Google   www kalachuvadu.com

அஞ்சலி
ஆதிமூலம்
தமிழ்க் காண்பியல் மரபின் நவீன அடையாளம்
டிராட்ஸ்கி மருது

அழுத்தமான தீர்க்கத்துடன் பெரும் வெளியில் ஓடித் திரிகிற கோட்டின் வேகத்திற்கு மரணம் ஏது? செல்கிற வழி எல்லாம் உயிர்ப்பை ஏற்படுத்தும் நிலைக்கும் உண்மையை மட்டும் பேச முடிந்த தூரிகைக்கும் கருப்பு மை நிறைந்த பேனாமுனை தொட்டு ஓடுகிற கணம் நிறைந்த வாழ்விற்கும் மரணம் இருக்கிறதா? ஒருபோதும் நாம் மரணம் என்கிற வார்த்தைக்குப் பக்கத்தில் அவரை நிறுத்திப் பார்க்க இயலாதுதான். அவரைப் போன்றோரின் இயக்கம் அல்லது அந்தக் கோடுகள் அடுத்த கட்டத்திற்குள் இறங்கிப் பயணிக்கின்றன என்பதுவும் மரணிக்காத உண்மை.

60களில் இருந்து சென்னையில் இயங்கியிருக்கிற ஆதிமூலம் இந்திய ஓவியர்களில் முதன்மையானவர். தென்னிந்திய ஓவிய வெளியின் வீச்சை உலகளவும் எடுத்துச் சென்ற முதல்வர். ஓவியர் சிற்பி தனபால் அவர்களிடம் ஆரம்பம் பெற்றுவந்தவர். பணிக்கர் காலத்திய மாணவர். அவர் காலத்தில் அவருடன் படித்த ஓவியக் கல்லூரி மாணவர்களில் தனிச்சிறப்புடன் விளங்கியவர். தொடர்ந்துவந்திருக்கிற தமிழகக் கோட்டுச் சித்திர மரபை உயர்த்திக் காண்பிக்கிற ஆதியின் கடந்த 45 ஆண்டுக் காலப் படைப்புகளும் தமிழகத்தின் சொத்து. அவர் வாழ்ந்த காலகட்டத்தை அது எப்போதும் அறிவித்து நிலையாக நிற்கும். உருவ வெளியிலிருந்து உடைத்துக் கட்டுகிற வழி வந்து, அரூப வெளியில் மிதக்கும் உருவங்களாக வந்து, பார்வையாளனையே உருவமாக அவ்வரூப வெளிக்கு முன்நிறுத்துகிற பார்வையாளனையும் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்ட வெளியின் பரப்பை எல்லையற்றபடி விரித்துக்கொண்டே இருந்தன அவரது ஓவியங்கள். காந்தியிலிருந்து தொடர்ந்த உருவ நிலையும் தமிழகப் படிமங்களுடன் "ஸ்கெட்ச் புக்" வரிசையாகவும் பல உருக்கள் எடுத்தன. கடந்த 40 ஆண்டுகளில் மறக்கப்பட்ட, மறைந்த தமிழகப் படிமங்களில் திரும்பவும் மேல்பரப்பிற்கு அவரால் மறுவாசிப்பிற்கு எடுத்து வரப்பட்டவை ஏராளம். அவரது ஒவ்வொரு கோடும் அவருடைய சமகாலத்தில் நடந்த இலக்கியப் பரிட்சார்த்தங்களுக்கு உருவகமாகவும் அடையாளமாகவும் இருக்கிறது. சமகாலப் படைப்பாளிகளுக்கு அவர் எப்போதும் ஒரு உந்து சக்தியாக இருந்து வந்திருக்கிறார் என்பதுடன் தன் படைப்பாலும் வாழ்வுமுறையாலும் முன்நின்று நடத்திச் செல்லும் ஒளிவிளக்காகவும் இருந்திருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் ஓவியர் என்கிற நிலைக்கு அப்பால் அவருடனான நட்பு என் வாழ்வில் எனக்குக் கிடைத்த அரிய ஒன்று. என்னை நெறிப்படுத்திக்கொள்ளவும் எனக்கு அவர் உதாரணமாக இருந்திருக்கிறார்.

