Google   www kalachuvadu.com

அஞ்சலி
மறைந்தும் மறையாத ஆதிமூலம்
ந. முத்துசாமி

முந்தாநாள் இரவு ராமகிருஷ்ணனிடமிருந்து டெலிபோன் வந்தது. ஆதிமூலம் இறந்துவிட்டார் என்று சொன்னார். அய்யய்யோ என்று நான் சொன்னேன். சில தினங்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து நான் வெளியில் வந்தேன். மிகவும் பலவீனமாகவும் நடக்க முடியாமலும் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டிருந்தேன். இந்தச் செய்தியை ராமகிருஷ்ணன் கேள்விப்பட்டிருந்தார். என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை என்றதற்கு அவர் சொன்னார் 'பரவாயில்லை அலட்டிக்கொள்ளாதீர்கள்' என்று. சில வருஷங்களுக்கு முன்பு இப்படி அதிர்ச்சி தரும் ஒரு செய்தி வந்திருந்தால் நான் பெரிய பதற்றத்திற்கும் மரணம் என்ற பயத்திற்கும் ஆளாகியிருந்திருப்பேன். என்னுடைய இளமைப் பருவத்தில் தொடர்ந்து மரணங்களைப் பார்த்து மரணத்தைப் பற்றிய பயம் பெரிய பீதியாக என் மனோதத்துவத்தில் இருந்துகொண்டிருந்தது. ஆனால், இப்போது நான் 'அய்யய்யோ' என்று சொன்னது ஆழ்ந்த சோகத்தை மட்டுமே உணர்த்துவதாக இருந்தது. என்னுடைய பயத்தைப் போக்கிக்கொள்ளுவதற்காக நான் எடுத்த முயற்சிகள் (அது மிகவும் பின்னாலேயே நிகழ்ந்தது.) என் உடலில் தோன்றும் பரபரப்பையும் பயத்தையும் போக்கிக்கொள்கிற ஒருவிதத் தியானமாக நானே எனக்கு வடிவமைத்துக்கொள்வதாக அமைந்தது. ஆனால், இதற்கு நான் வந்துசேர்வதற்கு மனோதத்துவப் பேராசிரியர்களும் மனநல மருத்துவர்களும் உதவியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் மேலாக நரம்பியல் மருத்துவர் டாக்டர் கல்யாணராமன் அவர்களைச் சொல்ல வேண்டும். ஆன்ம விசாரம் என்பது என்னைப் பொறுத்தவரையில் மனநல மருத்துவத்தில்தான் முழுமையாக இருந்துகொண்டிருக்கிறது. ராமகிருஷ்ணனிடமிருந்து வந்த செய்தியைத் தொடர்ந்து மரணத்தைப் பற்றியும் அதை நாம் (நான்) புரிந்துகொண்டிருக்கிற விதத்தைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். மரபுகளும் சடங்குகளும் அன்றாட வாழ்க்கையின் போக்கும் அதைச் சமன்செய்வதும் இயற்கையான ஒரு நிகழ்வு என்று புரிந்துகொள்ளலும் ஆதிமூலத்தின் மரணத்தை என் மனத்தில் ஆழ்ந்ததொரு வருத்தமாக மட்டும் விட்டுவைத்தது.

ஆதிமூலம் எனக்கு எப்படி அறிமுகமானார் என்பது மறந்துவிட்டது. ஆனால், சென்னையிலுள்ள ஓவியர்கள் எனக்கு அறிமுகமாவதற்குக் காரணமாக எம். கோவிந்தனைத்தான் சொல்ல வேண்டும். அப்போது எழுத்து வந்துகொண்டிருந்த காலம். க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் வந்துகொண்டிருந்தது. விஜய பாஸ்கரனின் சரஸ்வதியும் வந்துகொண்டிருந்தது. தமிழர்களான இந்த மூவரிடமிருந்தும் அல்லாமல் மலையாளியான கோவிந்தனிடமிருந்துதான் ஓவியர்கள் எனக்கு அறிமுகமானார்கள். ஏனெனில், இவர்களெல்லாம் இலக்கியத்தோடும் அரசியலோடும் மட்டுமே நின்றவர்கள். ஆனால், கோவிந்தன் பல பரிமாணங்களைக் கொண்டவர். அவரிடமிருந்துதான் நான் ஓவியர்களையும் நடனக்காரர்களையும் மலையாள சங்கீதத்தின் சில பரிமாணங்களையும் புரிந்துகொண்டேன். அது அற்புதமானதொரு காலகட்டமாக இருந்தது.

