|
காலச்சுவடு தலையங்கத்தில் எழுதப்பட்டிருப்பது ஒரு தவறான கருத்தாகும். உண்மைக்கு
மாறான தகவல்கள் நிறைய உள்ளன. நில ஆர்ஜிதத்தைத் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சில
விவசாயிகள் மட்டும் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பை வெளிப்படுத்த மாவோயிஸ்ட்கள்,
எஸ்.யு.சி.கள், திரிணமுல் படைகளின் கொடூரமான வன்முறை பயன்படுத்தப்பட்டது. நந்தி
கிராமில் 1,400 விவசாயக் குடும்பங்கள் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டன.
சொந்த வீடு, நிலம், கால்நடைகளைப் பறிகொடுத்துவிட்டு அகதிகளைப்போல நிவாரண
முகாம்களில் துயரப்பட்டுச் சீரழிந்த 4,000 பேர் இப்போது அரசின் துணையோடு ஊர்
திரும்பியிருக்கிறார்கள்.
நந்திகிராமில் கடந்த ஒன்பது மாதங்களில் 30 மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள்
கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். மொத்த மேற்கு வங்க மாநிலத்திலிருந்து நந்திகிராமைத்
துண்டாடியிருக்கின்றனர், மாவோயிஸ்ட்கள். நந்திகிராமை நோக்கி வருகிற பாதைகள்,
சாலைகள், பாலங்கள் யாவையும் தகர்த்தெறிந்திருக்கிற பயங்கரம்.
மாவோயிஸ்ட்கள், திரிணமுல், எஸ்.யு.சி. போன்ற அமைப்புகளின் வன்முறைச் செயல்களையும்
நந்திகிராமைப் பறித்துக்கொண்ட அராஜகத்தையும் பொய்யென்று சொல்ல முடியுமா?
இப்போது அரசின் துணையோடு 4,000 மக்களை அவர்களது சொந்த வீடுகளில் கொண்டுபோய்ச்
சேர்த்த நிகழ்வை, 'அரசு கிராமத்தைக் கைப்பற்றி விட்டது' என்று கவர்னர், மம்தா
போன்றோர் குறிப்பிட்டிருந்ததிலேயே... பறிமுதல் செய்திருந்ததை மறைமுகமாக
ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பிப்ரவரி மாதம் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலேயே நில
ஆர்ஜித முயற்சியைக் கைவிட்டுவிட்டதாகப் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துவிட்ட
பிறகும் மாவோயிஸ்ட்களும் எஸ்.யு.சி.யினரும் திரிணமுல் காங்கிரஸாரும் அங்கே
முகாமிட்டிருந்தது எதனால்?
நந்திகிராமில் ஆலை தொடங்கவந்ததோர், தனியார் முதலாளிகளல்ல. மத்திய அரசின் 'வேதியல்
தொழில் திரள்' அமைக்கப்பட இருந்ததுவும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக
அப்பணியைத் தொடங்க இருந்ததுவும் நாடறிந்த ரகசியம். இத்தனை கூற்றுகளையும் வசதியான
முறையில் மறைத்துவிட்டு, குழப்பிவிட்டு... சி.பி.எம். முதல்வர் புத்ததேவ்
பட்டாச்சார்யாவையும் நரேந்திர மோடியையும் ஒரேகோட்டில் சமப்படுத்த எப்படி மனம்
வந்தது? எளிய மக்களுக்கு நிலமும் வாழ்வும் தந்து, உள்ளாட்சி மன்றப் பொறுப்புகளில்
தலித்துகளுக்குத் தலைமையும் தந்த புத்ததேவும் மூவாயிரம் முஸ்லிம்களைக்
கொன்றுகுவித்து, மனித மலத்தை மனிதரே அள்ளுவதை நியாயப்படுத்துகிற மோடியும் ஒன்றா?
சமமா? சொல்ல மனம் வருகிறதா?
அதே சமயத்தில் தெஹல்கா இதழ் பற்றி எல்லா ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்த பாதகங்கள்
முழுவதையும் வெளியிட்டிருக்கிற காலச்சுவடு இதழைப் பாராட்டுகிறேன். வகுப்புவாத
வன்முறைக்கெதிரான காலச்சுவடின் இந்தத் துணிச்சல் மிக்க போராட்டப் பதிவை நெஞ்சார
வாழ்த்துகிறேன். இஸ்லாமியர்களை மூன்று நாள்களாகக் கொன்று வேட்டையாடிக் குவிப்பதற்கு
அரசும் நிர்வாகமும் வழக்கறிஞர்களும் மோடியும் கைகோர்த்திருக்கிற நிகழ்வு,
மிகப்பெரிய அதிர்வுகளை நிகழ்த்துகிறது. தெஹல்கா இதழையும் அதன் நிருபர்களையும்
எத்தனை பாராட்டினாலும் தகும். இது ஜனநாயகப் பற்றினால் வந்த துணிச்சல். இந்தப்
போர்க் குணத்தை வாழ்த்துகிறேன்.
