|
கே.எம். ஆதிமூலம் இந்தியாவின் நவீன ஓவியர்யர்களில் மிக முக்கியமானவர்.
நவீனத்துவத்தை நவீனமாகவே கண்டவர். நவீன ஓவியம் என்பதை வர்ணங்களைக் கொண்டு அரூபமாகவே
நிலைநாட்டியவர். அறிந்த நிறங்களில் இருந்து அறியாத பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளும்
வகையில் செய்தவர். கலாபூரணமான கலைஞர். மனத்தளவில் - படைப்பு அளவில் தன் காலத்தின்
பல ஓவியர்களைவிட முன்னனியில் இருந்தார்.
அவர் நீண்ட பயணத்தில் தன் இருப்பைக் கண்டுகொண்டார். தன் இடத்தை அறிந்ததும் அதில்
முழுஈடுபாட்டோ டு செயல்பட்டார். அந்த விஷயத்தில் அவரே அவருக்கு வழிகாட்டி.
இன்னொருவரை அவர் பின்பற்றவில்லை. அவரது அரூபமான ஓவியங்கள் பல ஒன்றுபோல்
இருந்தாலும், அவை ஒன்றல்ல என்பது மட்டுமல்ல; ஒன்றில் இருந்து இன்னொன்று முழுமையாக
வித்தியாசப்பட்டு இருப்பவை. அதனை அவர் அதிகமான பிரயாசையின்றியே ஸ்தாபித்தார்.
ஓவியத்தில் 1970ஆம் ஆண்டு வாக்கில் அவர் அரூபத்தில் அக்கறை கொண்டார். முதலில்
கருப்பு வெள்ளையில் அரூபமான பிரபஞ்சத்தைத் தொடர்ந்து படைத்து வந்தார். அரூபமான
பிரபஞ்சம் வெண்மையின் ஒளியிலும் - கருப்பின் அடர்த்தியிலும் புத்தொளிபெற்றது.
படைப்பில் அறிதல்தான் முக்கியம். அறிதல் என்றால் கருத்தை அறிதல்; பொருளை அறிதல்;
ஐதீகம், மரபு என்பதை அறிதல் என்பது மட்டுமன்று, அரூபமாக இருக்கும் ரூபத்தையும்
அறிதல்தான். எந்த ஒன்றையும் அறிந்துகொள்ள விசாலமான மனம் வேண்டும். அந்த மனம்
கலைஞனுக்கு உரியது. எவன் கலைஞன் இல்லையோ - கலையை அறிய முடியாத மனத்தை எவன்
கொண்டிருக்கிறானோ அவன் கலைக்கான கோட்பாடு, கலையின் நோக்கம், கொள்கைப் பிரகடனம்
பற்றி நிறையவே செய்வான். ஏனெனில் கலையில், கலைப் படைப்பைவிட - கலைகள் பற்றிப்
பேசுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அசல் கலைஞன் சொல் என்பதைத் தவிர்த்துத் தன்
படைப்பில் ஆழ்ந்துபோகிறான். அப்படிப்பட்ட கலைஞனின் படைப்புகள் தம் இருப்பை
இன்னொருவர் சிபாரிசு இன்றி நிலைநாட்டிவிடுகின்றன.
இவ்வாறு தன் படைப்பு மூலமாகவே தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் தான் ஆதிமூலம்.
பிரபஞ்சத்தில் அவர் எளிதாகவே சஞ்சரித்தார். கைக்குள் சிக்காத பிரபஞ்சம் - என்ன
ரூபமாக இருக்கிறது என்று சொற்களால் புனைந்து காட்ட முடியாத எழில் மிகுந்த
பிரபஞ்சத்தை வர்ணங்களாகப் புனைந்தார். பிரபஞ்சம் அழகும் வளமும் கொண்டது என்றால் -
ஆதிமூலம் வர்ணத்தால் வரைந்தது மேலும் வனப்பு பெற்றது. மஞ்சள், பச்சை, நீலம்,
கருப்பு, வெண்மை என்று நிறங்கள் கொண்ட பிரபஞ்ச ஒவியங்கள் அவருக்குப் பெரும்
அங்கீகாரத்தைக் கொடுத்தன. அவையே இந்திய அளவில் அவருக்கு மிகச் சிறந்த கலைஞன் என்ற
மதிப்பைப் பெற்றுத் தந்தன. அவரது வண்ணமயமான பிரபஞ்ச அரூப ஓவியங்கள் போலவே அவரது
கருப்பு வெள்ளைப் பிரபஞ்ச ஓவியங்களும் சிறப்புடையவை. இரண்டிலும் அவரது ஆழ்ந்த
பார்வையும் படைப்பு மனமும் முழுமையாகப் பதிந்து இருந்தன.
அசலான கலைஞனின் படைப்புகளில் உயர்ந்தது தாழ்ந்தது என ஒன்றுமில்லை. நன்றாகப்
படைக்கப்பட்ட கலை தன் இருப்பைத் தானே ஸ்தாபித்துக்கொள்கிறது என்பது கலைகள் பற்றிய
வரலாற்றில் மிக முக்கியமாக இருக்கிறது.
ஓவியம் என்பதில் வர்ணங்களுக்குப் பிரதான இடமுண்டு. வர்ண வித்தியாசங்கள் மனத்திற்கு
இன்பத்தையும் ஆழ்ந்த அமைதியையும் கொடுக்கின்றன. வர்ணத்திற்குத் தனியாகத் தன்
இருப்பின் வழியாக ஒரு திறமையும் கிடையாது. அது கலைருன் கரத்தில் மனத்தின் வழியாக
இறங்குகையில் அர்த்தம் பெறுகிறது. கலை என்பது படைப்பு அறிந்ததின் வழியாக அறியாததை,
அறிய முடியாத விதத்திலேயே படைப்பைக் காட்டுவது.
