|
நந்திகிராமில் நில ஆர்ஜிதத்தைத் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சில விவசாயிகள்
மட்டும் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பை வெளிப்படுத்த மாவோயிஸ்ட்கள், எஸ்.யு.சிகள்
திரிணமுல் படையின் கொடூர வன்முறை பயன்படுத்தப்பட்டது என மேலாண்மை அவர்கள் கூறுகிறார்.
வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியது ஏன்? பெருமுதலாளியான டாடாவிற்குத் துணைபோவது
ஏன் எனக் குறிப்பிடவில்லை. இவ்வளவு நடந்த பின் நில ஆர்ஜித முயற்சியைக்
கைவிட்டுவிட்டதாகப் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறுகிறார். சென்னையில் துணை நகரம்
அமைக்கக் கலைஞர் சொன்னபோது எதிர்ப்புக் கிளம்பியது. உடனே கைவிட்டுவிட்டார். வருமுன்
தடுப்பதுதான் நல்லது. வந்தபின் தடுப்பது எப்படிச் சரியாகும். ஆயுதம் ஏந்தாமல்
சுதந்திரம் கிடைக்கச்செய்த காந்தி, மகாத்மா என்பது இப்போதைய இளைய தலைமுறைக்குப்
புரியவைத்தது இந்த இதழின் சிறப்புப் பகுதி.
ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
க. திருநாவுக்கரசு, கு. அமிர்தராஜ், மேலாண்மை. பொன்னுச்சாமி, கொட்டாரம் கணேசன்
வகையறாக்கள் எவ்வளவுதான் பூசிமெழுகினாலும் யதார்த்த உண்மையை மறைக்க முடியாது. (இதழ்
97) நந்திகிராம் மட்டுமல்ல, தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்திலும் அவர்கள் முகமூடி
கிழிந்துவிட்டதே. புத்ததேவ் பட்டாச்சாரியாரே வருத்தம் தெரிவித்துவிட்டாரே.
எத்தனை ஆலைகளை மூடியிருப்பார்கள். எத்தனை தொழிலாளர்களை வேலை இழக்கச்செய்து
நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்? கேரளத்தில் ஒரு லாரியிலிருந்து நமக்கு உரிய
சாதனங்களை இறக்கிவிட முடியுமா? அவர்கள் கேட்கும் கூலிக்கு அவர்களிடமே சாமான்களைக்
கொடுத்துவிடலாம். அவ்வளவு கொடூரம்.
'பாவத்தின் சம்பளம் மரணம்' என்பார்கள். ஆனால், இந்த அப்பாவி விவசாயிகளின் (30
வருடமாக ஒட்டுப்போட்ட) பாவம் மரணத்தில் முடிந்ததுதான் சோகம். ஒருவேளை 'ஆட்சியின்
மரணமோ'.
நாஞ்சிலமுதன்
சுசீந்திரம்.
பெருமாள்முருகனின் கட்டாயக் கிராமப்புற சேவை கட்டுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அம்மனுக்கு மனைவியாகும் சிறுமிகள் இன்றும் சில இடங்களில் தொடருவது மனித அறியாமையின்
உச்சம். அறியப்படாத காந்தி அரிய படைப்பு. இன்றுள்ள காலச் சூழ்நிலைக்கு காந்தி
போன்றவர்கள் இருந்தால் அவரைக் கொல்ல நாதுராம் கோட்சே தேவையில்லை. நம்
அரசியல்வாதிகளின் பேச்சுகளும் செயல்களும் அவரை மரணிக்கச் செய்துவிடும்.
வலம்புரி நாகராஜன்,
ஈரோடு.