எனக்கு முதலில் அறிமுகமானவர் ஓவியர் தாமோதரன்தான். அவருக்குப் பிறகுதான் நான் மற்றவர்களைத் தெரிந்துகொண்டேன். இந்த ஓவியர்களெல்லாம் கோவிந்தனோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார்கள். ஹாரிஸ் ரோட்டில் இருந்த அவருடைய வீட்டுமாடியில் தினமும் ஒரு ஓவியராவது வந்து போய்க்கொண்டிருப்பார். அப்போதுதான் நான் ஆதிமூலத்தைச் சந்தித்திருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் கோணல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருந்தது. அதன் அட்டைப்படத்தை வரைந்தவர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, கோணல்களுக்கான லினோகட்டில் அமைத்துக்கொடுத்திருந்தார். அப்போது எனக்குக் கிருஷ்ணமூர்த்தியைத் தெரியாது. கோணல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருந்தவர்கள் ராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மா. ராஜாராம் ஆகியவர்கள். கோவிந்தனின் உதவியில்லாமல் ஓவியர்களை அறிந்திருந்தார்கள் போலும். இந்தக் கால கட்டத்தை யோசிக்கிறபோது நிறையச் சம்பவங்களும் பழைய நினைவுகளும் மனத்தில் வருகின்றன.

ஆதிமூலம் அறிமுகமான பின்னர் நான் ராஜாஅண்ணாமலை புரத்திலிருந்த அவருடைய குடியிருப்புக்குப் போகத் தொடங்கிவிட்டேன். அப்போது அவருக்குக் கல்யாணமாகியிருந்தது. என்னோடு அந்தச் சந்திப்புகளில் கி.அ. சச்சிதானந்தமும் நிச்சயம் இருந்திருப்பார். ஏனெனில், எல்லா நேரங்களிலும் அப்போது நாங்கள் ஒன்றாகவே இருந்துகொண்டிருப்போம். எனக்கு அப்போது கல்யாணமாகியிருந்தாலும் ஒரு பிரம்மச்சாரியைப் போலவே சுற்றிக்கொண்டிருந்தேன். சச்சிதானந்தம்தான் எனக்குக் கோவிந்தனை அறிமுகம் செய்துவைத்தவர். எனவே சச்சிதானந்துக்கு இவர்களை முன்னதாகவே தெரியவந்திருக்க வேண்டும். நாங்கள் எல்லோருமே நான், சச்சிதானந்தம், கிருஷ்ணமூர்த்தி, ஆதிமூலம் ஆகியவர்கள்-சுற்றிக்கொண்டே இருந்தோம். கிருஷ்ண மூர்த்தி, ஆதிமூலம் பாஸ்கரன், தக்ஷ்ணாமூர்த்தி ஆகியவர்கள் ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் வரைவதற்காகச் சென்னை நகரில் (அப்போது அதை நகர் என்று சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை) சுற்றிக்கொண்டிருந்தார்கள். வரைந்துகொண்டிருந்தார்கள். தீட்டிக்கொண்டிருந்தார்கள் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கிறார்.

