Google   www kalachuvadu.com

 

கடிதங்கள்

மோடியும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் மிகவும் தவறான பாதையில் பயணிப்பது கவலை தரத்தக்கது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைத் தந்த மக்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை நடந்து முடிந்துள்ள நிகழ்வுகளில் இருந்து அறிய முடிகிறது. காலச்சுவடுமீது கல் எறிபவர்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் இனத்தைச் சார்ந்தவர்கள். கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டிய அபலைகள்.

A.R. வலம்புரி நாகராஜன்
ஈரோடு.

இடதுசாரிக் கட்சி ஆளுகின்ற மே.வ மாநிலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், உயிரிழப்புகள், அதற்குக் காரணமாக இருந்த சமூகவிரோதச் சக்திகள் குறித்த பல தகவல்களைத் தலையங்கம் தெரிவிக்கின்றது. பொதுவுடைமைக் கட்சி ஒரு மாநிலத்தில் பன்னெடுங்காலமாக ஆட்சி நடத்திவருகின்றது என்பது இடதுசாரி அனுதாபிகளுக்குப் பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிப்பதாக இருந்தது என்பது பழங்கனவினைப் போல் ஆகிவிடுமோ என்னும் ஏக்கத்தினை ஏற்படுத்திவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பொருள் திரிந்துவிட்ட நிலைமைக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வதே சரி. மேலும், மேதாபட்கர் போன்ற சமூக ஆர்வலர்களும் அறிவுசார் துறையினரும் நந்திகிராமிற்குள் அனுமதிக்கப்படாததன் காரணம் வெறும் சட்டம்- ஒழுங்கு எனக் கூறிவிட முடியாது.

மூர்க்கம் நிறைந்த காமப் பெருமூச்சினை இரவுப் பெருவெளியில் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்புறச் செதுக்கியிருக்கிறார் தன் சிறுகதையில்.

கே. ரவிச்சந்திரன்
திருச்சி-1.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் குண்டர்படையால் விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பதையும் விவசாயிகள் அவர்களது நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதையும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதையும் தங்கள் தலையங்கத்தில் படித்தபோது மனம் பதைபதைத்தது. மற்ற பத்திரிகைகளோ ஊடகங்களோ தெரியப்படுத்தாததைத் தெரியப்படுத்தினீர்கள். விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிமுதல்செய்து பெருமுதலாளியான டாடாவிற்குத் தாரை வார்க்கும் செயலுக்குக் கம்யூனிஸ்டுகளும் விலைபோய்விட்டார்கள் என்றே தெரிகிறது. தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

ஈ. சிதம்பரம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்.

சில விஷயங்களை உடைத்துப் பேசிவிடலாம் எனத் தோன்றுகிறது எனத் தொடங்கித் தமிழ் அறிவுஜீவிகள் பலரின் பிஹ்ஜீஷீநீக்ஷீவீsஹ்யைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் கண்ணன். சிலை வைப்பதும் வழிபடுவதும் தமிழர்க்கே உரிய தனிக்குணம்! தான் வழிபடும் தலைவர் விமர்சனத்திற்குள்ளாகும்போது, தலைகால் தெரியாமல் ஆடுவதும் வன்முறையில் இறங்குவதும் அன்றாட நிகழ்வுகள்! கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிதர்சனமாக உள்ளன.

பழமன்,
கோவை.

கண்ணனின் கட்டுரை யதார்த்தமானது. எதையும் சாதி அடிப்படையில் பார்ப்பது இன்றைய இலக்கிய உலகின் சாபக்கேடாகிவிட்டது. கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அ. மார்க்ஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தன் அறிவு மேதாவித்தனத்தை விமர்சனத்தின் மூலம் விளக்கி இலக்கிய உலகிற்குச் சேவை செய்வதாகக் கருதுகிறார். இதைவிடக் கொடுமை பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவன் தான் ஒருவனே என்று மார்த்தட்டிக்கொள்கிறார். இன்றைய உலகில் கருத்துச் சுதந்திரம் இயல்பான ஒன்றாகிவிட்டது. கருத்துச் சுதந்திரமற்ற காலத்தில் புரட்சிக்கு வித்திட்ட பாரதியும் அம்பேத்கரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர்களா? இல்லை மார்க்ஸ் துணிந்தவரா? இந்தக் கட்டுரையில் என்னைப் போன்றவர்களின் உள்ளக் குமுறல்கள் எழுத்தாகியுள்ளன. இலக்கியச் சூழலில் காலச்சுவடின் தாக்கத்தை அ. மார்க்ஸால் தகர்க்க முடியாது.