70களில் சிற்பி தனபால் அவர்களின் வீட்டில் அவருக்கு நான் சிறுவனாக அறிமுகப்படுத்தப்பட்டபோது என் ஆசிரியரும் ஆதியின் கல்லூரித் தோழருமான ஆர்.பி. பாஸ்கரனுக்குத் திருமணம் முடிந்து இரண்டு நாள்கள் ஆகியிருந்த நிலையில் இன்னமும் சாமியானா போன்றவற்றை அவிழ்க்காத வீட்டில்தான் சிற்பி தனபால், கண்ணியப்பன் ஆகியோரை முதன்முதலாகச் சந்திக்கிறேன். அப்போது ஆதியும் உடன் இருக்கிறார். ஆனால், எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் அதுவரை வரைந்து சேர்த்து வைத்திருந்த ஓவியங்களுடன் இரு தெருக்களுக்கு அடுத்துள்ள தாத்தா சோலைமலை வீட்டிற்கு மதுரையிலிருந்து வந்திருந்தேன். என் ஓவியங்களைப் பார்த்த சிற்பி தனபால் எனக்கு ஓவியப் பள்ளியில் இடம் கிடைக்கும் என்று வாழ்த்தி அனுப்பிய பின் கல்லூரியில் சேர்ந்து படிக்கையில் ஓவியர்கள் ஆர்.பி. பாஸ்கரனும் ஓவியர் தட்சிணாமூர்த்தியும் எனக்கு ஆசிரியர்களாக இருந்தார்கள்.

நெசவாளர் பணி மையத்தில் வேலைசெய்த ஆதி அவர்கள் கல்லூரிக்கு எல்லா மாலைகளிலும் வந்துவிடுவார் சிற்பி தனபாலைப் பார்க்க.

71இல் ஆதி எனக்கு அறிமுகமில்லாதபோது அவர் ஓவியங்கள் பிரேம் செய்வதற்காகக் கல்லூரி வரும்போது இன்னும் சட்டம் அடிக்காத சில ஓவியங்களை முதல்வர் தனபால் தன் அறையில் தன்னைச் சுற்றி மாட்டி அழகு பார்த்து அவற்றுக்கு நடுவில் அமர்ந்திருப்பார். அப்படி முதல்வர் அறைக்கு ஒருமுறை சென்றபோது 1 அடி ஜ் 1லு அடி அளவிலான ஓவியங்களாக அப்போது கசடதபற இதழ்களில் வந்து "மிதக்கும் கழுதையைப் போன்ற மிருகத்தைக் கொண்ட அந்த ஓவிய வரிசையே" நான் ஆதியின் ஓவியங்களில் முதலில் பார்த்தது. கருப்பும் பச்சையுமான அந்த ஓவியங்கள் கல்லூரி மாணவனான என்னை அதன் அமானுஷ்யத் தன்மையுடன் கடுமையாகப் பாதித்தன. மாணவனான எனக்கும் அவ்வோவியங்களுக்குமான இடைவெளி தெரிந்தும் தெரியாததுமான ஒரு நிலையிலும் அவற்றுக்கு மிக அருகில் நான் சென்றுவிட்டதாகவும் நானும் மிதப்பது போன்ற உணர்விற்கும் உட்பட்டபோது முதல்வர் தனபால் 'பார், அது ஆதியின் படம்' என்று தெரியப்படுத்தினார்.