உண்மையான ஒரு தேடல் தொடங்கிய காலம் என்று அதைச் சொல்ல வேண்டும். புதுக்கவிதை தோன்றிய காலம் அது. விமர்சனம் தோன்றிய காலம் அது. ஓவியர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் நடனக்காரர்களும் திரைப்பட இயக்குநர்களும் குறிப்பாக அரவிந்தன், ஜான் ஆப்ரகாம், அடூர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்த காலமது. கோவிந்தன் கூட்டிய கூட்டங்கள் மவுண்ட்ரோடில் கெயிட்டி, காசினோவுக்கு அருகிலிருந்த ஒரு மலையாளி ஓட்டலின் மாடியிலும் அதேபோல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு முன்னால் இருந்த ஒரு மலையாளி ஓட்டலின் மாடியிலும் காலை நேரத்தில் நாங்கள் எல்லோரும் கூடினோம். அப்போது ஓவியராக மாறியிராத எழுத்தாளராக இருந்த அச்சுதன்கூடலூரும் மெட்ராஸ் ஆர்ட் கிளப் உறுப்பினராக ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்த கவிஞரான எஸ். வைத்தீஸ்வரனும் அந்தக் கூட்டங்களில் இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் சற்று முந்தியோ சற்றுப் பிந்தியோ க.நா.சு கூட்டிக்கொண்டிருந்த கூட்டங்கள் sமீக்ஷீஸ்மீஸீts ஷீயீ வீஸீபீவீணீவின் ஒரு கூடத்திலும் நீஷீsனீஷீஜீஷீறீவீtணீஸீ நீறீuதீ கூடத்திலும் மவுண்ட்ரோடின் னீணீபீக்ஷீணீs நீறீuதீ கூடத்திலும் நடந்துகொண்டிருந்தன. அங்கெல்லாம் நாங்கள் இருந்தோம். தேடல் தேடல் தேடல். தமிழில் தேடத் தொடங்கிய காலம் அப்போதுதான் தொடங்குகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. ஙிமீtஷ்மீமீஸீ tலீமீ லிவீஸீமீs என்று தலைப்பிட்ட 1962க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆதிமூலம் வரைந்த கோட்டோ வியங்கள் அடங்கிய புத்தகம் வெளிவந்திருக்கிறது. அதை எனக்குத் 'திரு. முத்துசாமி அவர்களுக்கு, நடையில் தொடங்கி முப்பது வருட நினைவுகளுடன் ஆதிமூலம், 1.2.99' என்று கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால், உண்மையில் இந்த நினைவு நடைக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. நினைவுகளிலிருந்து இந்தக் கட்டுரையைக் காலத்தை முன்னும் பின்னுமாக நான் சொல்வதைப் போலவே அவரும் காலத்தை 'நடை' என்ற ஓர் எல்லையிலிருந்து நினைவுபடுத்திக்கொண்டு இந்தக் கையெழுத்தை இட்டுக் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இந்தக் காலகட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடமிருந்தோ அச்சுதனிடமிருந்தோ கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தோ கந்தசாமியிடமிருந்தோ கேட்டு உறுதிபடுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், அதை நான் செய்ய விரும்பவில்லை. அது என் மனத்தில் தங்கியிருக்கும் விதமாகச் சொல்வதையே விரும்புகிறேன். திடீரென்று என் மனது கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பிற்குத் தாவிற்று. அதன் அட்டையை வரைந்திருப்பவர் ஆதிமூலம் என்று ஞாபகத்தில் இருக்கிறது. படம்கூட நினைவிலிருக்கிறது. ஆனால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இதை எழுதிக்கொண்டிருக்கும் தம்பிச்சோழனிடம் கேட்டேன். அவர், க்ரியாவின் அந்தப் பதிப்பைப் பார்த்திருக்கவில்லை. கவிதா வெளியிட்டுள்ள புத்தகத்தின் அட்டைதான் அவருடைய நினைவில் இருக்கிறது. தக்கையின் மீது நான்கு கண்கள் வந்த அதே நேரத்தில் வெளிவந்த க்ரியாவின் என்னுடைய நாற்காலிக்காரருக்கு அட்டையை வரைந்ததும் ஆதிமூலம்தான். இரண்டு அட்டைகளும் பண்பில் முற்றிலும் வேறுபட்டிருந்தன. தக்கையின் மீது நான்கு கண்களில் அவர் ஒரு கதை சொல்லி இருப்பதுபோல் இருந்தது. ஆனால் நாற்காலிக்காரரில் (அதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை) ஒரு ஆவேசத்தின் மெய்ப்பாடுபோல, ஒரு சடங்கின் முகமூடிபோல அவருடைய மனத்தின் ஆழத்திலிருந்து எடுத்த ஒரு படிமம்போல வரைந்ததாக அது இருந்தது. அந்தத் தொகுப்பில் உள்ள மூன்று நாடகங்களையும்தாண்டி அவர் தியேட்டரை என்னவிதமாகப் பார்க்கிறார் என்பதுபோல் அது இருந்தது. ஆனால், 'ஙிமீtஷ்மீமீஸீ tலீமீ லிவீஸீமீs' என்ற அவருடைய புத்தகத்தில் புத்தக அட்டைகள் பற்றி வெளிவந்துள்ள பக்கங்களில் இவையிரண்டும் இல்லை.