மீ. அஸ்வினி கிருத்திகா
திருநெல்வேலி.

"வெந்து தணியும் அவதூறுகள்" கட்டுரை படித்தேன். ஆனந்த விகடனில் ஞாநி எழுதிவரும் ஓ.. பக்கங்களுக்காக அவர் தாக்கப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் அதே பகுதியில் அவர் கண்ணகி சிலையைக் கரடிபொம்மைக்கு ஒப்பிட்டு எழுதியதால், கண்ணகி சிலைத் திறப்பு விழா நடந்த அதே தினத்தன்று, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆனந்த விகடன் அலுவலகத்தின் முன்பு ஒரு ரௌடிக் கும்பல் கூச்சலிட்டுச் சென்றதோடு, ஆனந்த விகடன் பிரதிகளையும் போட்டு எரித்துவிட்டுச் சென்றது. "சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் கட்டுரையை முதல்வர் விமர்சித்துப் பேசிய பின்பே, இந்நிகழ்வு நடைபெற்றது." ஞாநி ஒரு காலத்தில் கலைஞரின் அணுக்கத் தொண்டராக, முரசொலியில் வேலைபார்த்தவர். அப்போதெல்லாம் அவர் பிராமணர் என்பது இவர்களுக்குத் தெரியாமல் போயிற்று.

கலைஞரை ஞாநி ஓய்வெடுக்கச் சொல்லி எழுதியது அவரவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளக் கூடியது. அவர் ஒன்றும் பெரிய பாதகத்தைச் செய்துவிடவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அதில் உள்நோக்கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றாகவே அது எனக்குத் தோன்றுகிறது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒளிவட்டத்தில் கலைஞரையும் அவர் அரசையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளைச் சில "அறிவுஜீவி(!)" வட்டத்தினர் சமீபகாலமாக எடுத்துவருகிறார்கள். இதில் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் தம்மை அறியாமலே பங்குகொள்கின்றனர். முழு அடைப்பு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகளை எதிர்த்து இவர்கள் கருத்துகளைச் சொன்னதுங்கூட இதில் ஒரு பகுதியே. கலைஞருக்குப் பிறகான கட்சியின் எதிர்கால நிலை என்னவாகும் என்னும் பதற்றமே ஞாநியின் மீதான இவர்களின் விமர்சனத்திற்கு அடிப்படையாகும். தனிநபரை நம்பி நிற்கும் எந்தக் கட்சிக்கும் அமைப்பிற்கும் இது போன்ற கவலைகள் ஒரு காலகட்டத்தில் வந்துதான் தீரும். அது இயல்பானது. வயதின் காரணமாக ஜோதிபாசு தானாகவே ஓய்வெடுக்கவில்லையா? ஹர்கிஷன் சுர்ஜித் ஓய்வெடுக்கவில்லையா? அங்கெல்லாம் இதை யார் தவறாகக் கருதினார்கள்? ஆனால், இங்கு கருணாநிதி என்னும் தனிநபர் ஒரு நெல்லிக்காய் மூட்டையைக் கவிழாமல் சிக்கென இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவர் பிடி தளரும்போது உருண்டோ டும் நெல்லிக்காய்களை நினைத்து இங்கு சிலர் இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் கவலை புரிந்துகொள்ளக் கூடியதே.

'தீம்புனல்' கூட்டத்தில் கவிஞர் சல்மாவின் ஒருமைப் பேச்சு மிகவும் கவலைக் குரியது. இத்தகைய பேச்சால், இனி இவர் எழுதும் கவிதையில் வாசகர்களுக்கு என்ன மரியாதை ஏற்படும். நமது துரதிஷ்டம் தமிழகத்தின் அறியப்பட்ட கவிஞர்கள் எல்லாம் (அப்துல்ரகுமான், வைரமுத்து, வாலி, சல்மா, தமிழச்சி, நா. காமராசன், இளந்தேவன்) ஏதோ ஒரு கட்சிக்கோ அல்லது தலைமைக்கோ நெருக்கமாக இருக்கிறார்கள். அரசியலின் கவிச்சி வாடை இல்லாமல் இவர்களால் காலந்தள்ள முடியாமல் போனது தமிழ் இலக்கிய உலகம் செய்த துரதிஷ்டந்தான்!

