Google   www kalachuvadu.com

கண்ணோட்டம்
ஆதிமூலம் (1938 - 2008)
நவீனத் தமிழ் ஓவியக் கலையின் அடையாளம்
கண்ணன்

பொங்கல் அன்று இரவு சென்னைப் புத்தகச் சந்தையிலிருந்து நண்பர் குவளைக் கண்ணனுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, சாரங்கனிடமிருந்து (கு. அழகிரிசாமியின் மகன்) ஆதிமூலம் அவர்கள் காலமான செய்தி கிடைத்தது. பேரிழப்பை உணர்ந்தேன். காலச்சுவடு பற்றிய என் உணர்வுகளிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத பெயர் அவருடையது. காலச்சுவடின் துவக்கம் - சு.ரா. ஆசிரியராக இருந்த காலகட்டம் - முதலே அதனோடு நெருக்கமாக இணைந்திருந்தவர் ஆதிமூலம் அவர்கள். அதனுடைய எழுத்துருவை உருவாக்கியவர்.

1994ஆம் ஆண்டு காலச்சுவடை மீண்டும் நான் துவக்கியபோது, முதலில் காணச் சென்ற ஆளுமைகளில் ஒருவர் ஆதிமூலம். அக்காலகட்டத்தில் சலபதியுடனும் குவளைக் கண்ணனுடனும் பரிதாபமான நிலையிலிருந்த ஒரு ஜிக்ஷிஷி சாம்ப் வண்டியில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சோழமண்டலத்தை அடுத்து, இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அவருடைய அழகிய வீட்டிற்குப் பலமுறை சென்றிருக்கிறேன்.

என் முதல் கோரிக்கையை ஏற்றுக் காலச்சுவடு சின்னத்தை (றீஷீரீஷீ) வரைந்து கொடுத்தார். முதல் இதழ் அட்டையில் அவரது ஒவியம் இடம்பெற வேண்டும் என்பது என் விருப்பம். அவரே சுதர்சன் கிராபிக்சிற்கும் அனுப்பிவைத்தார். முதல் இரண்டு இதழ்களும் (இதழ் எண் 9 & 10) அவரது ஓவியங்களை அட்டையில் தாங்கிவந்தன.

அவர் கைவசம் இருந்த பல கோட்டோ வியங்களைக் கொடுத்து உதவினார். அவற்றைக் காலச்சுவடில் தொடர்ந்து பயன்படுத்தினோம். பின்னர் சிறுகதைகளுக்கு, நேர்காணல்களுக்கு என எந்தத் தயக்கமுமில்லாமல் கோட்டோ வியங்கள் கேட்டு ஓயாமல் அவரைத் தொந்தரவு செய்திருக்கிறேன். ஒருபோதும் மறுத்ததாக நினைவில் இல்லை. அவரது பங்களிப்பு காலச்சுவடுக்கு உயரிய மதிப்பு ஏற்பட வழிகோலியது. பேரிழப்பை உணர்ந்ததற்கு இந்த நன்றிக்கடன் மட்டுமே காரணம் அல்ல.

அவருடைய கோடுகளிலிருந்து இன்பத்தையும் சக்தியையும் பெற்றிருக்கிறேன். வேறு எந்தக் கலை வெளிப்பாட்டைவிடவும் ஆதிமூலத்தின் கோடுகள் என்னுள் ஆழமாக இறங்கியிருப்பதை அவரது மரணம் துலக்கமாக உணர்த்தியது. இனி அந்தச் சக்தியின் புதிய வடிவங்களைக் காணப்போவதில்லை என்பதே பேரிழப்பை உணரக் காரணமானது.