1987 ஆகஸ்ட் 12இல் எங்கள் வீட்டுக் கிரஹப் பிரவேசத்தின்போது எனக்கு ஆதிமூலம் கொடுத்த ஒரு வீரனின் படம் இந்தப் புத்தகத்தின் 176ஆம் பக்கத்தில் வீரன் மிமி திருவனந்தபுரத்தில் உள்ள பொருஞ்சுகுட்டி என்பவருடைய சேகரிப்பில் இருப்பதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் சில தவறுகள் நேர்ந்திருப்பதாக ஆதிமூலம் சொன்னதாக ராமகிருஷ்ணன் சொன்னார் மேற்கண்ட எங்கள் வீட்டுக் கிரஹப் பிரவேசத் தேதியை ராமகிருஷ்ணன்தான் சொன்னார். இந்த அழகிய கோட்டுருவத்தை என்னுடைய படுக்கை அறையின் நுழைவாயிலில் மாட்டிவைத்திருந்தேன். எங்கள் வீட்டுக்குவந்த ஒரு சனாதனி இதைக் கண்டு பயந்து எங்கள் வீட்டில் உள்ளவரையும் பயமுறுத்தி அந்தப் படத்தை அங்கிருந்து கழட்டவைத்துவிட்டது. இது போன்ற சனாதனிகளுக்கு எங்கள் வீட்டில் இடமில்லை என்ற போதிலும் வேறு யாருடனோ வந்து இந்த விபத்தைச் செய்துவிட்டது அது. சனாதன தர்மம் என்றால் என்ன என்று தமிழ் லெக்சிகனை (லிமீஜ்வீநீஷீஸீ) எடுத்துப் பார்த்தேன். புராதனமான அறவொழுக்கம் என்று போடப்பட்டுள்ளது. அந்த விளக்கம் தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. சகதியில் ஊறிய எருமை என்று சொன்னாலும் பன்றி என்று சொன்னாலும் மிருகங்களைக் கேவலமாகப் பேசிய குற்றம் வந்து சேரும். என்னவோ அந்தப் படம் என் மகன் நடேசனின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இப்போது இருந்துகொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு அதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார், பல லட்சரூபாய் மதிப்புள்ள ஆதிமூலத்தின் படம் ஒன்று உங்களிடம் இருந்துகொண்டு இருக்கிறது என்று.

மேற்படி பேர்வழி நம் மரபைப் புரிந்துகொண்டிருந்ததைவிட ஆதிமூலம் புரிந்துகொண்டிருந்தது உண்மையானது என்பது அவருக்குத் தெரியாது. என்னுடைய மனத்தில் எங்கள் செண்டாடுமைய்யனின் இரு முன்னடியான்களும் ஒரு குதிரையும் மேலும் வீரனின் ஒரு குதிரையும் சுட்ட மண்சிற்பங்களால் ஆன குதிரைகளும் உருவாரங்களும் என் மனத்தில் இருந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்ட அல்லது உணர்ந்துகொண்ட ஆதிமூலம்தான் எனக்கு அப்படி ஒரு வீரனின் படத்தைக் கொடுத்திருக்கிறார். என் மீசையையொத்த மீசை அதற்கு இருக்கிறது என்பதற்காக அதை அவர் கொடுக்கவில்லை. என் வயதை ஒத்தவர்கள் அதன் கொண்டையைப் போன்ற ஆண்களின் கொண்டையை நிஜ வாழ்க்கையில் பார்த்திருப்பார்கள். துருத்திக் கொண்டிருக்கும் அதன் கண்கள் குயவனின் கற்பனையில் உருவாகிச் சமூகப் பிரக்ஞையில் நிலைத்த கண்கள். அன்றாட வாழ்க்கையில் அப்படி ஒரு தோற்றத்தைத் தினமும் கண்டுகொண்டிருந்த எங்களுக்கு அதன் அழகு புலப்படுகிறது. வெறும் பயத்தாலும் வெற்றுச் சடங்குகளாலும் அன்றாட நியமங்களாலும் நிறைந்த வாழ்க்கையை உடைய மேற்படி பேர்வழிக்கு அது பயத்தைக் கொடுக்கும் துர்த்தேவதையின் உருவமாகப்பட்டிருக்கிறது. எவனாவது ஒரு பேயின் படத்தைத் தன் படுக்கை அறைமுகப்பில் மாட்டிவைத்துக்கொள்வானா? இந்த இடத்தில் பில்லிசூனியங்களைப் பற்றிய சென்ற யுகத்தின் பயங்கள் என் நினைவுக்கு வருகின்றன.

