Google   www kalachuvadu.com

 

கட்டுரை
அம்பேத்கர் பார்வையில் காந்தியம்
ஏ.கே. அப்துல் மஜீத்
தமிழில்: சுகுமாரன்

" 'காந்தியம் என்று ஒன்றில்லை' எனக் காந்திஜி அறிவித்திருந்தபோதும், அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின; இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது" என்ற குறிப்புரையுடன்தான் காந்தியம் பற்றிய தன்னுடைய விவாதத்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொடங்குகிறார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அடித்தள மக்கள் பிரிவைக் காந்தியம் எப்படிப் பாதிக்கிறது என்பதையே அம்பேத்கர் முதன்மையாக ஆராய்கிறார். தீண்டத்தகாதவரைப் பொறுத்த வரை, பொதுவாகக் கருதப்படுவது போலக் காந்தியம் வரமல்ல; அது ஒரு பொறி என்னும் முடிவுக்கு வந்து சேருகிறார். அதற்கான நியாயங்களையும் அவர் ஒவ்வொன்றாக முன் வைக்கிறார்.

சமூகத்தின் புறம்போக்கு வெளியில் வீசியெறியப்பட்ட தீண்டத் தகாதவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காந்தி எவ்வாறு தோல்வியடைந்தார் என்பதை விளங்கிக்கொள்ள காந்தியத்தின் அடிப்படை உணர்வுகளை ஆராய வேண்டும். தன்னிறைவு பெற்ற கிராமங்களை நோக்கித் திரும்பச் செல்வதே காந்தியத்தின் அடையாளம் என்னும் பார்வை எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று. "என்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல; பிராந்தியவாதத்தைவிடவும் வலுவானது அதன் உள்ளடக்கம். பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே. அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு. அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும்" என்று எழுதுகிறார் அம்பேத்கர்.

இந்து மதத்தில் நிலவும் சாதிய மரபைப் பற்றிய காந்தியின் கண்ணோட்டமே, சமூகப் பிரச்சினைகளில் அவருடைய நிலைபாட்டை வெளிப்படுத்தவும் உதவுகிறது. நவஜீவன் என்னும் குஜராத்தி மொழி வெளியீட்டில் காந்தி எழுதிய நீண்ட கட்டுரை சாதியக் கட்டுமானங்களில் அவருக்குள்ள வலுவான நம்பிக்கையைப் பகிரங்கப்படுத்துகிறது. சுயராஜ்ஜியத்தின் விதைகள் சாதி அடிப்படையில் உருவாக வேண்டும் எனக் காந்தி அதில் குறிப்பிடுகிறார். சாதிக் கட்டுமானத்தை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கல்வியையும் அரசியல் பாதுகாப்பையும் அடைய முடியும் என்ற கண்ணோட்டத்தையும் காந்தி முன்வைக்கிறார். சாதியை ஒரு கட்டுக்கோப்பாகக் காணும் அவர் யாரும் சாதியின் எல்லைகளை மீறக் கூடாது என்றும் விரும்புகிறார். 'சமூகத்துக்கு இயற்கை வழங்கிய முறையே சாதியமைப்பு' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சாதி அமைப்புப் பற்றிக் காந்தி பல சந்தர்ப்பங்களில் நடத்திய அறிவிப்புகளை வரிசைப்படுத்தி அம்பேத்கர் விளக்குவது இந்தியாவில் நிலவும் சாதியமைப்பிலிருந்து காந்தியம் யாரையும் விடுதலை செய்யாது என்பதைத்தான்.

அம்பேத்கரின் விமர்சனத்துக்கு இலக்காகும் இரண்டாம் பொருள் காந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம். மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றங்களுடனும் எந்திர நாகரிகத்துடனும் காந்திக்கு இருந்த எதிர்ப்புணர்வு பிரசித்தமானது. நவீன எந்திர நாகரிகம் மனிதனை உழைப்பிலிருந்து விடுவிக்கிறது. அதன் மூலம் அவன் சிந்திக்கவும் செயல்படவும் வாய்ப்புகளை அளிக்கிறது என்பது அம்பேத்கரின் கண்ணோட்டம். தொழில் நாகரிகத்தை எதிர்ப்பதன் மூலம் மக்கள் சுதந்திரம் பெறும் வாய்ப்பைக் காந்தி மறுக்கிறார் என்பது அம்பேத்கரின் மதிப்பீடு.

தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உருவாகும் பிரச்சினைகளில் காந்தி முற்றாக முதலாளிகளின் தரப்பிலேயே இருக்கிறார் என்பது காந்தியத்துக்கு எதிராக அம்பேத்கர் முன்வைக்கும் மூன்றாம் விமர்சனம். பம்பாயில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் வன்முறையின் மொழியில் பேசுவது உசிதமான வழியல்ல என்றே காந்தி குறிப்பிட்டார். "ஐரோப்பாவைப் பாருங்கள், அங்குள்ள யாரும் திருப்தியாக இல்லை. தொழிலாளிகள் முதலாளிகளை நம்புவதில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகள் மீது நம்பிக்கையில்லை" எனச் சுட்டிக்காட்டிவிட்டு "தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இல்லாமல் போனால் முதலாளிகள் புத்தியையும் தந்திரத்தையும் பயன்படுத்துவார்கள்" என்றும் குறிப்பிடுகிறார். இது தொடர்பான காந்தியின் சொற்பொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் இவ்வாறு எழுதுகிறார்:

"சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும், பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது. சொத்துகளைத் துறக்க வேண்டாம். தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும். அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை"

சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை ரூசோவும் ரச்கினும் டால்ஸ்டாயும் சொன்னதைத்தான் காந்தி திரும்பச் சொல்கிறார் என்பது அம்பேத்கரின் கருத்து. காந்தியத்தை உருவாக்கியது பழமையான கருத்துகள்தாம். மீண்டும் விலங்கு நிலை வாழ்க்கைக்குக் கொண்டு செல்பவை அவை. 'எளிமை' மட்டுமே அவற்றின் சிறப்பியல்பு. அது போன்ற கருத்துகளை எல்லாக் காலத்திலும் சில சாமியார்கள் சொல்லிக்கொண்டு திரிவார்கள் என்றும் அம்பேத்கர் கேலி செய்கிறார். முன்னேற்றத்துக்கான பாதையைத் தேடும் நடைமுறை உணர்வுள்ள சமூகம் அவற்றை எதிர்த்துப் புறக்கணிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். "எதிர்பார்க்க எதுவும் இல்லாத மாயையே காந்தியப் பொருளாதாரம்" என்று முடிவும் செய்கிறார்.

சாதாரணனுக்குக் காந்தியம் எந்தவித நம்பிக்கையையும் வழங்குவதில்லை என்று உறுதியாகச் சொல்லும் அம்பேத்கர் அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுவது, கலாச்சாரத்தை உயர் வருணத்தவருக்கு மட்டுமே உரியது என்று அது நிலைப்படுத்துகிறது என்பதைத்தான். ஓய்வும் கலாச்சாரமும் எல்லாக் குடி மக்களுக்கும் உரியது என்னும் ஜனநாயக விழுமியத்தைக் காந்தி ஏற்பதில்லை. உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விலங்குக்கொப்பான வாழ் நிலையையே அது சாதாரண மனிதனுக்கு அளிக்கிறது. பெரும்பான்மை மக்களைப் பொருத்தவரை 'இயற்கையை நோக்கித் திரும்புதல் என்னும் காந்திய அறைகூவல் அவர்களை வறுமையையும் அறியாமையையும் நோக்கியே கொண்டு செல்லும். வருண அடிப்படையில் வேர்கொண்ட காந்தியம் சாதாரண மனிதர்களிடையே சிக்கலான அடிமை உணர்வையே வளர்க்கும். அதிகாரமும் செல்வமும் மமதையும் போலிப் பெருமைகளும் ஒரு புறம் குவியும்போது, பாதுகாப்பின்மையும் பட்டினியும் வீழ்ச்சியும் இழிவுகளும் மற்றொரு பக்கம் பெருகுகின்றன. இப்படிப்பட்ட ஒரு அமைப்பையே காந்தியம் நம்புகிறது.

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் காந்தி முன்வைக்கும் தர்மகர்த்தா வாழ்க்கைமுறை நடப்பு எதார்த்தங்களுடன் தொடர்பில்லாத அபத்தம் என்பது அம்பேத்கருடைய பார்வை. சாதியை அல்லது வருணாசிரம தருமத்தைச் சமுதாய இலட்சியமாக ஏற்கும் காந்தியம் ஜனநாயகத்துக்கு எதிரானது. வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளிடம் நிபந்தனையற்றுச் சரணடைந்த வரலாற்றைக் கொண்டவர்கள் உயர் சாதி இந்துக்கள். அவர்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் உருவானதில்லை. அடிமைத்தனத்தை அவர்கள் ஆறுதலாகக் கண்டார்கள். சாதியமைப்புத்தான் இந்துச் சமூகத்தை இது போன்ற கையறுநிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. ராணுவ ஆற்றலை வளர்க்கச் சாதியமைப்பைப் பயன்படுத்தலாம் என்ற காந்தியின் வாதத்தை அம்பேத்கர் கேலி செய்கிறார். வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி விருந்தைக் கூட்டு மலங்கழிப்பு என்று உவமித்த காந்தியின் வாதம் பைத்தியக்காரத்தனம் என்று கண்டிக்கிறார். சாதியப் பிரிவினை இயற்கையானது என்னும் வாதத்தை மிக அபாயகரமானதாகவும் அம்பேத்கர் கருதுகிறார். வரலாற்று அடிப்படையிலும் இந்த வாதம் முட்டாள்தனமானது என்று மனுதர்மத்தை மேற்கோள்காட்டி நிறுவுகிறார்.