ஆதிமூலத்தின் அரூபமான ஓவியங்கள் எல்லாம் அறியாததை - அறியாதவிதமாக-இடையூறு
ஏதுமில்லாமல் வர்ணத்தின் அமைதியில் படைத்துக் காட்டின. அவர் படைப்புகளில் சிக்கல்
ஏதுமில்லை. வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பூர்ண அமைதி பெற்றன. வேறுபட்ட
வர்ணங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. ஒன்றோடு ஒன்று இயல்பாகச் சேர்ந்து தனித்தனியாக
இருந்தன. அந்தச் சேர்தலிலும் பிரிந்து இருத்தலிலும் ஒரு ஒழுங்கியல் இருந்தது. அந்த
ஒழுங்கே அவர் படைப்பின் ஆதாரம்.
அவர் வர்ணங்களாலேயே தன் படைப்பு உலகத்தை ஸ்தாபித்தார். அதில் கருத்தோ பொருளோ இல்லை.
இன்னது இருக்கிறது என்று தீர்மானமாக ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், எதுவும்
இல்லையென அடித்துக் கூற முடியாது. அதாவது பிரபஞ்சம் என்பது வெற்றிடம் அல்ல. ஒன்றுமே
இல்லை என்பதும் இல்லை. ரூபம் இல்லாமல் அரூபமாக இருக்கிறது. ரூபத்தை அறிவதுபோல
அறியப்படாமல் இருக்கும் அரூபத்தை அறிதல் வேண்டும். அவ்வளவுதான்.
தான் அரூபமாகக் கண்டதைக் காட்சிப்படுத்துவதில் ஆதிமூலம் மனத்திண்மையுடன் உழைத்தார்.
தன் படைப்புமீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டு இருந்தார். தன் கலைக் கோட்பாட்டை
தன் மரபு, ஜதீகம் - என்பதின் வழியாகவே கண்டு பின்பற்றினார்.
இளம் வயதில் உள்ளூர்க் கோவில் ஓவியங்கள், சிற்பங்களைப் படமாகத் தீட்டினார்.
பிற்காலத்தில் தான் ஒரு ஓவியராக வருவோம் என்ற நினைப்பெல்லாம் அவருக்குக் கிடையாது.
காரணம், அவர் திருச்சியை அடுத்த துறையூர் கிராமத்தில் பிறந்தார். தன் சொந்த
ஈடுபாட்டின் அடிப்படையில் சித்திரங்கள் தீட்டிக் கொண்டு இருந்தார். அதற்கு ஒரு
காரணமும் கிடையாது. படைப்பில் லயிப்பு இருந்தது. அது அவரை செயல் படவைத்தது.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கிராமத்து வாழ்க்கையில்
மூழ்கிப்போய்விட்டார். ஒரு கிராமத்துச் சிறுவனுக்கு நேர்வது அவருக்கும் நேர்ந்தது.
கிராமத்து வாழ்க்கையில் ஆழ்ந்திருந்தபோதும் தன் நோட்டுப் புத்தகங்களில்
சித்திரங்கள் தீட்டிவைத்தார்.
துடிப்பும் ஓவியத்தில் ஈடுபாடும் கொண்ட இளைஞராகச் சொந்த ஊரில் இருந்த ஆதிமூலம்
பி.எஸ். செட்டியாரைச் சந்தித்தார். அவர் சினிமா உலகம் என்ற சினிமா இதழ் ஒன்றை
நடத்திக்கொண்டு இருந்தார். கலை ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞன் முன்னேற சென்னைக்கு அல்லவா
வர வேண்டும் என்று பி.எஸ். செட்டியார் எண்ணினார்.
ஆதிமூலத்தைச் சென்னைக்கு வந்து தன்னைப் பார்க்கும்படி பி.எஸ். செட்டியார்
கூறிவிட்டு வந்தார். செட்டியார் கொடுத்த நம்பிக்கையில் பத்துப் பதினைந்து நாள்கள்
கழித்துச் சென்னைக்கு ரயில் ஏறிவந்தார் ஆதிமூலம். மைலாப்பூரில் இருந்த பி.எஸ்.
செட்டியாரைச் சென்று பார்த்தார்.
பி.எஸ். செட்டியார் சினிமா தெரிந்தவர். ஆர்ட் டைரக்டர்கள் செட் போடுவதைப் பார்த்து
இருக்கிறார். அது ஆதிக்கு உரிய இடமாக இருக்குமெனக் கருதி வாகினி ஸ்டூடியோவிற்கு
அழைத்துச் சென்றார். தனக்குப் பழக்கமான ஆர்ட் டைரக்டரிடம் சேர்த்துவிட்டார். தன்
வீட்டில் தங்கிக்கொள்ளச் சொன்னார். ஒரு வாரம்போலக் கோடம்பாக்கம் வாகினி
ஸ்டூடியோவிற்கு ஆதிமூலம் சென்றுவந்தார். அங்கே நடைபெற்ற காரியங்கள் ஒரு கலைஞன்
செய்கிற வேலையாகப்படவில்லை. அது அவருக்குத் தெரிந்தது என்பது முக்கியமல்ல; ஆர்ட்
டைரக்டருக்கு ஆதிக்கு, அவர் கற்றிருந்த ஓவியத்திற்கு, அவர் மனப்பாங்கிற்கு உரிய
இடம் சினிமா ஸ்டூடியோ அல்ல என்பது தெரிந்தது.
ஒரு நாள் வாகினி ஸ்டூடியோவிற்குச் சென்ற பி.எஸ். செட்டியார் ஆர்ட் டைரக்டரிடம்
ஆதியைப் பற்றி விசாரித்தார். ஆர்ட் டைரக்டர், "சார் இந்தப் பையன் இங்கே சரிப்பட்டு
வரமாட்டான். இவனை ஆர்ட் ஸ்கூலில் சேர்ந்துவிடுங்கள்" என்று யோசனை சொன்னார்.
"அது எங்கே இருக்கு? யாரைப் பார்க்கணும்?"
"எழும்பூரில் இருக்கிறது. தனபால் என்று ஒரு ஆசிரியர் மந்தவெளியில் இருக்கிறார்.
அவரைப் பாருங்கள்."