நான் மாயவரம் (இன்று மயிலாடுதுறை) நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனை என்னுடைய கதையொன்றில் சொல்லியிருக்கிறேன். நான் மாயூரநாதசாமி கோயில் வடக்கு மாடவளாகச் சந்தில் இருந்தபோது அவன் காவேரிக்கு அப்பால் வடக்கே மாயூரத்தைத் தாண்டிப் போகும் சாலையில் தனித்த ஒரு வீட்டில் இருந்தான். அவனை மட்டும் ஆதிமூலம் கண்டிருப்பாராயின் ஓவியமாக வரைந்திருப்பார். அவன் வீட்டில் ஒரு பெரிய புறாக்கூடு இருந்தது. அதில் ஏராளமான புறாக்கள், மிக அழகிய கருப்பும் வெள்ளையும் சாம்பல் நிறமும் கலந்த கலவையில் இருந்துகொண்டு இருந்தன. தினமும் அவற்றைப் பார்த்துக்கொஞ்சும் இந்த ரங்கநாதன் பில்லிசூனியம் எடுப்பதற்காகச் சுடுகாட்டுக்குப் போவான். கையில் ஒரு மூங்கில் கழி வைத்திருப்பான். நாங்கள் பத்துப் பதினைந்து சிறுவர்கள் - அவனும் சிறுவன்தான் - அவன் பின்னால் போவோம். காவேரிக் கரையில் உள்ள சுடுகாடுகளில் மரங்களில் சிறிய வடிவங்கள், மயிர், எலுமிச்சம் பழம், குங்குமம் இவற்றால் ஆன ஏதோ ஒரு வடிவம் ஆணிகளால் அறையப்பட்டிருக்கும். அவன் அருகில் போய்த் தன்னிடமுள்ள மூங்கில் கழியால் அதை அடித்துச் சிதைத்து என்னென்னமோ வசனங்கள் பேசிப் பெரிய குதூகலத்தில் இருப்பான்.

நாங்களோ பயந்து குறுகிப் பத்துத் தப்படி பின்னால் நின்று உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருப்போம். ஆதிமூலம் வரைந்த வீரனின் வடிவத்தைக் கண்டு பயந்தவருக்கு அது உதாரணமாக என் நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல. எங்கள் செண்டாடுமைய்யனின் முன்னடியான்களுக்குப் பின்னால் இரு வரிசைகளில் நின்றுகொண்டிருந்த புராதனமான சுட்ட மண்சிற்பங்களை எங்கள் அக்கிரகாரத்திலிருந்த வாத்தியார் ஒருவர் தனது மிதமிஞ்சிய பக்தியினால் கோயிலைப் புணருதாரணம் பண்ணுகிற சாக்கில் எல்லாவற்றையும் அகற்றிவிட்டார். பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு நல்ல பண்புகளைச் சொல்லிக்கொடுத்த அவருடைய அழகுணர்ச்சி இவ்வளவுதான். நாளைக்கி, நாம் நவீனமாக முன்னேறிக்கொண்டிருக்கிறபோது எவையெல்லாம் நம்முடைய தரைப் பரப்பை அழகுபடுத்தும் காரியத்திலிருந்து குப்பைகளாக அகற்றப்பட்டுவிடுமோ அவையெல்லாம் குயவனார் வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்ட சடங்கை நான் பார்த்ததில்லை. புஞ்சையை விட்டுவந்து ஒரு முப்பது வருஷத்துக்குப் பிறகு எங்கள் சொந்தக்காரர்களில் ஒருவர் சொல்ல இந்தச் சடங்கைப் பற்றிக் கேள்விப்பட்டேன். களி என்னும் சொல் இந்தச் சடங்கோடு தொடர்புபட்டிருந்திருக்கிறது. இப்படி ஒரு சடங்கு கண்ணார்பாளையத்தில் பட்டத் துளசி அம்மனுக்கு ஆண்டுதோறும் செய்யப்படுவதாகத் துடும்பு வாத்தியத்தினால் தெரியவந்த சண்முகம் சொல்லியிருக்கிறார். ஓவியமும் எழுத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக இருந்து கொண்டிருக்கின்றன.