கண்ணனின் 'எதிர்ப்பு அரசியல்' கட்டுரை பற்றி: பார்ப்பனியம் பற்றிய
விமர்சனத்திற்குக் காலச்சுவடில் தேடி அலைய வேண்டியதில்லை. பஞ்சம் இல்லாமல்
காலச்சுவடில் பிரசுரிக்கப்படக்கூடிய விஷயங்களில் அதுவும் ஒன்று. பார்ப்பனர்கள்
சமூகத்தில் உயர்ந்த நிலைகளில் இருப்பதையும் அவர்களின் கல்வித்தர மேம்பாட்டையும்
கருத்தில் கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்கள் காழ்ப்புணர்வு கொண்டனர். பார்ப்பனர்களில்
வறுமையில் இருப்பவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தந்தை பெரியார்
போகுமிடமெல்லாம் பாம்பையும் பாப்பானையும் கண்டால், 'பாம்பை விடு பாப்பானை அடி' எனத்
தனக்கே உரித்தான பாணியில் சொல்லிச் சொல்லிப் பார்ப்பனரல்லாதார் மனங்களில்
இடம்பெற்றார் என்பது ஒரு நிலை. காரணம் குடிமராமத்துச் சட்டம் (தஞ்சை
மாவட்டத்துக்கென) வெளியானதற்கு முன்னமேயே தஞ்சைப் பகுதியில் பெருநிலக்கிழார்களாக
இருந்தவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர்களிடத்தில் வயல் வேலைகளைச் செய்பவர்கள்
தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்தான் தந்தை பெரியார்.
இதைச் சொன்னால் சூத்திரர்களிலும் எட்டப்பர்கள் உண்டென்று வாதிடுபவர்கள் பலருண்டு.
எனக்குத் தெரிந்த பல தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நிலையிலிருக்கும்போது 'தங்களை உயர்
ஜாதிக்காரன்', 'ஆரம்பத்திலிருந்தே வறுமை என்னவென்றே தெரியாது' எனச்
சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டாடிவருவது நிதர்சனம்.
குரு. ராதாகிருஷ்ணன்,
நெல்லிக்குப்பம்.
காந்தி குறித்த சிறப்புப் பகுதியும் கண்ணனின் 'அகவிழி திறந்து' பத்தியும் என்
நினைவுகளில் அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொண்டன. சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ
ரவிஷங்கர் ஆகியோரை முன்வைத்துக் கண்ணன் எழுதியுள்ள பத்தி ஆழமும் நுட்பமும்
எதார்த்தமும் பிணைந்த வெளிப்பாடு. குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறை
வெறியாட்டங்களின்போது சுவாமி அக்னிவேஷ் எடுத்த நிலைபாடும் அவரின் தொடர்ந்த
செயல்பாடுகளும் இன்னும் போதிய கவனத்தைப் பெறவில்லை. நமது முற்போக்கு அறிவுஜீவிகள்
அவரது பங்களிப்பை நிராகரிக்க அவரது காவியுடை மட்டும் போதுமானது.
இரா. முருகானந்தம்,
தொப்பம்பட்டி, தாராபுரம்.
ஜனவரி இதழில் எழில் மருதம் எழுதிய கடிதத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் தலித்துகள்
அல்ல என்கிறார். மேலும் அவர்கள் பள்ளர் அல்ல, மள்ளர் என்றும் தெரிவிக்கிறார்.
மள்ளர் என்னும் சொல்லே மருவி பள்ளர் ஆகி வேம்பு என்பது வேப்பமரம் ஆகியதைப் போல
எனவும் விளக்குகிறார். இங்குதான் உதைக்கிறது. வேப்பமரம் பாமர மக்கள் சொல். வேம்பு
படித்தவர்களின் சொல். வேப்பம் பூ, வேப்பம் பழம், வேப்பங்கொட்டைதானே தவிர, வேம்புப்
பூ, வேம்புப் பழம், வேம்பங்கொட்டை என்பன இலக்கியத்திலோ பேச்சிலோ கேள்விப்படாத
சொற்கள்.
பள்ளு இலக்கியம் என்கிறார். மள்ளு இலக்கியம் என்றல்லவா இருக்க வேண்டும். 17ஆம்
ஆண்டுக்குப் பிறகுதான் மள்ளர் என்பது பள்ளர் ஆகியது என்றால், பள்ளுப்பாட்டு,
மள்ளுப்பாட்டு என்பதான பாடல்கள் மள்ளுப்பாட்டு என்னும் பெயரில் நமக்குக்
கிடைத்திருக்க வேண்டும். மேற்படி கடிதத்திலிருந்து சாதிப்பற்று எந்த அளவு
தமிழகத்தில் இன்றும் வேர் பற்றியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இன்னாசி நயினார்,
முசிறி.
