Google   www kalachuvadu.com

விருது
நீல. பத்மநாபனுக்கு சாகித்திய அகாடமி விருது
காலம் கடந்த கௌரவம்

திருவனந்தபுரத்தில் வசித்துவரும் நீல. பத்மநாபன் 1960களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையிலும் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளி. தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள், தேரோடும் வீதி உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் பல குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என இவரது இலக்கியப் பங்களிப்பு மிகவும் விஸ்தாரமானது.

மூன்று தலைமுறைகளின் கதையைச் சொல்லும் நாவல் தலைமுறைகள். ஒரு சமூகத்தின் மதிப்பீடுகள் பற்றிய பார்வையில் காலம் ஏற்படுத்தும் மாற்றங்களை யதார்த்தமாகச் சித்தரிக்கும் இந்த நாவல், தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாகக் க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் போன்றோரால் சிறப்பித்துச் சொல்லப்படும் கலைப்படைப்பு. திருவனந்தபுரத்தை மையமாக வைத்து நீல. பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம், மலையாள இலக்கிய விமர்சகர்களால் மிகவும் சிறப்பித்துச் சொல்லப்படும் நாவல்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து மலையாளத்துக்கும் நிறையவே மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார் நீல. பத்மநாபன். அவ்வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ஐயப்ப பணிக்கரின் கவிதைகள் நூல் குறிப்பிடத் தகுந்தது.

சமூகத்தின் பாதிப்புக்குள்ளாகும் தனிமனிதர்களின் மன உணர்வுகள் நீல. பத்மநாபனின் படைப்புகளில் வெகு இயல்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. மலையாள, சமஸ்கிருதச் சொற்கள் கலந்த, அலங்காரமற்ற பேச்சு மொழியிலான இவரது மொழி நடை, சிலபோது விமர்சனத்துக்குள்ளான போதிலும் தமிழில் ஒரு புதிய போக்காக அமைந்தது என்பதையும் மறுக்கவியலாது.

தலைமுறைகள் (1967), பள்ளிகொண்டபுரம் (1970) நாவல்கள் வெளிவந்த காலகட்டத்திலேயே சாகித்திய அகாடமி நீல. பத்மநாபனுக்கு விருது வழங்கிக் கௌரவித்திருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்து - நீண்ட காலம் கடந்து - இப்போது அவரது இலையுதிர் காலம் நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கியுள்ளது. விருது பெறும் நீல. பத்மநாபனுக்குக் காலச்சுவடு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளடக்கம்