என்னை வேறு உலகத்திற்கு ஒரு மரபின் அனுபவத்திற்குக் கொண்டுசென்றுவிடும் ஆதிமூலத்தின் கோட்டோ வியங்கள் இன்னொருவருக்கு எதிர்காலத்தில் இதே அனுபவத்தைக் கொடுக்கும் என்று சொல்வதற்கில்லை. வேறொரு கலாச்சாரத்தைச் சார்ந்தவருக்கும் இவை வேறுவிதமாகத் தோன்றும். மிகவும் அழகிய வலுவான கோட்டோ வியங்களாக இவை இருக்கும். ஆனால், இவற்றை ஒரு காலத்தின் அனுபவமாக எடுத்துக்காட்டுகிற காரியத்தை எழுத்துதான் செய்கிறது. இதேபோல் தெருக்கூத்துக் கலைஞர்களைப் பற்றிய ஆதிமூலத்தின் சமீபத்திய கோட்டோ வியங்களும் அவர் பார்த்ததைப் பார்த்த சமகாலத்தவரின் அனுபவத்திலிருந்து வெளியே போய்க் காலத்திலும் இடத்திலும் வேறு அனுபவங்களாகவே அவை இருக்கப் போகின்றன.

டெல்லியில் 'லிவீஸீமீs யீக்ஷீஷீனீ ணீஸீ கிக்ஷீtவீstவீநீ லிவீயீமீ: ஜிலீமீ ஞிக்ஷீணீஷ்வீஸீரீs ஷீயீ கிபீவீனீஷீஷீறீணீனீ' என்ற புத்தகம் அவருடைய ஓவியக்காட்சியில் வெளியிடப்பட்டபோது, அந்தக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த கூத்துக் கோட்டோ வியங்களைப் பற்றி டெல்லியிலிருந்த நடேசன் சொன்னான். இப்போது காலச்சுவடுக்காக நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது, அந்தப் புத்தகத்தை நான் பார்க்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கொடுத்தனுப்பினார். கூத்தைப் பற்றிய அவருடைய கோட்டோ வியங்கள் பிரமிக்கத்தக்கவையாக இருக்கின்றன. இந்தக் கூத்து ஓவியங்களையும் மேலே சொன்ன பலவற்றையும் பார்க்கிறபோது, இந்தக் காலத்தின் இந்தப் பண்பாட்டுக்கு ஒரு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார் ஆதிமூலம் என்று சொல்லத் தோன்றுகிறது. காஞ்சிபுரம் பல்லவரின் கைலாசநாதர் கோயிலின் சிற்பங்கள், அவற்றைச் செதுக்கியவனுக்கும் அந்தக் காலத்தவனுக்கும் கொடுத்த அனுபவத்திலிருந்து காலமும் இடமும் தாண்டிக் கொடுக்கும் அனுபவம் வேறானது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அவனுக்கும் எனக்கும் அவை உள்ளார்ந்த அழகையும் அனுபவமாக்குகின்றன. எப்போதுமே அதுதான் பொதுபோலும்.

1970களில் இறுதியில் நாங்கள் தெருக்கூத்தைப் பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருந்தபோது தெருக்கூத்தின் முதல் சுவரொட்டியை வரைந்துகொடுத்தவர் ஆதிமூலம்தான். அப்போது அச்சுத் தொழில் இவ்வளவு முன்னேறி இருக்கவில்லை. லித்தோ பிரஸ்ஸுக்குப் போய் அவரே நேரே கல்லில் வரைந்துகொடுத்ததை அச்சிட்டுக் கொடுத்தார்கள். பிறகு அவர் வரைந்து கொடுத்த இன்னொரு தெருக்கூத்துச் சுவரொட்டியை sநீக்ஷீமீமீஸீஇல் வடிவெடுத்து மையை ஊற்றி நாங்கள் வழித்தெடுத்தபோது அந்த மையைக் கரைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாததால், அதைக் காயவைப்பதற்கு நாங்கள் பெரும்பாடுபட்டோ ம். அப்போது நாங்கள் குடியிருந்த 30, வாலாஜா ரோடு வீட்டில் நான், என் மனைவி, என் பையன்கள் ரெண்டு பேர், காசி ஆகியோரின் அனுபவத்தில் அது இருந்துகொண்டிருக்கிறது. விலை மதிப்பில்லாத அந்த இரண்டு சுவரொட்டிகளும் இப்போது என்னிடம் இல்லை.