பின்னர் காந்தி சாதியப் பிரிவினையிலிருந்து வருணங்களுக்கு மாறுகிறார். ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகளில் வித்தியாசம் இல்லை என்பது அம்பேத்கரின் தரப்பு. 'வருண'த்திலிருந்து உருவானதுதான் 'சாதி'. வருணாசிரம நிலைபாடுகள்மீது பவுத்தர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லச் சனாதனிகளால் முடியவில்லை. பகவத் கீதை உயர்த்திக்காட்டும் வருணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக்கொண்டதல்ல; ஒருவன் தன் தகப்பனின் தொழிலையே செய்ய வேண்டும் என்று கீதை உபதேசம் செய்யவுமில்லை. தனிநபரின் உள்ளார்ந்த இயல்புகள்தாம் வருணாசிரமத்தின் அடிப்படை. கீதையின் இந்தக் கருத்தை அடையாளம் காண முடியாதபடி காந்தி தலைகீழாக மாற்றிவிட்டார் என்று அம்பேத்கர் குற்றம் சாட்டுகிறார். 'வருணத்தை' மரபுவழிப்பட்டதாகக் காந்தி மாற்றுகிறார். அதனால்தான் காந்தியின் வருணத்துக்கும் சாதிக்கும் இடைவெளியில்லாமல் போகிறது. தன்னுடைய சாதியக் கோட்பாட்டைவிட்டு வெளியேறக் காந்தியால் முடியவில்லை என்று அம்பேத்கர் முடிவு செய்கிறார்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாகவோ முதலாளித்துவத்துக்கு எதிராகவோ காந்தி ஒருபோதும் பேசியதில்லை. வெளிநாட்டவரிடம் சுதந்திரத்துக்காக வாதாடும்போதே சமுதாயத் தாழ்வுகள் பிறப்பிலேயே உள்ளவை எனச் சொன்னது காந்தியத்தின் முரண்பாடு. 'சுயராஜ்ஜிய' முழக்கத்துக்கு உயர் சாதி இந்துக்களின் ஆதரவைப் பெறுவதுதான் காந்தியின் நோக்கமாக இருந்திருக்குமோ? ஆம் என்பதுதான் பதில் என்றால் காந்தியம் உண்மையானது என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது அம்பேத்கரின் கேள்வி.

இருப்பவரை இருப்பவராகவும் இல்லாதவரை இல்லாதவராகவும் நிலைநிறுத்துவதுதான் காந்தியத் தத்துவம் என்பது அம்பேத்கரின் கருத்து. இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. 'சொத்துக்கு ஆசைப்படாதே' என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.

தீண்டத்தகாதவர்கள் பற்றிக் காந்தி சொன்ன எதுவும் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்னும் முடிவுக்கே காந்திய விமர்சனத்தின் இறுதியில் அம்பேத்கர் வந்து சேருகிறார். தீண்டத்தகாதவர்களை 'ஹரிஜனங்கள்' என்று அழைப்பதன் மூலம் காந்தி ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்துகிறார். தீண்டத்தகாதவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிடாததன் மூலம் வருணாசிரம கட்டமைப்புக்குள் அவர்களை நுழைய முடியாமல் தடைசெய்தாகிவிட்டது. அவர்களுக்குப் புதிய பெயர் சூட்டியதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அவசியம் என்று காந்தி ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்தக் கல்வியைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அவர் மறுக்கிறார் என்று கண்டடைகிறார் அம்பேத்கர். சட்டமோ மருத்துவமோ பொறியியலோ படித்தாலும் தீண்டத்தகாதவர்கள் தமது குலத்தொழிலைச் செய்ய வேண்டும். முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஒருபோதும் மாற்றப்படக் கூடாது என்பதே காந்தியின் கொள்கை.

சாதி இந்துத்துவத்தின் விழுமியங்களையே காந்தியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கர்மா கோட்பாடு, பசு வழிபாடு, அவதாரங்கள் பற்றிய நம்பிக்கை, விக்கிரக வழிபாடு இவையெல்லாம் காந்தியத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள். அதனால் காந்தியம் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கான வழியல்ல என்னும் கண்ணோட்டத்தை அடைகிறார் அம்பேத்கர்.

n

'அம்பேத்கர் பார்வையில் காந்தியம்' என்னும் கட்டுரை 'சாம்ஸ்காரிக பைத்ருகம்' மலையாள மாசிகையின் அக்டோ பர் 2007 இதழில் வெளியானது. கட்டுரையை எழுதியவர் இதழின் கௌரவத் தலைமை ஆசிரியரான ஏ.கே. அப்துல் மஜீத்.

காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது என்பதே மொழிபெயர்ப்புக்குத் தூண்டுதலாக இருந்த காரணம். கட்டுரையில் காந்தியைக் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் மேற்கோள்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்னும் விவரம் கட்டுரையில் குறிப்பிடப்படாதது குறையாகத் தெரிந்தது. தொலைபேசி மூலம் கட்டுரை ஆசிரியர் அப்துல் மஜீதைத் தொடர்புகொண்டதில் மராட்டிய மாநில அரசு வெளியிட்டுள்ள 'அம்பேத்கர் நூல்கள்' தொகுதிகளிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது. எனினும் கட்டுரையில் தென்பட்ட குறை அப்படியே தொடர்கிறது. காந்தியைப் பற்றிய இன்னொரு கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை என்னும் நிலையிலேயே இந்த மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

உள்ளடக்கம்

 

 

Google