மந்தவெளியிலிருந்த தனபால் வீட்டிற்கு ஆதியை அழைத்துச் சென்று ஆர்ட் ஸ்கூல் பற்றி
விசாரித்தார் செட்டியார். பள்ளி திறந்து ஆறுமாதம் ஆகிவிட்டது. ஆகையால் சேர முடியாது
என்றார்.
"வேறு வழி?"
என்னிடம் வந்து ஆர்ட் கற்றுக்கொள்ளட்டும். அது ஒரு பயிற்சியாக இருக்கும். அடுத்த
வருஷம் ஆர்ட் ஸ்கூலில் சேர்த்துவிடலாம்" என்றார் தனபால்.
மாணவனிடம் கேட்டார் செட்டியார். அவர் சரி என்றார். செட்டியார் வீட்டில்
தங்கிக்கொண்டு தனபாலிடம் ஓவியம் கற்றார். அதுதான் அவர் முறையான படிப்பின் ஆரம்பம்.
திருச்சியில் இருந்து அழைத்துவந்து தங்க இடமும் சாப்பாடும் போட்ட பி.எஸ் செட்டியாரை
ஆதி, அப்பா என்றே அழைத்துவந்தார். பி.எஸ். செட்டியார் வண்ண ஓவியம் ஒன்று பல
ஆண்டுகளுக்கு அவர் வீட்டில் இருந்தது.
ஆதி சென்னைக் கலை, கைத்தொழில் பள்ளியில் சேர்ந்து படித்தார். அது சௌத்திரி
ஓய்விற்குப் பிறகு பணிக்கர் முதல்வராக இருந்த காலம். பள்ளியில் புதிய காற்று வீச
ஆரம்பித்திருந்தது.
பணிக்கர் புதிய முயற்சிகளுக்கும் சோதனைகளுக்கும் தாராளமாக இடம் கொடுத்தார். தனபால்,
சந்தான ராஜ், அந்தோனி தாஸ், ஜானகிராமன், முனுசாமி ஆகிய திறமையான ஆசிரியர்கள்
ஏராளமாக இருந்தார்கள். கற்க உலகம் பரந்து கிடந்தது.
லலித் கலா அகாதமி ஏற்பட்டு, கலைகள் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டிருந்தது. பணிக்கர்
சர்வதேச அரங்கில் ஓவியம், சிற்பம் மாறுதலுக்கு உட்பட்டிருந்ததை மாணவர்களுக்கு
அறிமுகப்படுத்திவைத்தார். கொல்கத்தா, மும்பை மாணவர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை
ஓவியப் பள்ளியின் பொதுப் படிப்பின் தரத்தை மேம்படுத்தினார். சர்வதேச நிகழ்வுகளைத்
தெரிந்துகொள்ள ஆங்கிலம் படிக்கவைத்தார். கிராமங்களில் இருந்துவந்த பலரும் தங்களது
பொதுப் படிப்பை மேம்படுத்திக்கொண்டார்கள். அது அவர்களது ஓவியம் - சிற்பம் பற்றிய
பார்வையில் பலவிதமான கேள்விகள் கேட்கவைத்தது. ஓவியமாக சிற்பமாகப் பார்த்த கலைப்
படைப்புகளுக்குப் பின்னால் உள்ள கலை பற்றிய கோட்பாட்டை முதன் முதலாக அறிந்தார்கள்.
கலை என்பது சொந்தப் படைப்புதான் என்றாலும் அதன்மீது தெரிந்தும் தெரியாமலும் தன்
ஆளுமையைச் செலுத்தும் தத்துவத்தை முதன் முதலாக அறிய ஆரம்பித்தார்கள். அது பொதுவில்
பள்ளியில் கலை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது என்பதுபோல - ஒவ்வொரு மாணவனையும்
தன்னளவில் யோசிக்க வைத்தது. தன் படைப்புப் பற்றியே தீவிரமாக யோசிக்க
ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு மாணவனும் தன்னளவில் ஆசிரியரானான். கலை என்பது கேள்விக்கு
அப்பாற்பட்ட பரம்பரைத் தொழில் அல்ல. அது பார்த்து வளர்வதோ பார்க்காமல் புனைவதோ
இல்லை. அறிந்தாலும் சரி அறியாவிட்டாலும் சரி கலையின் ஊடாக உள்ள சரித்திரம், ஐதீகம்,
மரபு - கலை என்பதை மேலெடுத்துச் செல்லும் என அறிந்துகொண்டார்கள். அது கூட்டத்தில்
இருந்து ஒவ்வொரு மாணவனையும் தனி ஆளாக, தனித்த கலைஞனாகப் பிரித்தெடுத்தது. ஒன்றாக
இருந்தவர்கள் தங்களது பாரம்பரியம் என்பதோடு சொந்த ஈடுபாடு, ரசனை, வாழ்க்கையைப்
பற்றிய கண்னோட்டம், சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் ஓவியம், சிற்பம் தீட்ட
ஆரம்பித்தார்கள். சேர்ந்து கற்றவர்களைப் படிப்பே பிரிந்துபோகவைத்தது. கல்வியின்
நோக்கம் எதுவோ அதனையே தெரிந்துகொண்டார்கள்.
கலை, கைத்தொழில் பள்ளி போன்றவற்றின் பிரதான நோக்கம் அதிகமாகச் சொல்லப்படாவிட்டாலும்
ஒவ்வொரு கலைஞன் மனத்தில் இருக்கும் கலை ஆர்வத்தைத் தூண்டிவிடுவதுதான். அது
ஆதிக்குத் தன் கிராமம், தன் மக்கள், தான் கண்ட கோவில் முனி என்று பலவற்றின் மீது
ஈடுபாடும் அக்கறையும்கொள்ள வைத்தது, நன்றாகக் கோட்டோ வியம் வரையக் கற்றுக்கொண்டார்.
பள்ளியில் அவர் பிரதானமாகக்கற்றது அதுவே எனக் குறிப்பிட வேண்டும்.