நேற்று இரவு நடுநிசியில் நான் விழித்துக்கொண்டு படுத்திருந்தபோது என் நினைவில் ஒன்று வந்தது. ஆதிமூலமும் அவருடைய நண்பர்களும் ரெட்டப்ப நாயுடுவின் கீழ் கீமீணீஸ்மீக்ஷீs ஷிமீக்ஷீஸ்வீநீமீ சிமீஸீtமீக்ஷீஇல் நெசவாளிகளுக்குப் புதிய கற்பனையைக் கொடுப்பதற்கு உழைத்த உழைப்புதான் இன்றைய நவீனப் பட்டுப் புடவைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்று எனக்குப் பெரிய பிரமிப்பாக இருக்கிறது. சேலத்தில் அம்மா பேட்டையில் நெசவு எப்படிச் செய்யப்படுகிறது என்பதை நடைக்காகச் சேலத்துக்கு நான் போய்வந்து கொண்டிருந்தபோதெல்லாம் சி. மணியோடு சென்று பார்த்திருக்கிறேன். மேலே கட்டப்பட்டுள்ள பேட்டுப்புட்டி கீழே தறியிலுள்ள நூலை விதம் விதமாகத் தூக்கிக்கொடுப்பதும் அதன் இடையில் வலமும் இடமுமாக ஓடி ஊடும் பாவும் என்ற சொல்லுக்கு அர்த்தத்தைக் கொடுப்பதும் ஊடை கீழும் மேலுமாக அசைத்துக்கொண்டிருப்பதும் ஊடை பாவில் நிறுத்தத் தறியின் கைப்பிடியைத் (பெயர் தெரியவில்லை) தன்னை நோக்கி, ஒரு கையால் அடித்துக்கொண்டிருப்பதும் இன்னொரு கையால் நாடாவை வலமும் இடமும் ஒட்ட மேலிருந்து தொங்கும் நூல்களில் உள்ள பம்பரம் போன்ற கைப்பிடியை வலமும் இடமும் சொடுக்கி நாடாவை ஓட்டுவதும் இந்தக் காரியங்களில் தோன்றும் ஒலி ஆகிய எல்லாம் சேர்ந்து பெரிய நடனத்தை எனக்கு இப்போது நினைவுபடுத்துகிறது.

நானும் நெசவுத் தொழிலில் செழித்த புஞ்சையிலிருந்து வருகிறவன்தான். நெசவின் அனுபவங்களெல்லாம் என்னிடம் இருக்கின்றன. ஆனால், எங்கள் ஊர் நெசவு அன்றாட உடுத்தலுக்கான அலங்காரமில்லாத வேட்டிகளையும் புடவைகளையும் மட்டுமே நெய்தது. தெருக்கூத்துக்காக நான் புரிசைக்குப் போய்க்கொண்டிருந்தபோது பலமுறை காஞ்சிபுரத்தில் பட்டு நெசவைப் பார்த்திருக்கிறேன். பட்டுப் புடவைகளில் புட்டாக்களை உருவாக்குவது எம்ராய்டரிபோல நாடாவைக் கையில் எடுத்துக்கொண்டு நூல்களுக்கு இடையே கொடுத்து வாங்கிச் செய்யப்படுகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். பலமுறை கீமீணீஸ்மீக்ஷீs ஷிமீக்ஷீஸ்வீநீமீ சிமீஸீtமீக்ஷீஇல் ஓவியனின் கற்பனையை நெசவில் கொண்டு வருவதற்கு என்ன செய்யப்படுகிறது என்பதைக் காட்டியிருக்கிறார் ஆதிமூலம். இப்போது விலை உயர்ந்த பட்டுப் புடவைகளில் படைப்பாற்றல் எப்படி நெய்யப்படுகிறது என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காண்பிக்கப்படும் பட்டுப் புடவைகளின் தலைப்புகளிலும் உடலிலும் உண்டாக்கப்பட்டிருக்கும் வடிவங்களின் கற்பனையில் ஆதிமூலத்தின் பங்கும் இருக்கிறது என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அந்தத் தொடர்ச்சியை யாராவது ஆராய்வார்களேயானால் தொடர்பு தெரியவரும்.

