் இவ்வாறுதான் கடந்த காலங்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளைக் கடந்து பார்க்கிறபோது இவை பழைய அனுபவங்களாகவே
நின்றிருக்க வேண்டும். ஆனால், சாதி வன்முறைகளும் சாதிக்கு ஆதரவான பாமக போன்ற
கட்சியினரின் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. கடந்த ஒரு வருடக் கணக்கெனக்கொண்டாலும்
கடலூர் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்துப் பேர் இறந்திருக்கின்றனர். பல
கிராமங்களில் தாக்குதலும் நடந்துள்ளன. அப்படியான ஊர்களில் ஒன்றுதான் பத்திரக்கோட்டை.
தங்கர்பச்சான் போன்ற சில தமிழபிமான சினிமாக்காரர்களின் சினிமாவும் சினிமா அல்லாத
அரசியல் நடவடிக்கைகளும் வெவ்வேறானதாக இருப்பதில்லை. அப்படி இருந்தாக வேண்டும் என்று
நாம் வற்புறுத்தவும் இல்லை. ஆனால், இந்த அம்சங்களுக்கு இவர்கள் எந்தளவுக்கு
நேர்மையாக இருக்கிறார்கள் என்று கேட்டுப்பார்ப்பது அவசியம். இவர்களால் அப்படி
நேர்மையாக இருக்க முடிவதில்லை என்பதையே பத்திரக்கோட்டை சம்பவமும் அங்கு எட்டியும்
பார்த்துவிடாத சாதி இயக்குநர்களின் நடவடிக்கைகளும் காட்டுகின்றன.
தமிழ் அடையாள அரசியல் பேசும் தங்கர்பச்சானும் அவர் போன்ற கருத்தாளர்கள் பலரும் சாதி
முரணையே பேசாமல் விடுவதன் மூலம் 'ஒற்றுமை' மலரும் என்று கருதுவதாகத் தெரிகிறது.
ஆனால், உண்மை அதுவல்ல. சாதிப் பிரச்சினையைப் பற்றி பேசாமல் அதனை எதிர்த்துக்
களமிறங்காமல், தாம் செயற்படும் சினிமா போன்ற தளங்களில் பேசாமல், அதனைப்
பாதுகாப்பவர்களோடு சண்டையிடாமல் அதனைக் கடக்க முடியாது. திரைப்படக் கல்லூரிக்
காலத்திலேயே தன்னைச் சாதியின் பெயரால் க்ஷிரிஷி அதாவது வன்னிய குல சத்திரியர் என்று
அழைப்பதையே பெருமையாகக் கருதியதோடு (நன்றி: coffee with anuவில் யூகிசேது) சாதியைப்
பாதுகாத்துவரும் உறவினர்களை எண்ணி உருகும் தங்கர்பச்சான் போன்றோரால் அந்த
உறவினர்களால் கொல்லப்படும் தலித்துகளைப் பற்றி எப்படிப் பேச முடியும்? இந்த இடத்தில்
தமிழர் என்னும் அடையாளத்தின் நிலை என்ன? இக்கேள்விகள் தங்கர்பச்சானுக்கு மட்டுமல்ல.
அவரால் முன்மொழியப்படும் அரசியல் கட்சிக்கும் படைப்பாளிகளுக்கும்தான்.
தங்கர்பச்சானின் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் வெளிப்படுவது போலித்தனமும்
பாசாங்குத்தனமும்தான்.
|