தனபால் ஓவியராக இருந்து, சிற்பியாக மாறியிருந்தார். ஆனாலும் அவர் சித்தன்னவாசல்
சென்று வரைந்திருந்த கோட்டோ வியங்கள் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அவர்
கோடுகளில் காணப்படும் பிசிரற்ற தன்மையில் உள்ள நெகிழ்வு பரவசங்கொள்ள வைத்திருந்தது.
பள்ளியில் ஆதியைக் கவர்ந்த ஆசிரியர் என்றால் அது ர.பி. சந்தானராஜ்தான். அவர் போடும்
கோடுகளும் சித்திரங்களும் வண்ணத்தை அசாதாரணமான துணிச்சலுடன் கையாளும் விதமும்
வியப்புடன் பரவசங்கொள்ள வைக்கும் என்று ஒரு சமயம் ஆதி குறிப்பிட்டார். தான் கற்ற
பள்ளிமீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. பள்ளியைப் பற்றி அதன் பழமை
மாறாவிதத்தில் சித்திரம் தீட்டினார்.
ஆதிக்கு ஒவ்வொரு பொருள்மீதும் அதிகமான அக்கறை இருந்தது. எல்லாப் பொருள்களும்
சித்திரமாகத் தீட்டக் கூடியவை என நம்பினார். பின்னால் அவர் கடிகாரம், மரப்பாச்சி,
குடை, அரிக்கேன் விளக்கு, பழைய புத்தகங்கள், பிரம்பு நாற்காலி, மண்சிலைகள், எனப்
பலவற்றையும் கோட்டோ வியமாகத் தீட்டினார். அதற்கெல்லாம் அவர் பள்ளியில் பெற்ற
பயற்சிதான் காரணமாக இருந்தது. அவர் எப்பொழுதும் கற்றுக் கொள்வதில் ஆர்வம்
காட்டினார். கற்க நிறைய இருக்கிறது என நம்பினார்.
தன் முதல் ஆசிரியரான தனபால்மீது அதிகமான பிரியம் கொண்டிருந்தார். தனபாலிடம் கற்றது
பற்றிப் பின்னால் ஒரு நாள் சொன்னார்:
"அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தனபால் தயாராகிவிடுவார். நானும் ராமானுஜனும்
அவர்கூடப் புறப்பட்டு மந்தவெளி, அடையார் எல்லாம் சென்று மரங்கள், கட்டடங்கள்,
மனிதர்கள் என்று பலவற்றையும் வரைவோம். எனக்கு முன்னே ராமானுஜம் வந்துவிடுவான். ஒரு
நாள் அதிகாலை அவன் நான்கு ஐந்து மணிக்கே வந்து கதவைத் தட்டினான். அதற்காகக்
கோபித்துக்கொண்டது இல்லை."
ஆதி வரைந்த கோட்டோ வியங்களில் புகழ்பெற்றவை மகாத்மா காந்தி ஓவியங்கள். அவை மகாத்மா
காந்தி நூற்றாண்டு விழா சமயத்தில் வரையப்பட்டவை. அதற்கும் தனபால்தான் காரணமாக
இருந்தார்.
ஆதியுடன் படித்தவர்களில் பலரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். அவருக்கு
வேலையொன்றும் கிடைக்கவில்லை. அதாவது வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது தனபால்
இளம் ஓவியர்களுக்காக ஒரு சங்கம் நடத்திக்கொண்டு இருந்தார். காந்தி நூற்றாண்டு
விழாவையொட்டி, மகாத்மா காந்தி படங்களைப் போடும்படி சொன்னார். காந்தியின்
புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலர் படம்போட்டார்கள். இரண்டு மூன்று படங்கள்
போட்டதும் சலித்துப்போனார்கள். ஆனால் ஆதி, தனபால் சொன்னதைத் தாரக மந்திரமாக
எடுத்துக் கொண்டார். ஒரு மாதம் தொடர்ந்து மகாத்மா காந்தி படங்கள்போட்டார். அவற்றைப்
பார்த்த தனபால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். "இன்னும் போடு" என்று உற்சாகம்
ஊட்டினார்.
வேலையற்ற இளைஞராக இருந்த அவர் முழு மூச்சாகக் காந்தி படங்களை வரைய ஆரம்பித்தார்.
அவை காந்தி புகைப்படங்களின் நகலோ அழகு மிளிரும் காந்தியோ அல்ல. எல்லோரும்
அறிந்திருந்த மகாத்மா காந்தியைத் தன்னுடைய கலை மனப்பான்மையோடு ஒரு ஜீவனாகக்
கண்டார். அது கலைஞனின் சொந்தப் பார்வை. காந்தி எது முக்கியமெனக் கருதினாரோ அதில்
காந்தியின் தனித்தன்மைகளைத் துல்லியமாகக் கொண்டுவந்தார். முதல் பார்வைக்கு அது
சிதைக்கப்பட்ட காந்திதான். நியாயவானும் ஓழுக்கவாதியும் பிடிவாதமும் கொண்ட அவரை
மிகவும் குறைந்த கோடுகளால் பண்பு நலன் எதுவும் கெடாமல் வரைந்தார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் புகைப்பட ஆல்பத்தில் இருந்து தன்னைக் கவர்ந்த
புகைப்படங்களைத் தன் கோட்டோ வியத்திற்கு ஆதி எடுத்துக்கொண்டார். காந்தி கோட்டோ
வியங்கள் அவருக்காகவே வரையப்பட்டன. அதில் இன்னொருவர் தலையீடு ஏதுமில்லை. எனவே,
கஸ்தூரிபாவுடன் இருக்கும் காந்தி, ஒரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு
தென்னாப்பிரிக்காவில் ஜீலு யுத்த களத்திற்குக் காயப்பட்ட சிப்பாய்களுக்கு உதவப்
புறப்பட்ட காந்தி, அமர்ந்தபடி புன்னகைப் பூக்கும் காந்தி, நோபல் பரிசு பெற்றவரும்
காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பிரஞ்சு மொழியில் எழுதிய வருமான ரொமன் ரோலந்துடனான
காந்தி எனப் பல காந்திகள் அந்தப் படங்களில் இடம்பெற்றார்கள்.