பத்திரிகைகளில் படம் வரைதல் (இல்லஸ்ட்ரேசன்) கேவலமாக விமர்சிக்கப்பட்டபோது அதில் மாற்றத்தைக் கொண்டுவந்த முதல் ஓவியர் என்று அவரைச் சொல்லத் தோன்றுகிறது. அந்த வகையில் அவர் சாமானிய மனிதனின் காட்சிக்கு நல்ல விஷயங்களைக் கொண்டுவந்தவர் என்று சொல்ல வேண்டும். ஓலைச் சுவடிகளிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் தமிழுக்கு அரிய வரிவடிவங்களைச் சிற்றேடுகள் மூலம் கொண்டுவந்து அதை அவர் வியாபாரப் பத்திரிகைகளும் கைக்கொள்ளுமாறு செய்திருக்கிறார்.

ஒரு சமூகத்தில் வளங்களைச் சேர்க்கிறவர்கள் மிகவும் முக்கியமானவர்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவர் ஆதிமூலம்.

சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார் அவர் என்பது வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்தது. சமீபத்தில் டெல்லியில் நடந்த அவருடைய ஓவியக் காட்சியில் அவரது புத்தகம் வெளியிடப்பட்டது என்பதைச் செய்தியில் படித்தேன். அதில் கலந்துகொண்ட அவரை 'உன்னுடைய உடல் நலம் சரியில்லை என்றால் அவரைச் சென்று சந்திக்க வேண்டாம்' என்று அவரது மகன் நடேசனிடம் சொன்னான் என்று கிறிஸ்துமஸுக்கு முன்பு சென்னைக்கு வந்த நடேசன் சொன்னான். ஒரு ஓவியக் காட்சியில் லலித்கலா அகாடமியில் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தபோது ஆதிமூலத்துக்கு உடல்நலம் சரியில்லை என்றும் பிறருக்குத் தன்னிடம் உள்ள நோய்க் கிருமிகள் தொற்றிக்கொள்வதைத் தடுக்க அவர் யாரையும் சந்திப்பதில்லை என்றும் அவரோடு தொலைபேசியிலேயே பேசினேன் என்றும் சொன்னார்.

அவர் இறந்த செய்தி ராமகிருஷ்ணனிடமிருந்து வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அ. பத்மநாபனிடமிருந்தும் செய்திவந்தது. அவருக்கு SMSஇல் செய்தி வந்திருக்கிறது என்றும் என்ன நேர்ந்தது என்றும் கேட்டார். ராமகிருஷ்ணனிடமிருந்து தெரிந்துகொண்டவற்றை அவருக்குச் சொன்னேன். நடக்க முடியாமல் இருந்த என் நிலையைச் சாக்காக வைத்துக்கொண்டு என் மனத்தில் அவருடைய உயிரற்ற தோற்றம் பதிவதைத் தடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அவருடைய உடல் ஐஸ்பெட்டியில் கிடத்தப்பட்டிருப்பதை சன் டிவி தனது செய்தியில் காண்பித்தது. இப்போது அந்தத் தோற்றம் என் மனத்தில் இருக்கிறது.

ஓவியக் கிழியின் முன் கையில் தூரிகையுடன் ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு காலை ஸ்டாண்டின் குறுக்குச் சட்டத்தின் மேல் வைத்துக்கொண்டு வரைவதான 1966இன் புகைப்படம் ஒன்று இந்த இரண்டு புத்தகங்களிலும் இருக்கிறது. அந்த வயதிலிருந்த அவருடைய தோற்றத்தை நான் அறிவேன் என்றாலும் மிகவும் பிரபலமான கண்ணாடி அணிந்த மீசை வைத்துக்கொண்ட தலைமயிர் உதிர்ந்து ஞானம் ஏறியதுபோல் தோன்றும் காலர் வைத்த தடித்த கதர்ச் சட்டையை அணிந்துகொண்டிருக்கும் ஆரோக்கியமான அவருடைய தோற்றமே என் மனத்தில் இருந்துகொண்டிருந்தது. கன்னம் ஒட்டியது போன்ற பேச்சில் உதடுகள் ஒருவிதத் தனித்தன்மையோடு அசையும் அந்த மலர்ந்த முகமனிதரைச் சமீப காலங்களில் நான் அதிகம் பார்க்கவில்லை. ஓவியக் காட்சிகளில் சந்திக்கிற நேரம் மிகக் குறைவாகவே இருந்தது.

இப்போது நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் மனத்தில் வடிவங்கள் எப்படி நினைவுக்கு வருகின்றன என்று.

உள்ளடக்கம்