இந்த இதழில் வெளியாகியுள்ள 'மடாலயம்' அபாரமான ஒரு கவிதை. உண்மையில் ஆன்மிக அனுபவம்
கிடைக்கப்பெற்ற ஒருவரால்தான் இது போன்றதொரு கவிதையை எழுத முடியும். கவிஞர் இன்பா
சுப்ரமணியனுக்குப் பாராட்டுகள்.
தவசி,
திருவெறும்பூர்.
காலச்சுவடு ஜனவரி, 2008 படித்தேன். இமயத்தின் 'செடல்' நாவலை முன்வைத்து விழுப்புரம்
மாவட்டத்தில் உள்ள பொட்டுக் கட்டும் வழக்கத்தினை ஆய்வுபூர்வமாக எழுதியுள்ளார்
ரவிக்குமார். பொட்டுக் கட்டும் தலித்துக்களைத் தேவதாசி இனத்தவரோடு ஒப்பிட்டுப்
பார்க்கும் அவலம் அகல வேண்டும். மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் செய்யும் கிராமியப்
பண்பாட்டு முறையைத் தலித் பண்பாட்டு நிகழ்வாகக் கொள்ள முடியாது. கவிஞர் கனிமொழியின்
மாநிலங்களவை உரை அனைத்து அரசியல்வாதிகளும் பரிசீலனைக்கும் விமர்சனத்திற்கும்
உட்படுத்தவேண்டியதாகும். கவிதைகள், நூல் மதிப்புரைகள் தனித்தடம் பதிப்பவையாக
இருந்தன. மருத்துவ மாணவர் கோரிக்கைகளைப் பெருமாள்முருகன் சமூக யதார்த்தத்தோடு
பொருத்தியிருப்பது சிறப்பு. காந்தியின் பல்வேறு ஆளுமைகள் இதழில் கவனம் பெறுகின்றன.
விழி. பா. இதயவேந்தன்,
விழுப்புரம்.
பெருமாள்முருகனின் சென்ற இதழ் கட்டுரை பற்றி: நமது நாட்டு மருத்துவ முறைகளின்
நம்பகத்தன்மை அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும், பாரம்பரியம், வேர் பற்றிய
உணர்வும் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அதைத் தீர்மானித்துவிடக் கூடாது.
காலங்காலமாக மக்களைப் பழிவாங்கிய பெரியம்மை, தொழுநோய், வாந்திபேதிக்கு நாட்டு
மருத்துவ முறைகளில் சிகிச்சை உண்டா? வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான எய்ட்ஸ்க்கு
மருந்து தருவதாகச் சொல்கிறார்கள். மக்கள் பெரியம்மை மாரியம்மனின் சினத்தால்
உண்டாகிறது; தொழுநோய் சாபக்கேடு என்று எண்ணினார்கள். கும்பகோணம் மகாமகத்தில்
(வெள்ளைக்காரன் நிலையான ஆட்சி நிறுவுமுன்பு) வாந்திபேதியால் இறந்தவர்கள் எத்தனை
பேர்? பெரியம்மை ஒழிந்துவிட்டது. தொழுநோய் ஒழிந்துவிடும். இதில் நம் மருத்துவ
முறைகளின் பங்கு என்ன? முழங்கால் அளவு நீருள்ள குளத்தில் ஆயிரக்கணக்கானோர்
குளித்தால் தொற்றுநோய் பரவுமென்பதை நாட்டு மருத்துவர்கள் அறிவார்களா? இன்றும் இரத்த
அழுத்தம், நீரிழிவு, கான்சர் போன்ற நோய்கள் உடையவர்களை அலோபதிப் பரிசோதனை மூலமே
கண்டறிய முடிகிறது.
ஒரு மருந்து பலனளிக்கிறது என்பதை நிறுவ அலோபதி நோய்க்கு ஆளானவர்களைத்
தனிமைப்படுத்தி, குறிப்பிட்ட மருந்தைக் கொடுத்துப் பத்தில் எட்டுப்பேர்
குணமடைந்தால் அது சரியான மருந்து என்று ஒத்துக் கொள்ளப்படுகிறது. 1940இல்
இந்தியனின் சராசரி வயது 31. இப்போது 61. மக்களின் ஆயுட்கால நீட்டிப்பில் நாட்டு
மருத்துவ முறைகளின் பங்கு என்ன?