காந்தி கோட்டோ வியங்கள் காந்தியின் வழியாகக் கலைப் படைப்பாயின. காந்தி சொந்த
வாழ்க்கையில் ஒரு கலைஞர். ஆனால், அவர் எப்பொழுதும் கலைஞர்கள்மீதும் கலைகள்மீதும்
அவநம்பிக்கை கொண்டவர். ஒழுக்கத்தோடு கலை என்பதைப் பிரிக்க முடியாத அம்சமாகக் கொண்டு
வாழ்ந்தவர். கலைஞர்கள் காந்தியின் பால் அதிகமாகக் கவரப்பட்டார்கள். மகத்தான
கலைஞர்கள் என்று அறியப்பட்ட ஒவ்வொரு கலைஞரும் காந்தியைப் பற்றி எழுதியும் சித்திரம்
தீட்டியும் வந்தார்கள். நந்தலால் போஸின், தடியுடன் நடக்கும் காந்தி ஓவியம், அவர்
உயிரோடு இருந்த காலத்திலேயே வரையப்பட்டு மக்களின் பாராட்டைப்பெற்று இருந்தது.
காந்தி என்பது தனி மனிதனோ பெரும் தலைவரோ அல்ல. அவர் ஒரு ஜீவன். வசீகரம்பெற்ற ஒரு
மாமனிதன். அவர் வரைவதற்கு உரிய ஆத்மா என்பதைக் கண்டுகொண்டார்கள். காந்தி கலைஞர்களை
வகீகரித்தார். கலப்படப் போலிப் பண்புகளோ கலை மறுப்போ அல்ல காந்தி என்பதைக்
கலைஞர்கள் கண்டுகொண்டார்கள். அதுவே காந்தியின் ஈர்ப்பு. அந்த ஈர்ப்பின்
அடிப்படையில்தான் ஆதி, காந்தி படங்களை வரைந்தார். தனபால் தூண்டுதல் ஒரு தற்செயலான
தூண்டுதல்தான். பின்னால் எது நிகழ வேண்டுமோ அது நிகழ்ந்தது.
அவர் வரைந்த மகாத்மா காந்தி படங்கள் கண்காட்சியாக வைக்கும் அளவிற்கு எண்ணிக்கையில்
கூடிவிட்டன. எனவே, அவர் மகாத்மா காந்தி என்று ஒரு கண்காட்சியை நடத்தினார். அது
பெரும் வெற்றியாக அமைந்தது. ஆதி வாழ்க்கையில் ஒரு ஓவியராக எதன் பொருட்டுச் சொந்த
ஊரில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாரோ அதை அடைந்தார். ஓவியர்கள், நண்பர்கள் ஓவியம்
சித்திரம் என்பதை அறியாதவர்கள் எல்லோரும் தனித்தன்மை வாய்ந்த கோடுகள் மூலமாகப்
படைக்கப்பட்டிருக்கும் காந்தியின் சித்திரங்களால் கவரப்பட்டார்கள். எது நேர
வேண்டுமோ அது காந்தி சித்திரம் வழியாக நேர்ந்தது.
ஆதியின் கோடுகள் பேசும் கோடுகள். எந்த அளவிற்குப் பேச வேண்டுமோ அதை மட்டும்
பேசுகின்றன. அவர் பேச்சில் அலங்காரம் கிடையாது; அறிவின் தாக்கம் கிடையாது. மாறாக
எளிமையும் இயல்பும்கொண்டவை. மாற்றவோ சிதைக்கவே முடியாத அவரது கோடுகள் அவருக்கே
உரியவை. அர்த்தம் பெற்றவை. அதன் காரணமாகவே தொடர்ந்து அவர் கோட்டோ வியங்கள் வரைந்து
வந்தார். இறுதி நாள் வரையில் கோடுகள் அவரைக் கைவிட்டுப் போகவில்லை என்பதையும்
கோட்டோ வியங்களை அவரும் கைவிடவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
1971ஆம் ஆண்டில் கசடதபற என்னும் இலக்கியச் சிற்றேட்டைத் தொடங்கியபோது அவர் அதனோடு
ஒன்றியிருந்தார். எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவது
முதன்முறையாகத் தமிழில் நேர்ந்தது. அவர் தமிழ்க் கவிதைகள், கதைகளைப் படித்து
உள்வாங்கிக்கொண்டார். படைப்பு பற்றிய அவரது பார்வை விசாலம் பெற்றது. உடன் இருந்தும்
அவர் பலவற்றைப் பெற்றார்.
ஆதி அதிகமாகப் பேசக்கூடியவர் அல்ல; ஆனால் எப்பொழுதும் பேசாமல் இருக்கக்கூடியவரும்
அல்ல. எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசுவார். அவர் அடிப்படையில் ஓவியர்தான். தன்
எண்ணங்களையும் கருத்துகளையும் சித்திரமாக வரைவதில்தான் ஆர்வமும்கொண்டிருந்தார்.
அவற்றை விரைவில் கிரகிக்கும் தன்மை பெற்றிருந்தார்.
கசடதபற இலக்கியச் சிற்றேட்டைத் தொடங்கியபோது கூடவே இருந்தார். விவாதங்களையும்
சர்ச்சைகளையும் கவனித்துக்கொண்டே இருந்தார்.
கசடதபற என்னும் சிற்றேட்டிற்கு வித்தியாசமான முறையில் பெயர் எழுதிக் கொடுக்குமாறு
கேட்டுக்கொண்டோ ம். அவர் வட்டெழுத்தின் பாதிப்பில் புதுமையாக எழுதிக் கொடுத்தார்.
அவர் பெரும் உழைப்பாளி. ஒரேமுறையில் திருப்தி அடைகிறவர் அல்ல. மறுபடியும்
மறுபடியுமென்று பலமுறை வரைந்து எழுதி, தான் திருப்தி அடைந்த பிறகே எதையும்
கொடுப்பார். அது அவருக்கு அதிகப்படியான வேலைதான். பணம் ஏதும் இல்லை. ஆனால் அவர்
அதையும் முழுத் திருப்தியுடன் செய்தார்.