'வெந்து தணியும் அவதூறுகள்' என்னும் தலைப்பில் கண்ணனின் கோபாவேசம் ஒரு
நீள்கட்டுரையாக இருக்கிறது. அந்தக் கோபத்துடன் நானும் கைகோர்க்கிறேன். பிறப்பின்
காரணமாகக் குணநலன்கள் அமைவதாகச் சொல்கிற மனுஸ்மிருதியை அப்படியே ஒப்புக்கொள்கிற ஒரு
மனத்தால்தான், பிராமணக் குலத்தில் பிறந்த ஜனநாயகச் சிந்தனையாளர்களைக்
களங்கப்படுத்திப் பேச முடியும். மகாகவி பாரதியையும் வ.ரா.வையும் தமிழ்த் தாத்தா
உ.வே.சாவையும் ஆலயப் பிரவேசம் நடத்திய வைத்தியநாத அய்யரையும் எந்தத் தட்டில்வைத்து
எடை பார்ப்பது? இவர்களெல்லாம் பிராமணக் குலத்தில் பிறந்தவர்கள்தான்.
வர்ணாசிரமத்தைச் சமரசமற்று எதிர்த்துப் போராடியதைக் குறைத்து மதிப்பிட்டுவிட
முடியுமா?
தலித் பெண்ணைத் திருமணஞ்செய்த பி. ராமமூர்த்தி, தமது எளிய திருமண விழாவுக்குத்
தந்தை ஈ.வே.ரா. பெரியார்தான் தலைமை தாங்க வேண்டும் எனப் பிடிவாதம்செய்ததை எப்படிப்
புரிந்துகொள்வது?
பிராமண எதிர்ப்புப் போராட்டத்தின் தீவிரம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகச்
சமதர்ம ஆதரவுப் போக்கைச் சற்றே மட்டுப்படுத்திக்கொண்ட தந்தை ஈ.வே.ரா பெரியார்,
ஆனந்த விகடனின் நிறுவனர் திரு. எஸ். எஸ். வாசன்மீது அளப்பரிய பாசமும் நட்பும்
தோழமையும் பாராட்டியதை எவ்வாறு புரிந்துகொள்வது? பி.எஸ்.ஆர். என்கிற ஆந்திரப்
பிராமணரை ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தலித் மக்கள் அனைவரும் "தங்களுக்கு விடுதலை
பெற்றுத்தந்த வீரத் தலைவர்" என்று இன்றளவும் நெஞ்சாரக் கொண்டாடிக்கொண்டிருப்பதை
எவ்வாறு புரிந்துகொள்வது?
ஞாநியை விமர்சிக்கிறபோது விமர்சன எல்லையில் நின்று கொள்கைபூர்வமாக விமர்சிக்க
வேண்டும். பிறந்த குலத்தைத் தொட்டு விமர்சிப்பது, அது ஒருவகையான பாசிச
மனோபாவந்தான். கொள்கை என்பது ஞாநியின் அறிவுபூர்வத் தேர்வு. 'பிறந்த குலம்' என்பது
அவரது தேர்வல்ல என்கிற எளிய உண்மையை உணர வேண்டும். கண்ணனின் கட்டுரையில்
வெளிப்படுகிற ஜனநாக உணர்வை நெஞ்சார உடன்பட்டுப் பாராட்டுகிறேன்.
மேலாண்மை. பொன்னுச்சாமி
விருதுநகர்
டிசம்பர் 2007 தலையங்கம் படித்தேன். மேற்கு வங்க இடதுசாரி அரசைத் திட்டமிட்டுக்
களங்கப்படுத்த ஊடகங்கள், எதிர் அரசியல் கட்சிகள், மதவெறியர்கள், நக்ஸலைட்டுகள்,
மாவோயிஸ்ட்டுகள், மம்தா பானர்ஜி அடங்கிய மகா ஜாட் கூட்டணியில் காலச்சுவடும் தன்னை
இணைத்துக்கொண்டது காலத்தின் கோலம். தலையங்கத்தின் தலைப்பே மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல அமைந்துள்ளது. நந்திகிராமில் நடந்த
நிகழ்ச்சிகளை நடுநிலைக் கண்ணோட்டத்திலிருந்து விலகிப் பார்த்ததன் விளைவே பொய்களை
அழுத்தமாகச் சொல்லியிருக்கும் "தலையங்கம்".
நந்திகிராமில் நடந்த வன்முறையில் 200 பேரைக் காணவில்லை என்று மம்தா பானர்ஜி
அதிரடியாக அறிக்கைவிட்டார். மார்ச் 14 துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக் கணக்கான மக்கள்
கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு பட்டியல் கொடுத்தார். விசாரித்துப்
பார்த்ததில் அவர் பட்டியலில் கொடுத்துள்ள அனைவரும் உயிரோடு இருப்பது தெரியவந்தது.