பழநியப்பா சுப்பிரமணியன்,
சென்னை.
ரவிக்குமார் கட்டுரை சிறப்பானது. கல்வி பற்றிய அவரது புள்ளிவிவரம் அருமை. அவர்
எம்.எல்.ஏ. ஆனதால்தான் கிருஷ்ணவேணியைக் காப்பாற்ற முடிந்ததை உணரமுடிகிறது.
அனைத்தும் சரி, எந்தக் கட்டுரை எழுதினாலும் குறுக்குச்சால் ஓட்டாமல் அவரால் எழுத
முடியாது போலும். (அவரது பாணியில் கட்டுடைக்கும் பணி.)
மூட நம்பிக்கையைப் போக்கப் பகுத்தறிவுப் பணியை மேற்கொள்ளலாமாம். யார் செய்வது? சரி,
அதையும் நாங்களே செய்கிறோம். அவர் எம்.எல்.ஏ. ஆயிரம் வேலை இருக்கும். "அதென்ன!
தமிழ்நாடு பகுத்தறிவுக்கோட்டை." அவரிடம் யார் சொன்னது? தமிழ்நாடு பக்தி
விகிதாசாரத்தில் மற்ற மாநிலங்களைவிடப் பின்தங்கியுள்ளது. அவ்வளவுதான். அதைத் தனி
மனித நிலையில் பார்த்து எழுதுவது, தனது பழைய காழ்ப்புணர்ச்சி மனநிலையையே சாரும்.
அரசியல்வாதிக்குச் சமூக அக்கறை எப்போதும் இரண்டாம் நிலைதான் என்பதை அவர் எம்.எல்.ஏ.
ஆனபோதே நிரூபித்துவிட்டார். எழுத்து இரண்டாம் நிலையில் இருப்பதால் சேவை மூன்றாம்
நிலையில் இருப்பதாய் உணர்கிறேன். அவர்மீது படிந்திருக்கும் படிநிலைப் பிம்பங்கள்
மறையும் என்பதைப் பின்வரும் கட்டுரைகள் மூலமாக நம்புகிறேன்.
பாலமுருகன்,
திண்டுக்கல்.
சுமூகமாக முடிந்துபோன சிங்கூரை இழுத்து, நந்திகிராமுடன் போட்டுப் பிசைந்து
புத்ததேவ் பட்டாச்சார்யாவை (அவரது தவறை அதற்கு உரியளவில் கண்டித்திருந்தால் யாரும்
உங்களைக் குறைசொல்ல வாய்ப்பிருந்திருக்காது) இன்னுமொரு மோடியாகக் காட்ட முயல்வது,
மோடியின்மீதுள்ள சேற்றை மறைக்க முடியாது எனும்போது எல்லோரும் அதுபோலத்தான் எனும்
தோற்றத்தை உருவாக்கும் முயற்சியெனத் தோன்றுவதை எங்ஙனம் தவிர்ப்பது?
சுவாமி அக்னிவேஷைச் சிறப்பித்துள்ளீர்கள். சரிதான். ரவிசங்கர், மோடி வகையறாக்களைக்
கண்டிக்க முன்வந்தால் வரவேற்க வேண்டியதுதான். ஆனால், "புரட்சிகர அறிவுஜீவிகள்"
நண்பர்களை எதிரிகளிடம் தள்ளுகின்றார்கள் என்கிறீர்கள். உங்கள் பார்வையில் யாரந்தப்
"புரட்சிகர அறிவுஜீவிகள்"? புத்ததேவ் பட்டாச்சார்யாவை இன்னொரு மோடி போல்
சித்தரித்து நீங்கள் யாரை யாரிடம் தள்ளுகின்றீர்கள். நீங்கள் தூக்கிப்பிடிக்கும்
அக்னிவேஷ் இடது முன்னணி மற்றும் சிறிவி குறித்துக் கொண்டிருக்கும் நன்மதிப்பு
உங்களுக்குத் தெரியாதா?
கனிமொழியின் வாதங்களில் உள்ள தவறான தகவல்களும் பாமர தர்க்கமும் உங்களுக்கு
உரைக்கவில்லையா? உங்களுக்கென்று அதில் கருத்தேதுமில்லையா?