கசடதபற விற்கு இலட்சினை மாதிரி ஒரு சித்திரம் கேட்டோம். அவர் கரத்தில் வாள்
பிடித்து மூடாத விழிகளுடன் குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனாரை
வரைந்துகொடுத்தார். அது கசடதபற குணம், செயல் ஆகியவற்றின் குறியீடாக அமைந்தது.
என்னுடைய அவன் ஆனது, சூரியவம்சம், தொலைந்து போனவர்கள், தக்கையின் மீது நான்கு
கண்கள், சாந்தகுமாரி, கிழக்குப் பார்த்த வீடு - சாகித்திய அகாதமி விருது பெற்ற
விசாரணைக் கமிஷன் - எல்லாவற்றிக்கும் அவர்தான் முகப்போவியம் வரைந்தார்.
சிலவற்றிக்குக் கதையைக் கேட்டுக்கொண்டு வரைந்தார். சிலவற்றிக்குக் கதையைப்
படித்துவிட்டுத் தன் போக்கில் முகப்போவியம் வரைந்தார். எப்படி வரைந்தாலும் - அவர்
திறமை, ஆற்றல், கற்பனைவளம், எல்லாம் அவற்றில் இடம் பெற்று இருந்தன. பல
ஆண்டுகளுக்குச் சா. கந்தசாமி நாவல், சிறுகதை என்றால் ஆதிமூலம் முகப்போவியம் என்பது
நிச்சயமாக இருந்தது. அவர்மீது நானும் என் படைப்புகள்மீது அவரும் நம்பிக்கைகொண்டு
இருந்தோம். அதனால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்குள் நவீன ஓவியர்களின் பங்களிப்பு ஓர்
அம்சமாக நிலைபெற்றது.
அவரே அடிக்கடி சொல்வார், "கேரளா, வங்காளம், டில்லியில் இலக்கியவாதிகளும் நவீன
ஓவியர்களும் நெருக்கமாக இல்லை. முகப்போவியம் போடுவதோடு அவர்கள் வேலை
முடிந்துவிடுகிறது. ஆனால், நவீனத் தமிழ் இலக்கியத்தில் நவீன ஓவியர்கள் ஒரு
சக்தியாகச் சேர்ந்து செயல்படுகிறார்கள். அதாவது ஓவியர்கள் பார்வையாளர்களாக இல்லாமல்
பங்களிப்புதாரர்களாக இருக்கிறார்கள்" என்று. அதில் முக்கியப் பங்களிப்பாளர்
அவர்தான். அவரது கோட்டோ வியங்கள் ஒவ்வொரு படைப்பு எழுத்தாளரையும் கவர்ந்தன. அதில்
காணப்படும் பழைய மரபும் புதுமை வீச்சும் தங்கள் நூல்களுக்கு அவர் முகப்போவியம்
போட்டுத் தரவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள்.
அடிப்படையில் எளிய மனிதரான அவர் பலரது வேண்டுகோளைச் சிரமங்களுக்கு இடையில் பூர்த்தி
செய்தார். ஒரு பத்தாண்டுக்கு அவரே நவீனத் தமிழ் இலக்கிய நூல்களுக்கு முகப்போவியம்
வரைபவராக இருந்தார். அவர் சித்திரங்கள் புதிய பரிமாணத்தைக் கொடுத்தன. தமிழ்ப்
புத்தகங்களின் முகப்பை அடியோடு மாற்றிவிட்டன. பெரும்பாலும் அவர் உருவங்களையே
முகப்போவியங்களாக வரைந்து கொடுத்தார். ஆனால், அவை ஒரு சித்தாந்தத்தின் தன்மையைப்
பெற்றிருந்தன.
கலைஞனாக அவர் இருபதாண்டுகளுக்கு மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில்
பணியாற்றினார். அது வர்ணம், கலையோடு சேர்ந்தது. பப்புல் ஜெயகர் என்ற குஜராத்துப்
பெண்மணி அதன் தலைவியாக இருந்தார். அதனால் பல கலைஞர்கள் அதில் நாடு முழுவதிலும்
பணியாற்றினர். பிரபல ஓவியர் கே.ஜி. சுப்பிரமணியன், சுனில்தாஸ், ரெட்டப்பா நாயுடு,
வாக்காள எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள். அது தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யவும்
கலை கைத்தொழிலை அறிந்துகொள்ளவும் உதவியது மாதிரி இந்தியக் கலைஞர்களோடு
தொடர்புகொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
நான் அறிந்தவரையில் ஆதி தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வர்ணம், கேன்வாஸ் வாங்கவும்
கண்காட்சிகள் நடத்தவும் கேட்லாக் போடவும் செலவு செய்தார். கலைஞன் என்ற இருப்புதான்
அவருக்கு முக்கியமானதாக இருந்தது. டில்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில்
தொடர்ந்து அவர் கண்காட்சிகள் நடத்திவந்தார். விற்பனை என்பது பற்றி அவர்
கவலைப்பட்டதே இல்லை. தன் படைப்பு மகத்தானது; மக்களைச் சென்றடைய கண்காட்சியைத் தவிர
வேறு வழியில்லை என்று நம்பினார். கண்காட்சியோடு கேட்லாக் போட்டார். தன் காலத்தில்,
ஓவியங்களைக் கண்காட்சிக்கு வைக்கச் சொந்தப் பணத்தைச் செலவிட்டவரும் கேட்லாக்
போட்டுக் கொடுத்தவரும் அவர்தான்.
டில்லியில் நடைபெற்ற சர்வதேச ஓவிய - சிற்பக் கண்காட்சிகளில் அவர் சித்திரங்கள்
இடம்பெற்றன. அவர் ஒவ்வொரு கண்காட்சிக்கும் சென்று, சர்வதேச ஓவியங்கள், சிற்பங்களைப்
பார்ப்பதில் பல நாள்களைச் செலவிட்டார். நானும் அவரும் இரண்டுமுறை சர்வதேச ஓவிய,
சிற்பக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்திருக்கிறோம். அவர் மறுபடியும் மறுபடியும்
அரங்கிற்குச் சென்று, ஒவ்வொருமுறையும் புதிதாகப் பார்ப்பது மாதிரிப்
பார்த்துக்கொண்டேயிருந்தார்.