இப்படிப்பட்ட பொய்யைச் சொல்லி, 30 ஆண்டுகள் ஆளும் இடதுசாரி ஆட்சியை அகற்ற வேண்டும்
என்னும் வெறித்தனத்துக்கு வக்காலத்து வாங்குகின்றன ஊடகங்கள். அதில் காலச்சுவடு
உண்மையை ஆராய வேண்டாமா? மம்தாவும் மேதாபட்கரும் தாக்கப்படாமலே தாக்கப்பட்டார்கள்
எனச் சொல்வது சரியல்ல. "கார்த் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலம் நிச்சயமாக
டாடாவுக்குக் கிடைத்துவிடும்", இது தலையங்கத்தில் உள்ள வரி. மக்கள் ஆதரவுடன்
திருப்தியான நஷ்ட ஈட்டோ டு வெற்றிகரமாக, கார் தயாரிக்க டாடாவுக்கு வழங்கியது
சிங்கூரில். ஆனால், நந்திகிராமில் முன்மொழிந்த திட்டம் மத்திய அரசின் சிறப்புப்
பொருளாதார மண்டலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரசாயனத் தொழிற்சாலை அதுவும்
விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பு வந்தவுடன் 9 பிப்ரவரி 2007இல் லட்சம் பேர்
கலந்துகொண்ட கூட்டத்தில் புத்ததேவ் நந்திகிராம் திட்டத்தை மக்கள் ஏற்காத காரணத்தால்
கைவிடப்படுகிறது, விவசாய நிலம் கையகப்படுத்தமாட்டாது என்று அறிவித்துங்கூட
மாவோயிஸ்ட்டுகளும் திரிணமுல் காங்கிரஸ் நக்ஸலைட் கூட்டணி மாநில நிர்வாகத்திலிருந்து
தீவுபோலப் பிரித்துவைத்து, 3,500 இடதுசாரி ஆதரவாளர்களை ஊரைவிட்டே விரட்டியடித்து,
உடமைகளைத் தீவைத்து வீடுகளைக் கொளுத்திவிட்டு 11 மாதங்களாக அகதிகளாக வாழ்ந்த
இடதுசாரி ஆதரவாளர்களைப் பற்றி மேதாபட்கரோ ஊடகங்களோ துப்பறியும் பத்திரிகைகளோ வசமாக
மறைத்து விட்டு, மம்தா பானர்ஜி பொய் சொல்வதை அப்படியே அள்ளிப்பிடிக்கும்
ஊடகங்களின், அறிவுஜீவிகளின் மாய்மாலம் தெரிகிறது அல்லவா? இதைக் காலச்சுவடு
கவனத்தில் எடுப்பது நல்லது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுக்கின்ற நக்ஸலைட்டுகளுக்கும்
மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை மதித்துத் தேர்தலில் நின்று வெற்றிபெற
முடியாமல் தத்தளிக்கும் திரிணமுல் மம்தா மற்றும் எதிர்க்கட்சிக்காரர்களுக்கு இருந்த
வெறித்தனமான கூட்டைக் காலச்சுவடு சரி எனச் சொல்கிறதா?
க. கணேசன்
கொட்டாரம்.
கணினித் துறையில் பணியாற்றும் பெண்/ஆண், இரண்டு லட்சம் மூன்று லட்சம் வாங்குகின்ற
இன்றைய நிலையை யதார்த்தம் என்கிறார் கட்டுரையாளர். அது எதார்த்தமல்ல. அத்துறையின்
மீது இன்றைய உலகம் கொண்டுள்ள மோகம். அந்த மோகத்திற்குப் போடுகின்ற தீனிதான் அந்த
ஊதியங்கள். இன்றைய கால்சென்டர்,
browsing centre போன்றவை வெறும்
தகவல் பறிமாற்றத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அங்கு உடல் ஆசைகளும்
பறிமாறப்படுகின்றன. அங்கு நிகழும் உரசல்களுக்கும் தீண்டல்களுக்கும் அவர்கள் அணியும்
ஆடைகளுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதை இயக்குநர் சுட்டிக்காட்டுவதைக்
கட்டுரையாளர் காணத் தவறியது ஏன்?
எம்.ஏ.வுக்குப் பி.எட் என்ற வழியைக் காட்டுகின்றார். பி.எட் என்ற ஒன்று இல்லாமல்
முதுநிலைப் படிப்பு என்னும் நிலையில் தமிழ் கற்ற ஒருவனுக்கு மற்ற துறை முதுநிலைப்
படிப்புகளுடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்பு என்பது மிகக் குறைவு. அது மட்டுமல்லாமல்
இழிவும் ஏளனப் பார்வைகளும் ஏராளம். பி.எட் இல்லாமல் மற்ற படிப்புகளைப் போல்
தமிழுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க இயலுமா? தமிழில் எம்.ஏ.வுடன் எம்.ஃபில்
படிப்பும் படித்துவிட்டு ஆயிரத்து ஐந்நூறும் இரண்டாயிரமும் ஊதியம் வாங்கும் சோக
நிலையைப் பார்க்கலாம்.
சு. ஆனந்தவேல்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் |