எந்தவித விமர்சனமுமின்றி முழு உரையையும் பிரசுரித்துள்ளீர்களே? இதில் மிகுந்த
எச்சரிக்கையாகவும் நீக்குப்போக்காவும் எழுதும் உங்கள் பேனா ஏன் இடது முன்னணி
விவகாரங்களில் மட்டும் நிதானமிழந்து ஆவேசம் கொள்கிறது.
இன்றைய இந்திய அரசியல் நிலையில் இடது முன்னணியும் பெரியாரும் தத்தமது வழியில்
பிராமணிய ஹிந்துத்வாவிற்குத் தடைக்கற்களாக இருக்கின்றார்கள். அவர்களது
போராட்டங்களின் ஊடாகத் தவிர்க்கவியலாத வகையில் தத்துவார்த்தரீதியாகவும் நடைமுறை
அரசியலிலும் ஒன்றுபட்டு வருகின்றார்கள். இதனைத் தனக்கு முடிந்ததனைத்தையும் செய்து
பிராமணிய ஹிந்துத்வா எதிர்கொள்ள முயற்சிக்கின்றது. உங்கள் நோக்கம் அவர்களுக்கு
உதவுவது அல்ல என்றால் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் உங்கள் மீதான நம்பிகை
முழுவதும் போகாதா.
ப.கு. ராஜன்
ஜனவரி 2008 இதழின் சிறப்புப் பகுதியில் 'அறியப்படாத காந்தி' - ஒவ்வொரு கட்டுரையும்
ஒவ்வொரு விதத்தில் காந்தியை விமர்சிக்கிறது. காந்தியிடம் புதிர்களும் நாம் முடி
வெடுக்க முடியாமல் திணறக்கூடிய விதத்தில் அவரது பல கருத்துக்களும்
அமைந்திருந்தாலும், எளிதாகப் பின்பற்ற முடியாத கடினத்தன்மை கொண்டிருந்தாலும் அவர்
குரலுக்கு இந்தியா முழுமையும் கட்டுப்பட்டது. இப்போதும் காந்தியின் தேவையை நோக்கி
நாட்டின் சூழ்நிலை இருப்பதை அவதானிக்கலாம். இதைக் கட்டுரைகள் உடன்பாட்டு நோக்கிலும்
எதிர்மறையாகவும் உணர்த்துகின்றன.
காந்தியை மீண்டும் வாசிப்புக்குட்படுத்துவது மிகவும் தேவை. நுகரிய கலாச்சாரம் எனும்
பெருங்கடலில் நமது சமூகம் மூழ்கத்தொடங்கியிருக்கும் சூழலில் இது மிக மிகத் தேவை.
காந்தியடிகளின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வாறு இருப்பினும் அவர் வகுத்தளித்த
போராட்ட முறைகளின் மீது நம் சமூகம் கவனம்கொள்ள வேண்டும். உலகெங்கும் இதன்
முக்கியத்துவம் உணரப்படுவதை அறியலாம்.
எந்தப் பண்பாட்டுச் சூழல் காந்தியடிகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததோ அதே
சூழலில் அதன் எதிர்வினையாகக் கோட்சேயும் தோன்றமுடிகிறது. காந்தியின் மறைவிற்குப்
பின் இந்தியச் சமூகம் தன் நினைவு அடுக்குகளிலிருந்து அவரை இறக்கிவிடத்
தொடங்கிவிட்டது. சொல்லப்போனால் மத அடிப்படை வாதம் கோட்சேயைத் தேடி
எடுத்துக்கொண்டதும் அது மக்களிடம் செல்வாக்குப் பெறுவதையும் வைத்துப்
புரிந்துகொள்ளலாம். அதன் அடையாளந்தான் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்ற வரிகளைக்
கேட்டதும் அதற்கு மறுதலையாக 'நாங்கள் கோட்சேயிடமிருந்து வருகிறோம்' என்று ஒலிக்கும்
குரல். இவையெல்லாம் நம் சமூகத்தில் கவலையளிக்கக்கூடிய அம்சங்கள். காந்தி மிக மிகத்
தேவைப்படுவது இங்குதான்.