சர்வதேச ஓவியர்களில் வின்சென்ட் வான்காக், ரெம்பராண்ட், லியானார்டோ டாவின்சி,
பால்கிளே ஒவியங்கள்மீது அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது. நவீனச் சிற்பிகளில்
ஹென்றி மூர் அவர் மனம் கவர்ந்தவராக இருந்தார். தமிழக ஓவியர்களில் பணிக்கர் பெரும்
சாதனையாளர் என்று ஆதி கருதினார். ஓவிய, சிற்ப உலகத்தில் ஏற்பட்டிருந்த இறுக்கத்தை
உடைத்துக் கலையை முன்னெடுத்துச் சென்றதோடு சோதனை செய்ய அவர் வழி
வகுத்துக்கொடுத்ததாகக் கருதினார். தனபால், சந்தானராஜ், அந்தோணிதாஸ் அவருக்குப்
பிடித்தமான ஓவியர்களாக இருந்தார்கள்.
எம். எப். ஹுசைன் கலை மூலமாகச் சர்ச்சையை உண்டாக்கி, அதன் மூலமாகத் தன் கலைப்
படைப்புகள்மீது கவனத்தைத் திருப்புகிறார். ஒரு கலைஞன் செய்கிற காரியம் அதுவல்ல
என்பது அவரது அபிப்பிராயம். ஆனாலும் ஹுசைன் படைப்புகள்மீது அவருக்கு மிகுந்த
ஈடுபாடும் மதிப்பும் இருந்தது. ஹுசைனோடு ஒரு கண்காட்சியில் தன் ஓவியங்களை வைத்தார்.
ஆதிக்குச் சொந்த விருப்பு வெறுப்பு என்பது அதிகம் இல்லை. பல ஓவியர்களை அவருக்குப்
பிடிக்கவில்லை. மூன்றாம்தரமான ஆசாமிகள் முதல்தர ஓவியர்போலத் தம்மை
நிலைநிறுத்திக்கொள்ளப் பாடுபடும்போது அவர் ஒதுங்கிவிடுவார். அவர் தன்னை
முன்னிலைப்படுத்திக்கொள்வதில் அதிகமான ஆர்வம் இன்றியே இருந்தார். ஆனால், கலை
விமர்சகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் எனப் பலரும் அவரோடு இணக்கமாக இருந்தார்கள்.
இந்து இதழில் பல ஆண்டுகளுக்குத் தமிழக ஓவியங்கள் பற்றி எழுதிவந்த அஞ்சலி சர்க்கார்,
இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆசிரியராக இருந்த ராமன் ஆகியோர் அவர் சித்திரங்கள்மீதும்
ஓவியங்கள் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். பலமுறை அவர் ஓவியம் பற்றி
எழுதி இருக்கிறார்.
ஆதி ஓவியம், சிற்பம் பற்றிய அமைப்புகளில் தொடர்ந்து பங்காற்றி வந்தார். அதன்
மூலமாகக் கிடைக்கக்கூடிய நன்மைகள் கலைஞர்களுக்குக் கிடைக்கப் பாடுபட்டு வந்தார்.
அதனால் தமிழ்நாடு நுண் கலைக் குழு, லலித் கலா அகாடமிகளில் உறுப்பினராக இருந்தார்.
லலித் கலா அகாடமிக்குச் சென்னையில் சொந்தக் கட்டடத்திற்கு இடம் கிடைக்கப்
பாடுபட்டவர்களில் அவரும் ஒருவர். பொதுக் காரியத்திற்கு உழைக்க அவர் தயங்கியதே
இல்லை.
லலித் கலா அகாடமி பரிசளிப்பு முறையில் மாறுதல் கொண்டுவருவதில் அவர் முக்கியக்
காரணியாக இருந்தார். லலித் கலா அகாடமி அனுப்பப்படும் ஒரு ஓவியத்திற்குப் பரிசு
அளிக்கிறது. ஆனால், ஒருவரே இரண்டுமுறை, மூன்றுமுறை தகுதி அடிப்படையில் பரிசு
பெற்றார். மூத்த கலைஞர்களுக்கு முன்னால் மற்றவர்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து சிலர் பரிசு பெறுவதும் வேறு பலர் பரிசு பெறாமல் போவதும் தொடர்ச்சியாக
நிகழ்ந்துகொண்டிருந்தது. "என்ன செய்யலாம்" என்று கேட்டார். அந்த ஆண்டு அவர் லலித்
கலா அகாடமி தேசிய விருதுக்கான நீதிபதியாகச் சென்றார்.
சாகித்திய அகாடமிபோல ஒருவருக்கு ஒருமுறை தான் பரிசு கொடுக்க வேண்டும். ஒருமுறை
பரிசு பெற்றவர் மறுமுறை பரிசுபெற முடியாது. அதனால் இந்தியா போன்ற ஒரு பெரிய
நாட்டில் பலரும் பரிசு பெற வாய்ப்பு ஏற்படும் அல்லவா என்று கேட்டேன். அவர்
தலையசைத்துக்கொண்டார். பிறகு ஏற்கனவே பரிசு பெற்ற சிலர் இந்த ஏற்பாட்டை
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நான் அறிந்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் தனக்கே பரிசு கிடைக்க
வேண்டும் என்று கருதும் அசலான கலைஞர்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள்.
ஆனால், இந்த யோசனை நல்ல யோசனை. சாகித்திய அகாதமி பின்பற்றிவருகிறது. முயற்சி செய்து
பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு டில்லி சென்றார். ஆனால், எடுத்த காரியத்தைச்
சரியாகச் செய்யும் ஆற்றல் கொண்டவர். செய்து முடித்துவிடுவார் என்று நானே
சொல்லிக்கொண்டேன்.