இவர்களை, இவர்களின் செயல்பாடுகளை ஆதரித்து எழுதினால் சாவி, சின்னக் குத்தூசி தியாகராசன் போன்றோர் அவர்களின் பிராமணத்தன்மையையும் மீறி நல்லவர்களே, விமர்சித்து எழுதினால் பார்ப்பனர் அல்லாதவர்கள்கூடப் பார்ப்பனப் பாதம் தாங்கிகளே! இதுதான் இவர்களின் விமர்சன நெறிமுறை அளவுகோல். 'குல்லுகபட்டர்' ராஜாஜி "மூதறிஞர்" ஆனது இவ்வாறுதான்.

திராவிட இயக்கத்தின் என்ன மிச்சசொச்சங்களைத் திமுகவிடம் அ. மார்க்ஸ் கண்டார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். வெற்றுச் சவடால், மேடைப் பேச்சு தவிர, அவரால் வேறு எதையும் உருப்படியாகக் காண முடியாது. ராஜமார்த்தாண்டன் கட்டுரையின் இறுதிப் பத்தி முத்தாய்ப்பான பதிவு. அடுத்து வாசகர் ஃபிர்தௌவ்ஸ் ராஜகுமாரன் (கோவை) அவர்களின் கடிதம் குறித்து,

ரசூலின் கட்டுரைக்கு மறுப்பாக இஸ்லாமிய இதழ்கள், மார்க்க அறிஞர்கள் யாரும் மறுப்புரை எழுதவில்லை என்பது முழு உண்மை அல்ல. தமிழ்நாடு தவ்ஹீக் ஜமாத்தின் (ஜிழிஜியி) வார இதழ் "உணர்வில்" இதற்கான மறுப்புரை தொடர்ந்து வெளிவந்தது. ஆனால், அது போதிய வாசக கவனம் பெறவில்லை. ரசூலின் கட்டுரைக்கான பதிலை அந்தக் கட்டுரை எந்த இதழில் (உயிர்மை) வெளிவந்ததோ அந்த இதழுக்கே அனுப்பிவைப்பதுதான் தர்மமாகும். விமர்சிப்பவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதை எதிர்கொள்பவருக்குக் கொடுப்பதில்லை. மற்றபடி ராஜகுமாரனின் கூற்றில் உள்ள சில வேதனைகள் நியாயமானவையே.

பொதுவாகவே, தமிழக முஸ்லிம் மக்களிடையே இதழ் பரிச்சயமும் இலக்கிய உணர்வலைகளும் மிகவும் (சராசரிக்கும் கீழே) குறைவாகத்தான் காணப்படுகின்றன. தமிழ் முஸ்லிம் சமுதாயம் ஒரு வியாபாரச் சமுதாயமாகவும் பெரும்பான்மையோர் வாழ்வின் அடிமட்டத்தில் இருப்பதாலும் இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லையோ எனத் தோன்றுகிறது. வெளிவரும் ஒரு சில இஸ்லாமிய இதழ்களுங்கூட, மார்க்க சம்பந்தமான கட்டுரைகளையே வெளியிடுகின்றன. இலக்கிய ஆர்வத்தை அவை தூண்டுவதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பவர்களைக் கையாலாகாதவர்களாக, சோம்பேறியாகப் பார்க்கும் ஒரு போக்கும் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்.

காலச்சுவடு இதழ் 96இல் வெளிவந்த குஜராத் 2002; சுடும் உண்மை குறித்து,

துர்க்கனவுகளின் விளைநிலமாக நமது தேசம் மாறிக்கொண்டிருக்கிறது. அதிகாரம், ஆட்சியாளர்களின் மூலம் தனது இச்சையை வெகு சாமர்த்தியமாக நிறைவேற்றிக்கொள்கிறது. எதிரிகள் அல்லது எதிரிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களின் உடல்களை அதிகாரம் தனது நீண்ட வாளால் வெட்டிச் சாய்த்திருப்பதை வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்களினூடாக நாம் அறிவோம். ஹிட்லரின் அழித் தொழிப்பு வதை முகாம்களும் ஸ்டாலின் காலத்துச் சைபீரியச் சிறைக் கொடுமைகளும் நம் நினைவில் அழியாது துன்புறுத்துபவை. இவர்களது வஞ்சனைகளால் வீழ்த்தப்பட்டவர்களில் மிகப் பலரும் எளிய கனவுகள் கொண்ட சாமான்யர்கள். மறுக்கப்பட்ட நீதிக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பும் ஓலங்களை, அரசு, வாக்கு வங்கி சார்ந்த அரசியல் ஆதாயங்களின் கண்கொண்டே பார்க்கும் பழக்கம் கொண்டது. இதழியலாளர்களுக்கு வேண்டிய முக்கியமான குணம் அச்சமின்மை. மேலும் அது பாதிப்பை உருவாக்கியவர்களின் குரலைப் பதிவுசெய்திருப்பதன் மூலம் தேசத்தின் அடிப்படைவாதிகளை நேருக்கு நேராக அடையாளங்காட்டியிருக்கிறது. மீண்டும் அம்மக்களிடையே வாக்குக் கேட்க மோடி புறப்பட்டது, அவர்களை இழிவுபடுத்துவதன்றி வேறல்ல. குண்டுகளால் மக்களை நிர்மூலமாக்கி அதே மக்களுக்கு விமானத்திலிருந்து சோற்றுப் பொட்டலங்களை எறிவதற்கு ஒப்பானது இது.

