Google   www kalachuvadu.com

தலையங்கம்
இந்துத்துவத்தின் புத்துயிர்ப்பு?

மதவெறி என்பது கலவரங்களின்போது மட்டும் வெளிப்படுகிற உணர்வு அல்ல, அது இந்தியச் சமூகத்தின் அடி ஆழம்வரை ஊடுருவிப்போயிருக்கிறது என்பதையே கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரிசாவில் நடந்த தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றன. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததோடு இந்துத்துவம் முடிவுக்கு வந்துவிட்டதென்று நமது 'செக்யூலரிஸ்டுகள்' எண்ணியிருந்தது இப்போது தவறாகிவிட்டது. குஜராத்தில் 'நரவேட்டை' மோடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய அதே நாளில் ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் இந்துத்துவாவினர் கிறித்தவர்கள்மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டனர். மூன்று நாள்கள் தொடர்ந்த கலவரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பதினோருபேர் கொல்லப்பட்டனர்.

தொழுநோயாளிகளுக்குச் சேவைசெய்துகொண்டிருந்த கிரஹாம் ஸ்டெய்ன்சும் அவரது இரு மகன்களும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டபோதே (1999) குஜராத்துக்கு அடுத்ததாக ஒரிசாதான் இந்துத்துவப் பரிசோதனைக்கூடமாக உருவாக்கப்பட்டுவருகிறது என்று செய்திகள் வந்தன. அங்கே உள்ள ஆதிவாசிகளின் மத்தியில் 'சரஸ்வதி சிசு மந்திர்' என்னும் பெயரில் 391 பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். நடத்திவருகிறது. நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் அந்த அமைப்பால் ஒரிசாவில் நடத்தப்படுகின்றன. ஆதிவாசி மக்களை இந்துத்துவ வெறியர்களாக உருமாற்றும் பணியில் ஆர்.எஸ்.எஸ். வெற்றியடைந்துள்ளது.

நந்திகிராம் அளவுக்குக்கூடக் கந்தமால் படுகொலைகள் மீடியாவில் இடம்பெறவில்லையே அது ஏன்? குஜராத்தில் நடந்த படுகொலைகளை தெஹல்கா அம்பலப்படுத்தியபோதும் நமது நாட்டின் மனசாட்சி பதறித்துடித்துவிடவில்லை. கந்தமால் கலவரம் நம்மை அதிரவைக்கப் போதுமானதாக இல்லையா? அல்லது நமது மனம் மரத்துப்போய்விட்டதா?

இந்துத்துவம் என்பது தேர்தலால் முடிவுகட்டப்படுகிற ஒரு விஷயம் அல்ல. தேர்தல் தோல்வி அதை அழித்துவிடுவதில்லைதான். ஆனால், தேர்தல் வெற்றி இந்துத்துவத்தை உசுப்பிவிடும். மத்தியில் ஆட்சி அமைத்ததற்குப் பிறகு எந்தவொரு மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை என்னும் சூழலில் குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி இந்துத்துவத்தின் புத்துயிர்ப்பாகப் பேசப்படுகிறது. தமிழகத்தின் 'அம்மா' நாற்பத்தைந்து விதமான பதார்த்தங்களோடு மோடிக்கு விருந்து படைத்தது இந்த நம்பிக்கையில்தான். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே இந்த நிலைமைக்குப் பொறுப்பு. இடதுசாரிகளும் தங்களது கைகளில் படிந்துள்ள கறையை எளிதில் துடைத்துக்கொண்டுவிட முடியாது. ஆட்சியிலிருப்பவர்களின் மீதான ஆத்திரம், மீண்டும் பா.ஜ.கவிடம் ஆட்சியை ஒப்படைப்பதில் போய் முடிந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. கந்தமால் கலவரமும் அதைத் தொடர்ந்து நிலவும் மவுனமும் அந்த அச்சத்தை அதிகரிக்கச்செய்கின்றன.

உள்ளடக்கம்