அதேபோல் கல்லூரியில் முதல்வர் அறைக்கு எதிரில் இருந்த Design சென்டரின் ஒரு பகுதியில் உட்புறமாக வைக்கப்பட்டிருந்த ஆனால் வெளியில் கடப்பவர்களுக்கு அதன் முன்புறம் தெரியும்படி சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியம், நான் எப்போதும் அப்பகுதியைக் கடக்கும்போது பாதிமட்டும் தெரிந்த, என்னைத் தொந்தரவு செய்த ஓவியம். கடக்கும்போதெல்லாம் உள்ளே கையை விட்டு அவ்வோவியத்தை நிமிர்த்திப் பார்ப்பது என் வழக்கம். பாதி அரூபமான உருவங்கள் கொண்ட ஓவியம் அது. மிதக்கும் ரதமும் பெண் உருவமும் கொண்ட அந்த ஓவியத்தைப் பற்றிப் பின்னாளில் ஆதியிடம் நான் நினைவுகூர்ந்த போது "அதுதான் நான் கல்லூரியில் வண்ணத்தை நோக்கி நகர முயன்ற ஆரம்ப ஓவியம்" என்று அவர் சொன்னது நினைவில் இப்போதும் வருகிறது. அவர் வரைந்ததுதான் அது என்று அப்போது தெரியாமல் கல்லூரியில் பழைய மாணவர்கள் விட்டுச்சென்ற ஓவியங்கள் நிரம்பியிருந்த அந்த மூலையில் அது மட்டும் என்னை ஈர்த்தது எப்படி? பிறகு 'Asia 72'க்காக என்னுடைய ஆசிரியர்கள் தீட்டிக்கொண்டிருந்த ஓவியங்களுக்கு நடுவே கல்லூரிக்கு வெளியிலிருந்து வந்த ஓவியம் ஆதியினுடைய கையில் கதையுடன் விழிகள் புடைத்தபடி முழுவீச்சுடன் ஆடும் கூத்துக் கலை ஞனின் அலங்கார ஓவியமாக, கண்ணாடிகள் பதித்துத் தீட்டப்பட்டிருந்த ஓவியம். இதைப் பற்றியும் ஆதி பிறகு அவருடன் நெசவாளர் பணி மையத்தில் நானும் வேலை செய்தபோது கண்ணப்பத் தம்பிரானின் ஆட்டத்தை ஆரம்பத்தில் பார்த்தது பற்றியும் அவருடைய புகைப்படமும் அதற்குக் காரணம் என்றும் கூறியிருக்கிறார். கூத்துக் கலைஞனைத் தீட்டியிருந்த படத்தின் மூலமே இதற்கு முன்பு பார்த்திருந்த ஓவியங்களுக்கும் 'ஆதி' என்ற பெயருக்குமான தொடர்பு எனக்குப் புலப்பட்டது.

என் மாணவப் பருவத்துக் கோடுகளைப் பார்த்து என் ஆசிரியர் பாஸ்கரன் 'ஏதோ ஒரு ஆதி ஒன்று இருக்கிறதே, உனக்கு ஆதியைத் தெரியுமா?' என்று கேட்டபோது 'நான் தெரியாது' என்றதும் அவருடைய வண்ண முயற்சிகளை மட்டும் பார்த்திருக்கக் கிட்டிய என்னிடம், 'உனக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்' என்றார்.

பிறகு மாலை வேளைகளில் கல்லூரிக்கு வரும் ஆதி என்னுடைய வகுப்பு அறையில் நான் மாட்டி வைத்திருந்த என்னுடைய சுய உருவ ஓவியத்தைப் (self portrait) பார்த்து இது யார் தீட்டியது எனக் கேட்டார் என்று என் ஆசிரியர் தட்சிணா ஒருமுறை சொன்னார்.

பிறகு அந்த ஓவியத்திற்காக இளம் ஓவியர்களுக்கான கண்காட்சியில் எனக்கு அப்போது பரிசு கிட்டியதும் அதற்கு வந்திருந்த அவர் முன்பு, என்னுடைய கழுத்தில் கைவைத்து என்னைத் தள்ளிக்கொண்டு போய் "நீங்கள் கேட்டீர்களே! அந்தப் பையன் இவன்தான்" என்று நிறுத்தினார்கள் பாஸ்கரனும் தட்சிணாவும். என்னை வெகுவாகப் பாராட்டிய ஆதியோடு அன்று தொடர்ந்த நட்பு மூத்தவர் இளையவர் என்பதையும் தாண்டி எந்தத் தொய்வும் அற்றதாக இருந்தது.