அன்பும் கருணையும் பெருகி வழியும் காந்தி பிறந்த மண்ணில் சகிப்புத் தன்மை எப்படி
அற்றுப்போக முடிந்தது? மிருக வெறியின் கோரமுகத்தை தெகல்கா அம்பலப்படுத்தியிருக்கும்
அந்த நாகரிகப் படுகொலைக்குப் பின் காந்தியின் தேவை தவிர்க்க முடியாததாகிறது.
காலச்சுவடு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறது. காந்தியைப் பற்றிய புரிதலுக்கு
வழிவகுக்கிறது.
இரவீந்திரபாரதி,
அரூர் - 636 903.
அஷிஸ் நந்தியின் காந்தி - கோட்ஸே பற்றிய உளவியல் ஆய்வு, சிந்தனையைத் தூண்டுவதாக
இருக்கிறது. காந்தி செய்த புரட்சிகரமான மாற்றம் இதுவரை சமூக மற்றும் மதரீதியான
சிந்தனையாளர்களின் சீர்திருத்தங்களிலிருந்து மாறுபட்டது. புத்தரும் பூலேவும்
வேதங்களின் கருத்தியல்களுக்கு எதிரான கலகத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், காந்தி
சமூகக் கருத்தியல்களுக்கெதிரான முன்னுதாரணமான மாற்றத்தை வேதத்தின் மையப் புள்ளியில்
நின்றுகொண்டே செய்திருக்கிறார். சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மக்களை மீட்டு
அதன் மைய நீரோட்டத்திற்குக் கொண்டுசேர்க்க முனைந்தவர். சாமானியர்களைத் தங்களது
காலால் உதறித்தள்ளி அந்த இடத்தை இதுவரை தக்கவைத்தவர்களை மீண்டும் கீழே
தள்ளிவிடுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
மனிதர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளபோது காந்தி, பெண்ணியக் கருத்துகளைச்
சமூகத்தில் விதைத்தார் என்கிறார் நந்தி. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களிடங்கூட இந்த
விஷயம் காணப்படவில்லை.
காந்தி விதையகற்றப்பட்ட ஆண் பணியாள்களை உருவாக்கினார் என்று கோட்ஸே நினைத்ததில்
அதிசயமும் ஆச்சரியமும் எதுவுமில்லை. பரிவாலும் அன்பாலும் மனிதனிடமுள்ள தீவிரமான
போராட்டக் குணத்தையும் தன் முன்னிலையையும் மாற்ற முயன்றார். அந்த நேரத்தில் இரண்டு
முக்கியப் பகுதிகளில் பிராமணர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. அதில் ஒன்று
மகாராஷ்டிரா, இன்னொன்று சென்னை இராஜதானிப் பகுதி. மகாராஷ்டிரா பிராமணர்கள் (பெஸ்வா
அல்லது சித்பவன்) பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள். அவர்கள்
இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக இந்தியப் பகுதிகளில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள்.
நந்தியோ அல்லது வேறு உளவியல் ஆய்வாளர்களோ தென் இந்தியாவில் இப்பிரச்சினை எப்படி
இருந்தது என்பதை ஆராய வேண்டும். உண்மையில் அங்கு பிராமணர்கள் ஆட்சியாளர்களாக இல்லை.
மாறாக, புத்திசாலித்தனமாகப் பிரிட்டிஷாரோடு இணைந்தவர்களாயினர். அதன்பிறகு பிற
இனத்தவர்கள் அந்த உரிமைகளைப் படிப்படியாகப் பெறத் தொடங்கினர். பிராமணர்கள் வேறு
தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
எனது ஒரே எதிர்வினையாக அல்லது ஆதங்கமாக நான் குறிப்பிடுவது என்னவென்றால்,
மொழிபெயர்ப்பாளர் நந்தி இந்தக் கட்டுரையைக் காலச்சுவடுக்காகவே எழுதினாரா என்பதைக்
குறிப்பிடாததுதான்.
காந்தி நம்மோடு இல்லையென்றாலும் அவர் காலத்திற்குக் கொஞ்சம் நெருக்கமாகவே
இருக்கிறோம். ஆனால், ஷேக்ஸ்பியர் போன்ற யாராவது ஒரு நாடக ஆசிரியர் காந்தி பற்றிய
விஷயங்களை நிச்சயம் எழுதுவார்கள்.