கடந்த நூற்றாண்டுத் தமிழ் அடையாளத்தின் தவிர்க்க முடியாத ஒரு முகம் ஆதிமூலத்தினுடையது. தமிழ் அடையாளம் பற்றி அவர் பேசியதில்லை. அதை அவர் கோரியதும் இல்லை. இருப்பினும் அவரது கோடுகள் வழி உருவான தமிழ் அடையாளம் அதிர்வுகளோடு உலகெங்கும் பரவியது. நம் கர்வத்தின் பகுதியானது. ஆதிமூலம் தம் கோடுகள் வழி நவீனத் தமிழ்க் கலைக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்தினார். எந்தப் பங்களிப்பும் இன்றி மேடையில் தமிழ் அடையாளத்தைச் சுரண்டும் பண்பாட்டுத் தற்குறிகளைப் புறந்தள்ளிவிட்டு ஆதிமூலம் போன்றவர்களின் மௌனமான பங்களிப்பை நாம் கௌரவிக்கும்போது தமிழ் அடையாளம் உலகம் தழுவியதாக வியாபிக்கும்.

இருப்பினும் சினிமா நடிகர் நடிகைகள் திருமணத்திற்கும் மரணத்திற்கும் விழுந்தடித்துக்கொண்டு ஓடும் தமிழ் அதிகார வர்க்கத்தின் பல பிரதிநிதிகளைத் துக்க தினத்தன்று ஆதிமூலம் வீட்டில் பார்க்க முடியவில்லை. காரணம் நவீனக் கலையைக் கேலிக்குள்ளாக்கிய சமூகம் நம்முடையது. 'இதன் பொருள் என்ன?' என்ற அசட்டுக் கேள்வியுடன் நமது பகுத்தறிவு நவீனக் கலையைக் கொச்சைப்படுத்தியது. அந்த நவீனக் கலையைத் தமிழ்ச் சமூகத்தில் மரியாதைக்குரியதாக மாற்றியதில் ஆதிமூலம் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது என்பது என் எண்ணம்.

மேலும் தமிழ்ச் சிற்றிதழ்களோடு ஆழமான உறவை வளர்த்துக்கொண்டவர் அவர். கசடதபற காலம் முதல் சிற்றிதழ்களில் அவர் பங்களிப்பு தவறாமல் இடம்பெற்றிருக்கிறது. நவீனக் கலைக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை சிற்றிதழ்களே என்பதை மீண்டும் மீண்டும் எல்லா நேர்காணல்களிலும் தெரிவித்து அங்கீகரித்தவர் அவர். எனவே நவீனக் கலைக்கு மட்டுமல்ல; நவீனக் கலை -இலக்கிய இணைப்புக்கும் அவரே அடையாளமாகத் திகழ்ந்தார். அந்த இணைப்பு இன்று பலவீனமடைந்து வருகிறது. அதை வலுப்படுத்துவதே அவருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

n

பத்தாண்டுகளுக்கு மேலேயே இருக்கும். ஒருமுறை குவளைக் கண்ணனுடன் ஆதிமூலம் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அன்று கிருத்திகை. வீட்டில் சாப்பிடச் சொன்னார்கள். விருந்துச் சாப்பாடு. பின்னர் ஜெயகாந்தன் மணிவிழா மலருடன் வீட்டிற்குப் பின்னிருந்த வாழைத் தோட்டத்தில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்துகொண்டோ ம். மணிவிழா மலரில் ஆதிமூலம் வரைந்திருந்த பல ஜெயகாந்தன் படங்களில் எதிலும் உதடுகள் இல்லையே என்று கேட்டார் நண்பர். அவருடைய மீசைதானே முக்கியம் என்றார் ஆதிமூலம். பிறகு சட்டை ஜேப்பிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துச் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே பற்றவைத்தார். அவரது கள்ளத்தனம் என் முகத்தில் சிரிப்பாகப் படர்ந்தது. 'வீட்டில் அனுமதி இல்லை' என்றார். பதப்படுத்தப்பட்ட பெட்டியில் இருந்த அவர் முகத்திலும் அந்தக் குழந்தைத்தனம் மாறாமலேயே இருந்தது. இழப்பின் துக்கத்தைத் தாங்க முடியவில்லை.

உள்ளடக்கம்