பிறகு 70, 80களின் கண்காட்சிகளில் என்னை அவர் ஊக்கப்படுத்தியது, பிறகு நெசவாளர் பணி மையத்திலேயே நான் வேலைக்குச் செல்லும்படி வந்தது, சென்னையில் அவருடனேயே அவருக்கு அருகிலேயே அமர்ந்து வேலை செய்யும்படி அமைந்ததும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. சிறுபத்திரிகை உலகுக்கு ஆதி ஆற்றிய பங்களிப்பு, பாஸ்கரன், தட்சிணா மூலம் நான் கல்லூரியில் படித்தபோது காணக் கிடைத்தது. க்ரியா ராமகிருஷ்ணன், எஸ்.வி. ராஜதுரை, முத்துசாமி, வீராச்சாமி, ஆத்மாநாம் போன்றோரை அவ்வயதில் எனக்கு அறிய வாய்ப்புக் கிட்டியது ஆதி, தட்சிணா, பாஸ்கரன் ஆகியோரால்தான். தன் ஓவியங்களைத் தானே பிளாக்செய்து அளிக்கும் அளவுக்கு ஆதியின் பங்கு இருந்தது.

சென்னைக்குத் திரும்ப வந்தபின் எனக்குச் சென்னையுடனான தொடர்பு ஒரு ஐந்தாண்டு விட்டுப்போனதை நிரப்ப இரவெல்லாம் விழித்து வேலைசெய்து சரிக்கட்ட ஒரு முன்மாதிரியாக இருந்தவரும் ஆதிதான். நெசவாளர் பணி மையத்தில் வேலை செய்தபின் இரவெல்லாம் உழைத்தவர் ஆதி. வெகுஜனப் பத்திரிகையிலும் நவீன ஓவியத்தை இடம்பெறச் செய்ய முன்நின்றவர் அவர். சென்னைக்குத் திரும்பியதும் நான் இங்கு வந்துவிட்டேன். அவரையும் பயன்படுத்துங்கள் என்று அனைவருக்கும் சொன்னதும் அவரே; என்னைத் தொடர்ந்து செய்ய ஊக்குவித்தவரும் அவரே.

இவை எல்லாவற்றிற்கும் மேலே தன்னை எப்போதும் முன்நிறுத்திக்கொள்ளாதவர். குழந்தையைப் போன்ற மனம் உள்ள அவர் கடைசிவரை கிராமத்திலிருந்து வந்த எளிமை மிக்க மனிதரைப் போலவும் ஒருவரையும் புண்படுத்தாத பெரும் மனம் கொண்டவராகவும் விளங்கினார். அடுத்தவருக்குத் தெரியாமல் அவர் உதவியது குறித்த பலவற்றை நான் அறிந்திருக்கிறேன். அதேபோல் பலர் அறியாதது அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வும் நையாண்டியும். சிரிக்காமல் அதைச் சொல்லுவார். தமிழக ஓவியச் சூழலிலும் டெல்லியின் ஓவியச் சூழலிலும் வளரும் கலைஞர்களுக்கு அதிலும் தமிழக ஓவியர்களில் வளருகிற இளம் கலைஞர்களுக்கான இடம் கிடைக்க வேண்டி உழைத்ததோடு கவலையும்பட்டவர்.

அவரும் நானும் ஒரே காலகட்டத்தில்தான் நெசவாளர் பணி மைய வேலையை விட்டோ ம். வாழ்வில் தனி ஓவியராக வாழ முடியும் என்கிற ஆதாரம் நிச்சயம் இல்லாதிருந்தபோதும் நிகழ்ந்தது அது.