கே.என். செந்தில்
அவிநாசி.

டிசம்பர் இதழில் வெளிவந்த ஒவ்வொரு கட்டுரையும் பொருள் பொதிந்தவை. எம்மனத்தைப் பாதித்தது குஜராத்தும் உலகத் தற்கொலைப் படைகளின் நியாயமான செயல்பாடுகளும்.

உலக நாடுகளுக்கெல்லாம் சமாதானமாக விளங்கும் நம் பாரதத் திருநாட்டில் ஒரு மதத்திற்கு எதிராக இவ்வளவு கொடூரமான நிகழ்வுகளை நடத்தியுள்ளது நமக்கெல்லாம் தலைகுனிவையே தந்துள்ளது. எந்த மதமும் தவறு செய்தவனுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறவில்லை. மன்னித்து விட்டுவிட வேண்டுமென்றுதான் கூறுகிறது. யாரோ சிலர் செய்த வன்மத்தினால், அப்பாவி மக்களாகிய இஸ்லாமியர்களை வதைப்பது பாவத்திலும் பாவம். குஜராத் சம்பவம் ஒரு கறை படிந்த நிகழ்வு. இதனைப் போக்க இந்தியர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

சச்சிதானந்தத்தின், உலகப் பார்வையில் தற்கொலைப் போராளிகள் என்னும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் ஒட்டு மொத்த உலக மதத்தின் கருத்துகளையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தது போன்று உள்ளன. அது இஸ்லாம், கிறித்தவம், இந்து என எம்மதமாக இருந்தாலும் சரி, மொத்தத்தில் உலகம் உய்வதற்கான வழியினை, நெறியினைத் தேடி மீண்டும் ஒரு மத நூல் தோன்ற வேண்டும். அது இன்றைய மக்களின் மனநிலை, மற்றும் பொருளாதார நிலையை மனத்தில்கொண்டு எழுதப்பட வேண்டும் என்னும் கருத்தை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார் என்பது புலனாகிறது.

துரை. மணிகண்டன்
கச்சமங்கலம்.

கண்ணன் தன் "வெந்து தணியும் அவதூறுகள்" கட்டுரையில் ஞாநியை நான் ஒருமையில் திட்டித் தீர்த்ததாக எழுதியிருக்கிறார். வயதில் மூத்த ஒரு தலைவரின் முதுமையைப் பழித்து ஞாநி எழுதிய அநாகரிகத்தைக் கண்டித்துப் பேசும்போது உங்களுக்கு எதிர்காலத்தில் மரியாதை வேண்டுமென்று நினைத்தால் இனி இப்படி எழுதக் கூடாது என்று சொல்லுமிடத்தில் உங்களுக்கு என்னும் வார்த்தை உனக்கு என்று ஒரே ஒருமுறை வெளிப்பட்டது. ஒரு மூத்த பத்திரிகையாளரை மதிப்புக்குறைவாகப் பேசும் எண்ணத்தில் வெளிப்படவில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் வந்தது.

வலைப்பதிவில் இந்த உரையை நீங்கள் சரியாகக் கவனித்திருந்தால் மூன்றாம் தர வார்த்தைகளைப் பேசியதாக மோசமான பிம்பத்தை வாசகர்கள் மத்தியில் எனக்கு ஏற்படுத்தியிருக்கமாட்டீர்கள். இந்தப் பதிவு எனக்கு வருத்தமளிக்கிறது.

கவிஞர் சல்மா
சென்னை.

உள்ளடக்கம்

 

 

Google