இன்னொரு முக்கியமான ஆர்வமான பகுதியாக இந்தச் சிறப்பிதழில் நான் நினைப்பது
தேவிபாரதியின் சிறுகதை. நான் அதனை இரண்டுமுறை வாசிக்க நேர்ந்தது. இரயில் நிலையத்
தலைமை அதிகாரியுடனான காந்தியின் உரையாடல் அல்லது விவாதத்திலிருந்து அவருடைய முழு
வாழ்வின் தத்துவம் முழுவதையும் சித்திரப்படுத்துகிறார் தேவிபாரதி. முடிவு மனத்தைத்
தொடும்படி உள்ளது. "பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது, பாபுஜி" என்று தணிக்லால்
கூறும்போது இதோ வந்துவிட்டேன், அவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள் என்றார் காந்தி.
இதனை நான் படித்தபோது எவ்விதமான புனிதங்களின் மீதும் நம்பிக்கையற்றவனும்
பகுத்தறிவுவாதியுமான எனக்குத் தொண்டை அடைத்துவிட்டது.
R. வெங்கட்ராமன்.
சென்னை - 18 (மின்னஞ்சலில்)
தமிழில்: இர. வெள்ளியங்கிரி.
அறியப்படாத காந்தி சிறப்புப் பகுதி படித்தேன். காந்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள
வேண்டியது எனக்கு நிறைய இருந்தது. யு.ஆர். அனந்தமூர்த்தியின் கட்டுரை அதை மேலும்
கூட்டியது. சொந்த மனத்தையே பரிசோதனைக்குட்படுத்துவது, அறிவுஜீவித்தனத்துக்குச்
சவாலாக இருப்பது அவருடைய தனித்த குணம். மார்டின் க்ரீன் காந்தியிடம் தனக்குள்ள பயம்
பற்றிக் கூறியது கவனிக்கத்தக்க விஷயமாகவே கருதுகிறேன். காந்தியின் அளவுகோல்
எப்போதும் பகுத்தறிவின் தர்க்கம் சாராமல் இருந்ததையும் எந்த அளவுக்கோலுக்கும்
உள்ளொடுங்காமல் போனதையும் க்ரீன் குறிப்பிடுகிறார்.
காந்தி கடைபிடித்த நேர்மை சொந்த வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு எவ்வளவு
சாத்தியமென்பதையே சார்ந்தது. அவரிடம் எவ்வளவு தற்காலிகத்தனம் இருந்ததோ அந்த
அளவிற்கு சாசுவத நிலையிலும் அவரது சிந்தனை இருந்தது. காந்திக்கும் தாகூருக்கும்
நடந்த உரையாடலில் தோன்றும் கருத்து வேறுபாடுகள் மகாத்மா அன்டு த பொயட் புத்தகத்தில்
உள்ளதென்பது எல்லோரும் வாசிக்க வேண்டிய விஷயம்.
தேவிபாரதியின் "பிறகொரு இரவு" சிறுகதை தரும் காந்தி பற்றிய சித்திரம் மேலும் அவரை
நெருங்கி உணரவைக்கிறது. இயேசு, டால்ஸ்டாய் போன்ற உயர்ந்த ஆளுமைகளோடு காந்தியின்
வாழ்வு பொருந்திப்போவது தற்செயலானதல்ல. 'என் வாழ்க்கையே நான் தரும் செய்தி' என அவர்
சொன்னது எவ்வளவு பொருத்தம்.
இர. வெள்ளியங்கிரி,
சிவகிரி.
காலச்சுவடு ஜனவரி 2008 இதழில் தேவிபாரதியின் 'பிற கொரு இரவு' சிறுகதை படித்தேன்.
சிலிர்த்துப் போனேன். அது கற்பனைக் கதையா... இல்லை காந்திஜியின் வாழ்க்கையில்
அப்படி ஒரு சம்பவம் நடக்க, கதாசிரியர் காந்திஜி பின்னால் நடந்து சென்று அனைத்தையும்
பார்த்துக் கேட்டுப் பதிவுசெய்தாரா... அப்படி ஒரு எதார்த்தம்...
லூயி ஃபிஷர் எழுதிய 'காந்தி' தான் 'சத்திய சோதனை'யைவிட அதிகமாக நான் காந்திஜியை
அறிந்துகொள்ள உதவிய நூல்.