அதுவரை கடன் வாங்கி ஓவியம் தீட்ட, நண்பர்களுக்குச் செலவு செய்ய என்று சிரித்த முகத்தோடுதான் இருந்தார். எந்த வேதனையையும் படிக்க முடியாத சிரித்த முகத்துடனான தெளிந்த முகத்துடனேயே இருந்தார். பிராணிகளிடம் பிரியமுடன் இருப்பார். ஒருமுறை சிங்கப்பூர்க் கண்காட்சிக்குச் சென்றிருந்தவர் அவருடைய செல்ல நாய்க்கு வாங்கிவந்த பெல்ட் சங்கிலியுடன் என்னுடைய ஜானிக்கும் ஒரு சங்கிலி வாங்கிவந்து அளித்து மகிழ்ந்தார். ஓவியம், சினிமா, காமிக்ஸ் ஓவியர்கள் பற்றிக் கிடைத்த புத்தகங்களை எல்லாம் அவருக்குக் காணக் கிடைக்கச் செய்வதில் எனக்கும் ஒரு மகிழ்ச்சி. சக கலைவடிவங்களின் மீது அவருக்கு இருந்த தீவிரத்தால் ஒருமுறை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று பிரிட்ஜ் லாங்கின் மெட்ரோ போலீஸ் படத்திற்கு அழைத்துச் சென்று கண்டபோது, அவர் அதில் வருகிற படிமங்கள் தன்னைப் பிறகு எவ்வாறு பல நிலைகளில் தூண்டியது என்று அப்போது எனக்குச் சொல்லியிருக்கிறார். தன் சகோதரரைப் போலவே என்னைப் பார்த்த அவரிடம் என் தந்தையிடம் கொண்டிருந்த உறவே எனக்கு இருந்தது.

ஒரு தத்துவ நிலைத் தேடலோடுகூடியவை அவரது கோடுகளும் ஓவிய வெளியும். ஒளி, நிழல், காற்று, வெளியின் எல்லையற்ற தன்மை, நெருப்பு, அமைதி போன்றவற்றின் உருவ நிலைகளுக்கு ஊடே உள்ள தேடுதலின் தொடர்ச்சி அவரது 50 ஆண்டுப் படைப்புகளில் பதிவாகியிருக்கிறது.

அன்பிற்கினிய அவரிடம் இருந்துவருகிற வாழ்த்துகளும் புத்தகங்களும் ஓவியக் காட்சிக்கான அழைப்புகளும் அவருடைய கையெழுத்தோடு என்னிடம் நிரம்பி இருக்கின்றன. கடைசியாக "திருமதி & திரு. மருதுவுக்கு நல் ஆசியுடன் ஆதிமூலம் 4.01.08" என்கிற கையெழுத்தோடு கூடிய புத்தகத்தை என்னிடம் வந்த நண்பர்களிடம் எல்லாம் காட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தனபால் ரவியிடம் இருந்து அச்செய்தி வந்தது.

எப்போது அவரை நான் பார்க்கச் சென்றாலும் எல்லாக் காலங்களிலும் அவரை விட்டுப் பிரியும்போது, அவர் மறக்காமல் ஓவியம் வரைவதற்கான உபகரணங்களாகிய சாக், பேனா அல்லது வண்ணங்கள் என்று எதையாவது என் கைகளில் அளித்து வாசல்வரை வந்து அனுப்புவார். அது ஒரே ஒரு கரித்துண்டானாலும் அவர் அளிக்கிற பெருமிதம் மிக்க அந்தக் கணங்கள் எவ்வளவு சக்தி மிக்கவை. அப்படியான தொடர் நிகழ்வுகளில் வாங்கியது நானாக இருந்தாலும் பெறுகிறவர்கள் அவருக்கு அடுத்திருக்கிற அனைவரும்தான். இன்னும் எப்போதும் உயிர்ப்புடன் இருக்க முடிகிற அந்தக் கோட்டிற்கு மரணம் ஏது?

உள்ளடக்கம்