டில்லில் நடைபெற்ற தேசிய விருதுத் தேர்வுப் பணியை முடித்துவிட்டு வந்தார். என்னைப்
பார்த்ததும் நாம் பேசியபடியே காரியம் செய்ய முடிந்தது. மற்ற நீதிபதிகளிடம் ஏற்கனவே
பரிசு பெற்றவர்கள் ஓவியங்கள், சிற்பங்கள் எத்தனைதான் சிறப்பாக இருந்தாலும் புதிய,
வளரும் கலைஞர்களை அங்கீகரிப்போம்; ஏற்கனவே பரிசு பெற்றவர்களுக்குப் பரிசு
கொடுக்கவேண்டாம் என்று சொன்னேன். அவர்களுக்கு அது நல்ல யோசனையாகத் தோன்றியது.
அதிகாரபூர்வமாக இல்லாமல், பரிசு பெற்றவர்களைத் தவிர்த்துவிட்டோ ம். எங்கள்
செயல்பாடு அகாதமியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் முதிய கலைஞர்கள், ஏற்கனவே
விருது பெற்ற கலைஞர்கள் இந்த ஆண்டும் விருது கிடைக்குமென்று நம்பிக்கொண்டு
இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றார். பின்னால் லலித் கலா அகாதமி செயற்குழு
உறுப்பினரானபோது, லலித் கலா அகாடமி தேசிய விருது ஒருமுறைதான் கொடுக்கப்படும் என்ற
புதிய விதியை அமல்படுத்தவும் தீர்மானமாக்கவும் காரணமாக இருந்தார்.
சிறுபத்திரிகைகளிலும் தனிப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்களுக்கும் முகப்போவியம்
வரைவந்துகொண்டிருந்த ஆதியின் சித்திரங்கள் பத்திரிகை ஆசிரியர்களைக் கவர்ந்தன. அதில்
முதன்மையானவர்கள் ஆனந்த விகடன் ராவ், மதன். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் தொடர்கள்,
கதைகளுக்கு ஆதி படம் வரைந்தால் நன்றாக இருக்குமெனக் கருதினார்கள். ஆதியின் நண்பன்
என்ற முறையில் என்னைத்தான் அணுகுகிறார்கள். முதலில் அவர் தயக்கம் காட்டினார். தன்
பிரதானமான ஓவியம் பாதிக்கப்படலாம் என்றார்.
"எப்பொழுது முடியவில்லையோ அப்பொழுது விட்டுவிடலாம்" என்றேன்.
ஆதி ஓரளவு சமாதானம் அடைந்து ஆனந்த விகடனில் சித்திரம் வரைய ஆரம்பித்தார். ஜூனியர்
விகடனில் கி. ராஜநாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசிக்குச் சித்திரம் வரைந்தார்.
அது மக்களின் பாராட்டைப் பெற்றது. அதே இதழில் வெளிவந்த எனது சுமைதாங்கியில் சில
நிமிடங்கள் தொடருக்கும் அவர் படம் வரைந்தார். எப்பொழுது வேண்டுமானாலும்
விட்டுவிடலாம் என்ற நினைப்போடு தமிழ் இதழ்களோடு அவர் கொண்ட தொடர்புக்கு அளவே இல்லை.
பல ஆண்டுகளுக்கு அது நீடித்தது. அது தமிழ் இதழ்கள் முதன்முறையாக சிறப்பான
சித்திரத்தை மக்கள்முன் கொண்டு சென்றன.
ஆதி, அரூப ஓவியர் என்று பெயரும் புகழும் பெற்று இருந்தாலும் அவர் பொருள்களையும்
மனிதர்களையும் வரைவதில் முதன்மையாக இருந்தார். அவரது கோட்டோ வியங்கள் சிறப்பாக
அமைந்திருந்தன. குறிப்பாகத் தமிழ் அறிஞர் உ.வே. சாமிநாதையர், புதுமைப்பித்தன், மௌனி
ஆகியோரை வரைந்திருந்தது கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்
பெற்றிருந்தது.
1994இல் ஜெயகாந்தன் மணிவிழாக் கொண்டாடியபோது ஆதியை விழாக் குழுவில்
சேர்த்துக்கொண்டோ ம். ஜெயகாந்தன் சித்திரங்கள் சிலவற்றை மலருக்கு வரைந்து
கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோ ம். அவர் தன்னோடு மருது, ராஜசேகரன் ஆகியோரையும்
சேர்த்துக்கொண்டார். அவர் எப்பொழுதும் கூட்டத்தில் இருக்கக்கூடியவர். வாய்ப்புகளைப்
பகிர்ந்து அளிக்கக்கூடியவர். தன் இருப்பு, நிலை பற்றி மற்றவர்களைவிட அதிகமாக
அறிந்திருந்தார். அதுவே அவர் செயல்பாட்டின் தளமாக இருந்தது.
தன் சித்திரங்கள்மீது அவர் அதிகமான நம்பிக்கைகொண்டிருந்தார். தன் பரிணாம
வளர்ச்சியில் சித்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதால் அவற்றைத் தொகுத்து
ஒரு நூலாகக் கொண்டுவந்தார். இன்னொருவர் பதிப்பிப்பார் - பதிப்பகம் முன்வரும்
என்றெல்லாம் அவர் காத்திருக்கக்கூடியவர் அல்ல. தானே அதனை வெளியிட்டார்.
ஆதிமூலத்தின் கலை நேர்த்தியைச் சொல்லும் நூலில் தமிழ்ச் சான்றோர், தமிழ் எழுத்தாளர்
என்ற பட்டியலும் உண்டு. அதில் உ.வே. சாமிநாதையர், மௌனி, க.நா. சுப்பிரமணியம்,
ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சா. கந்தசாமி ஆகியோரது நெகிழவைக்கும் சித்திரங்களை
வரைந்த ஆதி மறைந்துவிட்டார். அவர் வரைந்த சித்திரங்கள் என்றும் நிலை
பெற்றிருக்கும். கலைஞன் மரணத்தை வென்று என்றும் ஜீவிக்கிறான்.
n
ஓவியங்கள் ஆதிமூலம்.
நன்றி: Lines from an Artistic Life:
The Drawings of Adimoolam. |