ஆனால், தேவிபாரதி காந்தியச் சிந்தனைகளில் தோய்ந்து, இப்படி ஒரு ஆழமான கதையை வடிக்க
எத்தனை காலம், எத்தனை நூல்களைப் படித்து, எப்படிப்பட்ட அபூர்வமான அனுபவங்களைப்
பெற்றிருந்தாரோ நான் அறியேன்.
கதையின் கடைசிப் பாராக்களில் பானிபட் ஸ்டேஷன் மாஸ்டரும் காந்திஜியும் உரையாடுவதாக
எழுதியுள்ள வரிகள் சத்திய வரிகள்...
"ஒரு வகையில் கிறித்துவின் செய்தியைச் சொன்னீர்கள். அதனால்தான் பிரிட்டிஷ் அரசால்
உங்களைக் கொல்லமுடியவில்லை. கிறித்துவராக அல்ல கிறித்துவாகவே நீங்கள் அவர்களுக்குத்
தென்பட்டீர்கள் பாபுஜி".
"அதனால்தான் தம் ஆயுதங்களை உங்கள் காலடியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்...
அவர்களால் தம் கடவுளை, கிறித்துவை எதிர்க்க முடியவில்லை..."
"பாபுஜி... நாங்கள் உங்களைக் கொல்வதற்காகக் காத்திருக்கிறோம்... உங்களைப் போல
வேடமிட்டுக்கொண்டு உங்கள் தத்துவத்தை அழிப்போம்... போலிகளால் நிரம்பி வழியப்போகிறது
இந்தப் பூமி. நீங்கள் கடவுளாக்கப்படுவீர்கள்... எதையும் மாற்ற சக்தியற்ற
வெறுங்கடவுள்..."
காந்திஜி மறைந்து 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. கதையில் சொல்லப்பட்டதுபோல் காந்தியை நாம்
கடவுளாக்கி வணங்கிவிட்டு... சக மனிதனை ஈவு இரக்கமின்றி
வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம்...
லூயி ஃபிஷர் 'காந்தி' நூலை 1995இல் பரிசாக அளித்த நண்பர் பழ. கருப்பையா வுக்கும்
மீண்டும் காந்தியை அறியத் தூண்டிய தேவிபாரதியின் சிறுகதைக்கும் நன்றி...
திரைப்பட நடிகர் சிவகுமார்,
சென்னை.
காந்தி ஓவியம் சிவகுமார் வரைந்தது (1966).
'அறியப்படாத காந்தி' பல கேள்விகளுக்குத்தக்க பதிலளித்த அரிய சிறப்புப் பகுதி.
இந்தியப் பிரிவினைக்கு எதிராக மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா மற்றும்
மவுன்ட்பேட்டனைப் பலமுறை சந்தித்து விடுத்த வேண்டுகோள்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. சிலர் இன்றும் அவரைப் பிரிவினைக்கு ஆதரவானவர் என்கின்றனர். மகாத்மாவின்
'சத்திய சோதனை' மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டால்
அரசியல்வாதி ஒருவரின் ஒளிவுமறைவற்ற நேர்மையான வாழ்க்கை, வரும் தலைமுறைகளுக்குச்
சிறந்த 'வாழ்வுமுறை' ஒன்றைத் தெளிவாக்கும்.
'மெய்ப்பட வேண்டிய கனவு' தலையங்கத்தில் உள்ளபடி கிராம நூலகங்களுக்குப் பெண்கள்
நியமிக்கப்பட வேண்டியது அவசியம். இல்லையெனில் அதுவும் 'என்றும் மூடப்பட்டிருக்கும்'
கட்டடமாகவே கிராமங்களில் காட்சியளிக்கும். ஏனெனில், ஆண்கள் வருமானம் அதிகம் வரும்
உபதொழில்களில்தான் கண்ணாய் இருக்கின்றனர். கிராம நூலகம் மட்டுமின்றி, மற்ற
அம்சங்களான நீர் சேமிப்பு, உள்ளூர் நீர்நிலை மற்றும் தெருவிளக்கு ஆகியவற்றை
அமைப்பதும் மட்டுமின்றி, அது தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆராய
வேண்டும்.
கேசவரவி (கே. ரவிக்குமார்),
சென்னை.
|